What is a war crime and is Israel guilty of it?
பாலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட 48 நாட்கள் கொடிய
வன்முறையின் ஒரு சிறிய பார்வை
- தாஹா முஸம்மில்
காஸாவில் 4 நாள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது இப்போது 6 நாட்கள் என நீடித்த
போதிலும், அமையான சூழல் அங்கு தொடர்ந்து நிலவவேண்டும் என்பதுவே சமானப் பிரியர்களின்
அவா. எனினும் முற்றுகையிடப்பட்ட காஸா பிரதேசத்தின் 2.3 மில்லியன் மக்கள் மீது இஸ்ரேலால்
ஏற்படுத்தப்பட்ட காயங்கள் அவ்வளவு சீக்கிரமாக ஆறிவிடப்போவதில்லை, சர்வதேச சட்டங்களை
மீறி அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு சியோனிச ஆட்சியாளர்கள் பதில்சொல்லியே
ஆக வேண்டும்.
இந்த யுத்த ஓய்வானது காயமடைந்த தங்கள் அன்புக்குரியவர்களின் சிகிச்சையில் கவனம்
செலுத்த முடியும் என்று நம்புகிறோம், இந்த பிராந்தியத்திற்கு மிகவும் தேவையான மருத்துவ
பொருட்கள் குறைந்த அளவிலேனும் வந்துள்ளன. இதற்கிடையில், இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால்
அனைத்தையும் இழந்தவர்கள், மேலும் வன்முறையின் சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகுகையில்
புதிய புகலிடங்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவர்.
போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், இஸ்ரேலிய போர் அமைச்சர் யோவ் கேலன்ட்
(Yoav Gallant), கத்தார் மத்தியஸ்தத்தில் நடைமுறைக்கு வந்த ஹமாஸ் உடனான "குறுகிய"
போர்நிறுத்தம் முடிந்ததும், அடுத்த இரண்டு மாதங்களில் இஸ்ரேல் அதன் தாக்குதல்களை
"தீவிரத்துடன்" மீண்டும் தொடங்கும் என்று கூறியிருந்ததை மறத்தல் ஆகாது.
சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் மருத்துமனைகளைக் கூட விட்டுவைக்காத
கொடூர நடத்தையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், வரவிருக்கும் மோதலின் போது சியோனிச
ஆட்சியின் சாத்தியமான செயல்திட்டத்தை ஆய்வாளர்கள் சிந்திக்கின்றனர். இஸ்ரேல் தனது தாக்குதலைக்
குவித்து, பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்கப் போவதில்லை என்பது நிச்சயம். பொதுமக்கள்
பெருமளவில் கொல்லப்படுவதைப் காப்பாற்றி சியோனிச அரசு கவலைப்படப் போவதுமில்லை. எந்த
அநியாயத்தையும் செய்துவிட்டு அதை "தவிர்க்கமுடியாத இணை சேதம்" என்று தொடர்ந்து
நியாயப்படுத்தும்.
இஸ்ரேல் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல. இந்த
ஆட்சி பாலஸ்தீன நிலங்களை கையகப்படுத்தத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சட்டவிரோத
மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், காஸாவின் நிலப்பரப்புகளில் சமீபத்திய பொதுமக்கள் பேரழிவு மற்றும்
மோதலை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் காணும் விதம் குழப்பமாக இருக்கும் நிலையில்,
காஸாவில் இருந்து வரும் இனப்படுகொலை பற்றிய விவாதங்களால் சமூக ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை
வட்டாரங்கள் கலக்கமடைந்துள்ளன.
இந்த கட்டுரையில், அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் போர் சட்ட மீறல்கள் சிலவற்றை பார்ப்போம் மற்றும் முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்திற்கு எதிரான
இஸ்ரேலிய நடவடிக்கைகள் இனப்படுகொலை
என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்வோம்.
சர்வதேச மனிதாபிமான சட்டம்
மோதல்களின் போது மனிதகுலத்தை பாதுகாக்கும் கருவியாகக் கருதப்படும் சர்வதேச மனிதாபிமான
சட்டம் (IHL) ஆகும். அது
ஜெனீவா உடன்படிக்கைகளுக்குள்
உட்பொதிக்கப்பட்டுள்ளது.
1864 மற்றும் 1949 க்கு
இடையில் தொடர்ச்சியான உடன்படிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முக்கிய
உடன்படிக்கைகள் ஆயுத மோதல்களை நடத்துவதை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் அதன் பாதக விளைவுகளைத்
தணிக்க முயற்சிக்கின்றன.
