UNITY the weapon to defeat enemies
மாபெரும் சாம்ராஜ்யம் ஒன்றை ஓர் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கட்டிக்காத்து, கணிதம், வானியல், பூகோளவியல், மருத்துவம் போன்ற எல்லா அறிவியலில் துறைகளிலும் முன்னோடிகளாக இருந்து, உலகுக்கே பாடம் கற்றுக்கொடுத்த முஸ்லிம்களின் இன்றைய நிலையை நோக்குகையில் ஒவ்வொரு முஸ்லிமும் வேதனையடைவான் என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எமக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளான். அபரிமிதமாகவே வழங்கியுள்ளான்.
முஸ்லிம்களிடம் என்ன வளம் இல்லை...? ஆளணி இல்லையா...? பொருள் வளம் இல்லையா...? இயற்கை வளம் இல்லையா...? எல்லாம் உள்ளது. அப்படியிருக்க, கண்டகண்டவனெல்லாம் எம்மை சீண்டிப்பார்க்கிறான், அடிமையாக நடத்துகிறான், எமது செல்வங்களை
சுரண்டுகிறான், கொள்ளையடித்துச் செல்கிறான், வழியில் செல்வோனெல்லாம் உதைத்துவிட்டுச் செல்கிறான்.
தலைநிமிர்ந்து வாழ்ந்த சமுதாயத்துக்கு ஏன் இந்த இழி நிலை என்று சிந்திக்க வேண்டிய அவசியமேயின்றி தெளிவாகாகத் தெரிகிறது. எம்மத்தியில் ஒற்றுமையில்லை என்பதுவே இதற்குக்காரணம் என்பது சொல்லிப் புரிய வேண்டும் என்தில்லை.
இஸ்லாத்தின் அடிப்படையிலும் அடிப்படையான 'வஹ்தத்' அல்லது 'தௌஹீத்' என்ற சொல்லுக்குள்ளேயே சர்வமும் அடங்கிய ஒருமையுள்ளது, ஒற்றுமையுள்ளது. எமது சக்தியின் ஊற்றுவாயே 'தௌஹீத்' என்ற ஒற்றுமைதான் என்பதை நாமின்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
'நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' சமுதாயம்(வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்.' (அல் குர்ஆன் 21:92, 23:52) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
இந்த தௌஹீதை நிலைநாட்டுவதற்கே அல்லாஹ் மனிதர்களை அவனது கலீபாவாக இவ்வுலகுக்கு அனுப்பி வைத்ததுமன்றி, வேதங்களுடன் வழிகாட்டிகளாக தூதர்களையும் அனுப்பிவைத்தான்.
அப்படியிருக்க, இதனை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்கள் மத்தியில் தோன்றியிருக்கும் பிரிவினையின் காரணமாக, குறித்த இலக்கை அடையமுடியாதுள்ளது. அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு, அறிந்தோ அறியாமலோ, நாமே உடந்தையாகிவிடுகிறோம்.
எம்மளவு பிளவு பட்ட சமூகம் வேறில்லை எனும் அளவுக்கு பிளவு பட்டிருக்கின்றோம்.
சுன்னிகளாகட்டும் ஷியாக்களாகட்டும் இரு தரப்பினரும் அல்லாஹ் ஒருவன் என்றும், முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் மற்றும் மறுமை நாளையும் நம்பி ஏற்றுக்கொண்டவர்கள்; ஒரே குர்'ஆனைப் பின்பற்றுபவர்கள், ஒரே கிபலாவை முன்னோக்குபவர்கள். அவ்வாறிருக்க ஏன் நாம் பிரிந்திருக்க வேண்டும்? இந்த பிரிவினையால் பயனென்ன கண்டோம்..?
கருத்து வேறுபாடுகள் என்பது மனித நாகரீகத்தின் வளர்ச்சியே அன்றி பிரிந்திருப்பதற்கான காரணம் அல்ல என்பதை புரிந்துகொள்வோம்.
