Friday, May 25, 2018

பலஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்


International Qud's Day 
குத்ஸ் தினமென்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய தினமல்ல..... அது அடக்குமுறைக்கு எதிரான அனைத்து மக்களினது தினம். அல் குத்ஸ் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்
புனித பூமியான பலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இஸ்ரேலிய ராணுவம் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காத யூத வெறியர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும், வயோதிபர்களையும் அப்பாவிப் பெண்களையும் மிருகத்தனமாக கொன்று குவித்து வருகின்றனர். அமெரிக்காவின் தலைமையில் இஸ்லாம் விரோத சக்திகள் அனைத்தும் இதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன. ஐ.நா.சபையும் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கிறது என்பது வெளிப்படை. ஐ.நாவை  நம்பி எந்தப்பிரயோசனமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடே இதற்கான ஒரே தீர்வு என்பது தெளிவு.
இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை பாதுகாப்பதற்காகவும் ஃபலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர். ஃபலஸ்தீனியர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை அல் குத்ஸ் தினமாகஅனுஷ்டிக்க வேண்டும் என்று இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்ற ஆரம்ப நாட்களிலேயே பிரகடனம் செய்தார்கள்.
பலஸ்தீன் போராட்டத்திற்கு ஆதரவான சிறப்பு கட்டுரைகள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நகரங்களில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்களும் சியோனிஸத்துக்கு எதிரான யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் நம்முடைய பகுதிகளில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. பலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும் வெறும் பலஸ்தீன பிரச்சனை என்றோ அல்லது அப்பிராந்தியத்தின் பிரச்சனை என்ற அளவில் சுருக்குவதற்கான சூழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சியி வலையில் சிக்கியுள்ள அரபுத் தலைவர்களே, 'எமக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.
பலஸ்தீன் பூமி நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம்; பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம், நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்றுவோம்.
இந்த வருடம் ஜூன் 8ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள  சர்வதேச குத்ஸ் தினத்தில்போராடி கொண்டிருக்கும் ஃபஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்.

அன்றைய தினம் ஃபலஸ்தீன போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வோம்.

புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம்.

இந்த வருடம் ஜூன் 8ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பயான்களிலும் இரவுத் தொழுகைக்கு பிந்தைய பயான்களிலும் பைத்துல் முகத்தஸை நினைவு கூர்வதுடன் அதனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்,

Wednesday, May 23, 2018

சூரியன் மறையா சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்த முஸ்லிம்களின் இப்போதைய நிலை

The present situation of the Muslims who ruled a great Empire 

முஸ்லிம்கள் அவசரமாக சமாளிக்க வேண்டிய முதலாவதும் முக்கியமானதுமான சவால்  முஸ்லிம் உம்மத் மத்தியில் உள்ள பிரிவினையைக் கலைவதாகும்.


ஜாஹிலிய்யா காலத்தில் ரசூலுல்லாஹ் செய்த முதல் முக்கிய காரியம் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அரபிகள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். 

முஸ்லிம்கள் மத்தியில் தொடரும் இந்த பிரிவுக்குக் காரணம் நிச்சயமாக இஸ்லாமல்ல என்பது தெளிவு. இஸ்லாம் பிரிவினையை வெறுக்கிறது, ஒற்றுமையை வலியுறுத்துகிறது. ஆயினும், சிலர் தமது சுய லாபத்துக்காக இஸ்லாத்தின் பெயராலேயே சிறிய பிரச்சினையை பூதாகாரமாக்கி, பிரிவினையை வளர்த்து வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயம். இதன் காரணமாக மாபெரும் சக்தியாக மிளிர வேண்டிய முஸ்லிம் உலகம் இன்று சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது. முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டிய முஸ்லிம் சமுதாயம் மேலும் மேலும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

ஆகவே, முதலில் நாம் எமக்குள் உள்ள இந்த சகோதர சண்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் எமக்குள் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். எமக்கு நாமே எதிரிகளாக மாறும் நிலை மாற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, முஸ்லிம் உலகின் தலைமைத்துவத்துக்கான தகுதியற்றவர்களின் போராட்டம் முஸ்லிம் உலக ஒழுங்கை இன்று சீர்குலைத்துள்ளது, முஸ்லிம்களால் எந்த சவாலையும் சமாளிக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. இந்த ஒற்றுயின்மை காரணமாக, எம்மிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட பலஸ்தீனை, பறித்தெடுத்தவனே வைத்துக் கொள்ளட்டும் என்று கூறும் அளவுக்குக் கோழைகளாக மாறிவிட்டனர்.

