Monday, October 22, 2018

மஷ்ஹத் நகரம்


Mashhad the Holy City of Iran


ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகர் தெஹ்ரானுக்கு அடுத்த முக்கிய நகரமாகக் கருதப்படுவது மஷ்ஹத் நகரமாகும். ஈரானினின் கொராஸான் மாநிலத்தின் தலைநகராகவும் மஷ்ஹத் கருதப்படுகிறது. தலைநகரான டெஹ்ரானுக்கு அடுத்தபடியாக, ஈரானில் அதிக மக்கள்தொகை  இரண்டாவது பெரிய நகரமாக மஷ்ஹத் உள்ளது.


இந்நகரம் ஈரானின் வடக்கே இரண்டு மலைத் தொடர்களுக்கிடையில் காஷாப் நதி பள்ளத்தாக்கில் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. றஸூலுல்லாஹ்வின் வழித்தோன்றலும் (இத்னா அஷரிய்யா) ஷீ'ஆக்களின் எட்டாவது இமாமுமாகிய அலீ அர்-ரிழா அவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் இது ஒரு புனித ஸ்தலமாக் போற்றப்பட்டு வருகின்றது. மேலும், ஈரானுக்கு கிழக்கே இருக்கும் நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்கான ஒரு மையமாக இது உள்ளது. 


உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள கனாத்
பள்ளத்தாக்குகளில் உள்ள பல நகரங்களைப் போலவே, அவசியமான நீர் மலைகளின் சரிவுகளில் கீழ்நோக்கி துளை இடப்பட்டு 'கனாத்' எனும் தொடர்ச்சியான கால்வாய்களின் ஊடாக பெறுக்கொள்ளப்படுகிறது. இது ஈரானின் தனித்துவமான தொழில்நுட்பமாகும்.


இந்நகரம் ஓரளவு வட்டவடிவமான அமைப்பில் உள்ளது. நடுமத்தியில், இமாமின் அடக்கஸ்தலம் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு சுற்றச்சூழவுள்ள 12 சுற்றுப்புறங்களுக்கு ஒளியேற்றுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது சிறப்பம்சமாகும்.


உலகம் முழுவது இருந்து வருடாந்தம் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், குறிப்பாக ஷீ'ஆ முஸ்லிம்கள், புனிதஸ்தலமாகக் கருதி இவ்விடத்துக்கு யாத்திரை மேற்கொள்வதன் காரணமாக 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், நகரம் ஒரு பெரிய நவீன மாநகரமாக வளர்ச்சியடைந்தது. இதனை சுற்றியுள்ள நிலப்பகுதியில் நான்கில் மூன்று இப்புனிதஸ்தலத்துக்கு உரித்தான 'வக்ப்' செய்யப்பட்ட நிலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மஷ்ஹத் ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமாகும். இங்கு பெரும்பான்மையான பாரசீகர்களுடன் துர்க்ஸ், குர்த் இன மக்களும் பலூச்சிஸ், டாரிஸ், ஹர்ஜாதிஸ்,  உஸ்பெக்ஸ்,  தாஜிக்ஸ், மற்றும் லோர்ஸ் ஆகிய இன மக்களும் வாழ்கின்றனர். 1979-89 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் 2001ல் அந்த நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான ஆப்கானியர்கள் ஈரானுக்கு, குறிப்பாக கொராசான் மற்றும் மஷ்ஹதுக்கு அபயம் தேடி வந்தோராகும்.

பொருளாதாரம்

உற்பத்தி மற்றும் வணிகம்


மஷ்தாத்தின் பிரதான தொழில்களில் இயற்கை எரிவாயு மற்றும் உணவு பதனிடுதல் மற்றும் ஜவுளி, கம்பளங்கள், வால்வுகள், குழாய்கள், பொருத்திகள், நீர் சூடாக்கி, காற்று குளிரூட்டிகள் மற்றும் மட்பாண்ட உற்பத்தி போன்றனவாகும். இவைபோக பழங்கள், கொட்டைகள் மற்றும் கம்பளி போன்ற விவசாய மற்றும் விலங்கு பொருட்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியா, பாக்கிஸ்தான், சீனா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளுடன் ஈரானின் வர்த்தகம் பெரியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, மேலும் அந்த வர்த்தகத்தில் சில, கிழக்கு எல்லைக்கு அருகே அமைந்துள்ள பெரிய ஈரானிய நகரங்களில் ஒன்றான மஷ்ஹத் வழியாகவே செல்கின்றன. மஷ்ஹதின் ஏற்றுமதியாக மின்சாரம், எரிவாயு, தாதுக்கள், கால்நடை, பருத்தி நார், குங்குமப்பூ, தானியங்கள், சர்க்கரை பீற்றுகள், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் என்பனவாகும்.

