What do we mean by saying Iran is a victim of terrorism?
இஸ்லாமியப்
புரட்சிக்குப் பின்னர் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின்
மூர்க்கம், உலகில் வேறு எந்த புரட்சியிலும் முன்னோடியில்லாத வகையில் இருந்தது என்று
சொன்னால் அது மிகையாகாது. இந்த பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் இஸ்லாமிய ஆட்சியை
வீழ்த்தி மக்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துவதும், புரட்சிக்கு ஆதரவளித்த மக்களை
பழிவாங்குவதும்,
இஸ்லாமிய
புரட்சி மற்றும் இஸ்லாமிய குடியரசின் கருத்தியல் சூத்திரதாரிகளை கொன்றொழிப்பதும்
ஆகும்.
பயங்கரவாதம்
என்பது ஈரானிய தேசத்திற்கு நன்கு பரிச்சயமான ஒரு சொல்லாகும். ஈரானில் இஸ்லாமியப்
புரட்சியின் வெற்றி மற்றும் நாட்டில் அமெரிக்காவின் அதிகார விரிவாக்கத் திட்டங்கள்
தோல்வியடைந்த பின்னர்,
ஈரானுக்கு
எதிராக யுத்தம் நடத்த அமேரிக்கா சதாம் ஹுசைனுக்கு பச்சை விளக்கு காட்டியது. அதே
நேரத்தில் நிகழ்ந்த மற்றொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அரசாங்க அதிகாரிகள்
மற்றும் மக்களுக்கு எதிராக பாரிய பயங்கரவாத தாக்குதல்களைத் தொடங்குவதாகும்.
மக்கள் மீது
பழிவாங்குதல்
இஸ்லாமிய
புரட்சியின் வெற்றி பல மேற்கத்திய ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்பாராத
ஒன்றாகும். அதன் அனைத்து பரிமாணங்களையும் சரியாக புரிந்து கொள்ளவும் கணிக்கவும்
கூட அவர்களால் முடியவில்லை. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி பெற்ற
மறுநாளே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இஸ்லாம் விரோத சக்திகள் அதைக்
குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அதற்கு எதிரான சதி மற்றும் தலையீட்டின் ஊடாக
புரட்சியை முறியடிக்க முயற்சித்தன. இஸ்லாமிய புரட்சியை முறியடிப்பதற்கு
ஆரம்பத்தில் இருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளால் பயன்படுத்தப்பட்ட
கருவிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் ஒன்றாகும். இந்த கண்ணோட்டத்தில், குறிப்பிட்ட இந்த பயங்கரவாத தாக்குதல்கள் இஸ்லாமிய அரசை அகற்ற
அவர்கள் பயன்படுத்தியது மிகப் பழமையான மற்றும் அவர்களால் பரவலாகப்
பயன்படுத்தப்பட்ட கருவி எனலாம்.
படுகொலை
செய்யப்பட்ட 17,000 பேர்
ஈரானில்
இஸ்லாமிய புரட்சியை எதிர்ப்பவர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்தலாம்: மார்க்சிச
இயக்கங்கள் (மிக முக்கியமாக, துடே கட்சி),
தேசியவாத
இயக்கங்கள் (அவற்றில் முதன்மையானது சுதந்திர இயக்கம்) மற்றும் பிற இயக்கங்கள் (MEK மற்றும் தி ஃபோர்கான் குழு அவற்றில் மிக
முக்கியமானது). புரட்சியின் ஆரம்பத்தில் நடந்த படுகொலைகளில் பெரும்பான்மையானவை
முனாபிகீன் (எம்.இ.கே) மற்றும் ஃபோர்கான் குழுமத்தால் நடத்தப்பட்டன என்பதை
வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்துகின்றன.
