Monday, November 25, 2019

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் - உண்மை நிலை அறிவோம்


Protest demonstrations in Iran – let us know the reality



ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒரு சில பகுதிகளில் அண்மையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை நாம் அறிவோம். பெட்ரோல் விலையில் 50% அதிகரிப்பே இந்த ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களை பார்க்கையில், இஸ்லாமிய குடியரசு முற்றுமுழுதாக முடங்கிப்போயுள்ளது போன்றும்  இஸ்லாமிய அரசு ஒருசில நாட்களில் வீழ்ந்துவிடும் என்பது போன்றும் ஒரு பிரம்மையை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் ஊடகங்கள் மூலமாக மேற்கொண்ட முயற்சி தெளிவாகத் தெரிகிறது.

றஸூலுல்லாஹ்வின் மீலாத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய குடியரசில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 'சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இவ்வருடம் இலங்கையில் இருந்து நானும் சகோதரர் அஸ்-ஷெய்க் எஸ்.எல்.மதனியும் அங்கு விஜயம் செய்திருந்தோம். உலகின் 93நாடுகளில் இருந்தும் சுமார் 350க்கும் அதிகமான பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர். பலஸ்தீன் விடுதலை உட்பட இஸ்லாமிய உலகு எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிப்பது தொடர்பாக இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.


இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் (நவம்பர் 13-23) நாங்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பல நகரங்களுக்கு விஜயம் செய்தோம். அதிகாரிகளையும் சந்தித்தோம் பொதுமக்களையும் சந்தித்தோம். பல விடயங்களையும் கேட்டு அறிந்துகொண்டோம். சிலர் அதிருப்தியுற்று இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.


மக்கள் வாழ்வதற்கு அவசியமான அனைத்து பொருட்களும் அங்கேயே உற்பத்தி செய்யப்படுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் அறியவில்லை. (ஆனால் வெளிநாட்டு ஆடம்பர பொருட்களுக்கு பன்மடங்கு அதிக விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும்). அப்படியிருக்க இந்த ஊடக பிரசாரங்களை பார்க்கையில் எனக்கே வியப்பாக இருந்தது. அங்கு எங்கும் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எமது நாட்டிலும் நாம் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதையும் அதுவே கலகமாக மாறுகையில், வன்முறையாக மாறுகையில், அத்துமீறல்கள் இடம்பெறுகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதையும் சர்வ சாதாரணமாக காண்கிறோம். இதுவே அங்கும் இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டங்களுக்கு பின்னணியில் வெளிநாட்டுக் கரங்கள் இருந்து செயல்பட்டு வந்துள்ளது இப்போது அறியவந்துள்ளது. சின்ன பிரச்சினையையும் ஊதி பெரிதாக்கி நாட்டில் கலவரங்களை ஏற்படுத்த ஈரானின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் சதி என்றே ஈரானிய தலைமைத்துவம் அதனை அடையாளம் கண்டுள்ளது.


இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து உரையாற்றிய இமாம் ஆயத்துல்லாஹ் காமனேயி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்த அதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஈரானில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அரசியமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அங்கு எந்த தடையும் கிடையாது. அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை அல்ல. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை ஈரான் சந்தித்துள்ளது. இவ்வார்ப்பாட்டங்களுக்கு எதிராகவும் மக்கள் பேரணிகளை நடத்தி, இஸ்லாமிய அரசுக்கு தமது விசுவாசத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதை அங்கு காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஈரான் மீதான மனிதாபிமானமற்ற பொருளாதார தடை, அதிகபட்ச அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் பொருளாதார கஷ்டங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உலகிலேயே அதிகுறைந்த விலையில் மக்களுக்கு எரிபொருளை வழங்கும் நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலை காரணமாக ஒருசிலர் அண்டை நாடுகளுக்கு எரிபொருளை பாரிய அளவில் கடத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்துள்ளனர். பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாஹா முஸம்மில் 



