Quds Day - Palestine Liberation Day
பைத்துல் முகத்தஸ் என்பது உலக
முஸ்லிம்களின் தன்மானச் சின்னம், அதனை விடுவிப்பது உலக முஸ்லிம்கள்
அனைவரினதும் தலையாய கடமையாகும்.
குத்ஸ் எனும் இந்த புனித
பிரதேசத்தை சியோனிஸ்டுகள் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். பல தசாப்த காலமாக பைத்துல்
முகத்தஸின் புனிதத்தை இந்த நாசகாரிகள் கெடுத்து வருகின்றனர். இந்தப் புனித
பிரதேசத்தை விடுவிப்பதற்கு எல்லா முஸ்லிம் நாடுகளும் அரபு நாடுகளும் முயற்சித்து
வந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆயினும் இன்றைய நிலை தலைகீழாக மாறியுள்ளது.
அரபுத் தலைவர்கள் எப்போது
அமெரிக்க அடிமைகளானார்களோ, இந்தப் புனிதத் தலம் விடுவிக்கப்படவேண்டும் என்ற
எண்ணம் படிப்பட்டியாக குறையத் துவங்கியது. "பலஸ்தீன்
விடயமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சொல்வதைக் கேளுங்கள் அல்லது வாயை மூடிக்கொண்டு
சும்மா இருங்கள்" என்று சவூதி முடிக்குரிய இளவரசர் பின் சல்மான் பகிரங்கமாக கூறும்
நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இன்று முஸ்லிம் உலகில்
ஏற்பட்டுள்ள ஒற்றுமையற்ற தன்மையும் ஏகாதிபத்தியவாதிகள் ஏவல்களுக்கு அடிபணியும் இந்த மோசமான
நிலைமையும், துரதிருஷ்டவசமாக, எதிரிகளுக்கு அவர்களது
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வாய்ப்பை வழங்கியுள்ளது என்பது வெளிப்படை.
இந்த நாட்களில், "நூற்றாண்டின் உடன்படிக்கை" என்ற ஒன்று பற்றிய செய்திகளை நாங்கள்
கேட்கிறோம். இஸ்ரேலியர்களுக்கு வேண்டிய விதத்தில் அவமானகரமான தீர்வொன்றை
பாலஸ்தீனர்கள் மீதும் அரபியர்கள் மீதும் திணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
முயற்சி செய்கிறார்.
அரேபிய நாடுகளின் சில தலைவர்கள்
இந்த பாதையில் அவருடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது புதிதல்ல. சில நாடுகளின் இதுபோன்ற இரகசிய ஆதரவும் துரோகத்தனமும்
கடந்த காலத்திலும் இருந்துள்ளது.
எனினும், பலஸ்தீனை விழுங்கி ஏப்பம் விடும் இவர்களது கனவு ஒருபோதும்
பலிக்காது. துணிச்சல்மிக்க பாலஸ்தீனர்கள் அதற்கு ஒருபோது இடமளிக்க மாட்டார்கள். இவர்களது
இந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உணர்த்துவதற்காக “இன்திபாதா” என்ற எழுச்சியை பலஸ்தீன இளைஞர்கள் மேற்கொண்டதை நாம் அறிவோம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசும், அதன் மீது எத்தனை அழுத்தங்கள் விடுக்கப்பட்ட போதிலும், ஒருபோதும் பலஸ்தீன் அபகரிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா
இருக்கப்போவதில்லை.
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஈரானில்
இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து உடனடியாகவே இஸ்ரேலுடன் ஷாவின் அரசாங்கம்
கொண்டிருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, அங்கிருந்த இஸ்ரேலிய தூதரகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, அவ்விடத்தை பலஸ்தீன் தூரககமாக மாற்றினார்.
அதுமட்டுமல்லாமல், பைத்துல் முகத்தஸை விடுவிக்கும்
முக்கியத்துவத்தை உலக முஸ்லிம்களுக்கு உணர்த்தும் முகமாக,
புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை
"சர்வதேச குத்ஸ் தினம்" என்றும் பிரகடனப்படுத்தினார்.
அவர் இவ்வாறு
பிரகடனம் செய்து நாற்பது ஆண்டுகள் கடந்து
விட்டது.
இந்த நாற்பது ஆண்டுகளில்,
முஸ்லிம்களின் முதல் கிப்லாவின் விடுதலைக்கான
போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அதற்காக இஸ்லாமிய சமுதாயத்திற்கான
வழிகாட்டுதல்களை ஆராய்ந்து வழங்குவதற்கும் இந்த குத்ஸ் தினம் வருடாவருடம் கௌரவிக்கப்பட்டு
வந்திருக்கிறது.
இத்தினம் இஸ்லாமிய உணர்வு கொண்ட அனைத்து
மக்களாலும் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 40 ஆண்டுகால போராட்ட வரலாறு ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை
கண்டிருந்தபோதும் தெற்கு லெபனானின் விடுதலை, காசாவின் விடுதலை போன்ற குறிப்பிடத்தக்க
வெற்றிகளையும் அடைந்துள்ளது என்பது மட்டுமல்லாமல் லெபனான் மீது சியோனிச ஆட்சி
மேற்கொண்ட பல தாக்குதல்கள் ஹிஸ்புல்லாஹ் வீரர்களினால் வெற்றிகரமாக
முறியடிக்கப்பட்டும் உள்ளது என்பதையும் மறத்தல் ஆகாது.
