Friday, June 5, 2020

சரணாகதி நிலையில் இருந்த சமுதாயத்தை தன்னம்பிக்கையும் கண்ணியமும் கொண்ட தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியமைத்தவர் இமாம் கொமெய்னி


The Imam who transformed the society from captivity to self-confidence and dignity.

இமாம் கொமெய்னி நினைவு தினத்தை முன்னிட்டு
இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனெயி
தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை.
ஜூன் 03, 2020.


நமது பெருமதிப்புக்குரிய இமாமின் நினைவு தினம் இம்முறை வழமைக்குப் புறம்பாக வித்தியாசமான முறையில் அனுஷ்டிக்கப் படுகிறது. நினைவு தின நிகழ்வுகள் இடம்பெறும் முறை முக்கியமானது அல்ல. இமாம் பற்றி நாம் இத்தினத்தில் உரையாடுவது தான் முக்கியமானது. ஏனெனில் அது  இன்றும் நாளையும் நமது நாட்டுக்குத் தேவையானது. இமாம் கொமெய்னி அவர்கள் நம்  மத்தியில் இருந்து உடலால் பிரிந்து சென்று பல வருடங்கள் கழிந்து சென்ற போதிலும் நம் மத்தியில் அவர் எப்போதும் உயிர்வாழ்கிறார். கட்டாயம் அவர் நம்  மத்தியில் உயிர்வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அவரது பிரசன்னம், அவரது அகமியம், அவரது சிந்தனை மற்றும் அவரது விரல் அசைவில் இருந்து கூட நாம் பயன்பெற வேண்டும். 

மாற்றம் தேடும் மகாகுணம்
இன்று இமாமின் பல்பரிமாண ஆளுமையில்  கோடிட்டுக் காட்டத் தக்கதான மற்றுமொரு குணவியல்பு பற்றி உரையாட விழைகிறேன். மாற்றம் கோரும், மாற்றம்  படைக்கும் மகா குணம் என அதனைக் குறிப்பிடலாம். இமாம் இயல்பிலேயே மாற்றத்தை யாசிப்பவராகவும் மாற்றத்தை தோற்றுவிப்பவராகவும் திகழ்ந்தார். மாற்றத்தை ஏற்படுத்துவதில் அவரது பங்கு வெறுமனே ஒரு ஆசிரியரின், வழிகாட்டியின், ஆசானின் பங்காக மட்டுப்பட்டதாக இருக்கவில்லை. போர்க்களத்தில் ஒரு கட்டளை அதிகாரியின், ஓர் உண்மையான  தலைவரின் வகிபாகமாக அது அமைந்தது. தாம் வாழும் காலத்தில் பல்வேறு துறைகளில், மாறுபட்ட களங்களில் எண்ணற்ற மாற்றங்களை  அவர்  தோற்றுவித்தார். அவற்றில் சிலவற்றை மாத்திரம் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மாற்றம் தேடும் மனப்பாங்கு ஆரம்பத்தில் இருந்தே இமாமிடம் குடிகொண்டிருந்த பண்புகளில் ஒன்றாகும். 1960களில் உருவெடுத்த இஸ்லாமிய எழுச்சியோடு வெளிப்பட்ட ஒன்றன்று. இமாமின் வயது முப்பதுகளைக் கடக்கும்  போதே இந்தஉள்ளுணர்வை இமாம் வெளிப்படுத்தினார். மர்ஹூம் வஸீரி யஸ்தியின் கையேட்டில் இமாம் தமது கையெழுத்தில் வரைந்த குறிப்புகளை நான் பார்த்திருக்கிறேன். பிற்காலத்தில் அது அச்சுவடிவிலும் பிரசுரிக்கப் பட்டது. அதில் இமாம் பின்வரும் திருவசனத்தை புனித குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். 

நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுவீராக…. என்று கூறுங்கள் நபியே!” (34:46) 

மக்களை  இறைவனுக்காக எழுச்சி பெறுமாறு இதன் மூலம் மக்களை அழைக்கிறார். இந்த  ஆர்வம் இமாமிடம் குடிகொண்டிருந்தது. மாற்றம் தேடும் இந்த ஆர்வம் அவர் கைகளாலேயே செயலுருப்  பெற்றது. அதனையே நான் மாற்றம் படைப்பவர் எனக் குறிப்பிட்டேன். உபதேசம், கட்டளை என்று மட்டுமன்றி தாமாகவே மாற்றத்தை செயலுருப் படுத்துவதில் களத்தில் நின்று ஈடுபாடு காட்டினார். கும் நகரில் இறையியல் கற்று வந்த இளம் மாணாக்கர் மத்தியில் மட்டுமன்றி ஈரான் தேசத்தின் மக்கள் மத்தியிலும் மாற்றம் தோற்றுவித்தார்.

தனி மனிதரில் மாற்றம் படைத்தல்
இஸ்லாமிய எழுச்சி ஆரம்பிப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னதாக கும் நகரில் அக்லாக் - இஸ்லாமிய ஒழுக்கவியல் சம்பந்தமான  பாடங்களையும் பகிரங்க அமர்வுகளையும்  நடத்தி வந்தார். பிக்ஹு, உஸூல், மெய்யியல் பாடங்களுக்கு மேலதிகமாக இவை நடைபெற்றன. ஆனால் நாம் புனித கும் நகருக்கு சென்ற போது பல வருடங்களுக்கு முன்னதாகவே இந்த பொது அமர்வுகள் நிறுத்தப்பட்டதாக அறிந்தோம். நாம் கேட்டறிந்து கொண்ட பிரகாரம் வாராந்தம்  இடம் பெற்ற இமாமின் அக்லாக் அமர்வுகள் உயிரோட்டம் மிக்கதாக இருந்தன. கேட்போரின் உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டு வசீகரிக்கப்பட்டன. அவர் நடாத்திய பிக்ஹு மற்றும் உஸூல் பாடங்களின் போதும் இதனை நாமும் கண்ணுற்றோம். இந்தப் பாடங்களை நடத்துகின்ற போதும் எதோ ஒரு வகையில் அஃஹ்லாக் விடயங்களையும் தொட்டுச் செல்வார். மாணவர்கள் உளம் உருகி கண்ணீர் வடிப்பார்கள். உள்ளூர ஒரு மாற்றம் நிகழ அது காரணமாக அமைந்தது.

இது இறை தூதர்களின் வழிமுறையாகும். மனிதர்களின் உள்ளுணர்வுகளோடு உரையாடி மாற்றம் படைப்பதன் மூலமே இறைத்தூதர்கள் பெரும் புரட்சிகளுக்கு  அடித்தளம் அமைத்தார்கள்.  இமாமும் அதனைக் கைக்கொண்டார். மனிதரில் இயல்பாய்ப் புதைந்துள்ள உணர்வுகளைத் தட்டியெழுப்பினர், பின்னர் அவற்றை நெறிப்படுத்தி இயக்கினார்கள்’ என அமீருல் முஃமினீன் அருளிய வார்த்தைகளில் வலியுறுத்தியதும் இதைத் தான். இமாம் கொமெய்னியும் அந்தப் புள்ளியில் இருந்தே ஆரம்பம் செய்தார். 

