Palestine will be free; let there be no doubt about it - Leader
சர்வதேச குத்ஸ் தினம் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளியன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் வருடாந்திர நிகழ்வாகும்.
- தாஹா முஸம்மில்
சர்வதேச குத்ஸ் தினம் 1979 ஆம் ஆண்டு மறைந்த ஈரானியத் தலைவர் ஆயத்துல்லாஹ்
கொமெய்னி அவர்களால் பாலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டை எதிர்த்தும்
இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இத்தினம், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பேரணிகள், அணிவகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளால்
குறிக்கப்படுகிறது, பங்கேற்பாளர்கள் இஸ்ரேலின்
காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதோடு பாலஸ்தீனத்தை இஸ்ரேலிய
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும் அழைப்பு விடுகின்றனர்.
சர்வதேச குத்ஸ் தினம், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைப் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை மதிக்கும்
ஒரு தீர்மானத்திற்காக குரலெழுப்பும் ஒரு தளமாக இருந்துவருகின்றது.
கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் அதன்
ஆக்கிரமிப்பில் பல்லாயிரக் கணக்கானோரை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுள்ளது, மண்ணுக்கு சொந்தக்காரர்களாகிய பலஸ்தீன் மக்களை நிர்கதிக்குள்ளாக்கி
அகதிகளாக்கியுமுள்ளது. அகதி முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவங்கள் உலகளவில்
அதிர்வலைகளை ஏற்படுத்தின.
காஸா எனும் குறுகிய பிரதேசத்தில் கடந்த ஆறுமாதங்களில் மட்டும் சுமார் 33,000 நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 75,000 க்கும் அதிகமானோர்
காயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்ல, மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் போன்றவைகளும் தாக்கி
அழிக்கப்பட்டுள்ளன, நிவாரண உதவிகள் கூட சென்றடைய முடியாதவாறது
தடுக்கப்பட்டுள்ளதால் பச்சைக்குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பட்டினிச்
சாவை எதிர்நோக்கியுள்ளனர்.
மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன் ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன்,
மேலும் ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை 'குத்ஸ் தினம்' என்று பெயரிடுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன், மற்றும் (பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரிப்பதில் முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றேன்."
சியோனிசம் என்பது ஒரு இயக்கமாக, 1800களின் பிற்பகுதியில் யூதர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் மற்றும் பாலஸ்தீன மண்ணில் வெறும் 5% மட்டுமே இருந்த யூத மக்களால் இஸ்ரேல் என்ற ஓர் சட்டவிரோத அரசு பலாத்காரமாக உருவாக்கப்பட்டது; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட, பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி அபகரிக்கப்பட்டு, உலக முஸ்லிம்களின் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது 1948 இல் மேற்கத்திய சக்திகளால் இஸ்ரேல் என்று அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
புனித பூமியான பலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இஸ்ரேலிய ராணுவம் இந்நாள் வரை புரிந்துவரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காத யூத இன வெறியர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும், வயோதிபர்களையும் அப்பாவிப் பெண்களையும் மிருகத்தனமாக கொன்று வருகின்றனர். அமெரிக்காவின் தலைமையிலான இஸ்லாம் விரோத சக்திகள் அனைத்தும் இதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன. ஐ.நா.சபையும் நேர்மையாக நடந்துகொள்கிறதா என்ற சந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. அமெரிக்க நலன்காக்கும் அமைப்பாக ஐ.நா.சபை செயற்படுகின்றதா என்று சந்தேகப்படும் அளவிற்கு அதன் பாதுகாப்பு சபை இயங்குவதால் ஐ.நா.வை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலைக்கு பாலஸ்தீனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடே இதற்கான ஒரே தீர்வு என்பது தெளிவு.
இஸ்ரேலின்
அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை பாதுகாப்பதற்காகவும் பலஸ்தீனர்கள்
தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின்
பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை
இலட்சக்கணக்கான உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ள பலஸ்தீனர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை
தெரிவிக்கும் வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை “அல் குத்ஸ் தினமாக” அனுஷ்டிக்க வேண்டும் என்று இமாம் கொமெய்னி (ரஹ்)
அவர்கள் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்ற ஆரம்ப நாட்களிலேயே பிரகடனம் செய்தார்கள்.
"இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு சொந்தமானது போல், பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானது போல் பலஸ்தீன் அரபிகளுக்கு சொந்தமானது. அரபிகளின் நிலத்தில் யூதர்களை சுமத்துவது தவறானது, மனிதாபிமானமற்றது". - மகாத்மா காந்தி மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) நிறவெறியை வெறுத்தது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுக்கு பூரண உதவியை வழங்கினார். பதிலுக்கு நெல்சன் மண்டேலாவும் "பாலஸ்தீனன் சுதந்திரம் அடையாமல் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரம் முழுமையடையாது" கூறினார்.
பலஸ்தீன் என்பது நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம்; பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய புனித தலமாகும்., நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் பங்காற்றுவது நம் அனைவர் மீதும் கடமையாகும்.
இந்த வருடம் ஏப்ரல் 5ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில், போராடிக் கொண்டிருக்கும் பஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம். அன்றைய தினம் ஃபலஸ்தீன போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வோம். குத்பா மேடைகளை அதற்காக பயன்படுத்துவோம், இந்த புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் பலஸ்தீர்களின் வெற்றிக்காக பிரார்த்திப்போம்.