ஷஹீத் ஆயதுல்லா முதஹ்ஹரி |
ஏப்ரல் 23, 1979 இல் ஈரானிய இராணுவத்தின் முதல் தலைமைப் பணியாளரான வலியுல்லா கரானி படுகொலை செய்யப்பட்டார்; மே 1, 1979 இல் இஸ்லாமிய புரட்சி கவுன்சிலின் தலைவரும் இஸ்லாமிய புரட்சியின் சூத்திரதாரிகளில் ஒருவருமான ஆயதுல்லா முதஹ்ஹரி படுகொலை செய்யப்பட்டார்; மே 25, 1979 இல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹாஷிமி ரப்சஞ்சனி மீது படுகொலை முயற்சி தோல்வியுற்றது; ஆகஸ்ட் 13, 1979 இல் ஹஜ் மெஹ்தி அராகியின் படுகொலை; நவம்பர் 2, 1979 இல் ஆயதுல்லா காஸி தபதபாய் படுகொலை; டிசம்பர் 18, 1979 இல் ஆயதுல்லா மொஃபத்தே படுகொலை; ஜூன் 27, 1981 இல் ஆயதுல்லா கமேனி மீது படுகொலை முயற்சி தோல்வியுற்றது; ஜூன் 28, 1981 இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் தலைமையகத்தின் மீது குண்டுவெடிப்பு மற்றும் ஷஹீத் பெஹெஷ்தியுடன் இமாம் கொமெய்னி அவர்களின் சகாக்கள் 72 பேர் கொல்லப்பட்டது;
ஷஹீத் பெஹெஷ்தி |
ஜூன் 29, 1981 இல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹக்கானி படுகொலை; ஆகஸ்ட் 30, 1981 இல் பிரதம மந்திரி அலுவலகத்தின் மீது குண்டுவெடிப்பு மற்றும் ஷஹித் ராஜாய் மற்றும் ஷஹித் பஹோனார் படுகொலை;
செப்டம்பர் 05,
1981 இல் ஆயதுல்லா
குதுஸியின் படுகொலை;
செப்டம்பர் 11, 1981 இல் ஆயதுல்லா மதனி படுகொலை; செப்டம்பர் 29, 1981 இல் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹாஷெமினெஜாட் படுகொலை; டிசம்பர் 11, 1981 இல் ஆயதுல்லா தஸ்தகீப் படுகொலை; ஜூலை 2, 1982 இல் ஆயதுல்லா சாதுகி படுகொலை; அக்டோபர் 15, 1982 இல் ஆயதுல்லா அஷ்ரஃபி எஸ்பஹானி படுகொலை. இவை
அனைத்தும் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியின் பின்னர் ஆரம்ப ஆண்டுகளில் இரு
குழுக்களால் நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத
தாக்குதல்கள் ஆகும். இந்த படுகொலைகளைத் தவிர,
17,000 க்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்களும்
இந்த பயங்கரவாத குழுக்களால் குறிவைக்கப்பட்டனர். இஸ்லாமிய குடியரசுக் கட்சியின் தலைமையகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின்
மீது குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 1981ல் பயங்கரவாத செயல்கள் மேலும் அதிகரித்தன.
இதன் விளைவாக பல மூத்த புரட்சிகர நபர்கள் மற்றும் பல உயர் அரசு அதிகாரிகள்
உயிரிழந்தனர். அதன் பிறகு நிலைமை ஓரளவு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் பயங்கரவாத தாக்குதல்கள் முற்றுமுழுதாக
முடிவுக்கு வரவில்லை. உதாரணமாக, செப்டம்பர் 1, 1998 இல் அஸதுல்லா லஜவர்தி படுகொலை
செய்யப்பட்டார், லெப்டினன்ட் ஜெனரல் சயாத் ஷிராஸி ஏப்ரல் 10, 1999 அன்று படுகொலை செய்யப்பட்டார்.ஷஹித் ராஜாய் மற்றும் ஷஹித் பஹோனார்
புரட்சியைத்
தடுக்க பயங்கரவாத தாக்குதல்கள்
எழும் முக்கிய
கேள்விகள்: இந்த பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் என்ன? இந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதில்
எதிரிகளின் தொடரும் இலக்குகள் என்ன? இஸ்லாமிய புரட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த ஈரானின் எதிரிகள் பயங்கரவாதம்
எனும் இந்தக் கருவியை ஏன் பயன்படுத்துகிறார்கள்?