பிற்காலத்தில் ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை, எழுச்சியை இலக்காகக் கொண்டு இமாம் இத்தகைய அமர்வுகளை நடத்தினார்களா என்பதை திட்டவட்டமாகக் கூற முடியாது. மனிதர்களின் அடியுணர்வுகளை விளித்து உரையாடி, நினைவூட்டி, உள்ளங்களை தயார் படுத்தி, அவற்றை விழிப்படையச் செய்து இயக்க வைக்கும், மாற்றம் படைக்கும் முறைமையை இமாம் கைக்கொண்டார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும். இந்தப் புள்ளியில் இருந்து  ஆரம்பித்தார். அதுவே புரட்சியின் போதும் அதன் பின்னரும் இன்று  வரையும்  ஒரு தேசத்தை மாற்றத்துக்கு உள்ளாக்கியது. மாற்றம் என்பதன் உண்மையான அர்த்தத்தை இந்தப் புரட்சியில் நம் புரிந்து கொள்ளலாம்.

இந்த பிறழ்வுக்கான இயக்கத்தில் இமாமின் இலக்கு ஈரானிய மக்களாக இருந்தது. இமாமின்  எழுச்சி இயக்கம் உயிர்ப்பிட முன்னரும் ஈரானில் அரசியல் போராட்டங்கள் இடம் பெற்று வந்தன. ஈரானில் பல தசாப்தங்களாக பல்வேறு குழுக்கள் தொடர்ந்தும் போராடி வந்தனர். ஆயினும் அவர்களது செயல்பாட்டு வட்டம் குறுகி மட்டுப்படுத்தி காணப்பட்டன. சிலர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மாத்திரம் செயல்பட்டார்கள். உதாரணமாக நூறு அல்லது நூற்றி ஐம்பது மாணவர்களை அவர்கள் கவர்ந்தார்கள். இமாமின் பணி குறிப்பிட்ட மக்கள் சார் அல்லது தொழில் சார் குழுக்களுடனோ மட்டுப்பட்டதாக அன்றி ஈரான் தேசத்து மக்களை சார்ந்ததாக அமைந்தது. ஒரு தேசத்து மக்கள் என்பது பெரும் சமுத்திரம் போன்றது. அதில் கொந்தளிப்பை ஏற்படுத்துவது எவராலும் சாதிக்க முடியமானது அல்ல. அதற்கு பிரம்ம பிரயத்தனம் தேவை. ஒரு நீச்சல் தடாகத்தில் அலைகளை உருவாக்குவது போலல்ல. இமாம் இந்தப் பெரும் பணியை மேற்கொண்டார். மாற்றங்களை அவர் உருவாக்கினார்.

தேக்க நிலையையும் சரணாகதியையும் மாற்றியமைத்தல்
நமது இளமை நாட்களில்  மக்கள் எழுச்சி ஆரம்பித்த 60களுக்கு முன்னர்  ஈரானிய சமூகம் தனது நிலைமைகள் தலை எழுத்து பற்றிய எந்த விதக் கரிசனையும் அக்கறையும் இல்லாது அன்றாட வாழ்வு விடயங்களில் மூழ்கிக் கிடந்தனர். தமது உரிமைகளைக் கேட்டுப் பெரும் அதற்காகப் போராடும், களமிறங்கும் பண்பு அங்கு காணப்படவில்லை. இந்தப் பண்புகளை இமாமே ஏற்படுத்தினார். தேங்கிக் கிடந்த இந்த சமுதாயத்தை போராடும் சமுதாயமாக மாற்றினார். இமாமின் உற்சாகம் ஊட்டும் உலுக்கிவிடும் பேச்சுக்கள், கனல் பறக்கும் புரட்சிகர அறிக்கைகள் என்பன இந்த சமுதாயத்தை உலுப்பி விட்டன. எழுச்சியின் ஆரம்ப யுகமாகிய 1963இல் பிரதான நகரமெங்கும் களத்தில் குவிந்த மக்கள் வெள்ளமும் அதனைத் தொடர்ந்து (கொர்தாத் 15) ஜூன் 5 நிகழ்வுகளும் இதற்கு சான்றாகும். அன்றைய தினம் அரசு அரங்கேற்றிய மாபெரும் படுகொலையாலும் மக்கள் எழுச்சியை தடுத்து நிறுத்த  முடியவில்லை. இந்த மக்கள் எழுச்சி வடிவம்  புரட்சியின் வெற்றி வரை தீவிரம் குன்றாது  தொடர்ந்தது. இது இமாம் ஏற்படுத்திய மாபெரும் மாற்றம் ஆகும்.

தாழ்வு மனப்பான்மையை மாற்றியமைத்தமை
மக்கள் மத்தியில் தம்மைப்  பற்றியும்  தமது சமுதாயம் பற்றியும்  காணப்பட்ட  கண்ணோட்டத்தையும் இமாம்  மாற்றியமைத்தார். ஈரானிய சமுதாயத்தில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மை குடிகொண்டிருந்தது. பெரும் பலசாலிகளின் முடிவுகளில் நாம் செல்வாக்கு செலுத்த முடியும் என அப்போது நாம்  யாரும் நினைக்கவில்லை. உலக வல்லரசுகளின் அதிகாரத்தை எதிர்த்து நிற்பது எப்படிப் போனாலும் உள்ளூரில் கூட, சில அதிகாரிகளின் நடத்தைகளைக் கூட எதிர்த்து மாற்றியமைப்பது பற்றிய எண்ணம் மக்களிடம் தோன்றவில்லை. அது ஒரு வகை தாழ்வு மனோ நிலை. அதனை இமாம் சுய கௌரவம், தன்னம்பிக்கை என  மாற்றி அமைத்தார். அன்றைய அடாவடி ஆட்சிக்கு இயல்பாகவே தாம் அடிபணிய வேண்டும் என மக்கள் கருதினர். அப்படியன்று, தாம் விரும்பும் விதத்திலான அரசாட்சியாக அதனை மாற்ற முடியும் என்ற எண்ணத்தை இமாம் ஏற்படுத்தினார். 

புரட்சியின் போது மக்கள் முதலில் இஸ்லாமிய அரசமைப்பு பற்றியும் இஸ்லாமிய ஆட்சி பற்றியும் கோசம் எழுப்பினர். இறுதியாக அது இஸ்லாமியக் குடியரசாக மாறியது. இதனை மக்களே தேர்ந்தெடுத்தார்கள். அதன் பிறகும் இடம்பெற்ற தேர்தல்களில் மக்கள் தமது ஆட்சியாளர்களைத் தெரிவு செய்தார்கள். சரணாகதி நிலையில் இருந்த சமுதாயத்தை தீர்மானிக்கும் தன்னம்பிக்கையும் கண்ணியமும் மிக்க  நிலைக்கு இமாம் மாற்றியமைத்தார்.

