Contributors

Sunday, April 20, 2025

சஃபாவிட் வம்சத்தின் சாதனைச்சின்னமாக திகழும் ஈரானின் ஷா மசூதி

Iran's Shah Mosque, a landmark of the Safavid dynasty

சஃபாவிட் வம்சத்தின் சாதனைச்சின்னமாக திகழும்  ஈரானின் ஷா மசூதி

ஷா மசூதி என்பது ஈரானின் இஸ்ஃபஹான் எனும் நகரில் அமைந்துள்ள ஒரு புனித ஸ்தலமாகும். இது நஷ்-இ ஜஹான் சதுக்கத்தின் தெற்கே அமைந்துள்ளது. இது சஃபாவிட்  ராஜாங்கத்தின் ஐந்தாம் பேரரசர் அப்பாஸ் தி கிரேட் அவர்களின் உத்தரவின் கீழ் 1629ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த மசூதி இஸ்லாமிய சகாப்தத்தில் பாரசீக கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 


1931 ஆம் ஆண்டு ஷா மசூதி ஈரானின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டு 1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ஃபஹானில் உள்ள இம் மசூதி, இஸ்ஃபஹான் நகரின் மக்களை அரசியல் மற்றும் பொருளாதார தேசியவாதத்துடன் ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்பட்டது. இது தற்போது ஈரானிய முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.

 

நீல நிற டைல்கள் , மொசைக் வேலைப்பாடுகள் மற்றும் துல்லியமான விகிதாச்சாரங்களுடன்  கொண்ட இந்த நேர்த்தியான மசூதி, இஸ்ஃபஹானின் பிரதான சதுக்கத்தின் தலைமைப்பகுதியில் கட்டப்பட்டு 400 ஆண்டுகள் ஆகியும் கறைபடாமல், முதலாம் ஷா அப்பாஸ்  இன் தொலைநோக்கு  மற்றும் சஃபாவிட் வம்சத்தின் சாதனைகளுக்கான நினைவுச்சின்னமாக திகழ்கிறது. மசூதியின் முடிசூட்டும் குவிமகுடம் 1629 இல், ஷா அப்பாஸின் ஆட்சியின் கடைசி ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.




மசூதியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தலைசிறந்த படைப்பாக இருந்த போதிலும், ஒட்டுமொத்த வடிவமைப்பின் ஒருமைப்பாடே  இவ் வசீகர தோற்றத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இம் மசூதியின் வடிவமைப்பு அதிகமாக புகைப்படம் எடுக்க தூண்டும் கவர்ச்சியான நுழைவாயிலை கொண்டுள்ளதால் அதன்  ஆன்மீக நோக்கங்களை தாண்டி மசூதியின் தோற்றமே  மக்களை அதிகமாக கவர்கிறது.  பஜார்-இ போசோர்க்கின் நுழைவாயிலில் உள்ள கெய்சரீஹ் நுழைவாயிலுக்கு ஒரு எதிர்முனையாகவே ஷா மசூதி நுழைவாயிலின் செயற்பாடு அலங்கரிக்கப்பட்டது. இதன் அடித்தளம் ஆர்டெஸ்தானிலிருந்து வந்த வெள்ளை பளிங்குக் கற்களால் ஆனவை, மேலும் சுமார் 30 மீட்டர் உயரமுள்ள இந்த நுழைவாயில், அக் காலத்தின் மிகவும் திறமையான கட்டிட கலைஞர்களால் அற்புதமான மோராக் காஷி  (வடிவியல், மலர் வடிவமைப்புகள், மற்றும் எழுத்தணிக்கலை வேலைப்பாடுகளைக் கொண்ட மொசைக்குகள்) பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது.


அற்புதமான தேன்கூடு வடிவத்தில் மிகைக்கத்தக்க அலங்காரங்களை கொண்டுள்ள இப் பள்ளி வாசலின் ஒவ்வொரு பகுதியும் அதற்கேயான சிலிர்க்க வைக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 1611 இல் தொடங்கிய இவ்வற்புதமான நினைவுச்சின்னத்தின் வேலைகள் நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது; அதன் திட்டமிட்ட சமச்சீர் பொருத்தமின்மை அல்லாஹ்வின் முன் கலைஞர்களின் பணிவைப் பிரதிபலிக்கின்றது.