Monday, November 11, 2019

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே


Islamic Unity is the only thing that can restore 
the dignity of Muslims



இன்றைய முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் அவலநிலைக்கான அடிப்படைக் காரணங்களாக புனித குர்ஆனின் உண்மையான போதனைகளில் இருந்து தூரப்பட்டிருத்தல், மார்க்கப் பற்றின்மை, கல்வியில் அசட்டை, தேசியவாதம், பிரதேசவாதம், குறுங்குழுவாதம், குரோத மனப்பான்மை, மத தப்பெண்ணங்கள், அதிகார மோகம், சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் பொருளாயத நலன்கள் பால் அதிக கவனம் என்பவற்றோடு; எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையின்மை எனலாம். இவை அனைத்தும் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இதனால் எல்லா வளமும் இருந்தும் முஸ்லிம்கள் இன்று மரியாதை இழந்து, கௌரவம் இழந்து மற்றும் தம்மிடமிருந்த அதிகாரம் அனைத்தும் இழந்தது இஸ்லாத்தின் எதிரிகளிடம் தஞ்சமடையும் நிலை உருவாகி உள்ளது.

மறுபுறம், இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் ஒன்றுபட்டுள்ளனர். முஸ்லிம்களின் பலவீனத்திலேயே அவர்களின் வல்லாதிக்கம் தொடர முடியும் என்பதை அவர்கள் மிக நன்றாக அறிவார்கள். எனவே அவர்கள் முஸ்லிம்களைப் பிளவுபடுத்துவதற்கான சதித்திட்டங்கள் தீட்டுவதில் சளைக்காது, தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது சதித்திட்டத்தில் சிக்கியுள்ள முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமையை உதாசீனம் செய்து சகோதர முஸ்லிம் நாடுகளுடன் சண்டையிட்டு அந்த நாட்டு மக்களையும் வளங்களையும் அழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது வளங்களையும் அழித்துக்கொண்டிருப்பத்தை காண்கிறோம். இதனால் முழு இஸ்லாமிய உலகும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது.


ஐ.நா.சபையில் பெரும் எண்ணிக்கை கொண்ட அங்கத்துவம் இஸ்லாமிய நாடுகளுக்கே உண்டு. இருந்தும் என்ன பயன்…? தமக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாக செல்லாகாசுகளாக சிதறி கிடக்கின்றன. இதன் விளைவாக எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் சீண்டப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

புனித குர்ஆன் எமது ஒற்றுமையை வலியுறுத்துவதோடு எதிரிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் எமக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.  ஆயினும் இன்றைய இஸ்லாமிய உலகு, முஸ்லிம்களிடமிருந்து தூரப்பட்டு, இஸ்லாத்தின் எதிரிகளிடம் மண்டியிட்டு இருப்பதையே காண்கிறோம்.

எந்தவொரு சமூகத்தினதும் வெற்றி அதன் உறுப்பினர்களிடையே உள்ள பரஸ்பர ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திலேயே பொதிந்துள்ளது. ஒரு வலுவான ஐக்கிய சமுதாயம், வெல்ல முடியாத சக்தியாக மாறி, அவர்களின் வழியில் வரும் எந்த ஓர் இடையூறினையும் சமாளிக்கக் கூடிய வல்லமையைத் பெறுகிறது. அத்தகைய ஒன்றுபட்ட சமுதாயத்தை எதிர்ப்பதற்கு யாரும் துணிவதில்லை.

அல்லாஹ் அவனது அருள் மறையாம் புனித குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

     “இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்...” (புனித குர்ஆன் 3:103).

புனித குர்ஆன் எமது ஒற்றுமையை வலியுறுத்தும் அதேசமயம் பிரிவினால் ஏற்படும் விளைவு பற்றியும் எமக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.

 இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்…” (புனித குர்ஆன் 8/46)

இந்த புனித வசனங்களை நாம் பயான்களிலும் குத்பாக்களிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்; சன்மார்க்க புத்தகங்களில் படித்துக் கொண்டும் இருக்கின்றோம்; இருந்தும் முஸ்லிம் சமுதாயம் பிளவுபட்ட சமுதாயமாகவே இருந்து வருகிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மாவை ஷியா-சுன்னி என்று பிரித்து அவர்கள் ஒருவருக்கொருவர் மோத வைப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

இந்த சதித்திட்டத்தை சரியாக புரிந்துகொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசு முஸ்லிம் உலகை ஒன்றுபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர்.


வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். (றஸூலுல்லாஹ்வின் மீலாதை கண்ணியப்படுத்த இதைவிட சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்).

பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, லெபனான், யெமன், பஹ்ரைன், மத்திய ஆபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர், மியன்மார் மற்றும் இதுபோன்ற எத்தனையோ இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் அநியாயங்களை எண்ணி கவலைப் படுகிறோம், அழுகிறோம், ஒப்பாரி வைக்கிறோம். இவை எமது உணர்வுகளின் வெளிப்பாடு தான் ஆயினும், வெளிப்படும் உணர்வுகளால் மாத்திரம் எமது பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்பது உணரப்பட வேண்டும்.

பிரச்சினைகளின் மூல காரணங்களை அறிந்து, அதற்கான தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தற்போது எம்மத்தியில் இருக்கும் பிரதான சவால்.

எம்மிடையில் ஒற்றுமை இன்மையே பிரச்சினைகளின் மூல காரணங்களில் பிரதானமானது என்பதை எம்மில் பலர் அறிவோம். எமக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளை வளர்ப்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் கண்ணும் கருத்துமாய் உள்ளனர் என்பதை ஏனோ நாம் உணரத் தவறிவிடுகிறோம்.


முஸ்லிம்கள் மத்தியில் எதிரும் புதிருமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு தரப்பினரையும் போஷிக்கும் 'மறைகரம்', அனேகமாக, ஒன்றாகவே இருக்கும் என்பது சற்று ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும். அமேரிக்கா சுன்னிகள் மத்தியில் தீவிரவாதிகளை உருவாக்கி போஷித்துவரும் அதேவேளை பிரித்தானியா ஷியாக்கள் மத்தியில் தீவிரவாதிகளை உருவாக்கி போஷித்து வருகிறது. இதற்காக அவர்கள் கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதே இவர்களது நோக்கம் ஆகும். துரதிஷ்டம் என்னவென்றால் முஸ்லிம்களில் சில தரப்பினர் இவர்களது இந்த சூழ்ச்சி வலையில் சிக்குண்டு இருப்பதாகும்.

"அமெரிக்க சியோனிச பிசாசுகளை துரத்தியடிக்கூடியது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே. முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்க அமேரிக்கா சுன்னிகளைத் தூண்டுகிறது, பிரித்தானியா ஷியாக்களைத் தூண்டுகிறது. இரண்டுமே ஒரு கத்தரிக்கோலில் உள்ள இரண்டு கத்திகளை போன்றது." - ஆயத்துல்லாஹ் காமேனி

இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு இப்போதுள்ள ஒரே வழி, இஸ்லாமிய நாடுகள் தம்மிடையே உள்ள பிணக்குகளை தாமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் நாடுகள் மத்தியில் இவ்வாறான ஒரு சுமுக நிலை ஏற்படுமாயின், இஸ்லாமிய உலகு முகம் கொடுத்துள்ள ஏராளமான சவால்களை சுலபமாக வெற்றி கொள்ள முடியும். முஸ்லிம்கள் இழந்துள்ள செல்வாக்கையும் கண்ணியத்தையும், மிகக் குறுகிய காலத்துள் மீளப்பெறவும் முடியும்.

இந்த இஸ்லாமிய வழிமுறையை விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளிடம் மண்டியிடுவதால் பிரச்சினை பூதாகார உருவெடுக்குமே அல்லாமல், தீரப்போவதில்லை என்பதை உலக நிகழ்வுகள் துல்லியமாக காட்டிக்கொண்டு இருக்கின்றன.

இங்கே "ஒற்றுமை" என்பதன் மூலம் முஸ்லிம்கள் அனைவரும் அவர்கள் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ள ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிகி, ஜாபரி, ஸைதி போன்ற அனைத்து சிந்தனை பள்ளிகளையும் கைவிட்டு ஒரே கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது புனித குர்ஆனும் ஹதீஸுமாகும். கண்ணியத்துக்குரிய ஸஹாபாக்கள், இமாம்கள் மத்தியிலும் கருத்துமுரண்பாடுகள் இருந்துள்ளன. இஸ்லாத்தில் கருத்துமுரண்பாடுகள் வரவேற்கத்தக்க விடயமாகும். ஒற்றுமை என்பதன் மூலம் இங்கு நாம் எதிர்பார்ப்பது மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தவேண்டியது உலமாக்களினதும் முஸ்லிம் அறிவுஜீவிகளினதும் கடமையாகும்.

- தாஹா முஸம்மில்