Rahbar's Quds Day Message
ஈரான் இஸ்லாமிய
புரட்சியின் பெருந்தலைவர் இமாம் ஸெய்யது அலீ காமெனெயி சர்வதேச
குத்ஸ் தினத்தை முன்னிட்டு உலக மக்களுக்கு ஆற்றிய உரை (22/05/2020)
அருள் புரிவோன்
கருணையாளன் அல்லாஹ்வின் பெயர் போற்றி
அவனுக்கே
புகழ் அனைத்தும். சாந்தியும் ஆசீர்வாதமும் திரு நபி முஹம்மதார்
மீதும் அவரது பரிசுத்த குடும்பத்தார் மீதும் அவர்களின் பின்பற்றுவோர் மீதும் இறுதிவரை
பொழிவதாக.
உலகெங்குமே
வாழும் இனிய இஸ்லாமிய உறவுகளுக்கு எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். ஈதுல் பித்ர் திருநாள் வாழ்த்துக்களையும்
முன்கூட்டியே தெரிவிக்கிறேன். இந்த புனித ரமழான் மாதத்தில் மேற்கொண்ட பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் அங்கீகரிக்கப்பட
அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன். ரமழான் எனும் தெய்வீக விருந்தில் நாமும் கலந்து கொள்ளத்தந்த பாக்கியத்துக்கு இறையோனை
நன்றிப்பெருக்கோடு துதிப்போம்.
இன்று சர்வதேச குத்ஸ் தினமாகும். இமாம் கொமெய்னியின் உயரிய சிந்தனையில் இத்தினம் உருப்பெற்றது. புனித பைத்துல் முகத்தஸ் மற்றும்
ஒடுக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பற்றிய முஸ்லிம்களின் குரலை ஒன்றிணைக்கும் வளையமாக அது அமைந்தது. கடந்த சில தசாப்தங்களாக அது
பெரும் சாதனைகளைக் கண்டது. இறையருளால் இதன் பிறகும் அவ்வாறே அதன் பணி தொடரும்.
மக்கள் மத்தியில்
இது பெரும் வரவேற்பைப் பெற்றது. தமது முழுமுதல் கடமையாக இதனை ஏற்று சுதந்திர பலஸ்தீனின் கொடியை நிமிர்த்திப் பிடித்தார்கள். பலஸ்தீன
விவகாரம் பற்றி முஸ்லிம் சமுதாயத்தில் அலட்சியத்தை
ஏற்படுத்தி நாளடைவில் அதனைமறக்கடிக்கச் செய்வது சியோனிசத்தினதும் உலக வல்லாதிக்கத்தினதும்
திட்டமாகும். இந்த வஞ்சிப்பை எதிர்த்துப் போராடுவது தற்போதுள்ள உடனடிக் கடமையாகும். இந்த வஞ்சிப்பு முஸ்லிம் நாடுகளிலேயே
பகைவர்களின் கலாசார மற்றும் அரசியல் அடிவருடிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
வாஸ்தவத்தில்
பலஸ்தீன் விவகாரம் போன்றதொரு பெரும் பிரச்சினையை அவ்வாறு இலகுவில் மறந்துவிட முஸ்லிம்
சமுதாயங்களின் ஆர்வமும் அவர்களது தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஒருகாலமும் இடம்கொடுப்பதில்லை. அமெரிக்காவும் ஏனைய ஆதிக்க சக்திகளும்
பிராந்தியத்தின் அல்லக்கைகளும் எவ்வளவு செல்வமும் பலமும் அதற்காக செலவிட்டாலும் அது சாத்தியப்படப் போவதில்லை.
முதலில், பலஸ்தீனை ஆக்கிரமித்து அங்கு சியோனிசத்தின் புற்றுநோய்க்
காரணியை ஸ்தாபித்த பேரழிவை நினைவு படுத்த விரும்புகிறேன். அண்மைக் காலத்தில் நடந்தேறிய மனிதப் பேரவலங்கள் மத்தியில் எதுவுமே இந்த பாரதூரமான பாதகத்தை விஞ்சுவதாக இல்லை.
