Male-Female relationship from the view point of Islam
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை குறிக்குமுகமாக கடந்த மார்ச் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட "பெண்களின் உரிமைகள் - கிழக்கிலும் மேற்கிலும்" என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து வருகை தந்த டாக்டர் ஸாஹிரே மிர்ஜாபரி அவர்களின் உரையின் ஒரு பகுதியை இங்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
Dr. Zahere Mirjafari
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், கணவன்-மனைவி
இடையே உண்மையான ஒற்றுமை மற்றும் நெருக்கத்தை உருவாக்க, அவர்களின் உள்ளுணர்வு மற்றும் இயற்கை வேறுபாடுகளுக்கு கவனம்
செலுத்தப்படுகிறது, மேலும் இந்த
வேறுபாடுகளின் அடிப்படையில், கணவன்-மனைவிக்கான
உரிமைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, குடும்பத்தை
பராமரிக்கும் பொறுப்பு ஆண் மீது சுமத்தப்படுவதன் காரணமாக குடும்பத்தின் முக்கிய அந்தஸ்து
அவருக்கு வழங்கப்பட்டு, குடும்பத்திற்காக
செலவுசெய்யும் கடமை அவன் மீதே சுமத்தப்பட்டுள்ளதால் நியாயத்தையும் மதிக்கும்
வகையில் குடும்பத்தலைவன் என்ற அந்தஸ்தும் கணவனுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தில் இந்த வேறுபாடுகள் புறக்கணிக்கப்பட்டு
ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் உள்ளது என்ற மாயை உலவுகிறது. இந்த எண்ணக்கருவானது, சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில், பெண்களின் உரிமைகளை ஆதரிப்பதற்காக என்று கூறப்பட்டாலும், அது பெண்களின் உளவியல் தேவைகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது யதார்த்தமாகும்; குறிப்பாக நோய், கர்ப்பம், பிரசவம் மற்றும்
தாய்ப்பால் ஊட்டும் போது நிலையான மற்றும் நம்பகமான ஆதரவைப் பெறுவது போன்றவை.
ஆண்கள் துணையின்றி இவற்றை அடைவது கடினமாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது வாழ்க்கைத்துணை தன்னுடன்
இருப்பதை பெரும் பலமாக பெண்கள் கருதுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னை பராமரிக்க பக்கத்தில் நம்பிக்கைக்குறிய ஒருவர் இருக்கின்றார் என்ற
நம்பிக்கை, பெண்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட
செய்கிறது.
ஆனால், மேற்கை உதாரணமாக கொண்டியங்கும்
பெண்ணியவாதிகளின் பார்வையில், பெண் சுதந்திரம் என்பது வரையறையற்ற ஒன்றாக இருக்கின்றது.
ஆணோ அல்லது பெண்ணோ தனித்தியங்க முடியாது என்ற யதார்த்தம் இங்கு சவாலுக்கு
உற்படுத்தப்படுகிறது. மேற்குலகில் பெண்கள்
சட்டத்தின் அடிப்படையில் தாயாக, மனைவியாக இருப்பர், என்றாலும் அவர்களுக்கிடையில் வாஞ்சையுடனான
குடும்ப பிணைப்பு இருப்பது அபூர்வம்.
திருமண பந்தத்திற்கு அப்பால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் எந்த தப்பும்
கிடையாது என்று மேற்கின் நவீன கலாசாரம் கருதுகிறது. இதன் விளைவாக கருக்கலைப்பு கூட
பெண்களின் சுதந்திரம் என்று கருதப்படுகிறது, இது இறுதியில்
உடல்ரீதியான, உளரீதியான சிக்கல்கள் மற்றும் தனிமை, அதிர்ச்சி மற்றும் பெண்களுக்கு எதிரான உளவியல் வன்முறைக்கு வழிவகுக்கிறது
என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். இதன் விளைவாக, குடும்பம் என்ற அமைப்பு ஆன்மா இல்லாத ஒரு நிறுவனமாகவும் மிகவும் வறண்ட மற்றும்
இலகுவில் உடைந்து நொறுங்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது; மேலும் கணவன்
மனைவிக்கிடையில் ஏற்படும் சிறிய பிணக்கு கூட குடும்பம் சிதைவதற்கு காரமாக அமைந்து
விடுகிறது.