மாற்றம் கண்ட கோரிக்கைகள் 
மக்களது கோரிக்கைகளும் அபிலாசைகளும் மாற்றம் கண்டன. அன்றைய அதிகாரிகளிடம் மக்கள் கோரிய விடயங்கல் மிகவும் குறுகியவை. உதாரணமாக குறிப்பிட்ட பாதையை செப்பனிடுங்கள், வசதிகளை ஏற்படுத்துங்கள் போன்றவை. ஆனால் பின்னர் மக்கள் சுதந்திரம், சுயாதீனம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். கிழக்கும் வேண்டாம் மேற்கும் வேண்டாம்எனும் கோரிக்கைகளை மக்கள் கோஷமிடலாயினர். சில்லறையான, மட்டுப்படுத்தப்பட்ட தன்மையில் இருந்து அடிப்படையான, மனித இனத்துக்குத் தேவையான, உலகளாவிய பிரமாண்டமான கோரிக்கைகளாக அவை மாற்றம் கண்டன.

சமயம் பற்றிய பார்வை 
சமயம் பற்றிய கண்ணோட்டத்தையும் இமாம் மாற்றி அமைத்தார். தனிப்பட்ட விவகாரங்களுடன் மட்டும் தொடர்புள்ள, வணக்க வழிபாடுகளோடு சுருங்கிக் கொள்கின்ற ஒன்றாகவே சமயம் பற்றி நோக்கப் பட்டது. தொழுகை நோன்பு போன்றவற்றுடன் சில கொடுக்கல் வாங்கல்கள், திருமணம், விவாகரத்து போன்றவற்றுடன் மட்டும் நின்றுகொள்வதாகக் கருதப்பட்ட சமயம் அதற்கு அப்பால் சென்று பொறுப்புகளையும் இலக்குகளையும் பணிகளையும் கொண்டது என்ற சிந்தனை விதைக்கப்பட்டது. சமயம் என்பது சமூகஅமைப்பை உருவாக்கும் நாகரிகத்தைக் கட்டியெழுப்பும் மனிதனை புடம்போடும் ஒன்றாக மீள் அறிமுகம் செய்யப்பட்டது. சமயம் பற்றிய மக்களது கண்ணோட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

எதிர்காலம் பற்றிய பார்வை 
எதிர்காலம் பற்றிய பார்வையில் ஏற்பட்ட மாற்றமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இமாம் களத்தில் இறங்கிய போது சில கோஷங்கள் சமுகத்தில் காணப்பட்டன. சில கட்சிகள் மற்றும் குழுக்கள் மட்டுப்படுத்தப்பட்ட வீச்சுகளைக் கொண்ட கோஷங்களை முன்வைத்திருந்தனர். எனினும் அவற்றில் எதிர்காலம் பற்றிய தெளிவு காணப்படவில்லை. அவற்றில்  மக்களால் எதிர்காலத்தை யூகிக்க முடியவில்லை. புதிய இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்புதல் என்ற பிரமாண்டமான எதிர்கால இலக்கை இமாம் அறிமுகப் படுத்தினார். இன்றைய ஈரானிய சமுதாயத்தை நோக்குங்கள். இந்த உயரிய நிலை உருவாக்குவதற்கு பின்னணியாக இமாமின் அருள்மிக்க கரங்கள் உள்ளன. நவீன இஸ்லாமிய நாகரிகத்தை கட்டியெழுப்புவது, முழுமையான இஸ்லாமிய ஒற்றுமையை நிலைநிறுத்துதல், இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குதல்  என்பன இன்று நம் சாதாரண குடிமகனின் அபிலாஷையாக உள்ளன.

பிரயோக அறிவு
சிறப்புத்தேர்ச்சிக்குரிய துறைகளில் அறிவின் பிரயோக அடிப்படைகளில் மாற்றம் உருவாக வேண்டும். இதனை  இமாம் சாதித்துக் காட்டினார். சிறப்பு ஆய்வுகள்  ஹவ்ஸாவுடன் சம்பந்தப்பட்டதும் பிக்ஹு மற்றும் மற்றும் உஸூல் துறைகளில் ஈடுபாடு கொண்டோரின் கைகளிலும் இருந்தன.   இஸ்லாமிய சட்டத் துறையாகிய பிக்ஹு ஆய்வை அரசமைப்புக்குள் கொண்டுசென்றார் இமாம். பிக்ஹுக்கும் அரசாட்சிக்கும் முன்னர் தொடர்பு இருக்கவில்லை. விலாய த்பகீஹ் ஆட்சி முறை பற்றிய சிந்தனை ஆயிரம்  ஆண்டுகளாக பிக்ஹு அறிஞர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. எனினும் அதன் நடைமுறைச் சாத்தியம் பற்றிய நம்பிக்கை காணப்படாததால்  அது பற்றிய விரிவான  ஆய்வுகள் நடைபெறவில்லை. இமாம் பிக்ஹு துறையில் ஓர் அடிப்படை விடயதானமாக அதனை  முன்வைத்தார். அது பற்றிய ஆழமான உறுதியான வலுவான அறிவார்ந்த  ஆய்வுகளை அறிமுகம் செய்தார். இத்துறையில் ஈடுபாடு கொண்ட ஆய்வாளரின் சிந்தனையாளரின் கவனம் திரும்பியது.

அரசின் நலன் பற்றிய ஆய்வும் முக்கியமான ஒன்று. மக்கள் நலனே அரசின் நலன் ஆகும். இதனை பிக்ஹு ஆய்வுகளில் புகுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினார். அஹம்மு முஹிம்முமற்றும் தஸாஹும்முதலிய பிக்ஹு கோபாடுகள் அதுவரை சாதாரண சட்ட விளக்கங்களிலேயே பிரயோகிக்கப்பட்டு வந்தன. இமாம் அவற்றை நாட்டு நிர்வாகம் போன்ற துறைகளிலும் அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிக்ஹின் பிரயோகம் விசாலித்தது. பிக்ஹின் பிரயோகத்துக்கான சந்தர்ப்பம் அதிகரித்தது. இறையியல் கல்லூரிகள் இதனை வரவேற்று மெச்ச வேண்டும். அதில் இருந்து அதிக பயனை பெற வேண்டும். பிக்ஹுத் துறையில் இவ்வாறான விவகாரங்கள் சம்பந்தமாக இமாம் அறிமுகம் செய்தவை அறிவுபூர்வமானதும் சட்டபூர்வமானதும் ஆகும். இமாமின் கூற்றுப்படி இது ஜவாஹிருல்  பிக்ஹு’ - பிக்ஹின் அடிப்படை மூலத்தோடு சார்ந்த ஆய்வாகும். புதிய செருகல் அன்று. பிக்ஹு விற்பன்னர்கள் உபயோகிக்கும் சரியான அளவீடுகள் மற்றும் சரியான பிரயோகத்துக்கு அமைவானதாகும். 

