Saturday, September 22, 2018

ஈரான் மீது போர் தொடுத்தால் அதனை முடிப்பது ஈரானாகவே இருக்கும் - ஈரான் புகட்டிய பாடம்

The imposed war on Iran

ஈரான் மீது திணிக்கப்பட்ட யுத்தம் 


ஆயத்துல்லாஹ் கொமைனி (ரஹ்) அவர்களின் தலைமையின் கீழ் ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று, ஒன்றரை வருடங்கள் கூட பூர்த்தியாகாதிருந்த நிலையில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஈரானுக்கு எதிரான தங்கள் அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தியிருக்கும் சூழலில், சதாம் {ஹசைன் 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி ஈரான் மீது திடுதிப் என்று யுத்தமொன்றைத் தொடுத்தார். 8 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த யுத்தத்தினால் இரு தரப்பினருக்கும் பாரிய சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த யுத்தத்தினால் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி இமாம் கொமெய்னி, ஐ.நா.வின் யுத்த நிறுத்த தீர்மானத்தை (UN Resolution 598) ஏற்றுக்கொள்ளும் வரை, ஈரான் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட இந்த வேண்டாத யுத்தம், தொடர்ந்தது.

ஈரானின் அப்போதைய நிலை

புரட்சி வெற்றிபெற்று இஸ்லாமிய அரசு ஒன்றரை வருடங்களைக் கூட பூர்த்தியாக்கி இருக்கவில்லை; அமரிக்க சார்பு ஷாவினால் உருவாக்கப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோடியிருந்தனர்; இடதுசாரி ஆயுதக்க குழுவான MKO மற்றும் இதர இடதுசாரி குழுக்களும் நாட்டில் ஆங்காங்கே பல பயங்கரவாத குடுவெடிடிப்பு சம்பவங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன் இதன் காரணமாக இஸ்லாமிய புரட்சியை முன்னின்று நடத்திய பல உயர் தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்; ஈரானின் புரட்சிகர மாணவர்களினால் அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த அமெரிக்க ராஜதந்திரிகள், இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்;. அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாது, போர் தொடுக்கும் அச்சுறுத்தலை தொடர்ச்சியாக விட்டுக்கொண்டிருந்தார்;. அமேரிக்க யுத்த கப்பல் பாரசீக வளைக்குடாவில் நிலைகொண்டது. 

ஷாவின் காலத்தில் அமெரிக்க மயப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய ராணுவம் முற்றுமுழுதாக அமெரிக்க ராணுவ தளபாடங்களிலேயே தங்கியிருந்தது; சூழவிருந்த அரபு நாடுகளின் தலைவர்களோ இந்த புரட்சியின் தாக்கம் தமது நாடுகளில் தலைகாட்டிவிடக் கூடாது என்பதில் குறியாய் இருந்தது மட்டுமல்லாமல் இஸ்லாமிய புரட்சிக்கு எதிரான தீவிர துர்பிரசாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். சதாமின் யுத்த முன்னெடுப்புகளுக்கு சவுதி அறேபியாவும் குவைத்தும் பகிரங்கமாகவே நிதியுதவி வழங்கின. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியே சதாம் யுத்தத்தை ஆரம்பித்தார்.

ஆரம்ப இழப்புகள்

அபதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 

யுத்தத்தின் ஆரம்ப காலங்களில் ஈரான் பல பாரிய இழப்புகளை சந்தித்தது.  ஈரானின் வடமேல் பகுதியில் பாரிய நிலப்பரப்புக்களை ஈராக்கிய ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது, பல முக்கிய நகரங்கள் ஈராக்கிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்டன, அபதானில் இருந்த உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிர்மூலமாக்கப்பட்டது. கடல் மார்க்கமான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றுமுழுதாக தடைப்பட்டது. இவ்வாறு சுமார் ஒருவருடகாலம் ஈராக்கின் கை ராணுவ ரீதியில் மேலோங்கியிருந்தது. அமேரிக்கா மற்றும் அனைத்து மேலைத்தேய நாடுகளும் ஈராக்குக்குத் தேவையான எல்லா ராணுவ உதவிகளையும் வழங்கின. அவற்றுடன் ரஷ்யாவும் இணைந்து கொண்டது. அரபு நாடுகள் சதாமுக்கு தாராளமாக நிதிகளை அள்ளி வழங்கின. ஈரானுக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் எழுப்பிய முஸ்லிம் நாடுகள் சிரியாவும் லிபியாவும் மட்டுமே.


இக்காலகட்டத்திலேயே சதாம் {ஹசைன் காதிஸிய்யாவின் நவீன நாயகனாக உருவகப்படுத்தப்பட்டார், 'இஸ்லாமிய' இயக்கங்கள் விலைக்கு வாங்கப்பட்டன, இஸ்லாமிய புரட்சி, ஷீ'ஆ புரட்சியாக சாயம் பூசப்பட்டது.

சதாம் ஹுசைன் மட்டுமல்ல, உலகிலுகிலுள்ள அனைத்து இஸ்லாம் விரோத சக்திகளும் ஈரானின் சக்தியை தவறாக எடைபோட்டிருந்தன. ஈரானின் அப்போதைய பலவீனங்களை மட்டும் கருத்தில் கொண்டு, நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அவர்கள், இஸ்லாமிய புரட்சியினால் உத்வேகம்கொண்டிருந்த ஈரானிய இளைஞர்கள், வீறுகொண்டு எழுவர் என்பதை கணக்கில் எடுத்திருக்கவில்லை.

ஈரானின் பதிலடி 

யுத்தகளத்தில் ஆயத்துல்லாஹ் காமெனை
இஸ்லாத்தையும் இஸ்லாமிய குடியரசையும் பாதுகாக்க உத்வேகம் கொண்ட இளைஞர்கள், ஷீ'ஆ - சுன்னி என்ற வேறுபாடின்றி, ஒன்று திரண்டனர். யுத்தத்தில் அனுபவமற்ற உலமாக்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து, யுத்தத்தை வழிநடத்தினர். பாரிய ஆயுதங்களுக்கு எதிராகப் போரிடும் புதுப் புது உத்திகளைக் கையாண்டனர். 1982ம் ஆண்டு மே மாதமளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களில் இருந்தும் ஈராக்கிய ராணுவம் அடித்துத் துரத்தப்பட்டது, ராணுவ ரீதியாக ஈராக் பாரிய இழப்புகளை சந்தித்தது. ஈரான் அன்று இருந்த நிலையில் ஈராக்கிய எல்லைக்குள் புகுந்து தாக்கும் வலிமையை அதன் இளம் ராணுவம் பெற்றுக்கொள்ளும் என்று எவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.  
ஈரானிய புரட்சிப் படை வீரர்கள் 
சதாம் ஹுசைன் ஈரானிய ராணுவத்தை தம்மால் சமாளிக்க முடியாது என்பதையும் தனது ராணுவத்தின் நாடி தளர்வதை புரிந்துகொண்டார். சுமார் 120கி.மீ. ஈரானுக்குள் நுழைந்து எண்ணெய் வலமிக்க பாரிய நிலத்தை ஆக்கரமித்த ஈராக்கிய ராணுவம், ஈராக்கிய எல்லைக்குள் நிலங்களை பாதுகாக்க முடியாத நிலையில் தனது ராணுவம் திண்டாடுவதையும் ஈராக்கிய எல்லை உள்நோக்கி சுருங்குவதையும் உணர்ந்தார். எவ்வாறு தன்னிச்சையாக யுத்தத்தை ஆரம்பித்தாரோ, அவ்வாறே 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி யுத்த நிறுத்தத்தையும் பிரகடனம் செய்தார். ஈரான் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சதாம் வீழ வேண்டும், யுத்த சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும், அதுவரை யுத்தம் தொடரும் என்று உறுதியாய் இருந்தது. 