இஸ்லாத்தின் பார்வையில், கணவன் மனைவி ஆகிய
இருவரினதும் அர்ப்பணிப்பு குடும்ப வாழ்க்கைக்கு
இன்றியமையாதது. குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் குழந்தைகளின்
பாதுகாப்பில் உளவியல் ரீதியாக பெரும் தாக்கம் செலுத்துவது போல் அவர்களது
கல்வியிலும் தாக்கம் செலுத்துகிறது. எனவே, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன்
வாழ்வதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே கட்டுப்பாடற்ற கலப்பு மற்றும் தொடர்பு
சுதந்திரம் பாலியல் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அதிகரிக்க செய்யும்
காரணிகளாகும். பாலியல் உணர்வு என்பது ஒரு உள்ளுணர்வு, அந்த உணர்வுக்கு மனித மனம் எவ்வளவு அதிகமாகக்
கீழ்ப்படிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கிளர்ச்சியாக மாறும், மேலும் அது ஓர் எரியும் நெருப்பாகும். அதற்கு தீனி போடப்போட
அது கொழுந்துவிட்டு எரியும். இவ்வாறான ஆசைகள்
நிறைவேறாத பட்சத்தில், சிலர் வன்முறையாளர்களாக மாறுவதும் உண்டு; சில சந்தர்ப்பங்களில் அது சிலரை மனநோயாளர்களாகவும் ஆக்கிவிடுகிறது. எனவே
இவ்வாறான விளைவுகளைத் தடுப்பதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை
இஸ்லாம் விதித்துள்ளது; இரு சாராரும் தம் கற்பைப் பாதுகாக்க இஸ்லாம்
கட்டளை இடுகிறது. கற்பொழுக்கம்
என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
எப்படியும் வாழலாம் என்ற மேற்குலக கலாசாரம் பெண்களுக்கு எதிரான பாலியல்
மற்றும் உளவியல் வன்முறையை அதிகரிப்பதோடு குடும்ப உறவுகளில் உறுதியற்ற தன்மையை
ஏற்படுத்துகிறது; மாறாக, முறையான திருமணத்தின் பின்னணியில் பாலியல்
இன்பங்களை அனுபவிப்பது கணவன்-மனைவி இடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது மற்றும்
இளம் ஜோடிகளை ஒன்றாக இணைக்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாலியல் தொடர்பான இஸ்லாமிய விதிமுறைகளை, நீதியின் அடிப்படையிலான தார்மீக மற்றும் சட்டப்
பரிமாணங்களின் உண்மையான ஒரு முறையான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பாகக்
கருதப்பட வேண்டும், அதாவது மனிதனின்
தனிப்பட்ட, சமூக மற்றும்
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிக்காக இஸ்லாம் பல்வேறு கோணங்களில் இருந்து
நோக்குகிறது. மற்றும் பெண்களின் மகிழ்ச்சி மற்றும் முழுமை என்பது குடும்ப
பந்தத்தில் இருந்து விடுபடுவதால் ஏற்படுவதல்ல. எனவே, தம்பதிகளின் குடும்ப உறவில், தார்மீக பரிந்துரைகளுடன் சட்ட விதிகள் வகுக்கப்பட்டு தீர்க்கமானவையாக
கருதப்படுகின்றன.
உதாரணமாக, ஒரு ஜோடியின்
உரிமைகளில் ஒன்று கீழ்ப்படிதல் என்பதாகும். இங்கு பொதுவான புரிதல் என்னவென்றால் குடும்பத்தின்
மீது ஆணின் தலைமைத்துவத்தை பெண் ஏற்றுக்கொள்கிறாள், மேலும் விசேஷ சமர்ப்பணம் என்பது கணவனது நியாயமான
திருப்திக்காக மனைவி எப்போதும் தன்னைத்தானே தயாராக வைத்துக்கொள்கிறாள், இன்னும் அதற்கு குறிப்பிட்ட நேரம் என்றோ,
இடம் என்றோ மற்றும் தரம் என்றோ எதுவுமே
கிடையாது. இந்த பாலியல் உரிமை
திருமண ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும், இது திருமணத்தின் நோக்கத்தை நிறைவுசெய்கிறது, மேலும் மனைவி பாலியல்
சமர்ப்பிப்பிலிருந்து தன்னை தடை செய்து கொள்வது திருமணத்தின் தன்மைக்கு எதிரானது
என கருதப்படுகிறது.
உண்மையில், மனைவியின்
உரிமைகள் மற்றும் கடமைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கையின்படி, திருமண ஒப்பந்தத்தின் இந்த நிபந்தனையை அவள்
ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் எந்தவொரு
பாலியல் வன்முறையையும் பெண்ணின் உடல் மற்றும் உளரீதியான துன்புறுத்தலையும் செய்ய
ஆணுக்கு அதிகாரம் இருப்பதாக இங்கு அர்த்தம் கொள்ளப்பட கூடாது. உண்மையில், இஸ்லாத்தின் பார்வையில், சமர்ப்பணம் என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல, தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாலியல் தேவைகளின் போது உளவியல், ஆன்மீகம் மற்றும் உடல் நிலைகளை கருத்தில் கொள்ள வேண்டும். உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், சமீபத்தில் மேற்கத்திய நாடுகளின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கையாள்வதற்காக இயற்றப்பட்டதாகக் கருதப்படும் ‘திருமண வன்புணர்வு’ என்ற ஒன்று சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது., உண்மையில் வரம்பற்ற தனிமனித சுதந்திரம் மற்றும் தனி மனித சொத்துக் கொள்கைகளில் இருந்து உருவானது. இதனால் குடும்பம் என்ற கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. மேலும், இவ்வாறான சட்டங்கள் குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் புனிதத்தன்மையை கெடுத்து, அனைத்து வகையான சகவாழ்வையும் இல்லாதொழித்து பாலியல் வன்முறைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது, மேலும் குடும்ப நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத போது மற்றும் குடும்பத்திற்குள் நிலையான மதிப்புகளிலிருந்து விலகி இருக்கும்போது, சட்ட விதிகள் மூலம் அவற்றைத் தடுக்க முடியாது.