ஒரு தேசத்தை
அப்பட்டமாக அபகரித்து அதன் குடிமக்களை அவர்களது பூர்வீக வாழ்விடத்தில் இருந்து வெறும்
கையோடு துரத்தியடித்தது அதுவும் பல தசாப்தங்களாக இடைவிடாது நடந்தேறும் படுகொலைகளும்
வரலாற்றின் மகா பாதகங்களும் மனிதனின் காட்டுமிராண்டித் தனத்தினதும் சாத்தானியப் பண்பினதும்
மாபெரும் வெளிப்பாடாகும்.
இந்தப் பேரவலத்தின்
முக்கிய குற்றவாளிகள் மேற்கு நாடுகளும் அவற்றின் சாத்தானியக் கொள்கைகளும் ஆகும். முதலாம்
உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகள் மேற்காசியப் பிராந்தியத்தை அதாவது உதுமானிய சாம்ராஜ்யத்தின்
ஆசிய நிலபுலத்தை யுத்தத்தில் வென்ற கொள்ளையை பாரிஸ் நகரில் கூடி தமக்குள் பகிர்ந்து
கொண்டனர். தமது அதிகாரத்தை இந்த பிராந்தியத்தில் எப்போதும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அதன்
மையப்புள்ளியில் ஒரு முகாம் அமைவதன் தேவையை அவர்கள் உணர்ந்தார்கள்.
இதற்கு பல
வருடங்களுக்கு முன்பதாகவே பிரித்தானியா தனது பெல்ஃபோர்
பிரகடனம் மூலம் பின்னணியை தயார் செய்திருந்தது. யூத முதலாளிகளின் அனுசரணையோடு
சியோனிஸம் என்ற புதிய சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறாக பின்புலம் தயார் செய்யப்பட்டு கட்டியெழுப்பும் கட்டத்தை
அடைந்து இருந்தனர்.
அந்தக் காலப்
பகுதியில் அவசியமான முஸ்தீபுகளை மேற்கொண்டார்கள். இரண்டாவது உலக யுத்தத்தினைத்
தொடர்ந்து பிராந்திய தேசங்களின் அலட்சியத்தையும் சிக்கல்களையும் பயன்படுத்தி திட்டத்தை
நடைமுறைப்படுத்தினார்கள். தேசத்து மக்கள் இல்லாத சியோனிச அரசொன்றை பிரகடனம் செய்தார்கள். இந்தப் பேரிடியின் தாக்கம் முதலில்
பலஸ்தீன மக்களையும் அடுத்தபடியில் பிராந்தியத்தின் ஏனைய தேசங்களையும் இலக்கு வைத்தது.
அதனைத் தொடர்ந்து
நடந்தேறிய நிகழ்வுகள் மூலம் பின்வரும் உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது மேற்குலகும் யூத வர்த்தக முதலைகளும் சியோனிச ஆட்சியொன்றை
ஸ்தாபித்ததன் அடிப்படையான நோக்கம் தமக்கென மேற்கு ஆசியாவில் நிரந்தரமாக செல்வாக்கு
செலுத்தக்கூடிய ஒரு முகாமை ஸ்தாபிப்பதும் பிராந்திய அரசுகள் மீது ஆதிக்கம் செலுத்தவும் அருகில் இருந்து தலையீடு
செய்யவும் வசதியானதாக்கிக்
கொள்வதுமாகும். அந்த எண்ணத்தில் செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட
ஆக்கிரமிப்பு அரசை எல்லாவித வசதிகளும் வளங்களும் கொண்டதாக கட்டியெழுப்பினர். இராணுவ மற்றும் வேறு வளங்களும்
அணுவாயுதம் கூட வழங்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. இந்தப் புற்று கடலுக்கும் நதிக்கும்
இடையிலான பூமியை பரவி ஆக்கிரமிக்கும் எனவும் திட்டமிடப்பட்டது.