எல்லையைத்தாண்டி ஈரானிய படை முன்னேற்றம் 
ஈரானின் தொடர்ச்சியான பதிலடியை ஈராக்கினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, சதாம் ஹுசைன் சட்டவிரோத ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலானார். குர்டிஸ்தான் ஹலப்ஜா  பிரதேசத்தில், ஈ
ராக்கிய ராணுவம் மேற்கொண்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 5,000க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். 10,000க்கும் அதிகமானோர் நிரந்தர பாதிப்புகளுக்கு  உள்ளாயினர். சிவிலியன் பிரதேசமொன்றில் இந்தளவு ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது சரிதத்தில் முன்னெப்போதும் நடந்திராத ஒன்று.

ரசாயன ஆயுத தாக்குதல் விளைவு  

இந்த யுத்தம் தமக்கு முன்னால் உள்ள சவால்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஈரானுக்கு வழங்கியது. உண்மையான நன்பர்கள் யார் என்பதையும் எதிரிகள் யார் என்பதையும் அறிந்துகொள்ளும் சந்தர்பத்தையும் வழங்கியது. மத்திய கிழக்கில் இராணுவ வல்லமைகொண்ட நாடாக ஈரான் தன்னை வளர்த்துக் கொண்டது. இமாம் கொமைனியின் தலைமையில் வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து உலக முஸ்லிம்கள் மத்தியில் இராணுவ வல்லமை கொண்ட நாடாக ஈரான் மட்டுமே தென்பட்டது.


இந்த யுத்தத்தில் ஈரான் பெற்றுக்கொண்ட வெற்றியின் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய முதுகெலும்புள்ள இஸ்லாமிய தலைவராக இமாம் கொமைனி மட்டுமே காணப்பட்டார். இதனால் உலக முஸ்லிம்கள் மத்தியில் இமாம் கொமைனிக்கு வரவேற்பு அதிகரித்தது. இஸ்லாமிய உலகில் இமாம் கொமைனிக்கு கிடைத்த செல்வாக்கினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஈரான் மீது சீயா முத்திரை குத்தப்பட்டு ஈரானை இஸ்லாமிய உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்த இந்த அரபு நாடுகள் சதிகளை மேற்கொண்டது.

ஈரானின்; இராணுவ பலத்தினையும், இஸ்லாமிய உலக அரங்கில் அதற்கு கிடைத்த செல்வாக்கினையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரபு உலகமும், அமெரிக்காவும் அதனை அழிக்க திட்டம் தீட்டியது. ஆனால் இஸ்லாமிய ஈரானின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இன்னும் சோதனை காலம் முடிவடையவில்லை... அமேரிக்காவும் இஸ்ரேலும் சவுதி அறேபியா போன்ற பிற்போக்கு சக்திகளும் இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்;தும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. இந்த பிற்போக்கு சக்திகள் அனைத்தும் நல்ல பாடம் ஒன்றை வெகு சீக்கரமே கற்றுக்கொள்ளும்... இன் ஷா அல்லாஹ்.

Thursday, September 20, 2018

உயிர் துறத்தலின் அழகியல்


Shahadat of Imam hussain - Ali Shariati



கலாநிதி அலீ ஷரீஅத்தி, உலகளவில் புகழ்பெற்றவர். பலராலும் போற்றப்படுபவர். இஸ்லாமிய எழுச்சியில் பாரிய தாக்கத்தைச் செலுத்திய சிந்தனையாளர். சமூகவியல் மற்றும் மெய்யியல் கண்ணோட்டங்களில் இஸ்லாத்தின் மாட்சிமையை உலகளவில் ஓங்கச் செய்தவர்.
இவர் குறித்து கலாநிதி ஷஹீத் பெஹஷ்தி குறிப்பிடுகையில், ‘கடந்த பலவருடங்களாக ஈரான் இஸ்லாமியப் புரட்சியிலும், இஸ்லாமியச் சூழலிலும் தாக்கம் செலுத்தக்கூடிய நிலையை ஷரீஅத்தி உருவாக்கியிருந்தார். தூய இஸ்லாத்தின்பால் பேரார்வம் கொண்ட, கற்றறிந்த, சுறுசுறுப்பான இளைஞரணியை கவர்ந்திழுப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகித்தார். அதிகளவிலான உள்ளங்களை இஸ்லாமியப் புரட்சியோடு ஒன்றிணைத்தார். இப்புரட்சியும், இச்சமூகமும் ஆக்கபூர்வமான இப்பங்களிப்பிற்காக, அவசியம் அவருக்கு நன்றி பாராட்டுவதற்குக் கடமைப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அலீ ஷரீஅத்தியின் ஆக்கங்களிலே நபிக்குடும்பத்தார் (அஹ்லுல்பைத்) பற்றியவை அனைத்தும் மிகச் சிறப்பானவை. குறிப்பாக, இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகம் (ஷஹாதத்), கர்பலா நிகழ்வு என்பவை தொடர்பிலே அலீ ஷரீஅத்தியின் உரைகளும், எழுத்துக்களும் சிறப்பான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இங்கே, அவருடைய ஆக்கங்களிலிருந்து இமாம் ஹுஸைனின் ஷஹாதத் பற்றி வந்துள்ளவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகம்