 

சதுக்கத்தின் எதிர் பக்கமாக நுழைவாயில் கட்டப்பட்டிருந்தாலும், மசூதி மக்காவை நோக்கி அமைந்துள்ளது, எனவே சதுக்கத்தையும் உள் முற்றத்தையும் இணைக்க ஒரு குறுகிய நடைபாதை கட்டப்பட்டுள்ளது, இதனால் இந்த சமச்சீரற்ற சீரமைப்பு நுணுக்கமாக மறைக்கப்பட்டுள்ளது. முற்றத்தின் உள்ளேவுழு செய்வதற்காக  ஒரு குளம் மற்றும் நான்கு விசாலமான அறைகள் உள்ளன. முற்றத்தின் சுவர்களில் மிகவும் நேர்த்தியான நுழைவாயில்கள் உள்ளன, அவை கடும் நீலம் மற்றும் மஞ்சள் நிற ஹாஃப்ட் ரங்கி (வர்ணம் பூசப்பட்ட டைல்கள்) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறைகளும் ஒரு வளைந்த வாயிலை நோக்கி செல்கின்றன. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் நீல பின்னணியில் குறிப்பாக நேர்த்தியான மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

 

பிரதான வாயில் தெற்கு அறை  வழியாக நுழைகிறது. தங்க ரோஜா வடிவத்துடன் (the flower basket), கடும் நீல பின்னணியில் குவிந்த மொசைக் ஓவியங்களின் செறிவான வட்டங்களால் சூழப்பட்ட குவிமாட கூரையின் செழுமையை அமைதியாக அமர்ந்து ரசிக்க ஒரு அற்புதமான இடமாகும். உட்புற கூரை 36.3 மீ உயரம் கொண்டது, ஆனால் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரட்டை அடுக்கு காரணமாக வெளிப்புறம் 51 மீ வரை உயர்ந்து இருக்கும். குவிமாடத்தின் மையத்தின் கீழ் உள்ள கருப்பு நடைபாதைக் கற்களில் உங்கள் கால்களை பதிக்கும் போது கேட்கும் உரத்த எதிரொலிகளுக்கு இக் குவிமாடத்தின் ஆழமான இடைவெளி காரணமாகும்.  விஞ்ஞானிகள் 49 எதிரொலிகள் வரை அளந்திருந்தாலும், மனித காதுக்கு சுமார் 12 எதிரொலிகள் மட்டுமே கேட்கின்றன - மசூதி முழுவதும் ஒரு பேச்சாளரை தெளிவாக செவிமடுக்க போதுமான அளவு. இம் மசூதியில் பளிங்கு மிஹ்ராப் மற்றும் மிம்பர் (மசூதியின் பிரசங்க மேடை) ஆகியவையும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதான வாயிலுக்கு மேலே உள்ள இரண்டு நீல நிற  மினாரத்கள்  கம்பீரமான காட்சி அளிக்கிறது. ஒவ்வொன்றும் ரம்மியமான பால்கனிகள் மற்றும் வெள்ளை வடிவியல், எழுத்தணி ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது, இதில் முஹம்மத் (ஸல்) மற்றும் அலி (ரலி) அவர்களின் பெயர்கள்  மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. பிரதான வாயில்களின் கிழக்கு மற்றும் மேற்கில் இரண்டு மதரஸாக்களின் முற்றங்கள் உள்ளன. அவ்விரண்டும் பிரதான குவிமாடத்தின் அழகிய காட்சிகளை வழங்குகின்றன.

 

சஃபாவித்களால் நிறுவப்பட்ட ஷா மசூதி, அவர்களின் பல்வேறு கட்டிடக்கலை நுட்பங்களை வெளிப்படுத்த ஒரு தளமாக அமைந்தது. செல்ஜுகி வம்சத்தால் மேம்படுத்தப்பட்டு சஃபாவித்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வாயில்களின் வடிவமைப்பு, ஒவ்வொரு பக்கத்திலும் பிரமாண்டமான நுழைவாயில்களுடன் கூடிய முகப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உண்மையான கட்டமைப்பை வெளிக்கொணர்கிறது.

 

பாரசீக மசூதிகளில், மினாரட் ஒரு முக்கிய பகுதி ஆகும், மேலும் மஸ்ஜித்-இ ஷா அவற்றில் நான்கை பெருமிதமாக கொண்டுள்ளது. இருப்பினும், பாரசீக கட்டிடக்கலையில் தொழுகைக்கான அழைப்பிற்கு உயரமான மினாரட்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பபடுவதில்லை. அதற்கு பதிலாக, ஒரு பூங்கொத்து (گلدسته) சேர்க்கப்பட்டது, இது மஸ்ஜித்-இ ஷாவில் மேற்கு வாயிலின்மேல் வைக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு சுவரில் பத்து அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு பெரிய பளிங்கிலான மிஹ்ராப், மக்காவின் திசையைக் குறிக்கும் ஒரு  திசைகாட்டியாக செயல்படுகிறது.

 

பாரசீக குவிமாடங்கள் அவற்றின் ரம்மியமான டைல்களால் தனித்துவமாக  காட்டப்பட்டன, அவை கட்டமைப்புகளின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அலங்கரித்தன.