ஆரம்பத்தில்
அழகிய முறையில் எதிர்த்தெழுந்த பல அரபு தேசங்கள் செல்லச்செல்ல சரணாகதி அடையலாயின. இது மிக துரதிஷ்டமாகும். இந்த விவகாரத்தின் காவலனாக ஐக்கிய
அமேரிக்கா உள்நுழைந்ததில் இருந்து தமது இஸ்லாமிய, மனிதாபிமான
மற்றும் அரசியல் கட்டுப்பாடுகளை மட்டுமன்றி அராபிய வீரத்தையும் வைராக்யத்தையும் கூட
கைவிட்டு தெளிவில்லாத எதிர்பார்ப்புகளுக்காக எதிரிகளின் கைப்பாவைகளாக மாறின. இந்த கசப்பான உண்மைக்கு உகாரணமாக
கேம்ப் டேவிட் நிகழ்வைக் குறிப்பிடலாம்.
ஆரம்ப நாட்களில்
பெரும் அர்ப்பணிப்புடன் போரிட்ட விடுதலைப் போராட்ட குழுக்கள் கூட காலவோட்டத்தில் ஆக்கிரமிப்பாளருடனும்
ஆக்கிரமிப்பின் காவலர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் பலன் தராத வழிமுறைகளுக்கு
இழுத்துச் செல்லப்பட்டனர். பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வாய்ப்பிருந்த வழிமுறைகளைக் கைவிட்டனர். அமெரிக்காவுடனும் பல ஐரோப்பிய
நாடுகளுடனும் சர்வதேச மலட்டு பேரவைகளுடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் பலஸ்தீனின்
கசப்பான தோல்வி அனுபவங்களாகும். ஐக்கிய நாடுகள் சபையில் ஆலிவ் இலைகளைக் காட்டியதன் விளைவு நஷ்டங்கள் நிறைந்த ஒஸ்லோ
உடன்படிக்கையிலும் இறுதியாக யாசிர் அராபாத்தின் படிப்பினை தரும் தலைவிதியிலும் முடிவுற்றது.
ஈரானில்
இஸ்லாமியப் புரட்சியின் தோற்றத்துக்குப் பின்னர் பலஸ்தீன விடுதலைப் போரில் புதிய அத்தியாயம்
ஆரம்பிக்கிறது. முதல்படியாக மன்னராட்சிக் காலத்தில் தமது பாதுகாப்பு அரணாகக் கருதிய இடத்தில் இருந்து
சியோனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். சியோனிச அரசின் உத்தியோக தன்மையற்ற தூதரகம் பலஸ்தீன பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டது
முதல் பல்வேறு பாரிய அரசியல் முன்னெடுப்புகள் பிராந்தியத்தில் எதிரெழுச்சிக்களங்களை
தளிர்விடச் செய்தன. பிரச்சினைக்கு தீர்வு வரும் என்ற அசையாத நம்பிக்கையில் இதயங்கள் பூரிப்படைந்தன. எதிரெழுச்சிமுனைகள் தோற்றம்
பெற்றமை சியோனிச ஆட்சிக்கு பெரும் சங்கடங்களை உருவாக்கியது. எதிர்காலத்தில் – இன்ஷாஅல்லாஹ் – இதைவிட மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதேவேளை அந்த ஆட்சியின் காவலர்களின்
குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பும் ஆதரவும் வலுவடைந்து செல்வதை அவதானிக்கிறோம்.
வீரமிக்க
இளம் விசுவாசிகளின் சக்தியாக லெபனானில் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் உருவாக்கம் பலஸ்தீன தேச எல்லைகளுக்குள்ளேயே ஹமாஸ். இஸ்லாமிய ஜிஹாத் முதலிய
அமைப்புகளின் தோற்றமும் சியோனிச தலைவர்களை மட்டுமன்றி அமரிக்காவையும் மேற்கின் அநியாயக்கார
அரசுகளையும் கதிகலங்க வைத்துள்ளது. பிராந்தியத்தில் இருந்தே, அதுவும்
அரபுகள் மத்தியில் இருந்தே ஆதரவாளர்களை திரட்டும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள்
செயல்படலாயினர். ஆக்கிரமிப்பு அரசு பல்வேறு மென்பொருள்களையும் வன்பொருளைகளையும் வழங்கி ஒத்தாசைகளை
நல்கிவருகிறது. அவர்களின் பாரிய அளவிலான இம்முயற்சியின் விளைவுகளை
சில அரபுத் தலைவர்களின் பேச்சுகளிலும் நடத்தைகளிலும் அரசியல் மற்றும் கலாசார அரபுத்
துரோகிகளின் செயல்பாடுகளிலும் நிதர்சனமாகக் காண்கிறோம்.