சேவைகள்


நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டல் 
மஷ்ஹ்தின் சேவை வருவாயில் பிரதான பங்குவகிப்பது யாத்திரிகர் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையால் கிடைப்பதாகும். 1970க்குப் பின் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளால் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நகரத்துக்கு ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். இவர்கள் தங்கிச்செல்ல  சாதாரண விடுதிகளிலிருந்து நட்சத்திர ஆடம்பர ஹோட்டல்கள் வரை உள்ளன. பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.

போக்குவரத்து

உள்கட்டமைப்பு-மேம்பாட்டு முயற்சிகள் மஷ்ஹதில் உள்ள சாலை மற்றும் இரயில் சேவை அமைப்புகளை கணிசமாக விரிவாக்கியது.

இந்த நகரம் தெஹ்ரான் மற்றும் பிற ஈரானிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானில் ஹெராட் நகருக்கும் மஷ்ஹதுக்கும் இடையில் சொகுசு இரயில் சேவை ஒன்றும் நடத்தப்படுகிறது. மஷ்ஹதில் மெட்ரோ போக்குவரத்து அமைப்பும் உருவாக்கப்பட்டதில் இருந்து போக்குவரத்து சேவை மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. மஷ்ஹத் சர்வதேச விமான நிலையம் நாட்டிலுள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மற்றும் பல ஈரானிய நகரங்களுக்கும் விமாச்சேவைகள் தினசரி இடம்பெறுகின்றன.


உலகக்கவிஞர் பிர்தவ்ஸி பல்கலைக்கழகம் 
மஷ்ஹதிலுள்ள பிர்தவ்ஸி பல்கலைக்கழகம் நாட்டிலுள்ள உயர் கல்விக்கான ஒரு முக்கிய நிறுவனமாக விளங்குகிறது. மானுடவியல், கணிதவியல், இயற்கை அறிவியல், இறையியல், கலை, விஞ்ஞானம், தொழில் நுட்பம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்ற துறைகளுக்கு பிரபல்யம் பெற்ற இடமாகவும் அது உள்ளது. 

இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த மருத்துவ பீடம் 1989 இல் தனியாக பிரிக்கப்பட்டு, ஒரு சுயாதீனமான மருத்துவ கல்லூரி நிறுவனமாக மாறியது. இதுபோக, இன்னும் 6 பல்கலைக்கழகங்களும் பல கல்விக்கல்லூரிகளும் அங்குள்ளன.  இவை தவிர பாரம்பரிய சன்மார்க்க மதராசாக்களும் இயங்கிவருகின்றன. இவை உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்களை ஈர்த்துள்ளன. 

வாழ்வும் கலாசாரமும்



மஷ்ஹத் மக்களின் வாழ்க்கை இமாம் றிழாவின் ஸியாரத்துடன் பின்னிப்பிணைந்ததாகும். ஈரானிலிருந்து மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், விசேடமாக ஷீ'ஆ முஸ்லிம்கள், இமாம் றிழாவுக்கு கண்ணியம் செலுத்துமுகமாக இவ்விடத்துக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். இங்குள்ள பிரமாண்டமான ஜும்மா மஸ்ஜித் 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பதாகும். பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. 'ஷாஹ் நாமெஹ்'வைத் தந்த உலகமகா கவிஞர் பிர்தவ்ஸியின் அடக்கஸ்தலமும் மஷ்ஹத் நகருக்கு வெளியே அமைந்துள்ளது..