தான் கொலை செய்யப்படுவதற்காக தானாகவே கிளர்ந்தெழும் ஒரு மனிதன், மற்றவர்களால் கொலை செய்யப்படுவதுதான் இமாம் ஹுஸைனின் ‘ஷஹாதத்’ ஆகும். உண்மையில் இமாம் ஹுஸைனுடைய ஷஹாதத் என்பது, வேறொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது. எதிரியை பலவந்தமாக வாளால் வீழ்த்தி, வெற்றிநிலைக்குச் சென்று, பின்னர் அது சாத்தியமற்றுப் போனதும் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்ட தாக்குதலின் மூலமோ மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்படுவதற்காக வந்தவரல்ல அவர்.
தன் வீட்டினுள்ளேயே அமர்ந்துகொண்டு, உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இயலுமாக இருந்த நிலையில்தான், அவர் கிளர்ந்தெழுந்தார். அறிவுடனேயே மரணத்தை வரவேற்பதற்கு விரைந்தார். இவ்வாறான நிலையில்தான் தன்னையே அர்ப்பணிப்பதையும் உயிரைத் துறப்பதையும் தேர்வு செய்தார். இமாம் ஹுஸைன், தாம் கொலை செய்யப்படுவதற்கு முன்பே தன்னுயிரை அர்ப்பணித்துவிட்ட ஒரு தியாகி. அது, ஒரு கொலைக்களத்திலே அல்ல. மாறாக, யசீதுக்கு நம்பிக்கைப் பிரமாணம் (பைஅத்) செய்யுமாறு கூறிய, மதீனாவின் ஆளுநராக இருந்த வலீதுக்கு பதிலளிக்கும்போது, தம் வீட்டினுள் இருந்த நிலையிலே ‘முடியாது’ என்று கூறியபோதே அது நிகழ்ந்துவிட்டது. இந்த ‘முடியாது’ என்பது, ஒன்றை மறுத்துரைத்தலின் நீட்சியிலே பிறக்கும் உயிர்த் தியாகத்தை தேர்வு செய்வதாக அமைந்திருந்தது. அத்தருணத்திலேயே, இமாம் ஹுஸைன் ‘ஷஹீத்’ ஆகிவிட்டார். வெற்றிக்கான ஒரே ஆயுதம் இது மட்டுமே என்பதுதான் இவ்விடத்திலே, இமாம் ஹுஸைனுடைய ஷஹாதத்தின் குறியீடாகும்.
எனினும், இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகம், தனக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த சூழமைவுகளை வேண்டியிருந்தது. அவை அக்கிரமமும் அராஜகமும் அனைத்தையும் சூழ்ந்துகொண்ட நிலையில், இஸ்லாத்தின் உயரிய விழுமியங்கள் அழிந்து, அதிகார வர்க்கத்தினரின் காதுகளில் நல்லுபதேசங்கள் எவையும் விழாதுபோகும்போது அது வெளிப்பட்டது. உண்மையில் இமாம் ஹுஸைன், எதிரியை புறத்தே வெற்றிகொள்வதற்குத் தன்னால் முடியாது என்பதை நன்கறிந்த நிலையிலே பகிரங்கமாக மரணத்தின் தலைவாசலுக்குச் சென்றார். உயிர்த்தியாகத்தை தேர்வு செய்ததன் மூலம் செய்வதற்கு முடியுமாக அமைந்திருந்த மிகப்பெரும் காரியத்தை அவர் நிறைவேற்றினார்.
இமாம் ஹுஸைனுடைய உயிர்த்தியாகத்தின் பயனாக, இஸ்லாத்தின் அடிப்படைத் தன்மையை விளங்கி, அதன்பால் மக்கள் மீளுவது அமைந்திருந்தது. அத்தோடு, பெருமானாரின் பேரருடைய மரணத்திற்குப் பதிலடியாக உமையா ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் தொடங்கின.
இமாம் ஹுஸைனின் உயிர்த்தியாகத்தில், இஸ்லாமிய சன்மார்க்கத்திற்கு உதவுவதில் இஸ்லாத்தின் முதற்கடமையாகக் காணப்படுவது உயிர் துறத்தலேயாகும்.
இவ்விடத்தில், இறைபாதையிலே ஒரு போராளி தன்னுடைய உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு உதவுகிறார். ஹஸ்ரத் அம்மாரின் உயிர்த்தியாகமும் இவ்வகைப்பட்டதே. என்றாலும், இமாம் ஹுஸைனுடைய உயிர்த்தியாகத்தின் பிரதிபலிப்பு, பல்வேறு காரணங்களுக்காக, காலவரையறைக்கு அப்பாற்பட்டு பரந்துவிரிந்து காணப்படுகிறது. சிறப்போடு உயிர் துறத்தலின் மூலம் ஒரு உயிர்த்தியாகி எதிரியின் முன்னே வெற்றியை அடைந்து கொள்கிறார் என்பதை இமாம் ஹுஸைனுடைய உயிர்த்தியாகத்திலே கண்டுகொள்ள முடிகிறது.
அவ்வாறுதான், ஹஸரத் ஹம்ஸாவின் உயிர்த்தியாகத்திலே சிறப்பாகச் சண்டையிடுவது மூலம் ஒரு தியாகி வெற்றியீட்டுவதைக் காண்கிறோம். மாறாக, இமாம் ஹுஸைனுடைய உயிர்த்தியாகத்திலே, ஒரு தியாகி புறத்தே தோல்வியுறுவதன் மூலம் தன்னுடைய எதிரியை வெற்றி கொள்வதைக் காண்கிறோம். ஹஸரத் ஹம்ஸாவின் உயிர்த்தியாகத்திலே, புறத்தே எதிரியை வெற்றிகொள்வதன் மூலமாக அது அமைந்திருந்தது.
இமாம் ஹுஸைனுடைய உயிர்த்தியாகத்திலே, ஒரு தியாகியின் முதற்கடமை உயிர்த்தியாகமே. ஆனால், ஹஸரத் ஹம்ஸாவின் உயிர்த்தியாகத்திலே, ஒரு தியாகியின் முதற்கடமை எதிரியை தோற்கடிப்பதற்காகப் போராடுவது ஆகும்.
அலீ ஷரீஅத்தியின் சிந்தனைகள் மீதும், அவரிடத்தில் ஹுஸைனியப் பார்வையும், கர்பலா காவியவுணர்வும் தோன்றுவதிலும் செல்வாக்குச் செலுத்தியிருந்த இமாம் ஹுஸைனின் தாக்கங்களை அவருடைய அனைத்துப் படைப்புகளிலும் காணமுடியும். அனேக சமூக, அரசியல் போக்குகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் கர்பலா நிகழ்வின்பாலான ஹுஸைனிய எழுச்சிப் போராட்ட நோக்குநிலையோடு பகுப்பாய்வதற்கு முனையக் கூடியவாறு, அவருடைய சிந்தனையோட்டங்களில் இமாம் ஹுஸைனுடைய கர்பலாக் காவியத்தின் பிரதிபலிப்புகள் மிகவும் பரந்ததாகவும், உயிர்ப்புமிக்கதாகவும், ஆழமானதாகவும் காணப்படுகின்றன.