தற்போது
இவ்விரு முனைகளில் இருந்தும் பல செயற்பாடுகள் போராட்டக்களத்தில் முனைப்புப் பெறுகின்றன. வேறுபாடு என்ன வெனில் எதிரெழுச்சி
அணியில் நாளாந்தம் பலமும் நம்பிக்கையும் மேலோங்கிச் செல்கையில் அதற்கெதிரான அநியாயத்தினதும்
வல்லாதிக்கத்தினதும் அணியில் அவநம்பிக்கையும் பலவீனமும் வெறுமையும் அதிகரித்துச் செல்கின்றன.
ஒரு காலத்தில்
தோல்வியைடையா துணிவு கொண்ட இராணுவம்
எனப் பெயரிய, தனக்கெதிராக
திரண்டெழுந்த இரண்டு நாடுகளின் இராணுவங்களை ஒரு சில நாட்களிலேயே மண்கவ்வச் செய்த சியோனிச இராணுவம், லெபனானிலும் காஸாவிலும் மக்கள் போராளிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கி தோல்வியை ஏற்றுக்கொகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை இந்த உணமையைப் பறைசாற்றுகிறது
இந்த நிலையில் போராட்டக் களமானது ஆபத்துகள் நிறைந்த அடிக்கடி மாற்றமடையும்
சுபாவம் கொண்டது என்பதால் இடைவிடாத அவதானத்தை வேண்டி நிற்கிறது. இந்தப் போராட்டம் மிக முக்கியமானதும்
தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் உயிர்வாழ்வதோடு சம்பந்தப்பட்டதும் ஆகும். அடிப்படையான மதிப்பீடுகளில்
நிகழும் அலட்சியம், கவனயீனம், தவறு என்பன பாரிய இழப்புகளை ஏற்படுத்த முடியும்.
பலஸ்தீன
விவகாரத்தில் கவனம் செலுத்துகின்ற அனைவருக்கும் நான் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.
1. பலஸ்தீன விடுதலைக்காகப் போராடுதல் அல்லாஹ்வின்
வழியில் நிகழ்த்தப்படும் இஸ்லாம் நம்மிடம் கோரும் கடமையான ஜிஹாத் ஆகும். இவ்வாறான போராட்டத்தில் வெற்றி
நிச்சயம் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் போராட்டத்தில் உயிர் துறப்பவர் இரண்டில்
ஒரு நன்மையை அடைந்து கொண்டவர் ஆவார். தவிரவும், பலஸ்தீன்
விவகாரம் ஒரு மனிதாபிமான விவகாரம் ஆகும். பல மில்லியன் மக்களை அவர்களது வீடுகளில், பயிர் நிலங்களில், வாழ்விடங்களில் இருந்து படுகொலை மற்றும் படுபாதகங்கள்
மூலமாக வெளியேற்றல் என்பது மனித உள்ளத்தை வேதனைக்கு உட்படுத்துகிறது. மனோதிடமும் தைரியமும் உள்ள பட்சத்தில்
எதிர்த்தெழுவதற்கு தூண்டக்கூடியது. ஆக இந்த விவகாரத்தை பலஸ்தீனோடு மட்டும் அல்லது
அரேபிய பிரச்சினையாக வரையறை செய்து நோக்குவது மிகப் பெரும் தவறாகும். ஒரு சில பலஸ்தீனர்களும் அரபு
ஆட்சியாளர்களும் மேற்கொள்ளும் மெத்தமான போக்கைப் பார்த்து இந்த விவகாரத்தின் இஸ்லாமிய, மனிதாபிமான தன்மையை கைவிடுவதற்கு நினைப்பது மிகப்
பெரிய தவறாகும். சிலபோது அது திரிபுபடுத்தும் மோசடியாகும்.