நவீனத்துவ சிந்தனையும் வழிபாடும்
சமயம் பற்றிய கண்ணோட்டத்தில்  இமாம் இன்னொரு மாற்றத்தை காட்டித் தந்தார். அது நவீன கண்ணோட்டத்தில் சமயம் பற்றிய பார்வை  இருந்த போதும் மார்க்க விவகாரங்களை, வழிபாட்டு அம்சங்களை பேணுவதில் அவர் காட்டிய நுணுக்கமும் உறுதியும் ஆகும். இமாம் புதுமை கண்ட பிக்ஹு விற்பன்னராகவும் சமய போதகராகவும் வாழ்ந்தார். நவீன கண்ணோட்டத்தில் எதனையும்  நோக்கிய போதும் சமய அனுஷ்டானங்கள் மற்றும் வழிபாடுகளில் கண்டிப்பானவராகவும் திகழ்ந்தார், அவரது யுகத்தில் நவீனத்துவ கண்ணோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பல அறிஞர்கள் இருந்தனர். சமய ஆய்வுகளில் கரை கண்ட மத போதகர்கள் அவர்கள். தனிப்பட்ட சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் பேணுதலாக இருந்தார்கள் எனினும் சில விடயங்களில் குறிப்பாக போதனைகளின் போது  கண்டிப்புக் குறைவு காணப்பட்டது.  இமாம் சமய சட்டம் நடைமுறை விவகாரத்தில் புதிய கண்ணோட்டத்தை ஊக்குவித்ததோடு அவற்றின் நடைமுறைகளை பேணுவதில் சமய அனுஷ்டானங்கள் மற்றும் வழிபாடுகளில் அதிக கவனமும் செலுத்தினார். சோக நிகழ்வுகளை முறையாக நடத்துவதில் இமாம் காட்டிய பேணுதலை உதாரணமாகக் கூறலாம்.

இளம் சமுதாயத்தினர் மீதான நம்பிக்கை
இளைய பரம்பரையினர் பற்றிய கண்ணோட்டத்திலும் இமாம் மாற்றம் தோற்றுவித்தார். இளைய பரம்பரையினரின் சிந்தனையிலும் செயலிலும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். இது ஒரு நிகரில்லா மாற்றமாகும். உதாரணமாக புரட்சிக் காவல் படை உருவாக்கப் பட்ட போது அதன் தலைமைப் பொறுப்புகளை முப்பது வயதையும் அடையாத இளைஞர்களிடம் ஒப்படைத்தார். நீதித் துறையிலும் வேறு பல துறைகளிலும் இளம் பரம்பரை மீது அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர்களின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளில் வைத்திருந்த நம்பிக்கை காரணமாகவே பொறுப்புகளை அவர்களிடம் கையளித்தார். அதன் அர்த்தம் ஏனையோரின் ஆற்றல் திறமைகளை மறுதலித்தார் என்பதல்ல. இள வயதினரை ஊக்குவித்தல் என்பதன் அர்த்தம் வயது வந்தவர்களை முற்று முழுதாக ஒதுக்கி விட வேண்டும் என்பதல்ல. இளம் வயதினர் அல்லாதோர் மீது வைத்திருந்தது போன்ற நம்பிக்கையை அவர் இளம் வயதினர் கொள்ள காரணம் இருந்தது. புதிய அரசமைப்பினைப் பாதுகாக்கும் செல்வமாக, முதலீடாக இமாம் அவர்களைக் கருதினார். உதாரணமாக நடுத்தர வயதில் இருந்த என்னை தெஹ்ரானில் ஜும்ஆ தொழுகை நடாத்தும் இமாமாக நியமித்தார். அதே வேளை கெர்மான்ஷாவில் ஜும்ஆ இமாமாக எண்பது  வயது நிரம்பிய மர்ஹூம்  ஷஹீத் அஷ்ரபீயை நியமனம் செய்தார். மிஹ்ராபில் ஷஹீதாகிய மேலும் பலரையும் நியமனம் செய்தார். அவர்களும் அறுபது எழுபது தாண்டியவர்கள். இராணுவத்திலும் ஷஹீத் பல்லாஹீ, சஹீர் நெஜாத் போன்றவர்களும் அறுபது வயதை அடைந்தவர்கள். எனவே இளம் சந்ததியினர் மீதான இமாமின் கவனம் அல்லாதோரைப் புறக்கணிப்பதாக கருதக் கூடாது. நாமும் கூட இந்த விடயத்தில் ஆர்வம் காட்டுகிறோம். அனுபவசாலிகளைப் பயன்படுத்துவது  போலவே இளம் சந்ததியினர் மீது இதை விட நம்பிக்கை வைத்து அவர்களது ஆற்றல் திறமைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்காலத்துக்கான செல்வங்கள்.

உலக வல்லரசுகள் பற்றிய நோக்கு 
இமாம் உருவாக்கிய இன்னொரு மாற்றம் ஏனைய மாற்றங்களை விட  முக்கியத்துவம் மிக்கதாக இருக்கலாம். அது  உலக ஆதிக்க சக்திகள் மற்றும் வல்லரசுகள் பற்றிய எண்ணத்தில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். அமரிக்காவின் பேச்சுக்கு எதிராகக் கருத்துரைப்பதோ அமெரிக்க விருப்பத்துக்கு மாற்றமாக செயற்படுவதோ யாராலும் நினைத்தும் பார்க்க முடியாததாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அமெரிக்க தலைவர்களே கொமெய்னி அமெரிக்காவை கேவலப் படுத்தினார்எனக் கூறினார்கள். உண்மையும் அது தான். அவரது விரல் அசைவில் செயற்பட்ட இளைஞர்களும் வாஸ்தவத்திலேயே வல்லரசுகளை அவமானப் படுத்தினார்கள். அவற்றின் அதிகார வெறியை சிதைத்து களத்தில் இருந்து துரத்தியே விட்டார்கள். வல்லரசுகள் வாங்கிக் கட்டுபவன, தோல்வியைத் தழுவக் கூடியன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். சோவியத் தேசத்தின் முடிவு என்னவாயிற்று என்பதை பாருங்கள். அமெரிக்காவின் நிலையை நீங்களின்று அவதானிக்கிறீர்கள். ஒரு காலத்தில் இப்படி நடக்கலாம் என்று மக்கள் நினைக்கவே இல்லை. அப்போதே இமாம், இந்த வல்லரசுகள் சரிந்து விழும் என்பதை மக்களின் இதயங்களில் விதைத்தார். 

மாற்றங்ககளை விளைவிப்பது இறைவனே 
பல்வேறு மாற்றங்களை தோற்றுவித்த, மாற்றங்களின் தந்தையான இமாம், அவற்றை தாம் உருவாக்கியதாக உரிமை கோரவில்லை. இந்த மாற்றங்கள் இறைவனின் கருணையே என நம்பினார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவாக்கிய சிந்தனை மாற்றம், விழிப்புணர்வு பற்றி வியப்புடன் விபரிப்பதை அவரது பேச்சுகளிலும் அறிக்கைகளிலும் காண்கிறோம். இமாம் தான் அந்த மாற்றத்துக்கு காரணியாக இருந்தார். எனினும் அதனை இறைவன் புறத்தில் இருந்து நடந்த அற்புதமாக நம்பினார். உண்மையும் அதுவே. அல்லாஹ்விடம் அன்றி எந்த சக்தியும் வல்லமையும் கிடையாது. நீங்கள் எறிந்த போது உண்மையில் நீங்கள் எறியவில்லை’ (அன்பால்: 17) என்ற திருவசனத்தை முழுமையாக நம்பினார். 