இந்த தாக்குதல்களுக்கான
மிக முக்கியமான காரணம் இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் சித்தாந்தத்தையும்
இஸ்லாமிய குடியரசு முறைமையையும் மற்றும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய
புரட்சியையும் தடுப்பதாகும். இஸ்லாமியப் புரட்சியைத் தடுக்கத் தவறினால், அது அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் வியாபிப்பது
மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள அனைத்து சுதந்திர நாடுகளிலும் கூட
பின்பற்றப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்காது என்பதை புரட்சியின் எதிரிகள் முழுமையாக அறிவார்கள். எனவே, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய
புரட்சியின் போக்கை தடுத்து நிறுத்தி சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள்.
பயங்கரவாத
தாக்குதல்கள்: அரசியல்வாதிகளிடமிருந்து இப்போது விஞ்ஞானிகள் பக்கம்
திரும்பியுள்ளது
2010
ஆம் ஆண்டின்
தொடக்கத்திலிருந்து 2012
ஆம் ஆண்டின்
ஆரம்பம் வரை இருந்த பயங்கரவாத தாக்குதல்களின் தன்மையும் நோக்குநிலையும் மாறியது.
இஸ்லாமிய குடியரசில் உயர்மட்ட அரசியல்வாதிகளை ஒழிக்கும் நோக்கத்துடன் முன்னர்
"அரசியல் படுகொலைகளை" மேற்கொண்ட எதிரிகள், இந்த காலகட்டத்தில் "விஞ்ஞானிகளின் படுகொலைக்கு" தங்கள் கவனத்தைத்
திருப்பி பல ஈரானிய அணு விஞ்ஞானிகளை கொன்றனர்.
2010
ஆம் ஆண்டில்
டாக்டர் மஜித் ஷஹ்ரியாரி மற்றும் டாக்டர் ஃபெரிடான் அப்பாஸி ஆகியோரின் படுகொலை
முயற்சிகளுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்னர், ஜான் சாவர்ஸ் (பிரிட்டிஷ் உளவு நிறுவனமான MI6 இன் தலைவர்) ஒரு செய்தியாளர் கூட்டத்தில்
ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை
நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்றும் "அணு பரவலை நிறுத்துவதை வழக்கமான இராஜதந்திரத்துடன்
தீர்க்க முடியாது;
ஈரானுக்கு
எதிரான உளவு நடவடிக்கைகளை நாங்கள் தொடர வேண்டும்" என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
டாக்டர் அலி
முகமதி மற்றும் டாக்டர் மஜித் ஷஹ்ரியாரி படுகொலை செய்யப்பட்ட பின்னர், நம் நாட்டில் உள்ள மற்ற இரண்டு அணு
விஞ்ஞானிகள் - அதாவது,
தரியூஷ் ரெஸாயிநஜாத்
மற்றும் முஸ்தபா அஹ்மதி ரோஷன் - ஆகியோர் குறிவைக்கப்பட்டு, மேற்குடன் இணைந்த குழுக்களால் நடத்தப்பட்ட
பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
ஆனால் இது
சம்பந்தமாக முக்கியமான கேள்வி என்னவென்றால், “ஈரானுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் ஏன் விஞ்ஞானிகளின் படுகொலைக்கு
மாறியது?
இந்த
மாற்றத்திற்கு காரணம் என்ன?