1629 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டபோது, ​​மசூதி-இ ஷாவின் குவிமாடம் 53 மீட்டர் உயரத்தில் இருந்தது, இது நகரத்தின் மிக உயரமான குவிமாடமாக அமைந்தது. இது இரட்டை ஓடுகள் கொண்ட குவிமாடமாக கட்டப்பட்டது, இரண்டு அடுக்குகளுக்கு இடையில் 14 மீட்டர் இடைவெளியுடன், ஒரு எண்கோண குவிமாட அறையால் நிருவப்பட்டது.

 

மசூதியின் நுழைவாயில், கட்டமைப்பிற்குள் மிகவும் நேர்த்தியான டைல் அலங்காரத்தைக் காட்டுகிறது. டைல்  மொசைக் ஏழு வண்ணங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது (கடும் பாரசீக நீலம், இள துருக்கிய நீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள், பச்சை மற்றும் பிஸ்கிட்). அடர் நீல பின்னணியில் வெள்ளை துலூத் எழுத்துக்களில் மத நூல்களைக் கொண்ட ஒரு பரந்த கல்வெட்டு வாயிலை சுற்றி வசீகரமாக காட்சி அளிக்கிறது. மஸ்ஜித்-இ ஷாவில் உள்ள டைல்கள் முக்கியமாக நீல நிறத்தில் உள்ளன, உள் மண்டபங்களைத் தவிர, அம் மண்டபங்கள் குளிர்ந்த, மஞ்சள்-பச்சை நிற டைல்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

 

https://en.wikipedia.org/wiki/Shah_Mosque_(Isfahan)

https://www.britannica.com/topic/Masjed-e-Emam

 

 

 

 

Thursday, April 17, 2025

பாரசீக கவிஞன் அத்தார் நைஷாபூர்

 Persian poet ‘Attar of Nishapur’

பாரசீக கவிஞன்  அத்தார் நைஷாபூர்

 

அத்தார் நைஷாபூர் (Attar of Nishapur) எனும் புனைபெயரால் அழைக்கப்படும் ஃபரித் உத்-தீன் அத்தார் (Farid-ud Din Attar),  மிகச் சிறந்த சூஃபி கவிஞர்களில் ஒருவர். நைஷாபூரைச் சேர்ந்த இவர் சூஃபித்துவத்தின் கோட்பாட்டாளர் மற்றும் ஹாகியோகிராஃபர் (hagiographer) என்றும் போற்றப்படுகின்றார். கவிஞர் அத்தார்  பாரசீக கவிதை மற்றும் சூஃபித்துவத்தில் மகத்தான மற்றும் நீடித்த செல்வாக்கைக் கொண்டிருந்தார். இந்த சிறந்த பாரசீக கவிஞரை  வருடாந்தம்  ஏப்ரல் 14  திகதி ஈரானியர்கள் நினைவுகூர்கிறார்கள்.

 

இளம் வயதிலேயே ஃபரித் உத்-தீன் அத்தார் எகிப்து, சிரியா, அரேபியா, இந்தியா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, இறுதியாக வடகிழக்கு ஈரானில் உள்ள தனது சொந்த ஊரான நைஷாபூரில் குடியேறினார், அங்கு அவர் பல ஆண்டுகள் பிரபலமான சூஃபிகளின் தத்துவங்களையும் கூற்றுகளையும் சேகரித்தார்.

 

 

பல நூற்றாண்டுகளாக நீடித்த ஈரானிய இலக்கியம் (பாரசீக இலக்கியம்), உலகின் மிகப் பழமையான மேலும் பல கலாச்சாரங்களின் இலக்கியப் படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான கலையாகும்.

 

பாரசீக கலை உலக வரலாற்றில் மிகவும் வளமான கலை பாரம்பரியங்களில் ஒன்றாகும், இவ்விலக்கியம் கட்டிடக்கலை, ஓவியம், நெசவு, மற்பாண்டங்கள், எழுத்தணிக்கலை, உலோக வேலைப்பாடு மற்றும் சிற்பம் உள்ளிட்ட பல ஊடகங்களில் வலுவாக வெளிப்படுகிறது. பாரசீக இலக்கியம் பாரசீக கலாச்சாரத்தின் மணிமகுடமாகும். இது ஒட்டோமன் துருக்கி, முஸ்லிம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் இலக்கியங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மற்றும் கோதே (Goethe), எமர்சன் (Emerson), மேத்யூ அர்னால்ட் (Matthew Arnold) மற்றும் ஜார்ஜ் லூயிஸ் போர்ஜஸ் (Jorge Luis Borges) உள்ளிட்ட பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்துள்ளது.  இவர்களுக்கு சிறந்த தூண்டுதலாக இருந்தவர் ஈரானின்  அத்தார் நைஷாபூர் ஆவார். இவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான "பறவைகளின் மாநாடு" (The Conference of the Birds) என்ற  கவிதை ஞானத்தைத் தேடும் இதயங்களை இன்றளவிலும் ஒளிரச்செய்கிறது. இக் கவிதையில் பறவைகள் (அதாவது சூஃபிகள்) புராண சிமோர்க் அல்லது பீனிக்ஸ் (Sīmorgh or Phoenix) எனும் பறவையை தங்கள் ராஜாவாக (அதாவது இறைவன்) ஆக்க விரும்புவதை விவரிக்கும் ஒரு உருவகக் கவிதை. இக் கவிதையின் இறுதிக் காட்சியில், தங்கள் சவால்மிக்க பயணத்திலிருந்து தப்பிப்பிழைத்த பறவைகள் சிம்மாசனத்தை அணுகி,  சிமோர்க்கின் கண்ணாடி போன்ற முகத்தில் தெரியும் தங்கள் பிரதிபலிப்புகளைப் பற்றி சிந்தித்து, தாங்களும் சிமோர்க்கும் ஒன்று என்பதை உணர்கின்றன.