இளைஞர்களின் மத்தியில் உருவாக்கிய மாற்றம் மற்றும் அவர்களது புரட்சிகர செயற்பாடுகள் பற்றி மிக கரிசனை கொண்டிருந்தார். அது பற்றி வியப்போடு மெச்சினார். ஓரிடத்தில் இந்தஇளைஞர்களின் மனமாற்றத்தை வியந்து போற்றுகின்ற இமாம் இறைவனால் அவர்களது உள்ளத்தில் விதைக்கப்பட்டதாக விபரிக்கின்றார். மன்னராட்சியை துடைத்தெறிந்த புரட்சியை விட இம்மாற்றம் மிகப் பெரியது என சிலாகிக்கிறார். புரட்சியில் ஒரு மன்னராட்சியை தோற்கடித்து வெற்றி  பெற்றனர். ஆனால் இந்த ஆன்மீக, சிந்தனா மாற்றம் ஷைத்தானைத் தோற்கடித்து கண்ட வெற்றியாகும். சைத்தான் மன்னராட்சியை விட பலமடங்கு பலம் வாய்ந்தது. இமாம் தமது வியப்பை அவ்வாறு வெளியிட்டார். 

சமுதாயம் உயிர் வாழ மாற்றம் தேவை 
மொத்தத்தில் இமாம் மாற்றங்களைத் தோற்றுவிப்பவராக இருந்தார். இந்த விடயங்களை நான் விளக்குவது வெறுமனே இமாம் பற்றிய தகவல்களை  தெரிந்து கொள்வதற்காக அல்ல. அதுவும் முக்கியமானது  தான். நாம் இமாமிடம் இருந்து கற்க வேண்டியவை நிறைய உள்ளன.

உயிர் வாழும் எந்த சமுதாயமும் மாற்றங்களை அரவணைக்க வேண்டும். இன்று நாமும் பல துறைகளில் மாற்றங்களை வேண்டி நிற்கிறோம். இமாமின் மறைவுக்குப் பிறகும் இமாம் ஏற்படுத்திய மாற்றங்களில் இருந்து வழிமாறாமல் மக்களும் புரட்சியும் முன்னேறிச் செல்கின்றமைக்காக இறைவனைப் புகழ்கின்றோம். நாம் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க மாற்றங்களை கண்டுள்ளோம். முன்னர் இருந்ததை விட பலம் பெற்றுள்ளோம். இன்னும் பல விவகாரங்களில் முன்னரை விட பெரும் அடைவுகளை கண்டோம். அறிவு ரீதியாக நாம் அடைந்துள்ள முன்னேற்றம் சாதாரணமான ஒன்றல்ல, மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒரு காலத்தில் நாம் அறிவியல் துறையில் மிக பின்தங்கி இருந்தோம். இன்று விஞ்ஞான முயற்சிகளிலும் அடைவுகளிலும்  உலகில் பேசப்படும் சக்தியாக வளர்ந்துள்ளோம். பாதுகாப்புத் துறையில் நாம் கண்டுள்ள முன்னேற்றம் நமது பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமானதாகும். தேசம் இந்த நிலையை அடைந்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

அரசியல் ரீதியாக நமது முன்னேற்றம் உலக நாடுகள் நம்மை ஆச்சரியத்துடன் ஏறிட்டு நோக்க வைத்துள்ளது. இஸ்லாமியக் குடியரசு உலகில் மிக்க மரியாதையோடு நோக்கப்படுகிறது. இவை அனைத்தும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகும்.

இமாமை இழந்ததன் பின்னரான கடந்த முப்பது ஆண்டுகளில் தேசத்தின் பயணம், இமாம் உருவாக்கிய மாற்றத்தின் இயக்கம் நிற்காது தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. சில துறைகளில் உட்கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை இன்னும் இறுதி இலக்கை சென்றடையவில்லை. இவற்றோடு போதுமாக்கிக் கொள்ள முடியாது. 

நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் ஒரு துறையில் எந்த மாற்றமும் நிகழ்வதைக் காணவில்லை. நாம் பின்தங்கி இருந்தோம். இது கவலைக்குரியது. விரும்பத்தக்கது அல்ல. புரட்சியின் இயல்புக்கு இது ஓவ்வாதது. ஒரு புரட்சி உயிர் வாழ்வதெனின் ஒன்றன் பின் பின்னரான புதுமைகளை  அது காண வேண்டும், முன்னேற்றம் காண வேண்டும், மாற்றம் நிகழ வேண்டும். மாற்றம் என்பது அதிசிறந்த நிலையை மிகத் தெளிவான விதத்தில் அடைதல் ஆகும். அதாவது ஒருபிறழ்வு, ஒரு பாரிய நகர்வு, பல்வேறு முனைகளில் நமது தேவையாக இருந்தது. சில துறைகளில் இதற்கான தகைமை நம்மிடம் இருக்கவில்லை. 

தீர்மானிக்கும் சக்தியாக மனோதிடம் 
 புரட்சிக்கு  எதிர்ப்  பதம் பிற்போக்கு ஆகும். உலகின் பல புரட்சிகளும் பிற்போக்குத் தனத்தால் பீடிக்கப் பட்டன. புரட்சியின் பின் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள், பதினைந்தாண்டுகள் கழிந்து செல்கையில் அவர்களது அலட்சியம் காரணமாக பிற்போக்கு  நிலை உருவாக்கியது. இந்த பின்னோக்கிய போக்கு  புரட்சிக்கு எதிரான தன்மையாகும். புரட்சியின் பின்னோக்கிய போக்கும் அதன் முன்னேற்றமும்  இரண்டுமே மனிதர்ளின்  மனவலிமையில்  தங்கியுள்ளது. மனிதர்கள் முறையாக நகர்ந்தால் முன்னேறிச் செல்வார்கள். பிழையான  நகர்வுகளை மேற்கொண்டால் பின்னடைவை காண்பார்கள். இந்த இரண்டு வித நிலைமைகள் பற்றியும்  புனித குர்ஆனிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஒரு சமுதாயம் தமக்குள்ளேயே மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களில் மாற்றம் விளைவிப்பதில்லை’ (13:11). இந்த திருவசனம் சாதக நிலையை விவரிக்கிறது. அதாவது நீங்கள் சாதகமான  மாற்றங்களை முன்னெடுக்கும் போது சாதகமான நிகழ்வுகளையும் சாதகமான நிலைமைகளையும் ஏற்படுத்துவான். இன்னொரு திருவசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது: எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளவற்றை மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை’ (8:53). இது முன்னைய நிலையின் எதிர்மறைத் தன்மை ஆகும். இது பின்னடைவைக் குறிக்கிறது. இறைவன் ஒரு சமுதாயத்துக்கு  ஒரு அருட்கொடையை  வழங்கியும்  அந்த சமுதாயம்  முறையாக செயற்பட்டு சரியான திசையில் நகராது விட்டால் அந்த அருட்கொடையை  அல்லாஹ் அவர்களிடம் இருந்து திருப்பிப்  பெறுவான்.  ‘அருட்கொடைகளை மாற்றி விடுகின்ற பாவங்களை எனக்கு மன்னித்தருளுவாயாகஎன நாம் துஆ குமைலில் ஓதுகிறோம். அருட்கொடை மாற்றப்படல் அல்லது விலக்கிக் கொள்ளுதல் நாட்டத்தில் இருந்து தோன்றுவது. நாம் இந்த நிலைமைக்கு தள்ளப்படாமல் மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