2. இந்தப் போராட்டத்தின் நோக்கம் கடலில் இருந்து
நதி வரையான முழுமையான பலஸ்தீனின் விடுதலையும் எல்லா பலஸ்தீனர்களும் தமது நாட்டுக்கு
திரும்பிச் செல்வதும்ஆகும். அதனை சிறுமைப்படுத்தி நிலத்தின் ஒரு மூலையில் ஒரு அரசை உருவாக்குவது, அதுவும் இழிவகையில் சியோனிஸ்டுகளின் அசிங்கமான
வார்த்தைப் பிரயோகங்களால் அவமானப்படும் விதமாக நடப்பது யதார்த்தமானதோ உரிமையை ஈட்டித்தருவதோ
அல்ல. உண்மை என்னவென்றால் பலமில்லியன் பலஸ்தீன மக்கள்
இந்த ஜிஹாதை மிக உறுதியாக மேற்கொள்வதற்கான சிந்தனை முதிர்ச்சி, அனுபவம் தன்னம்பிக்கை என்பவற்றை தன்னகத்தே கொண்டுள்ளனர். ‘நிச்சயமாக
அல்லாஹ்வுக்கு உதவுவோருக்கு வெற்றியைத் தருவான். மிக சக்தியும் கண்ணியமும் கொண்டவன்’ என்ற வாக்குக்கு அமைய உதவியும் இறுதி வெற்றியும்
உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. முழு உலகிலும் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவும் ஒத்தாசையும்
வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்ஷாஅல்லாஹ்.
3. சர்வதேச அனுசரணை போன்ற சட்டபூர்வமான ஹலாலான பொறிமுறைகளின்
ஆதரவைப் பெற்றுக்கொள்வது இப்போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மேற்கு நாடுகளின்
அரசாங்கங்களில் மற்றும் சர்வதேச மன்றங்களில் வெளிப்படையாகவோ இரகசியமாகவோ சார்ந்திருப்பது
கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாமிய விவகாரங்களில் அவர்கள் எதிரிகளாவர். மனிதர்களினதும் தேசங்களினதும்
உரிமைகள் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய
உம்மத் மீதான பாதகச் செயல்களில் அதிகாமானவற்றுக்கு அவர்களே
பொறுப்பாவார்கள். இப்போதும் பல இஸ்லாமிய நாடுகளில் காணப்படும் படுகொலைகள், பயங்கரவாதம், குண்டுவெடிப்புகள், யுத்தங்கள் மற்றும் செயற்கையான பஞ்சம் என்பவற்றில்
எந்த உலக மன்றம், எந்த உலக வல்லரசு பொறுப்புக் கூறுகின்றது என்றுபாருங்கள்.
இன்று கொரோனா வைரஸ்
பாதிப்பில் இறந்தோரின் எண்ணிக்கையை உலகம் கண்காணிக்கிறது. ஆயினும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் யுத்த நெருப்பை மூட்டிவிட்ட
நாடுகளில் பல்லாயிரக்கணக்கான கொலைகள், காணாமல்
போனோர் மற்றும் கைதியாகப் பிடிபட்டோர் விடயத்துக்கு யார் பொறுப்பு என்று எவரும் வினவுவதில்லை. ஆப்கானிஸ்தான், யெமன், லிபியா, இராக், சிரியா போன்ற
பல நாடுகளில் அநியாயமாக ஓட்டப்படும் இரத்தத்துக்கு யார் பொறுப்பு? பலஸ்தீனில் நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கு அபகரிப்புக்கும் அழிவுக்கும் யார் பொறுப்பு? இஸ்லாமிய
உலகில் செத்துமடியும் மில்லியன் கணக்கான அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை
யாரும் கூறுவதில்லை. முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படும்போது ஏன்யாரும்
அனுதாபம் தெரிவிப்பதில்லை. பல மில்லியன் பலஸ்தீனர்கள் எழுபது ஆண்டுகளுக்கு
மேலாக தமது வாழ்விடம்
மற்றும் சொத்துக்களில் இருந்து துர்த்தியடிக்கப்பட்டுள்ளதை எண்ணிக் கணிப்பதில்லை. முஸ்லிம்களின் புனிதத்தலமான
குத்ஸ் ஷரீப் ஏன் இழிவு படுத்தப்படுகிறது.?