மருத்துவம், விஞ்ஞானம், கணிதம், வின்னியல் என்று கொடி கட்டிப் பறந்த முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன...? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

சூரியன் மறையா சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்த முஸ்லிம்களின் இப்போதைய நிலையை சொல்லித்தான் புரிய வெண்டுமென்பதில்லை.

சகோதர முஸ்லிம் நாடுகளில் நம்பிக்கையின்மையை வளர்த்துக் கொண்டுள்ள ஆட்சியாளர்கள் நாட்டின் செல்வங்களை  அழிவாயுதங்களில் விரயமாக்குகின்றனர். அப் பணத்தை கல்வியில் முதலீடு செய்வதற்கு தயங்குகின்றனர். இதன் காரணமாக அறிவுத் தாகம் கொண்ட முஸ்லிம்கள்  மேற்குலகு நோக்கி படையெடுக்கின்றனர். 

அநேக முஸ்லிம் நாடுகள் கல்வியில் பின்தங்கியுள்ளதன் காரணமாக இன்று அபிவிருத்திக்குன்றிய வறிய நாடுகளாக மாறி வருகின்றன. சகலவற்றுக்கும் மேற்குலகில் கையேந்தும் நிலைக்கு இது முஸ்லிம் நாடுகளை இட்டுச்சென்றுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம் நாடுகளில் உள்ள மூளைசாலிகளெல்லாம் வெளியேறி, எதிரி நாடுகளில் சேவை புரிவதை பெருமையாகக் கருதி, அங்கு போய் குடியேறுகின்றனர். அவர்களின் திறமைகள் அனைத்தும் எதிரிகளுக்கே பயன்படுகின்றன. பல சமயங்களில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களிதும் எதிரிகளினால் அவர்கள் புனித மார்கத்துக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனர் என்பதுவும் அவர்களுக்கு புரிவதில்லை.

உலகையே இயங்க வைக்கும் அற்புதமான எண்ணெய் வளத்தை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ளான். அபரிமிதமாகவே வழங்கியுள்ளான். ஆயினும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வளப்படுத்துவதற்காக இவ்வளங்களை பயன்படுத்துவதற்கு எமது தலைவர்களுக்குத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக அவர்கள்;, எம்மை ஏமாற்றி, துரோகமிழைத்துக் கொண்டிருக்கும் வெளிப்படையான எதிரிகளை வழியச் சென்று வளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; அவர்களது காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றனர். 

முஸ்லிம் நாடுகளில் இறையச்சம் கொண்ட இஸ்லாமிய தலைமைத்துவங்கள் இல்லை, சரியான வழிநடத்தல் இல்லை என்பதுவே இதற்கு காரணம் என்று சொல்லாமலேயே புரியும். 

புனித இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளாத காலம் வரை இந்நிலை தொடரவே செய்யும் என்பது நிதர்சனம். இவர்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசை பார்த்தாவது பாடம் படிக்கக் கூடாதா என்று கேட்கத்தோன்றுகிறது. 

எமது பாதுகாப்புக்காக அந்நியரில் தங்கியிருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. தற்காப்புக்காகவும் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் அன்றி, இஸ்லாம் ஒருபோதும் யுத்தங்களையும் அனுமதிப்பதில்லை, அரசாங்கங்கள் மக்களை அடக்கி ஆள்வதையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை. 

இஸ்லாம் விரும்பாத, இஸ்லாத்துக்கு முரணாக அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் தலைவர்களை, இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சில மக்கள் இன்னும் நம்பிக்கொண்டிருப்பதும் விந்தையே. 

இவற்றைப் பற்றியெல்லாம் நாம் பேசத் தயங்குகின்றோம்; அதற்கு பதிலாக, சிறு பிரச்சினைகள் பற்றிப் பேசி காலத்தை கடத்துகின்றோம்; அற்ப வேறுபாடுகளை பூதாகாரமாகி முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை வளர்க்கிறோம்; முஸ்லிம்களது ஒற்றுமைக்கு நாமே தடையாக இருக்கின்றோம்.