வரலாறு

முந்தைய காலங்களில் மஷ்ஹத் 'சனாபாத்' என்றும் 'நூகான்' என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமமாக இருந்தது. காலப்போக்கில் பெரும் நகராக வளர்ச்சிகண்டது. றஸூலுல்லாஹ்வின் வழித்தோன்றலும் (இத்னா அஷரிய்யா) ஷீ'ஆக்களின் எட்டாவது இமாமுமாகிய அலீ அர்-ரிழா அவர்கள் நஞ்சூட்டிக் கொல்லப்படடு அவரது புனித உடல் இங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இமாம் மரணித்து ஒரு நூற்றாண்டுக்கு பிறகு, சனாபத் என்ற கிராமத்தை அல்-மஷ்ஹத் அல்-ரிழாவி (அரபு: 'அல்-ரிழாவின் உயிர் தியாகத் தளம்') என்றழைக்கலாயினர். 1330ம் ஆண்டு நகரத்தை அடைந்த உலகப்புகழ்பெற்ற சஞ்சாரி இப்னு பதூதாவும் இந்நகரத்தை அந்தப் பெயர்கொண்டே அழைத்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அப்பெயரே சுருக்கமாக இன்று மஷ்ஹத் என்று அழைக்கப்படுகிறது.

உஸ்பெக் மற்றும் ஆப்கானிய படையெடுப்புகளால் இந்நகர் பலமுறை அழிவுக்குள்ளாகின. ஜும்மா மஸ்ஜிதும் இமாமின் ஸியாரமும் தாக்கப்பட்டு சேதமாக்பட்டன. பொதுமக்கள் மீது அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக, அந்நகரை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆயினும் ஆக்கரமிப்பு படைகளினால் நீண்ட காலத்திற்கு நகரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டிக்கப்பட்டனர்.


இமாம் ரிழா ஸ்ட்ரேடியம்  
அதன் பிறகு இப்புனிதஸ்தலம் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிக்குப் பின் (1978-79) இமாம் ஆயதுல்லாஹ் கொமைனி (ரஹ்) அவர்களது ஆட்சியின்போதும் அதனைத் தொடர்ந்து இமாம் ஆயதுல்லாஹ் காமேனெய் அவர்களது ஆட்சியிலும் அப்புனிதஸ்தலத்தின் கௌரவம் காக்கும் முறையில் நகரின் பொதுவான கலாச்சார, கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் அதிகரிப்பதற்காக பல அபிவிருத்தித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரகின்றன.

Tuesday, October 16, 2018

தமிழகத்தில் இஸ்லாமியர்


Muslims in Tamil Nadu 


ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா) தனது செய்தியில் அறிவிப்பதாவது:

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.


Sunday, October 14, 2018

உலகப்புகழ்பெற்ற மாபெரும் கவிஞர் ஹாபிஸ்


HAFEZ the great poet


ஜலாலுத்தீன் ரூமி, பிர்தவ்ஸி, 'அதி, உமர் கையாம் போன்ற உலகப்புகழ் பெற்ற, தலைசிறந்த பாரசீக கவிஞர்கள் வரிசையில் ஹாபீஸும் ஒருவர்.

க்வாஜா ஷம்சுத்தீன் முஹம்மது ஹாபிஸ் ஷிராஸி, வளமிக்க பாரசீக இலக்கியத்தின் பிரகாசமான நட்சத்திரமாக ஹி.726 (1315)ல் ஷிராஸில் பிறந்தார்.

சிறுவயதிலேயே புனித குர்'ஆனை மனனம் செய்ததன் காரணமாக அவர் 'ஹாபிஸ்' என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயரே நிலைத்திருக்கலாயிற்று.

ஹாபிஸ் புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்து மட்டுமல்லாமல் குர்'ஆன் ஓதும் அனுமதிக்கப்பட்ட 7 முறைகளில் இனிமைமையாக ஓதுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

பாரசீக இலக்கியத்திற்கும் ஈரானிய கலாச்சாரத்துக்கும் அவரது 77 ஆண்டுகால பங்களிப்பு அளப்பரியது. அவரது ஆத்மஞான கவிதைகளும் புரட்சிகர சிந்தனையைத் தூண்டும் கவி வரிகளும் இன்றும் உலகளவில் புகழ்ந்துரைக்கப்படுகின்றன.

அவர் உயிர்வாழும் காலத்தியிலேயே உலகளவில் போற்றப்பட்ட மாபெரும் சிந்தனையாளர். பெரியதாயினும் சொல்லவேண்டிய விடயத்தை ஒரே வரியில் சொல்லும் அவரது ஆற்றல் பிரமிக்கத்தக்கது.