ஐக்கிய நாடுகள் என அழைக்கப்படும் நிறுவனங்கள் தமது பணிகளை நிறைவேற்றுவதில்லை. மனித உரிமைகளுக்கான மன்றங்கள்
மரணித்து விட்டன. பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைப் பாதுகாப்பு என்பதில் பலஸ்தீனின் யமனின் பெண்களும்
பிள்ளைகளும் அடங்குவதில்லை. மேற்கின் அநியாய பலவான்களினதும் ஒட்டிக்கிடக்கும் உலக நிறுவனங்களினதும் அவர்களில் சார்ந்து வாழும் சில பிராந்திய
நாடுகளினதும் நிலை இதுதான். அவர்களது இழிவும் பரிதாபமும்
வார்த்தைகளில் சொல்வதை விட பன்மடங்கு இழிவானது. எனவே சமய உணர்வும் சுயமரியாதையும்
உள்ள முஸ்லிம் தன்மீதும் தனது உள்ளார்ந்த பலத்திலும்
நம்பிக்கை வைக்க வேண்டும். வலிமையான தமது முஷ்டியை தயார்படுத்தி இறைவன் மீதான அசையாத நம்பிக்கையுடன் தடைகளைக்
கடந்து பிரயாணிக்க வேண்டும்.
4. இஸ்லாமிய உலகின் அரசியல் இராணுவ நிபுணர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒரு விடயம் என்னவெனில்
எதிரெழுச்சிக்களத்தில் இருந்து போராட்டத்தை திசை திருப்பி களத்துக்குப் பின்புறமாக நகர்த்துவது அமெரிக்காவினதும் சியோஸ்ட்டுகளினதும்
உபாயம் ஆகும். சிரியாவில் உள்நாட்டு யுத்தமொன்றைத் தூண்டிவிடுவது, யெமன்மீதான
இராணுவ முற்றுகையும் நாளாந்தம் இடம்பெறும் மனிதப் படுகொலைகளும், இராக்கில் இடம்பெறும் அழிவுகளும் அவலங்களும் ISIS உருவாக்கமும் வேறு பல பிராந்திய நாடுகளில் இடம்பெறும் இதனை ஒத்த சம்பவங்களும் எதிரெழுச்சிக்களத்தை திசைமாற்றி
சியோனிச ஆட்சிக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுப்பதற்கான தந்திரங்களாகும்.
முஸ்லிம் நாடுகளின்
சில அரசில்வாதிகளும் அறிந்தோ அறியாமலோ எதிரியின் இந்த தந்திரங்களில் பங்காளிகளாக உள்ளனர். இந்த அசிங்கமான அரசியல் நடைமுறைகளைத்
தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வேட்கை உலகெங்கும் வாழும் திடம்பூண்ட இளம் சமுதாயத்தினரின்
உறுதியான நிலைப்பாடாகும்.
உங்கள் ஆத்திரம் அவ்வளவையும் அமேரிக்கா மீது, சியோனிச எதிரிகள் மீதும் கொட்டித்தீருங்கள் என
அன்று இமாம் கொமெய்னி கூறியதை இஸ்லாமிய உலகின் குறிப்பாக அரபு நாடுகளின் இளைஞர்கள்
மறந்துவிடக் கூடாது.
5. பிராந்தியத்தில் சியோனிச அரசின் பிரசன்னத்தை பழக்கப்படுத்துவது
அமெரிக்காவின் மிகமுக்கியமான உபாயங்களில் ஒன்றாகும். அமெரிக்காவின் சேவகர்களாக பணிபுரியும்
சில அரபு நாடுகள் அமெரிக்காவின் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன. பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல்
போன்ற ஆரம்ப நகர்வுகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சிகள் அனைத்தும் பலன்
தருபவை அல்ல.