இன்றைய உலக அரசியல் களநிலையில் ஈரான், சவூதி, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், தமக்கிடையில் உள்ள முரண்பாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, இஸ்லாமிய அடிப்படையில் "இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம்" ("Union of Islamic Countries") என்று ஒன்றிணையுமானால், ஒரே இரவில் வல்லரசாகிவிடும்.
'முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்' (அல்-குர்ஆன் 5:8)
'அஹ்லுல்பைத்துகளான எமது இமாம்களை கொன்றார்கள், தூஷித்தார்கள்' என்று ஷீ'ஆக்களும் 'நாம் உத்தமர்களாகக் கருதும் சஹாபாக்களை ஏற்றுக் கொள்ளவில்லை, தூஷித்தார்கள்' என்று ஸுன்னிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி, தர்க்கித்து, முரண்பட்டு, 1400 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களையிட்டு எமக்குள் இன்றளவிலும் சண்டையிட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமாகாது.
இந்த நிலையினை இவ்வாறு தொடரவிடக்கூடாது, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேயாக வேண்டும் என்றுணர்ந்த ஷீஆ மற்றும் ஸுன்னி உலமாக்கள் இவ்விரு தரப்பினர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்று அர்ப்பணத்துடன் செயலாற்றி வந்துள்ளனர்.
ஈரான் இஸ்லாமிய புரட்சியின் பிறகு இஸ்லாமிய புரட்சியின் தலைவர்கள் இந்த ஒற்றுமையின்பால் அதிக கவனம் செலுத்தினர். ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர். வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ 'இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். என்னவோர் அருமையான முன்மாதிரி.
ஈரான் கலாசார நிலையத்தினால் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஈரானிலிருந்து இலங்கை வந்திருந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா காலித் அப்ரா இப்ராஹிம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது சிறந்தது என்று நினைக்கின்றேன்:
'ஈரானில் சுமார் பத்து வீதம் அளவில் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தோர் வசிக்கின்றனர். இங்கு சுன்னி - ஷியா என்ற அடிப்படையில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனை ஈரானியர் எவரும் விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதும் இல்லை. அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நம்பிக்கையை விமர்சிக்கும் எவரும் ஷியாக்களாலேயே கண்டிக்கப்படுவர். 'அஹ்லுஸ்ஸுன்னாக்களால் மதிக்கப்படும் எந்த சஹாபாக்களையும் இழிவுபடுத்துவது, கண்ணியக்குறைவாக பேசுவது ஹராம் என்றும் றஸூலுல்லாஹ்வின் குடும்பத்தவரை, மனைவியரை இழிவுபடுத்துவது இஸ்லாத்தை இழிவுபடுத்துவதற்கு, குர்'ஆனை இழிவுபடுத்துவதற்கு, றஸூலுல்லாஹ்வை இழிவுபடுத்துவதற்கு சமனாகும்' என்றெல்லாம் ஷியா உலாமாக்களால் பத்வா வழங்கப்பட்டுள்ளது.'
மேலும், திருமண பந்தத்தால் இணைந்து வாழும் பல ஷியா - ஸுன்னா குடும்பங்களை ஈரானில் சர்வசாதாரணமாகக் காணலாம்.
இஸ்லாத்துக்கு எதிராக, இஸ்லாமிய ஒற்றுமைக்கு எதிராக மாபெரும் பிரச்சாரம் இஸ்லாத்தின் எதிரிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஷியாக்களுக்கு எதிராக சுன்னிகளை தூண்டிவிடுவதற்கு அமெரிக்காவும் சுன்னிகளுக்கு எதிராக ஷியாக்களை தூண்டிவிடுதற்கு பிரித்தானியாவும் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கி, செலவு செய்து வருகின்றன. இதற்கென்றே பல ஊடக நிறுவனங்கள் நிறுவப்பட்டு இன்றும் செயற்பட்டு வருகின்றன.
1400 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற சரித்திர சம்பவங்களை இன்று நாம் பிரிந்திருக்க காரணிகளாக அமைத்துக்கொள்வதால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கும் சக்திகளே நன்மை பெறும்.