இவை அனைத்தையும் அறிந்த எம்மில் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளை திருப்திப்படுத்த விரைந்து கொண்டிருக்கும்  இந்த மன்னர்களுக்கு ஆதரவாய் இருகின்றனர் என்பது ஏன் தான் என்று புரியவில்லை.

- தாஹா முஸம்மில் 

Saturday, May 19, 2018

20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய பேரறிஞர் - அஸ்-ஷஹீத் ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி


Ayatullah Morteza Motahhari, the great Islamic thinker of 20th century
ஆயத்துல்லாஹ் முர்தழா முதஹ்ஹரி (ரஹ்) அவர்கள் ஒரு சிந்தனையாளர், திறமையான எழுத்தாளர் மற்றும் ஓர் வசீகரமிக்க பேச்சாளர். பஹ்லவி ஆட்சியின் அந்த இருண்ட நாட்கள் பற்றி எடுத்துரைத்து, ஷா மன்னனின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களைத் விழித்தெழச் செய்தவர். முதஹ்ஹரி பற்றி இவ்வாறு அழகாகச் சொல்வார்கள்: "முதல் பார்வையில் அவர் ஒரு தத்துவஞானி, அவர் நன்கு அறியப்பட்ட சமயத்தில் அவர் மறைஞானி மற்றும் தர்க்கவியலாளர்; அவருடன் நெருங்கிப் பழகியோருக்கு அவர் ஓர் இறைநேசர்".
அவர் 1920 பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஈரானின் கொராஸான் மாகாணத்தில்,  புனித நகரான மஷ்ஹத்திற்கு அருகில் உள்ள ஃபரிமானில் ஒரு சன்மார்க்கக் குடும்பத்தில் பிறந்தார். தனது சொந்த ஊரில் அடிப்படை கல்வியைப் பெற்றபின், புனித குர்ஆன் மீதும்  இஸ்லாமிய போதனைகள் மீதும் அவர் கொண்ட ஆர்வம் அவரை மஷ்ஹத் சன்மார்க்கக் கல்லூரியில் சேர வழிநடத்தியது. உயர் கல்வியைத் தொடர்வதற்காக அவர் 1937 ஆம் ஆண்டில் கும் நகரிலுள்ள புகழ்பெற்ற சன்மார்க்கக் கல்லூரியில் இணைந்து கொண்டார். அங்கு அவர் பேரறிஞரும் சன்மார்க்கப் போதகரும் திருக்குர்'ஆன் விளக்கவுரையாளருமான அல்லாமா செய்யத் முகம்மது ஹுசைன் தபதாபாய் (ரஹ்) அவர்களிடமும் மற்றும் பல புகழ்பெற்ற அறிஞர்கள், குறிப்பாக இஸ்லாமியப் புரட்சியின் தந்தை, இமாம் கொமைனி (ரஹ்) அவர்களிடமும் பாடங்களைக் கற்றார்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவர்களின் கூர்மையான நுண்ணறிவு, திறமை மற்றும் வியக்கத்தக்க விடாமுயற்சி ஆகியன அவரை கல்லூரியின் சிறந்த மாணவராக ஆக்கியது. கும் சன்மார்க்கக் கல்லூரியில் கற்ற 12 ஆண்டு காலத்தில், அவர் இமாம் கொமைனி அவர்களின் வகுப்புகளான அறநெறி, மெய்யியல், மறைஞானம், சட்டங்கள் மற்றும் கோற்பாடு ஆகியவற்றில் கலந்துகொண்டார். குறுகிய காலத்திலேயே அவர் குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில், சுயமாக விளக்கமளிக்கக்கூடிய 'முஜ்தஹித்' நிலையை அடைந்தார். அவர் அந்த நேரத்தில் புகழ்பெற்ற மற்றும் நன்கு அறியப்பட்ட ஆசிரியர்களில் ஒருவராக ஆனார். அவருடைய வகுப்புகள் அறிவு தாகம் கொண்ட மாணவர்களால் நிறைந்துவழிந்தன.
முதஹ்ஹரி  1950ம் ஆண்டு கொராஸானின் முன்னணி ஆலிம் ஒருவரின் மக்களை மணந்துகொண்டார். திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்கு பின்பும் வறுமை அவரை வாட்டியது... இருந்தும் உள்ளதைக்கொண்டு திருப்தியாக வாழ்க்கையை நடாத்தினார்.  1952 இல் அவர் தனது அறிவார்ந்த மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் தொடர தெஹ்ரானுக்கு இடம்பெயர்ந்தார். தெஹ்ரான் பல்கலைக் கழகத்தில் போதனைகள் அவரது செயற்பாடுகளில் சில. மேதிகமாக அவர் பல்வேறு விஞ்ஞான, அரசியல், ஒழுக்கவியல் மற்றும் வரலாற்று நூல்களை எழுதினார்;  கட்டுரைகளையும் வெளியிட்டார்.