பலஸ்தீன் விடுதலை போராட்ட வீரர்களை குழுக்களாக
பிரித்து, உள்முரண்பாடுகளை
தோற்றுவிக்கும் சவுதி போன்ற நாடுகளின் தீய முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
வெவ்வேறு பிரிவாக செயல்பட்டுவந்த அனைத்து குழுக்களும் ஒற்றுமையின் பலத்தை நன்றாகவே
உணர்ந்துள்ளன. அனைத்து பலஸ்தீன மக்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது, இஸ்லாத்தின் எதிரிகள் எதிர்பாராத மிகப்பெரிய
தோல்வியாகும். இந்தத் தோல்வி, இஸ்ரேல் சியோனிச ஆட்சியின் அச்சுறுத்தி காரியம்
சாதிக்கும் போக்கை மாற்றியமைக்கச் செய்துள்ளது. இஸ்ரேல் அடிக்கும் அடிகளை
வாங்கிக்கொண்டு அழுது புலம்பிக்கொண்டிருக்காமல், திருப்பியடிக்கும் வல்லமையை ஹிஸ்புல்லாஹ்வும்
ஹமாஸும் பெற்றுள்ளது பாரிய முன்னேற்றமாகும். பலஸ்தீன் விடுதலை போராளிகளின்
அர்ப்பணத்துடனான இந்த தீரமிக்க, அயராத போராட்டம் காரணமாக பல முஸ்லிம்
நாடுகளின் எல்லைகள் மாற்றமடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது நிதர்சனமாகும்.
பலஸ்தீனை விடுவிக்கும் சக்தி உலக
முஸ்லிம்களிடம் நிச்சயமாக உண்டு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இஸ்லாமிய உலகின்
ஒற்றுமையே அதற்கான ஒரே வழி. ஆனால் அதற்கான விருப்பம் அரபுலகத் தலைவர்களிடம்
இருப்பதாகத் தெரியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பலஸ்தீன் விடுதலை போராட்டத்தில் முன்னிலை
வகிக்கும் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹாமாஸ் இயக்கங்களை சவூதி அரேபியா பயங்கரவாத இயக்க
பட்டியலில் இணைத்துள்ளது என்பது சவுதியின் அமெரிக்க இஸ்ரேலிய அடிமைத்தனத்தை
மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சியோனிஸ்ட்டுகளின் அகண்ட இஸ்ரேல் கனவுக்கு
பெரும் தடையாக இருப்பது எமது விடுதலை போராட்ட வீரர்களாகும் என்பதை இந்த அரபிகளால்
உணர முடியாமல் இருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.
இவ்விடயத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின்
நிலைப்பாடு முற்றிலும் வித்தியாசமானது. பைத்துல் முகத்தஸை அது முஸ்லிம் உலகின்
தன்மானச் சின்னமாக கருதுகிறது. முஸ்லிம் உலகின் ஒற்றுமை ஊடாக பைத்துல் முகத்தஸ்
மட்டுமல்ல, முழு
பலஸ்தீனினதும் விடுதலை சாத்தியமானது என்று ஈரான் உறுதியாக நம்புகிறது.
"முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரை ஊற்றினாலே போதும் இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்" என்று இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் அன்றே கூறினார்கள்.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சி, இப்பிராந்தியத்தில் நீதி அடிப்படையிலான நிரந்தர சமாதானத்தைத்
ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய நாட்டின் உரிமைகளை மீட்கும்
முயற்சியில் நீண்டகால நடைமுறைவாத மூலோபாயத்தை அமைத்துத் தந்துள்ளது. அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை யாகும்.
எம்மத்தியில் உள்ள வேறுபாடுகளை களைந்து செயல்படுவோமேயானால், எம் எதிரியை அழிப்பதற்கு அணுகுண்டு அவசியமில்லை; ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரே போதும்.
இவ்வாறு ஒன்றுபடுவோமாயின், இஸ்லாமிய உலகு எந்தவொரு கிழக்கத்திய அல்லது மேற்கத்திய
அழுத்தத்துக்கும் அடிபணியாது, உண்மையிலேயே விடுவிக்கப்பட்ட
வாழ்க்கையை நோக்கமாகக் கொண்ட பெரிய புரட்சிக்கு வழிவகுக்கும் என்பது இமாம்
கொமெய்னி (ரஹ்) அவர்களின் கொள்கை வழிகாட்டலாகும்.
இன்று, ஈரானிய இஸ்லாமிய குடியரசு, பலஸ்தீன் விடுதலை போராட்டத்தில், அதன் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமேனெய் அவர்களின் வழிகாட்டலில்
முன்னணியில் உறுதியாக நிற்கிறது.
ஆகவே, எம்மத்தியில் உள்ள வேறுபாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, உலக முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைய
வேண்டியது இஸ்லாமிய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.