சியோனிச அரசு பிராந்தியத்தில் அழிவும் நாசமும் செய்யும் ஓர்
ஒட்டுண்ணி ஆகும். அது நிச்சயமாக வேரறுக்கப்பட்டு அழிந்துவிடும். வல்லாதிக்கங்களின் திட்டங்களுக்கு
தமது வசதிகளை வழங்கியோர் அவமானத்தால் அசிங்கப்படுவார்கள். தமது கேவலமான நடத்தையை நியாயபடுத்த
முனைகின்ற சிலர் சியோனிச அரசு, பிராந்தியத்தில் உள்ள ஒரு யதார்த்தம்
என விளக்க முயல்கிறார்கள். உண்மையில் அவலமும் அழிவும் தரும் யதார்த்தங்களுடன் போராடி அகற்ற வேண்டும் என்பதை
அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இன்று கொரோனா ஒரு யதார்த்தமாகும். உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும்
அதனை ஒழிக்கப் போராடுவதை கடமையாகக்
கருதுகின்றனர். நீண்ட காலமாக இருக்கும் சியானிஸ வைரஸும் இனி நீண்ட காலம் இருக்கப் போவதில்லை. பிராந்தியத்தின் உணர்வுள்ள வீர
இளைஞர்களின் கைகளால் வெகுசீக்கிரம் சியானிஸம் பிடுங்கி எறியப்படும்.
6. எனது மிக முக்கியமான ஆலோசனை போராட்டம் தொடர வேண்டும்
என்பதாகும். போராட்டக் குழுக்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும். அவர்களும்
தமக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். போராட்டக் களத்தின் பரப்பை பலஸ்தீனப்
பூமி முழுவதிலும் விஸ்தரிக்க வேண்டும். இந்தப்புனித போராட்டத்தில் அனைவரும் பலஸ்தீன மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாலஸ்தீன் போராளியின் கைகளை
நிரப்பி வலுப்படுத்தி ஒத்தாசை வழங்க வேண்டும்.
நாம் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் இதற்காக பெருமையோடு நிறைவேற்றுவோம். பற்றும் ஆர்வமும் வீரமும் கொண்ட
பலஸ்தீனப் போராளிகளுக்கு ஆயுதம் பற்றாக்குறையாக இருப்பதை நாம் ஒரு கட்டத்தில் அறிந்து
கொண்டோம். இறையுதவியால் நாம் திட்டங்களை வகுத்தோம். அதன்விளைவாக பலஸ்தீனின் பலசமநிலை
தலைகீழாக மாறியது. இன்று காஸா சியோனிச எதிரியின் தாக்குதல்களின்
முன்னால் தலைநிமிர்ந்து வெற்றி பெறும்நிலை உருவாகியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூமிகளில் நிகழும் இந்த வலு சமநிலையானது
பலஸ்தீன விவகாரத்தை இறுதி எட்டுக்களை நோக்கி நகர்த்தும் வல்லமை கொண்டது. தன்னாதிக்க அதிகார நிறுவனம்
இந்த விவகாரத்தில் ஆற்றவேண்டிய பங்கு விசாலமானது. வெறித்தனமான ஓர் எதிரியுடன்
பலமும் வீரமும் கொண்டு மட்டுமே உறவாட முடியும். இந்த வீராதிகாரம் தீரமிக்க பலஸ்தீன
சமுதாயத்தில் தயாராக உள்ளது. தமது கண்ணியத்தைப் பேணிப் பாதுகாக்கும் ஆவல் பலஸ்தீன
இளைஞர்களில் மேலெழுந்துள்ளது.
பலஸ்தீனில் ஹமாஸ், இஸ்லாமிய
ஜிஹாத் அத்துடன் லெபனானில் ஹிஸ்புல்லாஹ் கடமையை செவ்வனே நிறைவேற்றுகிறார்கள். சியோனிச அரசு லெபனான் எல்லைகளை
அத்துமீறி உள்நுழைந்து தலைநகர் பெய்ருத் வரை படை நகர்த்தி வந்ததையும் ஏரியல் ஷரோன்
என்ற இரத்த வெறியன் ஷப்ரா ஷாதில்லா முகாம்களில் இரத்த ஆறு ஓட்டியதையும் மறக்கவும் முடியாது, மறக்கவும் மாட்டார்கள். அதே போன்று இதே இராணுவம் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் தாக்குதலில் நிலை குலைந்து பெரும்
இழப்புகளைசந்தித்து தோல்வியை ஏற்றுக் கொண்டு லெபனான் எல்லைகளில் இருந்து பின்வாங்கி
யுத்த நிறுத்தத்துக்கு கெஞ்சிய நாளையும் உலகம் மறப்பதற்கில்லை. பலம்வாய்ந்த நிலைப்பாடு என்பதன்
அர்த்தம் இதுதான்.