”
ஆதிக்க
சக்திகளின் தலைமையிலான இஸ்லாம் விரோதக் குழுக்களின் முதன்மை குறிக்கோள் இஸ்லாமியப்
புரட்சியை முடிந்தவரை கட்டுப்படுத்துவதாகும். எனவே, இஸ்லாமியப் புரட்சி முன்னேறி ஒரு முன்மாதிரியாக மாற உதவும் எதையும் அகற்ற
அவர்கள் முயற்சி செய்கிறார்கள். நாட்டின் துரித முன்னேற்றத்திற்குப் பிறகு,
அறிவை
உருவாக்கும் பாதையில் அதற்குப் பின்னால் உள்ள உந்து சக்திகள் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பம் என்பதை ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் உணர்ந்தன. இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும்
வலியுறுத்தியுள்ளார், “நாட்டின் முன்னேற்றம் முதன்மையாக இரண்டு காரணிகளைப் பொறுத்தது: ஒன்று
அறிவியல் மற்றொன்று உற்பத்தி. அறிவியல் இல்லாத நிலையில்,
உற்பத்தி
தடைபடும். விஞ்ஞானம் தான் நாடு முன்னேற உதவும்.”
எனவே, அணு விஞ்ஞானிகளின் படுகொலை ஒருபுறம் அணு
விஞ்ஞானத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான நாட்டின் முயற்சிகளைத் தடுக்கவும்; மறுபுறம், ஈரானின் விஞ்ஞான முன்னேற்றத்திற்கான பாதையில் போராடி வந்த
பல்லாயிரக்கணக்கான புரட்சிகர இளைஞர்களின் இதயங்களில் அது ஒரு பயத்தை உண்டாக்கலாம்
என்றும் அவை எண்ணின. நிச்சயமாக, இது அவர்களின் பிழையான கணிப்பீடாகும்.
உண்மையில் இந்த படுகொலைகள், புரட்சிகர இளைஞர்களை அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான
துறைகளில் தங்கள் கல்வியைத் தொடர இன்னும் அதிகமாக ஈர்க்கின்றன. இதன் விளைவாக ஈரானின் அறிவியல் முன்னேற்ற விகிதம் விஞ்ஞான முன்னேற்றத்தின்
சராசரி சர்வதேச விகிதத்தின் 13 மடங்காக மாறியது என்று மதிப்புமிக்க சர்வதேச
அமைப்புகள் ஒப்புக் கொள்கின்றன.
இஸ்லாமியப்
புரட்சியை அவர்களுடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி எதிர்கொள்ள முடியாது என்பது
எதிரிகளுக்கு இப்போது நன்கு நிரூபிக்கப் பட்டுள்ளது.
படுகொலைகளுக்கு
பதிலளிக்கும் விதமாக,
இமாம் கொமெய்னி
(ரஹ்) அவர்கள் “இஸ்லாமியப் புரட்சியின் எதிரிகள் அவர்களின் மோதல்களில் பகுத்தறிவு இல்லாத தன்மையை இந்த
முயற்சிகள் காட்டுகின்றன” என்றார். மேலும் “நீங்கள் எங்கள் புத்திஜீவிகளை இரவின்
இருளில் படுகொலை செய்வது உங்கள் விரக்தியையே காட்டுகிறது. நீங்கள் பகுத்தறிவு
இல்லாதவர். நீங்கள் பகுத்தறிவுடையவராக இருந்தால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள்,
விவாதிப்பீர்கள்.
இருப்பினும், நீங்கள் பகுத்தறிவு அற்றவர்கள் என்பதால் உங்கள் அறிவு படுகொலைகளுக்குத்
தூண்டுகிறது. இஸ்லாத்தின் தர்க்கம் படுகொலைகளை நிராகரிக்கிறது. இஸ்லாம்
பகுத்தறிவுள்ள மார்க்கம். எங்கள் சிறந்த ஆளுமைகளை கொல்வதன் மூலம் நீங்கள் அதை
அழித்துவிடலாம் என்று கற்பனை செய்கிறீர்கள்; ஆனால், இந்த படுகொலைகள் எமது இஸ்லாத்தை
உறுதிப்படுத்துகிறது." என்றும் இமாம் கொமெய்னி (ரஹ்) கூறினார்கள்.
https://english.khamenei.ir/news/7640/What-do-we-mean-by-saying-Iran-is-a-victim-of-terrorism