- தாஹா முஸம்மில்
மனித வாழ்க்கையை நிர்வகிக்கும் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை கொடுங்கோலர்களின் கைகளில் விட்டுவிட்டு, வெளிப்புற வழிபாட்டு முறைகளில் மட்டும் ஈடுபடுவது நிச்சயமாக இஸ்லாத்தினால் எதிர்பார்க்கப்படும் ஒன்றல்ல. இறை சட்டத்தை புறக்கணித்து, தவறான, மன இச்சையின் அடிப்படையில் இயங்குவது தம்மைத் தாமே ஏமாற்றும் செயலாகும். இதன் மூலம் மக்களின் தலைவிதி சமூக அநீதிக்குள் வீழ அனுமதிக்கிறது. இதன் விளைவு தீய சக்திகள் உருவாவதற்கும் தறுதலைகள் ஆட்சிபீடம் ஏறுவதற்கும் குற்றவாளிகள் உருவாவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
முஹர்ரம் என்பது பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியைத் தூண்டும் மாதமாகும். இப்போது சில முஸ்லிம் ஆட்சியாளர்கள் இத்தினத்தில் இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் தக்ஃபிரிய குழுக்களின் மிருகத்தனமான செயற்பாடுகளினால் இது தெளிவாகிறது. நடைமுறையில் அவர்களுக்கு இஸ்லாத்தின் உயர் சட்டங்களுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பயங்கரவாதிகள் சியோனிச ஆதரவு கொண்ட மேற்கத்திய ஊடகங்களால் "ஜிஹாதிகள்" மற்றும் "தூய்மையான முஸ்லிம்கள்" என்று அழைக்கப்படுவது நகைப்புக்குரியது.
முஹர்ரம் முதலாம் தினத்தில் பாரசீக வளைகுடா அரபு நாடுகளிலும் எகிப்திலும் நடைமுறையில் இருந்து வரும் களியாட்டம், நடனம் மற்றும் மது அருந்துதல் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
மக்காவிலிருந்து மதீனாவுக்கு ரசூலுல்லாஹ் புனித இடம்பெயர்வு முஹர்ரம்
தினத்தன்று நிகழ்ந்த ஒன்றல்ல. ரஸூலுல்லாஹ்வின் ஹிஜ்ரத் ரபி அல்-அவ்வல் மாதத்திலேயே
நிகழ்ந்தது என்ற உண்மையைப் பார்க்கும்போது, புத்தாண்டு எனும்
சாக்கில் இத்தகைய கொண்டாட்டங்களும் விடுமுறை நாட்களும் ஜஹிலியாவின் நாட்களின்
நடைமுறைகளே அன்றி வேறொன்றுமில்லை. ஆகவே, இத்தகைய
அற்பத்தனமான கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் உயர் நோக்கங்களில் இருந்து முஸ்லிம்களை
தூர விலக்குவதற்கான சதித்திட்டங்கள் தவிர வேறொன்றுமில்லை. அஹ்லுல்பைத்துகள் எனும்
றஸூலுல்லாஹ்வின் புனித குடும்பத்தினரின் புனித இரத்தத்தால் இஸ்லாத்தின் உயர்
நோக்கங்கள் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும் வருகின்றன.
ஈராக்கின் கர்பலா சமவெளியில் ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் அஷுராவின் துயர்நிறைந்த சம்பவங்கள் அல்லது முஹர்ரம் 10 வது நாளின் துன்பகரமான சம்பவங்களை இம்மாதம் நினைவூட்டுகிறது. இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் உமையா ஆட்சியினால் சட்டவிரோதமாக விசுவாசப்பிரமானம் செய்ய நிர்பந்திக்கப்படுகையில், துஷ்டன் யஸீதுக்கு விசுவாசப்பிரமானம் செய்வதை விட போரிட்டு மடிவதை உயர்வாகக் கருதினார்கள்.
இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகம் பற்றி எழுதாத இஸ்லாமிய அறிஞர் இல்லை என குறிப்பிடும் அளவுக்கு இது முக்கியமானது. பிரபல இஸ்லாமிய வரலாற்றாசிரியர் தபரி கிட்டத்தட்ட இருநூறு பக்கங்களை இமாம் ஹுசைன் (அலை) தியாகம் பற்றி விவரிக்க ஒதுக்கியுள்ளார். கர்பலா நிகழ்வு போன்ற வேறு எந்த நிகழ்வும் அவரின் அதிக கவனத்தைப் பெறவில்லை. இஸ்லாமல்லாத பல அறிஞர்கள் கூட இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் பற்றி தாராளமாக எழுதியுள்ளார்கள்.
இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர் நீதிக்கான இயக்கத்தின் முன்னோடி ஆவார். நல்லவற்றை ஏவும் மற்றும் தீயவற்றை விலக்கும் இயக்கங்களுக்கான முன்னோடி அவர். எல்லாம்வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் பேரனால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம் 1385 ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் பலத்திலிருந்து வலிமைக்குச் செல்லும் ஒரு பேரியக்கமாக உள்ளது.
"வரலாற்றை ஆய்ந்து படித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை புரியும். தனது தந்தையின் வாரிசாக யஸீத் அறிவிக்கப்பட்டதும், பிறகு மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் உண்மையில் இஸ்லாமிய அரசியல் சட்டத்தின் நோக்கம், நடைமுறை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தன. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இஸ்லாத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. யஸீத் ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டபோது எவரும் அதன் தீய விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை. தொலைநோக்கும் ஆழமான மார்க்க ஞானமும் இறைப்பற்றும் நிரம்பிய ஹுசைன் இந்த வித்தியாசத்தையும் விலகலையும் மிகச் சரியாக கணித்துவிட்டார். இதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இஸ்லாமிய அரசுக்கு ஏற்படவிருக்கும் பேரழிவை அவர் முன்கூட்டியே கணித்துவிட்டார். இதனால் அதனைத் தடுக்கவும், இஸ்லாமிய அமைப்பை பாதுகாக்கவும் தனது உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்டார் அவர்.
ஒரு முஸ்லிம் நன்மையின் மொத்த வடிவமாகவும், இறையச்சத்தின் அடிப்படையில் தனது
வாழ்வை அமைத்துக் கொண்டவனாகவும் திகழ்வான். இஸ்லாம் மனிதனுக்குள் ஏற்படுத்துகின்ற
மகத்தான பண்புநலன்களாக இவை திகழ்கின்றன. இந்த மகத்தான பண்புநலன்கள் இஸ்லாமிய
அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஆட்சியாளர்களிடம் குறைவற இருக்க வேண்டும்.
ஆட்சியாளர்களின் நடத்தை இறையச்சத்தாலும் நற்செயல்களாலும் மிளிரும்போது அது மற்ற
அரசு அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கும். அவர்களும் இத்தகைய உணர்வுகளால் தமது
ஆளுமையை வார்த்தெடுப்பார்கள். இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஆழமான
தாக்கங்களை உண்டுபண்ணும். முழு சமூகமே இறையச்சம் கொண்டதாய், நற்செயல்கள் புரிவதில் பேரார்வம்
கொண்டதாய் மிளிரும். முஸ்லிம் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் சீசர் பாணியிலான
ஆடம்பரத்தையும் சுகபோக வழிமுறைகளையும் மேற்கொண்டபோது முழுப் பரிமாணமுமே மாற்றம்
கண்டது. நீதியின் இடத்தை அநீதியும், அக்கிரமமும், தான்தோன்றித்தனமும் கவ்விப்
பிடித்துக் கொண்டன. ஆடம்பரமும், டாம்பீகமும்,
உல்லாசக்
கேளிக்கைகளும் அன்றாட வாழ்வின் வழக்கமாயின. எது சட்ட ரீதியானது, எது சட்ட விரோதமானது என்று
பிரித்துப் பார்க்கவும் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். ஒழுக்க நெறிமுறைகள் காற்றில்
பறக்கவிடப்பட்டன. அரசியல் நெறிகள் வலுவிழந்தன. அதிகாரிகள் தங்களுக்குள்
இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக மக்கள் மீது அதிகாரத்தைப்
பிரயோகிப்பவர்களாக மாறிவிட்டனர். எளிய மக்களை அடக்கித் தமது கட்டுக்குள் வைக்க
முற்பட்டனர். மக்களோ அதிகாரிகளின் மனசாட்சியினை விழித்தெழச் செய்வதற்குப் பதிலாக
லஞ்சம்,
ஆசையூட்டல்
போன்றவற்றின் மூலம் காரியம் சாதிக்க முற்பட்டனர்.