சதாம் ஹுசைனுக்கு இரசாயன ஆயுதங்களை விற்பனை செய்து இழிவைத் தேடிக்கொண்ட
ஒரு ஐரோப்பிய நாடு தலை நிமிர்ந்துள்ள ஹிஸ்புல்லாஹ்வை சட்டவிரோதமானது என பிரகடனப்படுத்தியுள்ளது. உண்மையில் சட்டவிரோதமானது, ஐசிஸ் இயக்கத்தை உருவாக்கும் அமெரிக்காவும் ஈரானின்
பானே நகரிலும் இராக்கின் சலம்செ நகரிலும் தமது இரசாயன ஆயுதங்களால் பல்லாயிரம் உயிர்களைக்காவு
கொண்ட அந்த ஐரோப்பிய நாடும்தான்.
7. இறுதியாக வலியுறுத்த வேண்டியது என்னவெனில் பலஸ்தீன்
பலஸ்தீனர்களுக்கு சொந்தமானது. அவர்கள்தான் அதனை நிர்வகிக்க வேண்டும். இன்றைய சவால்களை வென்று, நாளைய பலஸ்தீன் முறையாக நிறுவப்படுவதற்கு உள்ள ஒரே வழிமுறை பலஸ்தீன தேசத்தைச்
சேர்ந்த எல்லா சமயத்தவர்களும் சமூகத்தவரும் கலந்துகொள்ளும் அபிப்பிராய வாக்கெடுப்பு
ஒன்றை நடாத்துவதாகும். இதனை நாம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தோம்.
இந்த யோசனையின் மூலம் மேற்குலகம் ஊதிப் பெருப்பித்து பிரசாரம்
செய்யும் யஹுதி ஒழிப்புக் கோஷம் அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த யோசனையின் பிரகாரம் பலஸ்தீன
மக்கள் யூதர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடு இன்றி பலஸ்தீன் தேசத்தின்
அரசியல் அமைப்பை தீர்மானிப்பார்கள். கட்டாயமாக அகற்றப்பட வேண்டியது சியோனிச அரசாகும். சியோனிஸம் யூத மதத்தில் கூட
புறம்பான ஒரு தோற்றப்பாடாகும்.
இறுதியாக, குத்ஸ் தியாகிகளான
ஷேய்க் அஹமத் யாசீன், பத்ஹி ஷகாகி, செய்யத் அப்பாஸ் முஸவி முதல் என்றும் நினைவில்
வாழும் ஷஹீத்காஸிம் சுலைமானி, இராக் நாட்டின்
ஷஹீத் அபூமஹ்தீ அல் முஹந்திஸ் உட்பட அனைத்து தியாகிகளையும் நினைவு படுத்துகிறோம். கண்ணியம் மாறும் போராட்டத்தின்
வாசலை நமக்கு சுட்டிக்காட்டிய இமாம் கொமெய்னியின் ஆன்மாவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன். இந்தபாதையில் நீண்ட காலம் உழைத்த காலம் சென்ற ஹுசைன் ஷைகுல் இஸ்லாம் அவைர்களையும்
நினைவு கூறுகின்றேன். இறைவனின் பேரருள் அவர்மீதும் பொழியட்டும்.
இந்த வருடம்
காசிம் சுலைமானி இல்லாமல் நடக்கின்ற முதலாவது குத்ஸ் தினம் இது
ஆகும். அவருக்காக சூரத்துல் பாத்திஹாவும் குல்ஹுவல்லாஹ் சூராவையும் ஓதிக்கொள்ளுங்கள்.