புனித
பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை
நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம்.
பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களிடமிருந்து
அபகரிக்கப்பட்ட சொத்து என்பதை மக்களுக்கு ஞாபகம் ஊட்டிக்கொண்டு இருப்போம். எனவே, எமது ஒன்றுபட்ட செயற்பாடே முஸ்லிம்களின்
மூன்றாவது புனித தளமும் மற்றும் முதல் கிப்லாவுமான பைத்துல் முகத்தஸின் விடுதலையை
உறுதி செய்யக்கூடிய ஒரே வழி என்பதை உணர்வோம்.
தற்போது
முதல் முறையாக இஸ்ரேல் தனது இருப்பைப் பற்றி அச்சம்கொள்ள தொடங்கியுள்ளது.
அநியாயத்துக்கு எதிரான இஸ்லாமிய முன்னணியின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும்.
இஸ்லாமிய ஈரான், காஸாவின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லாஹ், யெமனின் அன்சார் அல்லாஹ், பஸ்தீனில்
இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஈராக் மற்றும் சிரியா ஆகியவற்றில் இயங்கும் இஸ்லாமிய
போராட்டக் குழுக்களின் ஒன்றிணைந்த செயற்பாடே இந்த அச்சத்துக்கு காரணம் என்பது
வெளிப்படை.
நம்
மத்தியில் உள்ள சிலர் சமாதான பேச்சுவார்த்தைகள் மட்டுமே தீர்வுக்கான ஒரே வழி என்று
வாதிடுகின்றனர். இப்போது
எம்முன் எழும் மிக முக்கியமான கேள்விகள் என்னவெனில் "ஏழு தசாப்தங்களுக்கும்
மேலாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களில் ஏதேனும் உறுதியான சாதனைகள் பெறப்பட்டுள்ளதா? பாலஸ்தீனர்களின் எதிர்காலம் குறித்து ஏதேனும் நம்பிக்கை
உள்ளதா? என்பதாகும்.
அமெரிக்கா
மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு அளித்து வரும் தொடர்ச்சியான இராணுவ மற்றும்
நிதி உதவியை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. பிராந்தியத்தில் அவர்களின் இடைவிடாத
தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது
கண்முன்னே தெரிகிறது. உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும்
மேம்படுத்துவதிலும் முன்னணி நிலைகளைக் கோரும் வளர்ந்த நாடுகளின் பொய்களை இது
அம்பலப்படுத்துகிறது. இந்த நாடுகள் ஒருபோதும் நடுநிலை வகித்ததில்லை. என்ன ஒரு நயவஞ்சகத்தனம், என்ன ஒரு இரட்டை நிலைப்பாடு.
1945
இல் அரபு லீக் அமைப்பு
உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்
நோக்கத்துடனேயே இது உருவாக்கப்பட்டது என்றும், அதனூடாக
அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அவர்களின் பொதுவான நலன்களைப் பாதுகாக்க
முடியும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரபு லீக் அமைப்பின் சாதனைகள் என்ன? இந்த
அமைப்பினால் அதன் சகோதர பாலஸ்தீனிய விடுதலை அமைப்புக்கு எந்த அளவிற்கு உதவ
முடிந்தது, அவர்கள் கூறிய நோக்கங்களை அடைய முடிந்தது? என்பதை
சிந்தித்தல் நன்று.
இந்த
கொடும் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் கைகோர்த்திருந்தால், சியோனிச ஆட்சி அத்தகைய மிருகத்தனத்தை கட்டவிழ்த்துவிடத்
துணிந்திருக்காது என்பது மட்டுமல்ல அவ்வாறான ஒன்றை நிறைவேற்ற நினைத்தும்
பார்த்திருக்காது,
அரபு/முஸ்லிம்
அரசாங்கங்களின் கூட்டு முயற்சிகள் இல்லாத நிலையிலும் கூட சிரமங்களை
எதிர்கொள்வதற்கும் ஒற்றுமையை அடைவதற்கும் உம்மாவின் ஒற்றுமைக்கு வழி வகுப்பதற்கும்
அதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்கும் முஸ்லிம்களாகிய எம் அனைவருக்கும்
தட்டிக்கழிக்க முடியாத தனிப்பட்ட கடமை உள்ளது என்பதை
ஞாபகத்தில் கொள்வோம்.
பலஸ்தீன் விவகாரம் போன்றதொரு பாரிய பிரச்சினையை அவ்வளவு இலகுவில் முஸ்லிம்களால் மறந்துவிட முடியாது; முஸ்லிம் சமுதாயங்களின் ஆர்வமும் அவர்களது தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஒருகாலமும் அதற்கு இடம் கொடுக்க மாட்டாது. அமெரிக்காவும் ஏனைய ஆதிக்க சக்திகளும் பிராந்தியத்தின் அல்லக்கைகளுடன் இணைந்து பலஸ்தீனை கபளீகரம் செய்ய எவ்வளவு முயற்சித்தாலும், எவ்வளவு செல்வமும் பலமும் அதற்காக செலவிட்டாலும் அது ஒருபோதும் சாத்தியப்படப் போவதில்லை.
No comments:
Post a Comment