அவரது கல்வி நடவடிக்கைகளுடன், அவர் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாக பங்கேற்றார். 1963 ஆம் ஆண்டில் ஜூன் 5, ஷா மன்னரினால் இமாம் கொமைனி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிரான கொர்தாத் எழுச்சிபோராட்டத்தை ஏற்பாடுசெய்வதில் முன்னணி பங்குவகித்தார். ஷாவுக்கு எதிரான அவரது உணர்ச்சிகரமான பேச்சைத்தடர்ந்து, முதஹ்ஹரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, பொதுமக்கள் கொடுத்த பலத்த அழுத்தம் காரணமாக, ஏனைய உலமாக்களுடன் அவரையும் விடுதலை செய்யவேண்டிய நிலைக்கு ஷாவின் அரசு நிர்பந்திக்கப்பட்டது. அவரது விடுதலைக்குப் பிறகு அவர் சமூக தேவைகளை உள்ளடக்கிய புத்தகங்களை எழுதினார்; பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்தினார்; தெஹ்ரானில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் பிரசங்கங்களை நிகழ்த்தினார்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரியின் பேனா பிழையான சிந்தனைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராக நிறையவே எழுதியது. புனித குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாத்தை பாதுகாக்க தன்னால் முடிந்த எந்த முயற்சியையும் அவர் விட்டு வைக்கவில்லை. இதனால் அவர் கற்ற இளைஞர்களை ஈர்த்து, எதிரே உள்ள  சவால்களை முறியடிக்கும் பணிக்காக தயார்படுத்தினார். மேற்கத்திய தத்துவவாதிகள் சிலரின் தவறான கருத்துக்கள் பற்றி தர்க்கரீதியான மற்றும் பகுத்தறிவு விமர்சனங்களை முன்வைப்பதில் சிறந்து விளங்கினார். இஸ்லாமிய இயக்கத்தை ஊக்குவிப்பதின் ஊடாக, இஸ்லாத்துக்கு எதிரான சதிகளை முறியடிக்கலாம் என்று ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி உறுதியாக நம்பினார்.
1967 ஆம் ஆண்டில், சட்டவிரோத சியோனிச அமைப்பு இஸ்ரேல், அரபு நாடுகள்  மீது திணித்த 6 நாள் யுத்தத்தில் புனிதத்தலமான பைத்துல் முகத்தஸ் உட்பட பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பாரிய நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன்போது பலஸ்தீனர்களுக்கு அவசியமான அணைத்து உதவிகளையும் வழங்குமாறு ஈரானிய மக்களை வேண்டிக்கொண்டார். இதன் விளைவாக, பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் நிறுவப்பட்ட மற்றும் அமெரிக்க ஆதரவிலான பாஹ்லவி ஆட்சி அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது.
பலஸ்தீன் அநீதியாக ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக முஸ்லிம்களை நோக்கியும் குறிப்பாக ஈரானிய முஸ்லிம்களை நோக்கியும் அவர் உருக்கமான உரை ஒன்றை நிகத்தினார்: அல்லாஹ்வின் முன்னும் றஸூலுல்லாஹ்வின் முன்னும் நாம் பெருமானமுடையவர்களாக காணப்பட வேண்டுமாயின், உலக நாடுகளால் மதிக்கப்பட வேண்டுமாயின், நாம் சக முஸ்லிம்களுடன் அணிதிரளவேண்டும். ரசூலுல்லாஹ் இன்று உயிரோடு இருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? எவ்வாறு சிந்தித்திருப்பார்? அல்லாஹ்வின்மீது ஆணையாக, றஸூலுல்லாஹ்வின் ரூஹ் இஸ்ரேலியரின் இந்த கொடுமை கண்டு சபிப்பதாகவே இருக்கிறது. இதனையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பராயின் அவர்கள் பாவமிழைக்கின்றனர்; இது பற்றி பேசாதிருந்தால், நிச்சயமாக, நானும் பாவமிழைக்கின்றவனாகவே இருப்பேன். எந்த உலமாவும் இதுபற்றி பேசாதிருப்பாராயின் அவர்களும் பாவமிழைப்பவரேயாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் ஒரு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளோம், ஆயினும் நாம் அதை நிறைவேற்றாதிருக்கிறோம். இன்றைய தினம் இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் நம் மத்தியில் இருந்திருந்தால், "நீங்கள் என்னுடைய தியாகத்தை நினைவுகூர வேண்மெனில், எனக்கு நடந்ததையிட்டு கவலைக்கொண்டு மார்பில் அடித்துக்கொள்ளும் உங்களது உள்ளங்களில் இன்று இருக்கவேண்டியது பலஸ்தீன்" என்று கூறியிருப்பார்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவர்களின் இந்த உரை சமூகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவ்வுரையின் பிரதிகள் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது.  