ஹுஸைனிய எழுச்சிப் போராட்டத்தின் சூழமைவுகள்

இமாம் ஹுஸைன் தேர்வு செய்திருந்த போராட்ட முறையானது, மிக எளிதில் புரிந்துகொள்வதற்கு உரியதன்று. மாறாக, இமாம் ஹுஸைன், தமது தனித்தன்மை வாய்ந்த போராட்டத்தைத் தொடங்கிய அப்போதைய சூழமைவுகளைக் கருத்திற்கொண்டே அதனைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இறைவேத வழிகாட்டலோடு (வஹியோடு) மிக அணுக்கமாக வாழ்ந்தவர் என்பதாலோ என்னவோ, இமாம் ஹுஸைன் தமது போராட்டத்தின் இறுதி அரணையும் இழந்து நிற்கின்ற வேளையிலும், தன்னையொரு இஸ்லாமியக் காவலன் எனும் கடமைப்பாட்டிலேயே வைத்துப் பார்க்கிறார். தமது பாட்டனார், தகப்பனார், சகோதரர் ஆகியோரின் வல்லமையாக இருந்து வந்த சத்தியத்தினதும், நீதியினதும் தலமான இஸ்லாமிய அரசிலிருந்து தமக்காகச் சுழற்றப்படுவதற்கு ஒரு வாளுங்கூட எஞ்சியிருக்கவில்லை. அதேபோல், ஒரு போர்வீரனுங்கூட…
அனைத்து சமூக தளங்களும் பலவருடங்களாக உமையா வம்சத்தினரால் வெற்றிகொள்ளப்பட்டுவிட்டன. இக்காலப் பகுதியிலே இஸ்லாம் தனது பசுமையை இழந்து காய்ந்த வைக்கோல் போன்று மாறியிருந்தது. இஸ்லாமிய விழுமியங்கள் தம் நிறத்தை தொலைத்து நின்றன. ஊழல்காரர்களின், அபகரிப்பாளர்களின் ஆட்சியின் மூலம் இஸ்லாமியச் சன்மார்க்கம் சரிவுக்கும் திரிபுக்கும் உள்ளாகியிருந்தது.
இமாம் ஹுஸைன் இவ்வாறான சூழமைவுகளிலேயே தமது பாட்டனாரின் மார்க்கத்தை மீளவும் சீர்செய்வதற்காக கிளர்ந்தெழுந்தார். ஒருபுறம், இருக்கின்ற நிலையை மாற்றுவதற்கான வல்லமையை அவர் பெற்றிருக்கவில்லை. மறுபுறம், தாம் தொடர்ந்தும் மௌனம் காப்பதிலே எவ்வித நம்பிக்கைச்சுடரையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், வெற்றிக்குரிய ஒரேயொரு ஆயுதமாக தம்மிடமிருந்த ‘உயிர்த்தியாகம்’ (ஷஹாதத்) எனும் ஆயுதத்தினூடாக அசத்தியத்தின் அடையாளமான யசீதியரை எதிர்கொள்வதற்கு அவர் விரைந்தார். அவ்வாறே, தமது உயிர்த்தியாகத்தின் மூலம் அவர்களை அகத்தே வெற்றிகொண்டார்.
அன்றுதான், ஹிஜ்ரி 61வது வருடம், முஹர்ரம் மாதம், ஆஷூறா தினமாக இருந்தது. கர்பலாக் களத்திலே, தமது அன்புக்குரியவர்கள் அனைவரையும் இரத்தம் சிந்திய நிலையில் காண்கிறார். அதேநேரம், தமக்கெதிரில் நயவஞ்சகமும், ஆக்கிரமிப்பு மனப்பாங்கும் கொண்ட எதிரிகளையும் காண்கிறார். அன்றைய சூழமைவுகள் தமக்கு எதிராக மாறியிருப்பதைக் கண்ணுற்ற பின்பும், ‘எனக்கு உதவக்கூடியவர் யாரும் உண்டோ’ (‘ஹல் மின் நாஸிரின் யன்ஸுர்னா’) என்ற இமாம் ஹுஸைனுடைய அழைப்புக்குரல் சாதாரணமானதன்று.
தமக்கு உதவக்கூடியவர்கள் யாருமில்லை எனும் யதார்த்தத்தை அறியாத நிலையில் இந்த அழைப்புக்குரலை அவர் விடுக்கவில்லை. இவ்வழைப்புக்குரல், ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் அழைப்புக்குரலைக் கொண்ட வரலாற்றின் எழுச்சிக்குரலாக ஒலித்தது. இவ்வழைப்புக்குரல் எதிர்காலத்தை நோக்கியதாக இருந்தது. நம் அனைவருக்குமாக ஒலித்தது.
உண்மையில், இமாம் ஹுஸைனுடைய இவ்வழைப்புக்குரல், தம்மை நேசிப்போரின் உள்ளங்களிலே அவர் எதிர்பார்த்ததை இன்று வலிமை செய்திருக்கிறது. உயிர்த்தியாகிகளுக்கு மேன்மையையும், கௌரவத்தையும் கொடுக்கும் அனைவருக்கும் அவருடைய உயிர்த்தியாகத்தின் அழைப்பை அறியச் செய்திருக்கிறது.

கடமைப்பாடும் இயலாமையும்

இமாம் ஹுஸைனின் தீர்மானம் இதுவே: ‘ஆம், இயலாமையிலும் கூட கடமைப்பாடு இருக்கிறது. தனக்கு வாழ்வும், கோட்பாடும், போராட்டமும் உண்டு. இதன்படி, தான் உயிரோடு இருக்கிறேன் என்றால், உயிரோடு இருக்கும் காரணத்திற்காக கொள்கைவழியே போராடும் கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன்’.
உயிருள்ள ஒவ்வொரு மனிதனும் கடமைப்பாட்டை உடையவனே. மாறாக, சக்தியுள்ள மனிதன் மட்டும்தான் கடமைப்பாட்டை உடையவனாக இருக்க முடியாது. இமாம் ஹுஸைனை விடவும் உயிரோட்டமுள்ளவர் வேறெவர்தான் இருக்க முடியும். வரலாற்றிலே அவரளவுக்கு வாழ்வதற்கான உரிமையையும், உயிரோடு இருப்பதற்கான தகைமையையும் பெற்றவர் வேறெவர்தான் இருக்கிறார்?
மனித-ஆத்மாவாய் இருத்தல், அறிந்திருத்தல், விசுவாசித்தல், உயிர்வாழுதல் இவையனைத்தும் போராடுவதற்கான கடமையை உடையவனாக மனிதனை மாற்றிவிடுகின்றன. உயிர்வாழ்வும், பெருநேசமும், அறிவுடைமையும் கொண்ட மானுடத்தின் மேன்மையான அடையாளமாய் இமாம் ஹுஸைன் இருக்கிறார்.
இயலுமை-இயலாமை, பலம்-பலவீனம், தனிமை-கூட்டு இவை அனைத்திலும் தமக்குள்ள கடமைப்பாட்டை எவ்வாறு நிலைபெறச் செய்வது? எவ்வாறு நிறைவேற்றுவது? என்பதை மட்டுமே வரையறுக்க முடியுமேயன்றி, அதன் இருப்பையல்ல. கடமைப்பாடு என்பது, மார்க்கம் நமக்கு வலியுறுத்தும் கடமையை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக முயற்சிப்பதாகும். மேலும், முடியுமான அளவுக்கு அதனை முன்னெடுத்துச் செல்வதற்காக, காலம் மற்றும் சூழ்நிலைகளுக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதுமாகும்.

சிறப்போடு உயிர் துறத்தலின் அழகியல்

இமாம் ஹுஸைன், உயிரோட்டம் மிகுந்த சிந்தனைப் பள்ளியிலே சிறப்போடு உயிர் துறத்தலின் அழகியலை நன்கு கற்றுத்தேர்ந்த பரம்பரையினரின் புத்திரர். உயிர்த்தியாகத்தின் மகாப்போதகர். இன்றைய சூழலிலே, முடியுமான நிலையில் மட்டுமே போராடுவதை தேர்வு செய்கின்ற, அதேநேரம் எதிரியை மிகைத்தால் மட்டுமே வெற்றி என்று கருதுகின்ற அனைவருக்கும், ‘உயிர்த்தியாகம் என்பது ஒரு தோல்வியல்ல, அதுவோர் தேர்வாகும். அதாவது, ஒரு போராளி சுதந்திரத் தளத்திலே, நேசத்தின் சந்நிதானத்திலே தன்னைத் தியாகம் செய்துவிடுவதனூடாக வெற்றியை அடைந்துகொள்வதற்கான தேர்வாகும்’ என்பதை போதிப்பதற்காகவே கிளர்ந்தெழுந்தார்.
ஆதமுடைய சந்ததியினருக்கு வாழ்வைக் கொடுத்த ஆதமின் வாரிசு அவர். மனித சமுதாயத்திற்கு எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த பெரும் இறைத்தூதர்களின் வாரிசாய் இருந்த இமாம் ஹுஸைன், தற்போது எவ்வாறு சிறப்போடு உயிர் துறப்பது என்பதை ஆதமுடைய சந்ததியினருக்குக் கற்றுக்கொடுப்பதற்காவே வந்திருந்தார்.
சிறப்போடு வாழுதல் இறைநேசர்களின் கலையாக இருந்தது போன்று, ‘ஷஹாதத்’ எனும் சிறப்பான உயிர்த்தியாகமும் இறைநேசர்களின் கலையாகும். சிறப்போடு உயிர் துறத்தலானது, ஷஹீதுகள் அதனை முதல் படித்தரத்திலே அனந்தரமாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு கலையாகும்.
உயிர்த்தியாகிகள், இறைவனது சந்நிதானத்திலே தமது இருப்பையும், உள்ளமையையும் காணிக்கை அளிப்பதன் மூலமாக வெற்றியை அடைந்துகொண்ட, பிரகாசிக்கும் தீபங்களாய் இருக்கின்றனர். ‘சையிதுஷ் ஷுஹதா’ எனும் உயிர்த்தியாகிகளின் தலைவரான இமாம் ஹுஸைன், எல்லாக் காலத்தவர்களுக்கும் சிறப்போடு உயிர் துறத்தலின் அடையாளமாய்த் திகழ்கிறார். அவரைப் பின்பற்றுவோரும் கூட, இறைபாதையிலே தம்முயிரை அர்ப்பணித்து, தம்மையே காணிக்கையாக்கி விடுவர். உண்மையில் தம்பால் நேசங்கொண்ட உள்ளங்களிலே, சிறப்போடு உயிர் துறத்தலின் அழகியலை உருவாக்கிவிடுகின்ற உயிர்த்தியாகத்தின் மிகப்பெரும் போதகரே இமாம் ஹுஸைன்.
இமாமின் போராட்டத்தை, தோல்வியுற்ற போராட்டம் என்று சிலர் கருதுவது ஆச்சரியமே! உலகில் எந்தப் போராட்டம், சமூக தளத்திலே மக்களின் சிந்தனை, உணர்வு ஆகியவற்றின் ஆழத்தை ஊடறுத்து, வரலாற்று நெடுகிலும் தாக்கங்களை உண்டுபண்ணி, தனது வெற்றியை வியாபிக்கச் செய்திருக்கிறது? கால இடப்பரிமாணங்களைக் கடந்து இத்துணை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இமாமின் போராட்டம் ஒன்றுதான் என்று கூறினாலும் அது மிகையாகாது.
தனக்கேயுரிய காலத்திலும் சரி, அதனையடுத்து வந்த காலங்களிலும் சரி- பல்வேறு எழுச்சிப் போராட்டங்களுக்கு அது தூண்டுதலாக இருந்தது. தவ்வாபீன், அபூமுஸ்லிம் குராஸானி ஆகியோரின் எழுச்சிப் போராட்டங்கள் தொடங்கி ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிவரைக்கும், ஏன் காந்தியின் வார்த்தைகளிலே கூறுவதானால் இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்திலும் கூட அது தனது தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.
உயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுஸைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுஸைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.