அவரது அநேகமான கவிதைகளின் கருப்பொருளாக மோசடிக்கும் நயவஞ்சகத்துக்கும் எதிரான விழிப்புணர்வூட்டுவதாகவும் அன்பையும் மனிதாபிமானத்தையும் வலியுறுத்துவதாகவுமே இருந்;தது. ஜெர்மனியின் கோதே மற்றும் இந்தியாவின் ரவீந்த்ரநாத் தாகூர் போன்றோர் அவரின் கவிதையில்பால் கவரப்பட்டவர்களாகும்.

ஹாபிஸ் கருத்தாழமிக்க ஆத்மஞான கவிதை வரிகளை, ஆற்றல் மிக்க மொழிநடையில் அற்புதமாக உருவாக்கினார். இன்றும் அவை சிறந்த இலக்கிய படைப்புகளாக உலகளவில் போற்றப்படுகின்றன. அவரது கருத்துகள் ஏனைய சமகால தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரைக் மிகைத்தருந்தன.

அவரது அற்புதமான கவிதைகள், அவருடைய காலத்தின் கவிதை விதிமுறைகளுக்கு மாறுபட்டதாக இருந்ததாயினும் பாரசீக இலக்கியத்திற்கு மதிப்புமிக்க, தனித்துவமான பொக்கிஷத்தை வழங்கிற்று. இது பாரசீக கலாச்சாரத்திற்கான ஒரு கௌரவமாகும்.

புகழின் உச்சியில் இருந்த அவர் தனது அறிவுக்கு கருவூலமாய் அமைந்து புனித குர்'ஆனே என்று கூறுவார்.

காதலரின் துயரத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட அரிய கவிஞர்களில் ஒருவரான ஹாபிஸ், 'எரியும் பட்டாம்பூச்சிககளின் உணர்வு', 'ஒரு மெழுகுவர்த்தியின் பெருமூச்சு' மற்றும் 'கோகிலத்தின் காதல்' போன்ற தனித்துவமான இலக்கியங்களின் ஊடாக அவரது சொல்லாட்சி சமுத்திரத்தின் ஆழத்தில் எம்மை மூழ்கடிக்கிறார். அவரது சொற்பிரயோகங்கள், உருவகங்கள், உவமைகள் மற்றும் மொழிவழக்குகள் எதனையும், முன் அல்லது பின் வந்த எவராலும் மிகைக்க முடியவில்லை.

அவரது மிகப் பெரிய கவிதைத் தொகுப்பிலிருந்து 400-க்கும் மேற்பட்ட நன்கு அறியப்பட்ட வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் இதுவரை ஆயிரக்கணக்கான முறை எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு, உலகின் பிரபல்யமான அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஹாபிஸ் ஹிஜ்ரி 803 (1390)ல் உயிர்நீத்தார். அவரது உடல் ஷீராஸ் புறநகர் பகுதியில் உள்ள தொழுகை மைதானத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஸியாரத்தை தரிசிக்க ஆத்மஞானத்தில் ஆர்வமுடையோரும் கவிதை பிரியர்களும் உண்மை மற்றும் மனிதநேய ஆர்வலர்களும் உலகின் பல பாகங்களில் இருந்தும் இன்றளவிலும் விஜயம் செய்கின்றனர்.

ஹாபிஸின் மரபு கவிதைகள் சுமார் 4000-5000 வசனங்களைக் கொண்டவையாகும், அவற்றில் 400-500 கவிதைகளும், பல நீளமான இரங்கல் பாக்களும், குறுகிய கஸல் வரிகளும் அடங்கும். இவற்றில் சில 9ம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

இறை கருணை மற்றும் குர்ஆனின் உள்ளார்ந்த செய்திகளுக்கு இட்டுச்செல்லும் அவருடைய பாடல் வரிகள் பாரசீக மொழி பேசுபவர்கள், ஆர்வலர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரால் எப்போதும் மதிக்கப்படுகின்றன. இந்த மாபெரும் கவிஞருக்கு மரியாதை செலுத்துமாகமாக கலை பொக்கிஷமான அவரது 'திவான்' ஒவ்வொரு பாரசீகர் வீட்டிலும் பாதுகாக்கப்படுகிறது.