இஸ்லாமிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஈரானிய ஊடகங்கள் இதனை அடிக்கடி ஒளிபரப்பு செய்து, ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்கான ஆதரவைத் தெரிவித்தன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஒதுங்கிவிடவில்லை; தெஹ்ரானின் முக்கியமான பள்ளிவாயில்களில் மக்களை எழுச்சி பெறச்செய்யும் உரைகளை தொடர்ந்தும் நிகழ்த்தினார். 1974ம் ஆண்டளவில் ஷாவின் அரசினால் அவரின் உரைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. 1979 ல் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி வரை இந்தத்தடை நீடித்தது.
இஸ்லாமிய ஈரானின் தற்போதைய தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யதலி காமேனி அவர்கள் ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்தை விவரிக்கும்போது: "ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவரது முக்கியமான பணியாக கல்வியைக் கருதினார். அவர் வகுப்பறையில் ஆசிரியராக மட்டுமல்லாமல், அவருடைய நண்பர்களிடமும் அவ்வாறே இருந்தார். சமுதாயத்தில் திறமை வாய்ந்த ஆசிரியராக அவர் அறியப்பட்டார். இறை நம்பிக்கையில் திடமாகவும் உளத்தூய்மை கொண்டவராகவும் இருந்தார். அவரது வாய் எப்போதும் குர்'ஆன் வசனங்களை முணுமுணுத்த வண்ணமே இருக்கும். இறைவனின் சன்னிதானத்தில் நடுநிசி தொழுகையையும் உருக்கமாக, தவறாது நிறைவேற்றுபவராக இருந்தார். கற்றலிலும், அதிக நாட்டம் கொண்டவராக காணப்பட்டார். அவரே கல்விக்களஞ்சியமாக இருந்தபோதும் அவர் இறக்கும் வரை கல்வித் தேடலிலேயே காலம் கடத்தினார்" என்று குறிப்பிட்டார்.
1972லிருந்து 1979 ஆண்டுவரை, இடதுசாரிகள் ஈரானிய முஸ்லிம்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி, விரிவுரைகள், பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் உண்மையான இஸ்லாமிய சித்தாந்தத்தை முன்வைப்பதன் மூலம், இஸ்லாமிய புரட்சியின் தூதை மக்கள் மத்தியில் பரப்புவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். அந்த ஆண்டுகளில், இமாம் கொமைனி அவர்களின் ஆலோசனைக்கு அமைய, ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவர்கள் ஈராக்கின் நஜாபில் தஞ்சமடைந்து, வாரம் இருமுறை, கற்பிப்பதற்காக கும் சன்மார்க்க கல்விக்கூடத்துக்கு வந்து செல்வார். அதே நேரத்தில் அவர் தெஹ்ரானிலும் தீவிரமாக செயற்பட்டார். 1976 ஆம் ஆண்டில், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் கொம்யூனிச சிந்தனையுடைய  ஆசிரியர் ஒருவருடன் ஏற்பட்ட கருத்தியல் சர்ச்சையைத் தொடர்ந்து, அங்கிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, ஏனைய உலமாக்களையும்  இணைத்துக்கொண்டு  "ஜாமியா ரூஹானிய்யத்தே முபர்ரிஸ்" (போராளி உலமாக்கள் அமைப்பு) என்ற ஒன்றை ஏற்படுத்தினார்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவர்களின் இமாம் கொமைனியுடனான தொடர்பு,  ஈராக்கில் இமாமின் 14 ஆண்டு அஞ்ஞாதவாச காலத்தில், கடிதங்கள் ஊடாகவும் வேறு தொலைத்தொடர்புகள் ஊடாகவும் நீடித்தது. 