ஷீஆ-ஸுன்னி ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஸுன்னிகளுக்கு எதிராக ஷீஆக்களின் பெயரிலும், ஷீஆக்களுக்கு எதிராக ஸுன்னிகளின் பெயரிலும் பல்லாரக்கணக்கான நூல்கள் அச்சிடப்பட்டு இரு சமூகங்கள் மத்தியிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனையிட்டு நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். யாருமொருவர் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால்... சிந்தியுங்கள், ஆராயுங்கள்; சதித்திட்டங்களுக்கு பலியாகி விடாதீர்கள்.
சவுதியில் சில உலமாக்கள் 'ஷியாக்கள் முஸ்லிம்களல்ல' என்று அவ்வப்போது கூறுவதை நாம் அறிவோம். இதனை சவூதி அரசு கூட சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை, அவர்கள் வருடாந்தம் சுமார் ஒரு லட்சம் ஈரானியரை ஹஜ்ஜுக்கு அனுமதிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
இன்று எமக்கு வேண்டியது முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை; இதற்காகவே ஈரானிய அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இந்த சமயத்திலும் கூட ஈரானில் இஸ்லாமிய ஒற்றுமை தொடர்பாக சர்வதேச மாநாடு ஒன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது; உலகின் பல பாகங்களில் இருந்தும் சுன்னி உலமாக்கள் அதில் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒற்றுமைக்காகவே நாமும் இங்கு விஜயம் செய்துள்ளோம் என்று கூறினார் மௌலானா காலித் அப்ரா.
அவர் மேலும் உரையற்றுகையில் 'முஸ்லிம்கள் மத்தியில் நட்பு என்பது இல்லை, இருப்பது சகோரத்துவமே. இதனையே அல்லாஹ்வும் வலியுறுத்துகிறான், அவனுடைய றஸூலும் வலியுறுத்துகின்றார்" என்றார்.
மௌலானா காலித் அப்ரா இப்ராஹிம் அஹ்லுஸ்ஸுன்னாவை சேர்ந்த ஆலிம், புஷர் மாகாணத்தின் பிரதான கதீப், ஹாபிஸ், பன்னூலாசிரியர், மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் அமைக்கும் குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
====================================
ஒருவரின் குற்றத்தை அல்லாஹ் இன்னொருவர்மீது சுமத்தமாட்டான். இது குர்'ஆனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள வாக்குறுதி. ஆக, ஒருவன் ஷிவாக இருப்பதிலோ, சுன்னியாக இருப்பதிலோ, வஹ்ஹாபியாக இருப்பதிலோ, குராஃபியாக இருப்பதிலோ எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.
ஒருவன் அல்லாஹ்வையும் அவனுடைய ரஸூலையும் ஏற்று, கலிமாவை மொழிந்து, புனித குர்'ஆனை ஏற்று நடக்கும் எவரும் முஸ்லிமே என்பதுவே எனது நிலைப்பாடு. அதற்கு அப்பால் உள்ள எந்த விடயமும் இரண்டாம் பட்சமே. அடுத்தவருக்கு காஃபிர் பட்டம் சூட்டாது, அவரவர் கொள்கையை பிரசாரம் செய்ய ஒருவருக்கு இருக்கும் உரிமையை நானும் மதின்றேன், அடுத்தவரும் மதிக்கவேண்டும்.
அமெரிக்க சியோனிச பிசாசுகளை மட்டுமல்ல இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் 'இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே' என்பது இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புரிகிறது, ஆகவேதான், இவர்கள் ஷியா, சுன்னி பிரிவினைக்கு தூபமிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாமோ எதிரிகளின் சதித்திட்டங்களை அறியாது, எமக்குள் சண்டையிட்டு எமது சக்திகள் அனைத்தையும் விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
'அன்றி, நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).
'இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்- நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.' –அல் குர்ஆன்.3:103.
------------------------
- தாஹா முஸம்மில்