காலப்போக்கில், இந்த
ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த கூடுதல் நெறிமுறைகள் அவற்றுடன் சேர்க்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க
வடிவமைக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ஷரத்துகளில் ஏதேனும்
ஒன்றை மீறும் எவரும் போர்க்குற்றம் செய்ததாகக் கருதப்படுகிறார்கள்.
195 நாடுகள் இந்த ICH.க்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு
இஸ்ரேல் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.
பிடிபட்ட ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் நடத்தும் விதம்
ஹமாஸின் அக்டோபர் 7 நடவடிக்கைக்கு ஒரு நாள் கழித்து சில சியோனிஸ்டுகள் சமூக
ஊடகங்களில் பகிர்ந்த ஒரு படத்தில், பத்துக்கு
மேற்பட்ட ஹமாஸ் போராளிகள் நிர்வாணமாக
தரையில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடந்தனர். அவர்களின் உடலில் தாக்கப்பட்ட
மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன, மேலும்
அவர்கள் அனைவரும் கருப்பு நிறத்தில் எண்களால் முதுகில் முத்திரை குத்தப்பட்டிருந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும்
இஸ்ரேலியர்கள், சியோனிச
ஆட்சியின் இராணுவத்துடன்
தொடர்புடையவர்கள் என்று அறியப்பட்ட சில குடியிருப்பாளர்கள், இஸ்ரேலுக்குள்
ஊடுருவிய ஹமாஸ் செயல்பாட்டாளர்களை சித்திரவதை செய்ததாக
பெருமையுடன் கூறினர்.
பிடிபட்ட ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் கொடூரமாக நடத்தும் செயலானது எதிரிகளின் கைகளில் சிக்கியுள்ள ஆயுதப் படை உறுப்பினர்களைப் பாதுகாக்கும் மூன்றாவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த உடன்படிக்கையின்படி, போர்க்கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், கொலை, சித்திரவதை அல்லது பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் உணவு, தண்ணீர், உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ கவனிப்பு உள்ளிட்ட முறையான கவனிப்புக்கு உரிமையுடையவர்களாக இருக்க வேண்டும். குரூரமான, இழிவான அல்லது அவமானப்படுத்தும் நடத்தையைப் பயன்படுத்துவது திட்டவட்டமாக தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களை நேரடியாக இலக்கு வைத்தல்
இரண்டாம் உலகப் போரை அடுத்து உருவாக்கப்பட்ட நான்காவது ஜெனீவா உடன்படிக்கை, முதன்மையாக
ஆயுத மோதல்களின் போது பொதுமக்களைப் பாதுகாக்க முற்படுகிறது. இது போராளிகளுக்கும் போராளிகள் அல்லாதவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை
தெளிவாக வரையறுக்கிறது, பொதுமக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதை
வலியுறுத்துகிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள முக்கியமான விதிகள் கொலை, சித்திரவதை
மற்றும் பாலியல் வன்முறை போன்ற செயல்களைத் தடுக்கின்றன, பெண்கள்
மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான குறிப்பிட்ட
பாதுகாப்புகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஆக்கிரமிப்போர்
இவர்களுக்கான உணவு, மருத்துவப்
பொருட்களை உறுதி செய்வதும், பொதுமக்கள் மீது கூட்டுத் தண்டனை விதிப்பதைத்
தவிர்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் இஸ்ரேலிய இராணுவம் இந்த உடன்படிக்கையின் முக்கிய கோட்பாடுகளை
மீறியதற்கான எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் இறந்தவர்களின்
எண்ணிக்கை 14,800 ஐ தாண்டியுள்ளது, இறந்தவர்களில்
70% க்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 60% க்கும் அதிகமான பாலஸ்தீனிய குடியிருப்பு
வீடுகள்
தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
மேலும், இஸ்ரேல்
கடுமையான தடையை விதித்துள்ளது, இது தனிநபர்களின் அடிப்படை தேவைகளான தண்ணீர், எரிபொருள், மருந்து
மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பறித்துள்ளது.
ஐ.எச்.எல் குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஊழியர்களைப்
பாதுகாக்கிறது, மருத்துவ வசதிகளை வேண்டுமென்றே குறிவைப்பதைத்
தடுக்கிறது. இருப்பினும், அக்டோபர் 17 அன்று காஸா
நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சமீபத்திய
வரலாற்றில் மிகவும் சோகமான சில நிகழ்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. விடுதலைப் போராளிகளின் ஒரு எதிர்ப்பு ராக்கெட் தாக்கியதாகக் கூறிய போதிலும், பல
புலனாய்வு அறிக்கைகள் மற்றும் பாலஸ்தீன மருத்துவமனைகள் மீதான அடுத்தடுத்த
தாக்குதல்கள் இந்த பேரழிவுகரமான செயலுக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்பதை குறிக்கின்றன.