1976ம் ஆண்டு அவர் இமாம் கொமைனியை நஜாப் நகரில் நேரடியாக சந்தித்தபோது இஸ்லாமிய புரட்சியின் அவசியம் பற்றி இருவரும் கலந்துரையாடினர். இஸ்லாமியப் புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் அவர் மக்களுடைய இயக்கத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அதன் அனைத்து கட்டங்களிலும் ஒரு பிரதான பங்கை வகித்துக் கொண்டிருந்தார். இமாம் கொமைனி அவர்கள் ஈராக்கில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பின்னர், பிரான்சில் தஞ்சமடைந்தார். அப்போது ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரியும் அங்கு வந்து இம்மாமுடன் இணைந்துகொண்டார். இஸ்லாமிய புரட்சியின் உத்வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் இஸ்லாமிய புரட்சி கவுன்சிலை அமைக்கும் படி இமாமவர்கள் ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரியை பணித்தார்கள்.
இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி வரை ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி அவர்கள் இமாமின் நெருங்கிய சகாவாக, ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இஸ்லாமிய குடியரசை நிறுவியதற்குப் பின்னர் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இஸ்லாமிய புரட்சியின் எதிரிகள் இந்த நுணுக்கமான அரசியல்வாதியும் கூர்மையான சிந்தனையாளரருமான முதஹ்ஹரி அவர்களை கோழைத்தனமான முறையில் படுகொலை செய்தனர். 1979ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி தெஹ்ரானில் இடம்பெற்ற ஒரு முக்கியமான கருத்தியல் மற்றும் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு  திரும்புகையிலேயே அவர் ஷஹீதாக்கப்பட்டார். அவரது தியாகத்தைத் தொடர்ந்து, எனது வாழ்க்கையின் பலாபலனை இழந்து விட்டேன் என்று இமாம் கொமைனி அவர்கள் துக்கப்பட்டார்கள்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். அவரது  விமர்சன பகுப்பாய்வுகளில் பாரம்பரிய மற்றும் நவீன எண்ணங்கள் இரண்டையும் உட்படுத்தி, பகுத்தறிவு ரீதியாக, முரண்பட்ட தீய கருத்துக்களை அம்பலப்படுத்தியிருந்தார். 1973 ம் ஆண்டு அவர் இதுபற்றி குறிப்பிடுகையில் "நான் 20 ஆண்டுகளாக நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்; எல்லா சமயங்களிலும், பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு, இக்காலத்தில் இஸ்லாம் தொடர்பாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விடையளிப்பது எவ்வாறு என்று சிந்திப்பதிலேயே என் மனம் லயித்திருக்கும்என்று குறிப்பிட்டிருந்தார். "ஸ்பிரிச்சுவல் அண்ட் மோரல் க்ரைசிஸ்" என்ற தனது நூலில், ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி, தற்கொலை, நரம்பியல் பிரச்சினைகள், வறுமை, பசி, சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் ஹிப்பிகள் போன்று நடந்துகொள்ளும் நவீன இளைஞர்களின் கலக மனப்பான்மை ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவரிக்கிறார்.
மேற்கத்திய சமுதாயத்தின் தற்போதைய பிரதான பிரச்சினைகளுக்கான காரணம் அவர்களது அன்றாட வாழ்க்கையில் மதமும் ஆன்மீகமும் இல்லாது போனதே  என்று அவர் நம்புகிறார். "பல்சபாயே அக்லாக் (ஒழுக்கவியலின் தத்துவம்) என்ற நூலில் இவ்விடயம் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்: "இன்றைய மனிதன் விஞ்ஞான அறிவியலை பெற்றுள்ளான் ஆனால் அவனது நோய்க்கான நிவாரணி இறை நம்பிக்கையாகும்; அவனது அறிவாற்றலோ அல்லது அறிவில்லாமையோ இதற்கு மாற்றீடாக அமைய முடியாது. விழிப்புணர்வின் நோக்கம் அறிவு, விசுவாசத்தை தவிர்ப்பது அல்ல. இறை நம்பிக்கையை அகற்றிவிட்டு அறிவு மற்றும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் இன்று மேற்குலகு தோல்வி அடைந்துள்ளது. வெறும் தத்துவத்தால் மட்டும் தீர்வுகளை பெற்றுவிட முடியாது."