துணைநின்ற நூல்கள்

  1. ‘ஷரீஅத்தி: இயல்வழியே ஒரு தேடுநர்’ – கலாநிதி பெஹஷ்தி
  2. ‘ஹுஸைன்: ஆதமின் வாரிசு’ – கலாநிதி அலீ ஷரீஅத்தி
நன்றி 
http://www.meipporul.in/

Monday, September 17, 2018

இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக? – மௌலானா மௌதூதி


Why did Imam Hussain Sacrifice His Life


- Moulana Moududi (Rah)

[‘ஷஹாதத்தே இமாம் ஹுசைன்’ என்ற தலைப்பில் மௌலானா அபுல் அஃலா மௌதூதி எழுதிய உருது கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தந்துள்ளோம். இது ஜமாத்தே இஸ்லாமி (தமிழ்நாடு) வெளியிட்டு வரும் ‘சமரசம்’ பத்திரிகையில் ஹிஜ்ரி 1420 துல்ஹஜ், 1421 முஹர்ரம்-சஃபர் மாதங்களில் (2000 ம் ஆண்டு 04, 05, 06 மாதங்களில்) நான்கு பகுதிகளாக வெளிவந்தது.]
முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து தினங்களை உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கிறார்கள். பல்வேறு வழிகளில் தங்களது துயரத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். 1300 வருடங்களுக்கு முன்பு ஈராக் தேசத்து கர்பலா மைதானத்தில் நபிகளாரின் பேரர் ஹுசைன் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக ஈந்ததை நினைவூட்டும் சடங்காக இந்த துக்க தின அனுஷ்டித்தல்கள் அமைந்துவிட்டன. ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோருக்கு ஹுசைனின் உயிர்த் தியாகத்தின் தாத்பர்யமே தெரியாததுதான் விந்தை.
ஹுசைன் ஏன் உயிரைக் கொடுத்தார்? தனது வாழ்வை மட்டுமல்ல, தனது இதயத்துக்கினிய குடும்பத்தவர்களின் வாழ்வையும் எந்த நோக்கத்திற்காக அவர் அர்ப்பணித்தார்? துக்கம் அனுஷ்டிக்கும் மக்களிடம் விசாரியுங்கள். எவருக்குமே தெரியாது. ஹுசைனின் உன்னத நோக்கத்தை அறியாமலேயே… ஒருவரின் உயிர்த் தியாகம் குறித்து அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் துக்கப்படுவது இயல்பானது தான். இதில் விசேசமாக ஒன்றுமில்லை. அன்பால் நனைந்த இதயங்கள் இழப்பின் சுமையைத் தாங்காமல் பொழியும் கண்ணீர்த் துளிகள் அவை.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 1300 வருடங்கள் உருண்டோடிவிட்ட பிறகும் ஒரு இறைநேசரின் இழப்பு ஏன் உணரப்படுகிறது என்பதே. அந்த உயிர்த் தியாகம் மிக உயர்ந்த இலட்சியங்களுக்காக செய்யப்பட்டது தான் காரணமாகும். தனிப்பட்ட அன்பினால் மட்டுமே உந்தப்பட்டு பல நூற்றாண்டுகளாக அந்த மனித துயரம் நினைவுகூறப்படுகிறது எனக் கூறுவது அர்த்தமற்றது.
ஏன், இன்னும் சொல்லப் போனால் ஹுசைன் கூட இத்தகைய கண்மூடித்தனமான தனிநபர் பற்றை அங்கீகரிப்பாரா என்பது சந்தேகமே. அவருக்கு சித்தாந்தத்தை விடவும், உயர் நோக்கத்தை விடவும் தனது தனிப்பட்ட வாழ்வுதான் முக்கியமானதாக இருந்ததெனில் அந்த வாழ்வை ஏன் அர்ப்பணித்தார்? அவரது உயிர்த்தியாகமே அந்த உயர் நோக்கத்தை அவர் தமது உயிரைவிட மேலாக மதித்தார் என்பதற்குச் சான்றாகும். அந்த உயர் நோக்கம்தான் என்ன? கலீஃபா ஆகி இஸ்லாமிய அரசை நிர்வகிக்க வேண்டும் என ஹுசைன் ஆசைப்பட்டாரா? அந்த இலட்சியத்தை அடைவதற்காக தனது உயிரையே பணயம் வைத்துப் போராடினாரா?
இல்லை. நிச்சயமாக இல்லை. அவர் பிறந்த வீடு, அவர் வளர்ந்த குடும்பச் சூழ்நிலை அறிந்தவர்கள் எவருமே இந்த விபரீத நோக்கம் அவருக்கு இருந்தது என யோசிக்கவும் துணிய மாட்டார்கள். அத்தகைய உன்னத குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக முஸ்லிம்களிடையே இரத்தம் சிந்தச் செய்தார் என்பது எண்ணிப் பார்க்கவும் முடியாத ஒன்றாகும்.
பிறகு என்னதான் நோக்கம்? ஹுசைன் கூரிய பார்வை கொண்டவர். இஸ்லாத்தின் ஆணிவேரையும் அடிநாதத்தையும் அறிந்தவர். அப்போதைய இஸ்லாமிய அமைப்பின் அடித்தளத்தில் விழுந்த கீறலை அவர் கவனித்து விட்டார். தீயசக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவே ஆசைப்பட்டார். நிலைமை கட்டுக்கு மீறிப்போய் போர் புரிய வேண்டிய நிலை வந்தால் அதற்காக போர் புரிவது கூட தம் மீதான கடமை என அவர் உணர்ந்தார்.
ஹுசைன் கவனித்துவிட்ட அந்த மாற்றம்தான் என்ன? மக்கள் மார்க்கத்தை விட்டு விலகிச் சென்று விடவில்லை. ஆட்சியாளர்களும் சரி, பாமர மக்களும் சரி- இறைவன் மீதும், இறைத்தூதர் மீதும், இறைமறை மீதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதில் எள்ளளவும் குறைவு ஏற்பட்டுவிடவில்லை. அரசு சட்டங்களிலும் கூட எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. உமைய்யா அரசுகளின் கீழ் இயங்கும் நீதிமன்றங்கள் குர்ஆன், நபிவழியின் அடிப்படையிலேயே வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து வந்தன. இன்னும் சொல்லப் போனால், 19 ஆம் நூற்றாண்டு வரை உலகில் எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் எந்தவகையான சட்ட திருத்தமும் கொண்டு வரப்படவில்லை என்பதுதான் உண்மை.