காஸாவில் உள்ள பல மருத்துவமனைகள் மீது சியோனிச அரசாங்கம்
நடத்திய சோதனைகள், முக்கிய பயன்பாடுகளின் தடுப்பு மற்றும் மருத்துவ ஊழியர்களை தடுத்துவைத்தல் உட்பட, ஜெனீவா
உடன்படிக்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு முரணாக உள்ளன. ஹமாஸ் சுரங்கங்கள் இருப்பதை இஸ்ரேல் தனது
நடவடிக்கைகளுக்கான நியாயப்படுத்தலாக வலியுறுத்திய போதிலும், அவ்வாறான சுரங்கங்கள் அங்கு இருப்பதற்கான கூற்றுக்களை ஆதரிக்க ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்களை வழங்க அது தவறிவிட்டது.
மேலும், ஜெனீவா உடன்படிக்கையை நேரடியாக மீறும் வகையில், சமீபத்திய
வாரங்களில் ஐ.நா.வால் பாதுகாக்கப்பட்ட பாடசாலைகள் கூட தாக்குதலுக்கு
உள்ளாகி இடிக்கப்பட்டுள்ளன.
நான்காவது ஜெனீவா உடன்படிக்கையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அங்கிருக்கும்
மக்களை நாடு கடத்துவதைத் தடைசெய்கிறது. இது இஸ்ரேல் மீறியுள்ள மற்றொரு பிரிவு. பாலஸ்தீனியர்களை
காஸாவின் வடக்குப் பகுதிகளை விட்டு தெற்கிற்குச் செல்லுமாறு துண்டுப் பிரசுரங்களை வீசி
இஸ்ரேல் வெளியேற்ற உத்தரவுகளை வழங்கி வருகிறது. மக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு
கேட்டுக் கொள்வதால் நாடுகடத்தல் சட்டபூர்வமானது என்று அது சர்வதேசத்துக்கு கூற விரும்புகிறது.
ஆனால் தெற்கு காஸா பகுதியில் தாக்குதல்களை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு, அந்த
பகுதியில் எந்த பாதுகாப்பு வலயங்களையும் விட்டு வைக்கவில்லை.
இந்த மோசமான நடவடிக்கைகளின் பின்னணியில், சியோனிச ஆட்சி இனப்படுகொலையை நிகழ்த்துகிறது
என்று குற்றம் சாட்ட சட்ட வல்லுநர்கள் முன்வந்துள்ளனர். 1948 ஆம் ஆண்டின் ஐ.நா இனப்படுகொலை
உடன்படிக்கையை மேற்கோள் காட்டி, இந்த வல்லுநர்கள் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள்
இனப்படுகொலையின் வரையறைகளுடன் ஒத்துப்போகின்றன என்று வாதிடுகின்றனர், ஏனெனில் இது பாலஸ்தீனியர்களை
ஒரு தேசிய, இன மற்றும் மத குழுவாக வேண்டுமென்றே குறிவைத்து அகற்றுவதை உள்ளடக்குகிறது.
இஸ்ரேலின் இந்த குற்றச்செயல்களுக்கு யார் பொறுப்பு?
போர்க்குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட அமைப்பாக சர்வதேச குற்றவியல்
நீதிமன்றம் செயல்படுகிறது. ரோம் சாசனத்தைப் பயன்படுத்தி, இது
சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை வரையறுத்து தண்டிக்கிறது.
உக்ரைனில் இருந்து சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்திய போர்க்குற்றத்திற்கு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பு என்று
அவர் மீது ஐ.சி.சி
சமீபத்தில் குற்றம் சாட்டியதை கருத்தில் கொண்டு, பெஞ்சமின்
நெதன்யாகுவின் அமைச்சரவையால் திட்டமிடப்பட்ட மிகவும் கொடிய தாக்குதல்கள் மற்றும்
பரவலான இடப்பெயர்வுகளை சர்வதேச குற்றவியல்
நீதிமன்றம் உறுதியாகவும்
பாரபட்சமின்றியும் தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இஸ்ரேலிய பிரதமரை தடுத்து வைப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும், அத்தகைய நடவடிக்கை நீண்ட
காலமாக மனித உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறி வரும் அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான வழியாக அமையக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.