ஆக, நமது அமைப்பில் இந்த அர்த்தம் இருந்து வந்தது.இமாமின் மறைவுக்குப் பிறகும் இந்த நகர்வில் மாற்றங்கள்  நிகழ்ந்தன. எனினும் அவை போதுமானவை எனக் கொள்ள முடியாது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, தேசத்தினதும் அரசமைப்பினதும்  பண்பாட்டில் மாற்றங்களை தோற்றுவிக்கும் ஆற்றலை நாம் பெற்றுள்ளோம். என்னிடமும் நம் இளைஞர்களிடமும் தேச மக்களிடமும் நிபுணர்களிடமும்  நான் வைத்துள்ள எதிர்பார்ப்பு என்னவெனில் அவசியமான எல்லாத்  துறைகளிலும் மாற்றங்களை உருவாக்குவது பற்றிய சிந்தனையை மேற்கொள்வோம்  என்பது தான். 

இடைவிடாத முன்னேற்றம் 
உண்மையில்  மாற்றத்தை வேண்டி நிற்கும் துறைகள் என்ன என்பது பற்றி நாம் தனியாக ஆராய வேண்டும். இது பற்றி பின்னர் குறிப்பிடுகிறேன். மாற்றம் என்பதில் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. மாற்றம் அதன் சரியான அர்த்தத்தில் நடைபெற வேண்டுமாயின் அவற்றை அக்கறையோடு கவனிக்க வேண்டும். மாற்றத்தைக் கோருவது எதிர்ப்புக் காட்டுவதாக அமையவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது மேலும்  நல்ல நிலைக்கு முன்னேறிச் செல்வதற்கான இடைவிடாத உந்தல் ஆகும். மாற்றம் கோருவது என்பது அதுவாகும். அதாவது இருக்கும் நிலையைப்  பார்த்து இது போதும் என  திருப்தியடையாமை. மாற்றத்தின் ஆரம்பப் புள்ளி இதுவாக அமையலாம். மாற்றத்தின் ஆரம்பப் புள்ளியை இருக்கும் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கருதலாம். ஆனால் எப்போதும் அவ்வாறில்லை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாற்றம் என்பது நம்மிடம் இருப்பதைப் பற்றி திருப்தி அடையாது மேலும் ஒரு படி மேலே, மேலும் ஒரு கட்டம்   முன்னால் நகர்வதாகும். 

மாற்றம் பற்றி சிந்திப்பதற்கு  தோல்வி காணும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. சில துறைகளில் நாம் தோல்வியை சந்திக்கவே  மாட்டோம். நான் இங்கு வலியுறுத்த வருவது என்னவெனில், உதாரணமாக அறிவியல் துறையில் போன்று நாம் சாதகமான அடைவுகளைக் கண்டிருக்கிறோம் என்பதால் இனி மாற்றங்கள் தேவைப்படாது என யாரும் சொல்லக் கூடாது. அது அவ்வாறன்று. முன்னேற்றம் கண்டுள்ள துறைகளிலும் தொடர்ந்தும் மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும். ஆக மாற்றம் என்பது தேங்கு நிலையை நிராகரித்து தொடர்ந்தும் இயங்கி முன்னேறிச் செல்வதற்கான இயக்கமும் பிழையான நிலைப்பாடுகளில்  நீடிப்பதைத் தவிர்த்தல் மற்றும் அதற்கான ஆர்வமும் ஆகும். எதிர்ப்பு உருவாகாத இடங்களிலும் மாற்றத்துக்கு தேவை உள்ளது என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

சிந்தனைப் பின்புலம்
இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் சரியான மாற்றத்துக்கு சிந்தனைப் பின்புலம் அத்தியாவசியமாகும். சிந்தனைப் பின்புலம் இல்லாத நகர்வுகளை மாற்றம் என கருத முடியாது. மேலோட்டமான சில நிகழ்வுகள் மாற்றங்களாக கொள்ளப்பட முடியாது. உதாரணமாக நீதித் துறையில் நாம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அந்த மாற்றத்துக்கு சில சிந்தனா ரீதியான அடிப்படைகளை பெற்றுக் கொள்ளல் அவசியம். உறுதியான, அறிவுபூர்வமான தன்மைகளை அவை கொண்டிருப்பது அவசியம். இந்த சிந்தனைப் பின்புலத்தை நாம் நமது ஆன்மீக வளங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இஸ்லாமிய சட்ட திட்டங்கள், விதி முறைகள், திருமறை வசனங்கள், நபிமொழிகள், பரிசுத்த இமாம்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றில் இருந்து நாம் பயன்பெற்று அடிப்படைகளை வகுத்துக் கொண்ட பின்னர் அந்த அத்திவாரத்தின் மீது மாற்றத்தைக் கட்டியெழுப்பலாம். 

இமாம் மேற்கொண்ட மாற்றத்துக்கான எல்லா முயற்சிகளிலும்  இஸ்லாமிய ஞானங்களின் அடிப்படைகளின் மீது காலூன்றியிருந்தார். அதன் சட்டகத்துக்குளேயே அவரது நகர்வு இடம் பெற்றது. இந்த சிந்தனைப் பின்புலம் இருக்கா விட்டால் மாற்றங்கள் பிழையானதாக அமைந்திருக்கும். பிழையான எட்டுக்களை முன்னெடுத்து ஸ்திரமற்ற நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.   நமது புரட்சியில் கூட அத்தகைய பலரை நாம் சந்தித்தோம். புரட்சியோடான  பற்றும் உறுதியும் அவர்களிடம் காணப்பட்டன. ஆயினும் அவர்களது சிந்தனைப் பின்னணி தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கவில்லை. இதனால் இளமைக் காலத்தைக் கடந்து நாட்கள் கழிந்த போது எதற்கு எதிராக நாம் புரட்சி செய்தோமோ அந்த எச்சங்களில் இவர்களும் சங்கமமாயினர். அதாவது இஸ்லாமிய புரட்சி சில எச்சங்களை நிராகரித்து ஒதுக்கியது. 

அமீரி பிரூஸ்கூஹ் எனும் கவிஞரின் கவிதைக்கு வரிகளை இங்கு நினைவூட்டுகிறேன்.