இந்த மாற்றம் தான் நிகழ்ந்தது.
இத்தகைய சீரழிவு ஏற்படும் என்பதைத் தான் இமாம் ஹுசைன் அன்றே சரியாகக் கணித்து
விட்டார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் உணர்வு, நோக்கம், நடத்தை ஆகியவற்றில் எத்தகைய மோசமான மாற்றம்
நிகழும் என்பதை இமாம் ஹுசைன் தொலைநோக்குடன் ஊகித்து விட்டிருந்தார். அதனால் தான்
அந்த ‘மாற்றத்தை’ முழுமூச்சுடன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் எதிர்க்க
முற்பட்டார்.
இஸ்லாமிய மார்க்கமும் அது கொண்டுவரும்
புரட்சிகரமான அரசியல் நடைமுறைகளும் ஆபத்துக்குள்ளாகி நிற்கும்போது ஒரு
இறைநம்பிக்கையாளர் கைகட்டி வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. தம்மிடம் இருக்கிற
அனைத்தையும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்காக அர்ப்பணித்துவிட முன்வர வேண்டும். இஸ்லாமியக்
கோட்பாடுகளுக்கே உலைவைக்கக் கூடிய மாற்றங்களை தடுத்துநிறுத்த தம்மிடம் இருக்கின்ற
அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதற்கு இறைநம்பிக்கையாளர் முன்வரவேண்டும் என்றே
இமாம் ஹுசைன் (ரழி) விரும்பினார்.
என்று மௌலானா
மௌதூதி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது, வாழ்க்கைக்கு புத்தூக்கமளிக்கும் முஹர்ரம்
மாதத்தின் செய்தியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் முதல் நாள் கொண்டாடி களிக்கும் ஒரு
நாள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில அரபு நாடுகளில் இது கொண்டாட்ட தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது. றஸூலுல்லாஹ்வின் பேரனான இமாம் ஹுசைனின் மாபெரும் தியாகத்தை
இவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மேலும் அப்பாவி சக முஸ்லிம்களின் இரத்தத்தை
இந்த நாட்டுகள் தொடர்ந்து கொட்டுகிறது. யேமனில் சவுதிகளும் எமிரேட்டிகளும் இணைந்து
இதையே செய்கிறார்கள்.
"சில நிகழ்வுகள் காலப்போக்கில்
மறக்கப்படுகின்றன, ஒரு கூழாங்கல்லை தண்ணீரில் எறிந்து உருவாக்கும் ஓர் அலை உள்ளது, ஆனால் நேரம் செல்லச் செல்ல அது
ஒவ்வொரு கணமும் பலவீனமடைந்து குறுகிய காலத்தில் மங்கிவிடும். ஆனால், அதற்கு
நேர்மாறாக சில நிகழ்வுகள் நடக்கின்றன; அவை காலப்போக்கில் மறைவதில்லை; மாறாக, காலம்
அவர்களை மேலும் முக்கியமாக்குகிறது. அதற்கு ஓர் உதாரணம் ஆஷுரா நிகழ்வு.