சிலர் யஸீதின் தனிப்பட்ட ஆளுமையை மோசமாக சித்தரிக்க முற்படுகிறார்கள். இதனால் யஸீத் என்கிற மோசமான நபரை இஸ்லாமிய அரசுத்  தலைவராக நீடிக்கவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஹுசைன் எழுந்தார் என்ற பொதுப்படையான ஊகம் வேரூன்றி விட்டது. யஸீதின் குறைபாடுகளை ஒப்புக்கொண்டாலும் கூட, அது ஒன்றே ஹுசைன் அவர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததற்குக் காரணமாக அமைந்தது என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அந்தச் சமயம் அரசு நிர்வாகமும் செம்மையாகவே நடந்து கொண்டிருந்தது.
வரலாற்றை ஆய்ந்து படித்துப் பார்க்கும்போது ஓர் உண்மை புரியும். தனது தந்தையின் வாரிசாக யஸீத் அறிவிக்கப்பட்டதும், பிறகு மன்னராக முடிசூட்டிக் கொண்டதும் உண்மையில் இஸ்லாமிய அரசியல் சட்டத்தின் நோக்கம், நடைமுறை ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்வதாக அமைந்தன. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், இஸ்லாத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. யஸீத் ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டபோது எவரும் அதன் தீய விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை. தொலைநோக்கும் ஆழமான மார்க்க ஞானமும் இறைப்பற்றும் நிரம்பிய ஹுசைன் இந்த வித்தியாசத்தையும் விலகலையும் மிகச் சரியாக கணித்துவிட்டார். இதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இஸ்லாமிய அரசுக்கு ஏற்படவிருக்கும் பேரழிவை அவர் முன்கூட்டியே கணித்துவிட்டார். இதனால் அதனைத் தடுக்கவும், இஸ்லாமிய அமைப்பை பாதுகாக்கவும் தனது உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்டார் அவர்.
இந்தக் குறிப்பிட்ட நிலையை முழுமையாக புரிந்து கொள்வதற்கு நாம் இஸ்லாம் வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் தனித்துவ தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின்  கீழ்தான் நபிகளாரின், நேர்வழிநின்ற கலீஃபாக்களின் தலைமையில் அரசு நிர்வாகம் நடந்தது. அதைப்போலவே யஸீதின் நியமனத்துக்குப் பிறகு உமைய்யா, அப்பாஸிய்யா மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்வந்த ஆட்சியாளர்களின் காலத்திலும் உருவான புதிய முஸ்லிம் அரசின் நிர்வாக அமைப்புச் சட்டத்தின் முக்கியத் தன்மைகள் என்னவென்பதையும் பார்க்க வேண்டும்.
இவ்வாறு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முதன் முதலில் உருவான இஸ்லாமிய அரசின் அடிப்படைத் தன்மைகளுக்கும் யஸீதின் நியமனத்துக்குப் பிறகு காலப்போக்கில் உருவான முஸ்லிம் அரசுகளின் முக்கியத் தன்மைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புலப்பட்டுவிடும். எந்தப் புள்ளியில் அவற்றுக்கு இடையேயான வித்தியாசம் துவங்குகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக விளங்கும். இந்த ஆய்வு மூலம் ஹுசைன் கிளர்ந்தெழுந்தது ஏன் என்பதையும் எளிதாகக் கணித்து விடலாம். நபிகள் நாயகம் (ஸல்), அலீ (றழி), ஃபாத்திமா (றழி) ஆகியோரால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, அண்ணலாரின் அருமைத் தோழர்களின் அரவணைப்பில், அந்த அழகிய சமூகச் சூழலில் குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயது வரை கழித்த ஹுசைன், யஸீதின் நியமனம் என்கிற ரூபத்தில் மாற்றத்துக்கான பாதை வகுக்கப்பட்ட போது அதன் விளைவுகள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் முழு மூச்சுடன் எதிர்த்தார்.
வெறுமனே பின்வரும் உண்மைகளை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது:
1. இஸ்லாமிய அரசில் அரசாண்மை முழுவதும் இறைவனுக்கே உரித்தானதாகும்.
2. குடிமக்கள் அனைவரும் இறைவனின் அடிமைகளே.
3. ஆட்சியாளர்கள் இறைவனுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
அரசும் குடிமகனும் இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
இஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
தந்தை முஆவியாவுக்கு அடுத்த படியாக மகன் யஸீத் ‘கலீஃபாவாக’ நியமிக்கப்பட்ட போது இவை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ‘இறைவனுக்கே அரசாண்மை அனைத்தும்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டாலே போதும் என்ற நிலை உருவானது. இதற்கு முந்தைய முடி மன்னர்களைப் போலவே முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஏதோ அரசாண்மைக்குத் தாமே ஏகபோக சொந்தக்காரர்களைப் போல நடந்து கொண்டார்கள். அரசாண்மை தனது குலச்சொத்து, தனக்குப் பிறகு தனது மகன்தான் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரம்பரிய மன்னர்களைப் போல நடந்து கொண்டார்கள். குடிமக்களின் வாழ்வு, சொத்து, கண்ணியம் என எல்லாவற்றுக்கும் ஏகபோக எஜமான் தான் ஆட்சியாளன் என்கிற நிலைமைக்கு இது வித்திட்டது. அந்த ஆட்சியாளனின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் இறைச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டால் அவை பொதுமக்களுக்கு மட்டுமே என்று கருதப்படும். இந்த மன்னர்களே கூட இறைச் சட்டத்தின் பல்வேறு விதிகளை எவ்விதக் குற்றவுணர்வும் இல்லாமல் மூர்க்கமாக மீறினார்கள். அந்த மன்னர்களின் அடியொற்றி மேல்தட்டு மக்களும் செயல்படத் தலைப்பட்டார்கள்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தார்மீகக் கடமையை மறந்தனர்