வாழ்வின் இளமை அறிவில் கழிய முதுமை அறியாமையை அடைந்தது.
வாழ்க்கைப் புத்தகத்தின் அத்தியாயங்கள் முன் பின் மாறி வந்தன

சிந்தனைத் திரிபு
சிந்தனைத் திரிபும் மாற்றமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. பஹலவீ அரசாட்சி காலத்தில் அதற்கு சிறிது முன்னரும் கூட  நவீனத்துவம் எனும் பெயரிலான சிந்தனை நம் நாட்டில் அறிமுகமாகியது.  மக்கள் வாழ்வில் மிக முக்கிய மாற்றத்தின் காரணியாக சிலாகிக்கப்பட்டது. உண்மையில் அது  ஒரு மாற்றம் அன்றி ஓரு சிந்தனைக் குளறுபடிஆகும். ஈரானிய மக்களிடமிருந்து அவர்களது அடையாளத்தை ஒழிப்பதாக அது  காணப்பட்டது. இந்த நவீனத்துவத்தில்  ஈரானிய மக்கள் தமது இன, மத, தேசிய, வரலாற்று  அடையாளங்களை இழந்தனர். மன்னராட்சி தமக்கு பக்கபலமாக இருந்த, மேற்கைய  சிந்தனையில் உருவாகிய அறிஞர்களின் பங்களிப்புடன் அரங்கேற்றிய நவீனத்துவம் ஒருமாற்றம் அன்றி சிந்தனைத் திரிபாகும்.

மாற்றம் எப்போதும் அடுத்த கட்டத்துக்கானபாய்ச்சலாகும். ஆனால் இதில் பின்னடைவையே கண்டனர். தனது அடையாளத்தை, ஆன்மீக வளங்களை இழக்கின்ற போது ஒரு நாகரிகத்தின் சாவை அவர்கள் சந்திக்கின்றனர். சமூக, அறிவியல், பல்கலைக் கழக ஆய்வுகள் அனைத்தும் ஒரு மேற்குலக அறிஞரின் கூற்றை உறுதி செய்வதாக மட்டும் அமைந்தன. குறிப்பிட்டமேற்குலக அறிஞர் சொல்கிறார் என்ற வார்த்தைகளுடன் ஆய்வுகள் முற்றுப் பெற்றன. நமது சிந்தனைக்கு கடிவாளம் இடப்பட்டது. மேற்கை கண்மூடி பின்பற்றலானோம். மேற்குலக அறிஞரின் கூற்றை எதிர்த்துப் பேச அஞ்சும் நிலை உருவானது. சிந்தித்தல், இஜ்திஹாத் என்பன ஒதுக்கி விடப்பட்டு தக் லத் வழிமுறையாகியது. இது நபிமார்களின் போதனைக்கு முற்றிலும் முரணானது.   

மாற்றத்தில் அவசரம் கூடாது
மாற்றம் சம்பந்தமாக கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் உள்ளது. மாற்றம் திடுதிப்பென  ஏற்படுவது அல்ல. அது படிப்படியாக, கட்டம் கட்டமாக  நிகழும். பொறுமை  இழக்கக் கூடாது. சரியான இலக்கை நோக்கி உரிய திசையில் முறையாக  அமைந்து  நகர்வும்  இடம் பெறுமெனில் மெதுவாகச் சென்றடைதல்  ஒரு விவகாரம் அன்று. பயணமும் நகர்வும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே முக்கியமானது. கணப்பொழுதில் அது நிகழ்வதில்லை.

மன்னராட்சி  நமக்குத்  போதித்த புதுமைத்துவம் சரியான இலக்குகளை யும்  முறையான வழிகாட்டல்களையும்  கொண்டிருக்கவில்லை. மாற்றங்களின் போது பொறுமையோடு  கட்டம் கட்டமாக முன்னேறிச்  செல்வதற்கு நம்பகமான வழிகாட்டி  தேவை. அந்த வழிகாட்டி  இல்லாத  போது  இறுதி  முடிவு குழப்பமாக அமையும்.

ஆழமான, பொறுமையான நகர்வு 
மாற்றம் என்பது மேலோட்டமான சில வரிசையான செயற்பாடுகள் என கருதக் கூடாது. அவசர அவசரமாக மேலோட்டமான நிகழ்வுகள் மாதமாற்றங்கள் அல்ல. அவை எந்தப் பெறுமதியும் அற்றவை. மாற்றம் என்பது ஆழமானது. வேகம் இருக்கலாம். ஆனால் அது அவசரப்படுவதாக இருக்கக் கூடாது. இதுவும் கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சமாகும். 

எத்தகைய மாற்றங்கள் தேவை 
எந்த துறைகளில் மாற்றம் நிகழ வேண்டும் என்பது ஒரு நீண்ட ஆய்வாகும். குறைபாடுகள் உள்ள துறைகளை நாம் அடையாளம் கண்டு அர்த்தமுள்ள மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும். உதாரணத்துக்கு சில துறைகளை நாம் குறிப்பிட முடியும்.

பொருளாதாரத் துறையில் மாற்றம் நிகழ வேண்டும். எரிபொருளில் தங்கியிருப்பதில் இருந்து பொருளாதாரத்தை துண்டிக்க வேண்டும். இது யதார்த்தமான மாற்றமாக அமையும்.

மாற்றம் தேவைப்படும் இன்னொரு விவகாரம் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தை வடிவமைத்தல் ஆகும். பிரயோக சாத்தியமானதாக  அது அமைய வேண்டும். வரவு செலவுத்திட்டம் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டால் அதுவே பொருளாதாரத்தில் பெரும்மாற்றத்தை உருவாக்கும். 

கல்வித் துறையும் மாற்றம் கோரும் துறையாகும். பாடசாலை மற்றும் பல்கலைக் கழக கல்வி முறையை வெறுமனே மனனமிடும் முறையில் இருந்து விடுவித்து ஆழமான பிரயோகமான பலன் தரும் முறைக்கு மாற்றியமைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் போதிக்காப்படும் சில பாடங்களால் மாணவர்கள் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் பயனடைய மாட்டார்கள். காலம் வீணடைவது மட்டுமே எஞ்சும். பாடங்கள் ஆழமான ஆய்வுகளைக் கொண்டதாக செயன்முறைக்கு உகந்து அமையவேண்டும். கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ள திட்டம் நடைமுறைப் படுத்தினால் இந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.

சமூக விவகாரங்கள் பலவற்றில் மாற்றம் நிகழ வேண்டியுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுதல், போதைப் பொருள் பாவனைக்கு தீர்வு காணல் போன்றவை தீர்வு காணப்பட வேண்டியவை. 

குடும்ப விவகாரங்களைக் கையாளுதலில் மாற்றம் தேவை. நமது சமுதாயம் முதுமையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான நிலையல்ல. எதிர்வு கூறாத இன்னும் பல பிரச்சினைகள் உருவாகலாம். மாற்றங்கள் வழியாகவே இவற்றுக்கு தீர்வு காண முடியும். 