ஆஷுராவின் படிப்பினைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு
நின்றுவிடாமல் நிரந்தரமான விவாதங்களாகவே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆஷுராவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் தியாகம் ஆகும், தைரியம், நீதி மற்றும்
இறைவனின் நோக்கத்திற்காக எழுந்திருப்பதற்கான பாடம் மற்றும் அன்பு மற்றும்
இரக்கத்தின் பாடம்.
இது வரலாற்றில் ஒரு மகிமையான சாட்சியாகும், இது முழு மனிதகுலத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் அத்தகைய நாளுக்காகத் தன்னைத்
தயார்படுத்திக் கொண்டார்கள்.
ஹுசைன் இப்னு அலி (அலை)
அவர்களின் 50 ஆண்டு கால இவ்வுலக வாழ்க்கை ஒரு பாடமாகும். அவரது
குழந்தைப் பருவம் ஒரு பாடம், அவரது இளமை ஒரு பாடம், இமாம் ஹஸன் (அலை)
அவர்களின் தியாகத்திற்குப் பிறகு அவரது நடத்தை ஒரு பாடம். இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பொறுப்பு கடைசி நாளோடு நின்றுவிடவில்லை. கர்பலாவின்
நிகழ்வு சூரியனைப் போல, மற்ற எல்லா விளக்குகளையும் மறைக்கும் அளவுக்கு
மகத்துவத்தையும் பிரகாசத்தையும் கொண்டுள்ளது.
இமாம் ஹுசைன் இப்னு அலி (அலை) அவர்கள் வலுவான மன உறுதியுடன்
அடக்குமுறை மற்றும் ஊழல் அமைப்புகளுக்கு எதிராக போராடுவதற்கு கொடுங்கோன்மை
ஆட்சியின் அனைத்து காலகட்டங்களிலும் உள்ள தனிநபர்களுக்கு ஊக்கமளித்தார்.
ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய்
முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் பிரதிபலிப்புக்கான நேரம். இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலாவின் தியாகிகள் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் துக்க நிகழ்வுகள் சத்தியத்தைப் பற்றி சிந்திக்க சிறந்த சந்தர்ப்பமாகும்.
விசுவாசிகளின் இதயங்கள் கர்பலாவை நோக்கி திரும்புகையில், அங்கு தியாகிகளுடனான சந்திப்பு இடம்பெறுகையில், இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் குருதி புதுப்பிக்கப்படுகையில் சில இடங்களில் உமையாக்களின் மறைக்கப்பட்ட நயவஞ்சகத்தனமும் வெளிப்படவே செய்கிறது. பள்ளிவாசல்கள் என்று கூட பாராமல், குண்டுகளை வைத்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் முஸ்லிம்களின் உடல்களை சிதைக்கின்றனர்.
சக முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும்
அனுமதிக்கவில்லை, அவ்வாறிருக்க, தக்ஃபிரி மற்றும்
பிற வழிகெட்ட குழுக்கள் இன்று முஸ்லிம்களை படுகொலை செய்த வண்ணம் உள்ளன. நிச்சயமாக
ஈனச் செயல் கருணைமிக்க தூதரால் நமக்குக் கற்பிக்கப்பட்டவை அல்ல.
ஒவ்வொரு யுகத்திலும் மனிதகுலம் ஒரு தகுதியான மாதிரியைக் கொண்டிருக்க முடியும் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் உலகுக்கு உணர்த்தினார்கள். தீய சக்திகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி எக்காலத்திலும் இருக்கும் என்பதையும் உணர்த்தினார்கள். இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும்.
இந்த மகத்தான பொறுப்பை இப்போது ஏந்திச் செல்லும் இஸ்லாமிய உள்ளங்கள், அதற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கும் கொடுங்கோலர்களை நிச்சயமாக வெற்றிகொள்ளும்.