விஞ்ஞானத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையிலான உறவு பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்: விஞ்ஞானமும் இறை நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை, ஆனால் உண்மையில் ஒன்று மற்றதை பூர்த்தி செய்கிறது ... வெளிப்படையாக, விஞ்ஞானம் இறை நம்பிக்கையின் மாற்றீடாக அமைய முடியாது என்பது போலவே இறை நம்பிக்கையும் விஞ்ஞானத்தின் மாற்றீடாக அமைய முடியாது" என்று குறிப்பிடுகின்றார்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி, வாழ்க்கையில் இறை நம்பிக்கை மற்றும் அறிவியல் பங்கை விவரிக்கையில் இவ்வாறு சுவைப்பட கூறுவதுண்டு: "விஞ்ஞானம் அறிவியல் கருவிகளை வழங்கிக்கொண்டிருக்கையில் விசுவாசம் எல்லைகளை இணைக்கிறது. விஞ்ஞானம் சிந்தனைக்கழகு, விசுவாசம் உணர்வுக்கழகு. விஞ்ஞானம் இயற்கையை விளக்குகிறது, விசுவாசம் மனிதனை ஆக்குகிறது. விஞ்ஞானம் வெளிப்படையான புரட்சியாகும், விசுவாசம் அகப் புரட்சியாகும். விஞ்ஞானம் ஒளியையும் ஆற்றலையும் கொண்டு வருகின்ற போது விசுவாசம் அன்பு, நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை கொண்டு வருகின்றது. விஞ்ஞானம் சிந்தனை அழகு, விசுவாசம் ஆத்மாவின் அழகு. விஞ்ஞானம் வெளி சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது, விசுவாசம் உள்ளத்தூய்மையை பாதுகாக்கிறது. விஞ்ஞானம் நோய்கள், வெள்ளங்கள், பூகம்பங்கள் மற்றும் புயல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கு வழி சொல்கிறது, அதே சமயத்தில் விசுவாசம் கவலை, தனிமை, விரக்தி மற்றும் அலட்சியம் ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது."
இஸ்லாமிய நீதி என்ற துறையில் ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி மிக ஆழமாக ஆராய்ந்து, கருத்துக்களை முன்வைத்துள்ளார். இஸ்லாமிய நீதி ஒரு சமூக தத்துவமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானதாக கருத்தப்படவும் வேண்டும். இஸ்லாமிய நீதியின் அடிப்படை இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்'ஆன் மற்றும் றஸூலுல்லாஹ்வின் வாழ்க்கைமுறையில் இருந்து பெறப்படுவதால் அதிலிருந்து சிறிய விலகல் கூட அனுமதிக்கப்படவில்லை என்று முதஹ்ஹரி கருதுகிறார்.
தெய்வீக நீதி (Adl-e Ilahi) என்ற நூலில், அவர் இவ்வாறு கூறுகிறார்: எந்த சூழ்நிலையிலும், எந்த நிலைமையிலும் எவனிடம் எந்த திறமை இருந்த போதும் எல்லோரும் ஒரே தரத்தில் வைத்தே பார்க்க வேண்டும் என்பதுதான் நீதி என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நினைப்பு தவறு என்று முதஹ்ஹரி விளக்குகிறார். மனித குணங்கள், அவர்களின் தனித்தன்மை, திறமைகள் மற்றும் முயற்சிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, சில உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு சிலர் தகுதி பெறுவர்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி கல்வியில் விசேட கவனம் செலுத்திய ஒரு சிந்தனையாளர் ஆவார். இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தி, தூய்மைபடுத்தல், சுயகட்டமைப்பு, ஆன்மீக மதிப்பீடுகள் ஆகியவற்றை மிக முக்கியமானவையாக அவர் கருதியிருந்தார். அவருடைய பார்வையில், கல்விக்கு ஐந்து தூண்கள் உள்ளன, ஒரு நபரின் நேர்மறையான யோசனைகளை வளர்த்து, தார்மீக மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர நல்லொழுக்கத்தை ஊக்குவிப்பதுவும் அடங்கும்.
ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
எல்லாம்வல்ல அல்லாஹ் மறுமையில் அவருக்கு உயர் பதவியை வழங்க அனைவரும் பிரார்த்திப்போம்.