இஸ்லாமிய அரசின் முக்கிய நோக்கமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட நன்மைகளை நிலைநிறுத்தி வளர்ப்பதும், இறைவனால் வெறுக்கப்பட்ட தீமைகளைத் தடுத்து அழிப்பதும்தான். ஆனால் முடிமன்னர்களின் நோக்கமோ நிலத்தை அபகரிப்பதும், ஆடம்பர சுகவாழ்வும், பதவி பட்டங்களைச் சேகரிப்பதும், சிற்றின்ப சுகங்களை நாடுவதும் தான். முடிமன்னர்கள் அபூர்வமாகத்தான் உண்மை, நீதி ஆகியவற்றுக்காக பாடுபட்டிருக்கிறார்கள். மன்னர்களும் மேல்தட்டு மக்களும் அரசு அதிகாரிகளும் நன்மைகளை விட தீமைகளைப் பரப்புவதில் தான் முன்னணியில் இருந்தனர்.
மக்களிடையே நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுத்து, இஸ்லாத்தை எடுத்துரைத்து, மார்க்க நூல்களை தொகுத்தளிப்பது, இஸ்லாமிய ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்வது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்ட இறைநேசர்களுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு கிஞ்சிற்றும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்கள் இத்தகைய இறைநேசர்களுடன் அதிருப்தியுடன்தான் இருந்தனர். அத்தகைய இக்கட்டான சூழல்களிலும் அந்த இறைநேசர்கள் அரசாங்கம் தருகின்ற இடையூறுக்கிடையே தமது உன்னதப் பணியை தொடர்ந்து செய்தனர்.
இந்த அறிஞர்கள், இறைநேசர்களின் முயற்சிகள் தொடர்ந்து தங்களுடைய பணிகளைச் செய்து வந்தனர். இந்த இறைநேசர்களும் அறிஞர்களும் தொடர்ந்து முயற்சித்த போதிலும், ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறையும், நடத்தையும் முஸ்லிம் சமூகத்தை சீரழிவுக்கு இட்டுச் சென்றது. தங்களது சுயநலத்திற்காக இஸ்லாமியப் பிரச்சாரத்தை தடைசெய்யும் அளவுக்கு அவர்கள் போய்விட்டனர். உமைய்யாக்களின் காலகட்டத்தில் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் மீதும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது, இவ்வகையில் மோசமான எடுத்துக்காட்டு ஆகும்.
ஒரு முஸ்லிம் நன்மையின் மொத்த வடிவமாகவும், இறையச்சத்தின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டவனாகவும் திகழ்வான். இஸ்லாம் மனிதனுக்குள் ஏற்படுத்துகின்ற மகத்தான பண்புநலன்களாக இவை திகழ்கின்றன. இந்த மகத்தான பண்புநலன்கள் இஸ்லாமிய அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் ஆட்சியாளர்களிடம் குறைவற இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் நடத்தை இறையச்சத்தாலும் நற்செயல்களாலும் மிளிரும்போது அது மற்ற அரசு அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கும். அவர்களும் இத்தகைய உணர்வுகளால் தமது ஆளுமையை வார்த்தெடுப்பார்கள். இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஆழமான தாக்கங்களை உண்டுபண்ணும். முழு சமூகமே இறையச்சம் கொண்டதாய், நற்செயல்கள் புரிவதில் பேரார்வம் கொண்டதாய் மிளிரும். முஸ்லிம் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் சீசர் பாணியிலான ஆடம்பரத்தையும் சுகபோக வழிமுறைகளையும் மேற்கொண்டபோது முழுப் பரிமாணமுமே மாற்றம் கண்டது. நீதியின் இடத்தை அநீதியும், அக்கிரமமும், தான்தோன்றித்தனமும் கவ்விப் பிடித்துக் கொண்டன. ஆடம்பரமும், டாம்பீகமும், உல்லாசக் கேளிக்கைகளும் அன்றாட வாழ்வின் வழக்கமாயின. எது சட்ட ரீதியானது, எது சட்ட விரோதமானது என்று பிரித்துப் பார்க்கவும் ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். ஒழுக்க நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அரசியல் நெறிகள் வலுவிழந்தன. அதிகாரிகள் தங்களுக்குள் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக மக்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்களாக மாறிவிட்டனர். எளிய மக்களை அடக்கித் தமது கட்டுக்குள் வைக்க முற்பட்டனர். மக்களோ அதிகாரிகளின் மனசாட்சியினை விழித்தெழச் செய்வதற்குப் பதிலாக லஞ்சம், ஆசையூட்டல் போன்றவற்றின் மூலம் காரியம் சாதிக்க முற்பட்டனர்.
இந்த மாற்றம் தான் நிகழ்ந்தது. இத்தகைய சீரழிவு ஏற்படும் என்பதைத் தான் இமாம் ஹுசைன் அன்றே சரியாகக் கணித்து விட்டார். முஸ்லிம் ஆட்சியாளர்களின் உணர்வு, நோக்கம், நடத்தை ஆகியவற்றில் எத்தகைய மோசமான மாற்றம் நிகழும் என்பதை இமாம் ஹுசைன் தொலைநோக்குடன் ஊகித்து விட்டிருந்தார். அதனால் தான் அந்த ‘மாற்றத்தை’ முழுமூச்சுடன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் எதிர்க்க முற்பட்டார்.
அது மட்டுமல்ல. அந்த மாற்றத்தின் காரணமாக இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. தலைகீழ் மாற்றத்துக்கு உள்ளான இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் ஏழு அடிப்படைப் பண்புகளின் விவரம் வருமாறு:

1. சுதந்திரமான தேர்தல்

இஸ்லாமிய அமைப்புச் சட்டத்தின் அடிப்படையே மக்களின் சுதந்திரமான கருத்துக்களின் அடிப்படையில் அரசு அமைக்கப்படுவது தான். தமக்கு வேண்டிய அரசை அமைத்துக் கொள்வதில் மக்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது. எவருமே குறுக்கு வழியிலோ, செல்வாக்கு, அதிகாரம், செல்வத்தைப் பயன்படுத்தியோ, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாது. மக்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து தமக்குள் எவர் சிறந்தவராக இருக்கின்றாரோ அவருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.
ஆட்சிக் கட்டிலில் ஏறியமர்ந்து கொண்டு பிறகு மக்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்யும்படி கேட்கக் கூடாது; மாறாக, மக்களின் விசுவாசப் பிரமாணத்தின் மூலமாகவே ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். ஒருவருக்கு விசுவாசப் பிரமாணத்தை பெற்றுத் தருவதற்காக தந்திர நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்வது கூடாது.  விசுவாசப் பிரமாணம் செய்வதற்கும், செய்ய மறுப்பதற்கும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். விசுவாசப் பிரமாணமின்றி எவரும் ஆட்சியை அபகரித்துக் கொள்ளுதல் தகாது. அதே போல், ஒருவர் மீதான நம்பிக்கை இல்லாமலாகி விட்ட நிலையில் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கவும் கூடாது.
நபிகளாருக்குப் பிந்தைய கலீஃபாக்கள் அனைவரும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்தனர். கிலாஃபத்தின் மீது உரிமை கோரிய அமீர் முஆவியாவின் நிலை சர்ச்சைக்கு உரியது. இந்தக் காரணத்தினாலேயே அவர் நபித்தோழர்களில் ஒருவராகக் கருதப்பட்டாலும், நேர்வழி நின்ற கலீஃபாக்களில் ஒருவராக மதிக்கப்படுவதில்லை.
எனினும், யஸீதின் நியமனம் தான் அந்தக் கோட்பாட்டுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக ஆகிவிட்டது. அது சங்கிலித் தொடர் போல் அடுத்தடுத்து வந்த வாரிசு அடிப்படையிலான மன்னராட்சியின் தோற்றத்துக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. அதன் பிறகு இன்றுவரை முஸ்லிம்களால் சுதந்திரமான தேர்தலின் மூலம் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் கோட்பாட்டுக்கு மீளவே முடியவில்லை.
இப்போது பொதுமக்களின் சுதந்திரமான தெரிவு, ஆலோசனை என்பவற்றின் அடிப்படையில் அல்லாமல், தமக்கிருக்கும் செல்வாக்கு பலத்தின் மூலமே நபர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். விசுவாசப் பிரமாணத்தின் மூலம் அதிகாரத்திற்கு வருவதற்குப் பதிலாக, அதிகாரத்தைக் கொண்டு விசுவாசப் பிரமாணத்தை வலிந்து பெறுகிறார்கள். விசுவாசப் பிரமாணத்தை வழங்குவதற்கோ, வழங்க மறுப்பதற்கோ மக்களுக்குச் சுதந்திரமிருப்பதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு விசுவாசப் பிரமாணம் பெறவேண்டியது முன்நிபந்தனை என்கிற நிலைமையும் இனி இல்லை.
எல்லாவற்றுக்கும் முதலாக, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய மறுப்பது என்ற பேச்சுக்கே இடமிருப்பதில்லை. அப்படியே, மக்கள் விசுவாசப் பிரமாணம் செய்ய மறுத்தாலும் கூட, ஆட்சியாளர் ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கப் போவதில்லை. இமாம் மாலிக் அப்பாசிய மன்னர் மன்சூரிடம், இப்படி பலாத்காரமாக விசுவாசப் பிரமாணம் பெறுவதை விட்டுத் தவிர்ந்து கொள்ளும்படி அறிவுரை கூறிய குற்றத்திற்காக, கைகள் பிய்த்துக் கொண்டு வருமளவு சாட்டை கொண்டு விளாசப்பட்டார்.