 

 

அத்தார் நைஷாபூரின் குறைவாக அறியப்பட்ட ஆனால் குறையா மதிப்புமிக்க படைப்பான "தத்கிராத்-உல்-அவ்லியா" (Tadhkirat-ul-Awliya), சத்தியத்திற்கான வழியைத் தேடும் அனைவருக்கும் பொக்கிஷமாக கருதப்படும் ஒரு சிறந்த படைப்பாகும்.  இஸ்லாமிய நூல்களின் இந்த வரலாற்றுத் தொகுப்பு அத்தாரின் ஒரே உரைநடைப் படைப்பாகும். புகழ்பெற்ற உரைநடை நூலான தத்கிராத்-உல்-அவ்லியா, ஆரம்பகால சூஃபிகளைப் பற்றிய விலைமதிக்க முடியாத  தகவல்களின் ஆதாரமாகும்.  இதை தவிர்த்து  இலாஹி-நாமா (Ilahi-Nama), முக்தர்-நாமா (Mukhtar-Nama), முசிபத்-நாமா (Musibat-Nama), ஜவாஹிர்-நாமா, (Jawahir-Nama), சர்ஹ் அல்-கல்ப் (Sarh al-Qalb), திவான் (Divan) ஆகியவை அவரது முக்கிய படைப்புகளில் அடங்கும்.

 

அத்தார் ஒரு புகழ்பெற்ற சூஃபி ஆவார். மொங்கோலியர்களால் அவர் ஷஹீத் ஆக்கப்பட்டபோது, ​​அவரைப் பற்றிய பல காவியக் கதைகள் கூறப்பட்டன, உதாரணமாக அவர் தனது தலையை கையின் கீழ் வைத்துக்கொண்டு தனது உடலுக்கு ஒரு கல்லறையை தேடி  குதிரை சவாரி செய்தார். இது உயர்ந்த மனிதர்களைக் கௌரவிப்பதற்காக முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான மையக்கரு. சமகால துருக்கிய நாவலாசிரியர் யாசர் கெமல், தனது "மீம்ட், மை ஹாக் (Memed, My Hawk)”  என்ற சிறந்த நாவலில் புனிதர்களைப் பற்றிய இதே போன்ற கதைகளை மேற்கோள் காட்டுகிறார்.  மக்களிடையே பொதுவாக பரவும் காவியக் கதைகளைப் போலல்லாமல், அத்தாரின் கதைகள் யதார்த்தமானவை, பணிவானவை மற்றும் கல்வி சார்ந்தவை. அவர் சூஃபி வாழ்க்கை முறை, அவற்றின் தார்மீக பண்புகள் மற்றும் உள்ளார்ந்த அர்த்தங்கள், அவர்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டி நமக்குக் கற்பிக்கிறார்.  அத்தார் ஈரானின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவர். அவரது படைப்புகள் ரூமி, ஹபீஸ், ஜாமி, நவயி மற்றும் பல கவிஞர்களுக்கு உத்வேகமாக இருந்தன.

 

இலக்கிய கருத்துக்கள்கருப்பொருள்கள் மற்றும் எழுத்து நடை ஆகியவற்றை நோக்குகையில், அத்தாரின் செல்வாக்கு பாரசீக இலக்கியத்தில் மட்டுமல்ல, பிற இஸ்லாமிய இலக்கியங்களிலும் வலுவாக உணரப்படுகிறது.

 

சமகால ஈரானில், பாரசீக இலக்கியத்திற்கு அவரது படைப்புகள் ஆற்றிய பங்களிப்பைக் குறிக்கும் வகையில், பாரசீக நாட்காட்டியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் திகதி அத்தாரின் தேசிய தினமாகக் நினைவுகூரப்படுகிறது.

 

https://iranpress.com/attar-of-nishapur-what-iran-is-known-for

https://www.britannica.com/biography/Farid-al-Din-Attar