Friday, March 10, 2023

கொலம்பஸுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் முஸ்லிம்கள்

 Muslims lived in the Americas centuries before Columbus

Time To Abandon Colonial Geography

Zafar Bangash

காலனித்துவவாதிகள் தம்மால் ஆக்கிரமிக்கப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட சமூகங்களில் பல்வேறு வழிகளில் ஆழமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தாம் ஆக்கிரமித்த நாடுகளின் வளங்களைத் கொள்ளையடிப்பது முதல் நன்கு நிறுவப்பட்ட பாரம்பரிய சமூகங்களின் மீது அந்நிய கல்வி மற்றும் மொழிகளின் அமைப்புகளை திணிப்பது வரை நீண்டு சென்றது. காலனித்துவ தாக்கம் ஒரு சரிசெய்ய முடியாத பேரழிவாக உள்ளது.

காலனித்துவப் படுத்தப்பட்ட  மக்கள் தங்கள் கலாச்சாரம், உடை மற்றும் உள்ளூர் மொழிகளை தாங்களாகவே வெறுக்கக் கற்பிக்கப்பட்டனர். காலனித்துவ ஆட்சியின் கீழ், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தொழில் பெற வேண்டுமாயின் மேற்கத்திய கல்வியைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக யாராக இருந்தாலும் அவர்களின் காலனித்துவ எஜமானரின் மொழியைக் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு, பிளெமிஷ் (டச்சு மொழியின் பெல்ஜியம் பதிப்பு), ஸ்பானிஷ் அல்லது போர்த்துகீசியம் கூட காலனித்துவப் படுத்தப்பட்ட மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட மொழிகள் தான்.

கோட்பாட்டளவில், காலனித்துவம் முடிவுக்கு வந்துவிட்டது, என்றாலும் காலனித்துவப்படுத்த பட்டிருந்த ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மாநிலங்கள் உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டன என்று கருத முடியவில்லை. இந்தச் சமூகங்களில் உள்ள உயரடுக்குகள் தங்கள் சொந்த வறிய மக்களை விட ஐரோப்பாவில் உள்ள காலனித்துவ எஜமானர்களுடன் இணைவதை, அவர்களுக்கு சேவை செய்வதை இன்றளவிலும் கௌரவமாகக் கருதுகின்றனர். இந்தச் சமூக தலைமைகள் தங்களின் முன்நாள் காலனித்துவ எஜமானர்களை இன்றும் சார்ந்து இருக்கின்றன என்பது ரகசியமல்ல. தனக்குப் பின்னால் அமேரிக்கா இருக்கிறது, பிரித்தானியா இருக்கிறது, பிரான்ஸ் இருக்கிறது என்று கூறுவது கூட தலைவர்களாக இருப்பதற்கான தகுதி எனக் கருதுவது மட்டுமல்லாமல் மக்களையும் அவ்வாறே சிந்திக்க வைத்தும் உள்ளன.

காலனித்துவம், அல்லது குறிப்பாக பிரிட்டிஷ் காலனித்துவம், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு பெயரிட்டது என்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு பகுதி உள்ளது. உதாரணமாக, பெரும்பாலான மக்கள் 'மத்திய கிழக்கு' அல்லது 'தூர கிழக்கு' போன்ற சொல்லாடல்களை நன்கு அறிந்திருக்கிறார்கள். உடனடியாக மனதில் தோன்றும் கேள்வி என்னவென்றால், 'மத்திய' அல்லது 'தூர' என்பது எந்த மையப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது? என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு பிராந்தியத்திற்கு ஒரு குறிப்பிட்ட பெயரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் தொடக்கப் புள்ளி என்ன?

இங்கிலாந்து என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு சிறிய தீவு, இதைச் சுற்றித்தான் அனைத்தும் உள்ளது என்ற ஒரு மாயை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆரம்பப் புள்ளி பிரிட்டன் என்று கருதப்படுகிறது; அதனால்தான் அது தன்னை 'மகா' பிரிட்டன் என்று ஆடம்பரமாக அழைக்கிறது என்பது சிந்தித்தால் தெளிவாகத் தெரியும். இதில் மகத்துவம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அதன் ஆதிக்க நாட்களில் - பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் - அது ஒரு இராணுவ சக்தியாக இருந்திருக்கலாம், அப்போதிருந்த அதன் கடற்படை வலிமையின் காரணமாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அது நடுத்தர சக்திகளின் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. ஆயினும்கூட, அதன் பேரழிவு மரபு உலகத்தை இன்றளவிலும் தொடர்ந்து ஆட்டிப்படைக்கிறது.

இந்த பூகோளத்தின் மையம் பிரிட்டன் என்ற கட்டுக்கதையை ஆங்கிலேயர்கள் தொடர்ந்து எண்ணிக்கொண்டு இருந்தாலும் உண்மை அதுவல்ல என்பது தெளிவாகிறது.