அஞ்சா நெஞ்சம்
பகைவர்களுக்கும் பகைமைக்கும் அஞ்சாமை மாற்றத்துக்கு தேவையான ஓர் அம்சமாகும். மனிதர்களுக்கு  அஞ்சக் கூடாது. அஞ்சத் தகுந்தவன் அல்லாஹ் மட்டுமேஎன அல்குர்ஆன்  போதிக்கிறது. எந்த நல்ல காரியத்தை முன்னெடுத்தாலும் எதிர்ப்பதற்கு சிலர் இருப்பார்கள். சமூக வலைத்தளங்கள் செயற்படும்  இந்த யுகத்தில் எதிர்ப்பு வடிவங்களும் இம்சை தருவனவாக உள்ளன.

முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் நகர்வுகளின் போது எதிர்ப்புகளைக் கண்டு தளரக் கூடாது. நாட்டின் நலனுக்காக மேற்கொள்ளும் எந்த நற்பணியாக  இருந்தாலும் அதனை குழப்பியடித்து  தடுப்பதற்கென்றே திட்டம்  போட்டுத் திரியும்  ஒரு   கூட்டம்  எங்கும்  எப்போதும்  இருக்கும். தற்போதுள்ள ஊடக சாம்ராஜ்யம் எந்த நல்ல காரியம் பற்றியும் பிழையான பிரச்சாரங்களை  மேற்கொண்டு அழித்து விட முயற்சிக்கும். இவற்றுக்கு  அஞ்சாது தொடர்ந்து  நகர  வேண்டும். அஞ்சா நெஞ்சம் கொண்ட இளைஞர்கள்  களத்தில் இறங்க வேண்டும்.

சரியும்  சாம்ராஜ்யம் 
அதிஷ்டவசமாக ஒரு தேசம் இறைவன் மீது நம்பிக்கை வைக்கின்ற போது நீங்கள் பார்க்கின்ற இந்த நிலையை அடைகின்றது. நம்மை எதிர்த்த ஒரு முனையாக  இருந்த சோவியத் நாடு அந்த வடிவத்தில் முடிவைத் தழுவியது. அடுத்த  முனையில் நிற்கும் அமெரிக்கா இன்று குழம்பி இருக்கிறது. இன்று அமெரிக்க மாநிலங்களில் மாநகரங்களில் தோன்றியுள்ள கலக நிலை அமெரிக்க சமுதாயத்தில் நீண்ட காலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த யதார்த்த நிலை வெளியே வந்திருப்பதையே காணமுடிகிறது. தடாகத்தின் அடியில் மண்டிக்கிடந்த அழுக்கு வெளிப்பட்டுள்ளது.

ஒரு காவல் அதிகாரி  ஒரு கறுப்பினத்தவரின் கழுத்தில் காலை வைத்து அழுத்துவதும்  உதவி கேட்டு அவலக்  குரல் எழுப்பியும் அது பற்றி எந்த எதிர்வினையும் காட்டாமல் உயிர்விடும் வரை மேலும் அழுத்தத்தை பிரயோகிப்பதும் இன்னும் சில அதிகாரிகள் அதனைப் பார்த்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் புதிதாக தோன்றியஒரு பழக்கம் அன்று. அமெரிக்காவின் இயல்பு தான் அது. இதே விதத்தில் தான் அமெரிக்கா உலக நாடுகளில் நடந்து  கொள்கிறது. ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் சிரியாவிலும் வியட்நாம் உட்பட இன்னும் பல  நாடுகளிலும் நாடுகளிலும்    இவ்வாறே நடந்து கொண்டனர். இது அமெரிக்க  பண்பாட்டில் உள்ளது. அமெரிக்க அரசுகளின்  இயல்பான தன்மை தான் இவ்வாறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூச்சு விட முடியவில்லை’, மூச்சு விட அனுமதியுங்கள் என்ற கோஷம் அமெரிக்க வீதிகளில் அமெரிக்க மக்களால் கோஷமிடப்படுகின்றது. அமேரிக்கா எங்கெங்கு  அநியாயமாக  நுழைந்ததோ  அங்கு மக்களின் இதயத்தின்  கோஷமும்  இது தான்.  

அமெரிக்காவின் அவமானம்
இறைவனின் அருளால் அமேரிக்கா சொந்த  நடத்தை  காரணமாகவே  அவமானம்  அடைந்துள்ளது. கொரோனா விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகம் சம்பாதித்த  அவமானத்தோடு இந்த அவமானமும் தொடர்கிறது. பல நாடுகளுக்குப் பின்னர் தான் கொரோனா தொற்று அமெரிக்காவைத்  தாக்கியது. ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து  பயன் பெறவும்  முன்னதாகவே  தன்னை  தயார் படுத்திக்க கொள்ளவும் இருந்த சந்தர்ப்பங்களை பெற்றிருந்தும்  நிர்வாக பலவீனம் காரணமாக எல்லா நாடுகளையும் கூடுதலான எண்ணிக்கையில் தொற்றாளர்கள் அதிகரித்த நிலை உருவானது. அமெரிக்க  நிர்வாக பொறிமுறை  ஊழல் நிறைந்து காணப்படுவதும்  இதனால் தான். மக்களை நிர்வகிக்கும்  அவர்களோடு  நடந்து கொள்ளும்  முறை தான் இது..போதாததற்கு  அவர்களது  வாய்  வேறு. பட்டப் பகலில் மக்களைக்  கொன்று குற்றம் புரிந்து விட்டு மன்னிப்புக்  கோருவதும்  இல்லை. போதாததற்கு வாயைத் திறந்து  மனித உரிமைகள் பற்றியும் பேசுகின்றனர். கொல்லப்பட்ட அந்த கருப்பு மனிதன் மனிதனும் இல்லை; உரிமைகளும் இல்லாதவர் போலும்.

நான் முன்னரும் சொல்லியது போல அமெரிக்க மக்கள் அவர்களின் ஆட்சியாளர்கள் பற்றி வெட்கி தலைகுனிகிறார்கள். குறிப்பாக தற்போதைய ஆட்சியாளர்களால்  மிகவும்  அவமானப் படுகிறார்கள். அமெரிக்காவைப்  புகழ்வதையும் அதன் பெருமையே பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள், - ஈரானிலும் வெளியிலும் கூட அத்தகைய பலர் உள்ளார்கள்,- தற்போதைய  நடப்புகளுக்கு எதிரில் தலை குனிவைத் தவிர
வேறெதனையும்  அனுபவிக்க முடியாது.

இறையுதவியால், உலக விவகாரங்கள் ஈரானிய மக்களுக்கு சார்பாக வலுப்பெற்று முன்னேறும் எனவும் இஸ்லாமியக் குடியரசின் கண்ணியம் நாளுக்கு நாள் வளரும் எனவும்  நம்புகிறோம். இமாம் கொமெய்னியின் உயர்ந்த ஆத்மாவையும் ஜெனரல் சுலைமானி உடன் பட அனைத்து உயிர்த் தியாகிகளையும் இறைவன் தனது நெருங்கிய அவ்லியாக்களின் இணைத்துக் கொள்வானாக.

இறைவனின் சாந்தி உங்கள் மீது சொரிவதாக.

No comments:

Post a Comment