எனினும், ஆங்கிலேயர்கள் பெருமைப்படக்கூடிய ஒரு பகுதி உள்ளது. அது தான் ஆங்கில மொழி. ஆங்கிலம் உலகளாவிய மொழியாகக் கருதப்படுகிறது. இன்று வேறு எந்த மொழியும் அந்த நிலையை அடையவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதற்கான காரணம் எளிமையானது. பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் உலகின் பல பகுதிகளில் காலனித்துவப் படுத்தப்பட்ட வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளான இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் எஜமானர்களாக குடியேறினர். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பழங்குடியின மக்களை இனப்படுகொலை செய்தனர்.

வட அமெரிக்க குடியேற்றம் மற்றொரு கட்டுக்கதையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது. அதாவது இத்தாலியரான கிறிஸ்டோபர் கொலம்பஸ் தான் அமெரிக்காவை 'கண்டுபிடித்தார்' என்ற கட்டுக்கதை தான் அது.

அமெரிக்கக் கண்டம் மக்கள் வாழா பிராந்தியமல்ல. வட அமெரிக்கா ஏற்கனவே பழங்குடி செவ்விந்திய மக்களால் நிரம்பி இருந்தது, அவர்கள் தங்களுக்கென்று நன்கு நிறுவப்பட்ட ஒரு கலாசாரத்தையும் கொண்டிருந்தனர். உண்மையில், கொலம்பஸுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் அரபு எழுத்துக்களைத் தாங்கிய கல்வெட்டுக்கள் சான்றுகளாக இன்றளவிலும் அமெரிக்காவில் காணக்கூடியதாக உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு ஈடுசெய்ய முடியாத கேடு விளைவித்த ஐரோப்பிய குடியேற்றங்களைப் போலல்லாமல் பழங்குடி மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஐரோப்பிய குடியேற்றவாசிகள் பழங்குடி மக்களை படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், வட அமெரிக்காவில் உள்ள பூர்வீக மக்கள் தொகை இன்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வலுவாக இருந்திருக்கும். இனப்படுகொலை காரணமாகவே அவர்கள் இன்று ஒரு சில மில்லியன்களாக தொலைதூர இடங்களில் சிதறி வாழ்கின்றனர். காலனித்துவ வாதிகள் எந்தளவு மனித படுகொலைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது இதிலிருந்து புலனாகிறது.

தம் இஷ்டப்படி எவ்வாறாயினும், காலனித்துவம் தம் இஷ்டப்படி பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு தவறாக பெயரிடப்பட்டது என்பதை நோக்குவோம். மேற்கு ஆசியாவிற்கு 'மத்திய கிழக்கு' என்பது எவ்வளவு அபத்தமானது; மேற்கு ஆசியா என்று அழைப்பது மிகவும் துல்லியமானது. அதுபோல் நாங்கள் ஏற்கனவே மத்திய ஆசியா என்று அழைத்த ஒரு பிரதேசத்தை 'தூர கிழக்கு' என்று பெயரிட்டது. அதன் சரியான பெயரான தென்கிழக்கு ஆசியா என்று தான் அழைக்கப்பட வேண்டும்.

இவர்களின் சமன்பாட்டை இவ்வாறு தலைகீழாக மாற்றி பார்ப்போம். முஸ்லிம் உலகின் மையப்பகுதியை உலகின் மையமாக எடுத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில், வட அமெரிக்காவை 'தூர மேற்கு' என்றும், ஐரோப்பாவை 'மத்திய மேற்கு' என்றும் அழைத்தால் எப்படி இருக்கும்…? மேலும் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ‘ஃபார் சவுத்’ என்று தான் அழைக்கப்பட வேண்டும். இங்கிலாந்து என்பது தனியாக குறிப்பிடப்படுவதற்கே அறுகதையற்ற குட்டி நாடாகும்.

முஸ்லிம் நாடுகள் காலனித்துவத்தின் அரசியல் புவியியலைக் கைவிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளை விவரிக்க மிகவும் துல்லியமான வெளிப்பாடுகளைப் பயன்படுத்த வேண்டிய காலம் இது.

உலகின் புவியியல் மொழியை மறுசீரமைத்து, காலனித்துவவாதிகள் ஏனையோருக்கு வழங்கிய மருந்தை அவர்களுக்கு திருப்பிக் கொடுத்தால் எப்படி இருக்கும்.?

ஆசியா உலகின் மிகப்பெரிய கண்டமாகும். அது தன்னை மேலும் வலுவடையச் செய்ய வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளை சரியான, மிகவும் துல்லியமான பெயரால் குறிப்பிடுவது ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருக்கும்.

?https://crescent.icit-digital.org/articles/time-to-abandon-colonial-geography

No comments:

Post a Comment