2. ஆலோசித்து செயல்படுதல்

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடுத்த முக்கியமான அம்சம் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் அரசாங்கத்தை செயல்படுத்துவது ஆகும். மார்க்க அறிவு பெற்ற, இறையச்சம் மிகுந்த, கருத்துச் சீர்மையும், விவரங்களைப் புரிந்து கொண்டு முடிவெடுக்கும் ஆற்றலும் கொண்ட நபர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும். இவ்வாறு ஒரு ஆலோசனைக் குழு அரசுத் தலைவருக்கு உதவும். முதல் நான்கு கலீஃபாக்கள் காலத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவும், வாக்கு அளிப்பதற்கான மக்களது அங்கீகாரமும் நிரம்ப இருந்தது. இந்த நபர் நமக்கு ஆதரவான நிலையை எடுப்பார் என்கிற எண்ணத்தில் கலீஃபா அவர்களை ஆலோசனைக் குழுவில் சேர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமூகத்திலேயே மிகவும் சிறந்த நபர்களை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி வாய்மையுடன் தேர்ந்தெடுத்தனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்மையே பேசுபவர்களாகவும், தமது மனசாட்சியுடன், நாணயத்துடன் சிறந்த ஆலோசனைகளை கூறுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கலீஃபாவுக்கு தவறான ஆலோசனை கொடுத்து வழிகேட்டின் பக்கம் தள்ளி விடுவார்களோ என்ற ஐயம் துளிகூட இருக்கவில்லை. இப்போது தேர்தல்கள் நடத்தப்படுவதைப் போல அந்தக் காலத்தில் தேர்தல் நடந்திருந்தாலும் எவ்விதப் பிரச்சாரமும் இன்றி அவர்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் அவர்கள் குறித்து நல்ல கருத்து இருந்தது.
ஆனால் மன்னராட்சி வந்ததும் பெருத்த அடி வாங்கியது இந்த ஆலோசனைக் குழு வழிமுறைதான். மன்னராட்சி நிர்வாகம் சர்வாதிகார, கொடுங்கோலர் நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களது ஆலோசனைக் குழுவிலே இளவரசர்கள், பசப்பு வார்த்தை பேசி காரியம் சாதிக்கும் ஜால்ராக்கள், இராணுவத் தளபதிகள், வட்டார ஆளுநர்கள் போன்றோரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்றைய பாணியில் தேர்தல் நடத்தப்பட்டால் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்களாக, மக்களின் விரோதத்தையும் வெறுப்பையும் அள்ளிக்கொட்டிக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.
இதற்கு மாறாக, இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற, வாய்மை வாய்ந்த, மார்க்க அறிவும் தெளிவும் நிரம்பிய, மக்கள் இதயங்களில் இடம்பிடித்துக் கொண்ட அறிஞர்களுக்கோ அந்த ஆலோசனைக் குழுக்களில் எவ்வித மதிப்போ, இடமோ இல்லாமல் போனது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மன்னர்களின் கோபத்திற்கும் அக்கிரமத்திற்கும் இலக்காயினர். ஆட்சியாளர்கள் அத்தகைய அறிஞர்களை என்றுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தனர்.

3. கருத்துச் சுதந்திரம்

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு கருத்துச் சுதந்திரம் ஆகும். இஸ்லாத்தின் பார்வையில் நன்மைகளை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் முஸ்லிம்களின் உரிமை மட்டுமல்ல; முக்கியக் கடமையாகவும் இருக்கிறது. கருத்துச் சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் இஸ்லாமிய சமுதாயத்தின் அச்சாணியாக இருக்கிறது. இதனால் அரசாங்க நிர்வாகம் சரியான திசையில் நடைபோடும். இஸ்லாமிய சமூகத்தில் ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் சரி, அவர் நெறி தவறிப் போகும்போது அதனைத் தட்டிக் கேட்கவும் விமர்சிக்கவும் பாமர குடிமகனுக்கு முழு உரிமை உண்டு. முதல் நான்கு கலீஃபாக்களின் காலத்தில் மக்களின் உரிமைகள் விஷயத்தில் எவ்வித குந்தகமும் ஏற்படவில்லை. குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படாதபடி பார்த்துக் கொள்வதை கலீஃபாக்கள் தமது முக்கியக் கடமையாக கொண்டிருந்தனர். அந்தக் கடமையை சரிவர நிறைவேற்ற உதவும்படி அவர்கள் மக்களை ஊக்குவித்தனர். பேச்சு சுதந்திரமும் கலீஃபாவுக்கு எச்சரிக்கை விடுத்து, செயல்விளக்கம் கேட்கும் உரிமையும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இருக்கவில்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த உரிமையும் சுதந்திரமும் இருந்தது. இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர்களால் கலீஃபாவையே மடக்கி கேள்வி கேட்க முடிந்தது. எவரும் அவர்களது துணிச்சலைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களது இந்தச் செயல் எல்லோராலும் பாராட்டப்பெற்றது.
இந்த பேச்சு சுதந்திரமும் உரிமையும் ஏதோ கலீஃபாவே விரும்பி அவர்களுக்கு அளித்த ஒன்றல்ல. மாறாக அது இஸ்லாத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமை ஆகும். இந்த உரிமையைப் பயன்படுத்தி சத்தியத்தை நிலைநாட்டுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இறைவனும் இறைத்தூதரும் விதித்துள்ள கடமையாகும். இந்த அடிப்படைக் கடமையை எவ்வித தடங்களும் இன்றி நிறைவேற்றும் வகையில் சாதகமான சமூகச் சூழலை உருவாக்கிப் பராமரிப்பது கலீஃபாக்களின் முக்கியப் பணியாகும்.
மன்னர்களின் ஆதிக்கம் வளர்ந்ததும் மனசாட்சியின் குரல்வளை நெரிக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரமோ முழுமையாக மறுக்கப்பட்டது. எவராவது மன்னர் முன்பு எதையாவது சொல்ல விரும்பினால் அது மன்னரைப் புகழ்ந்து பேசுவதாகவே இருத்தல் வேண்டும். அல்லது ஆட்சியை வானளாவ உயர்த்திப் பேச வேண்டும். இவ்வாறு புகழ்ந்து பேச மனம்வராத அளவுக்கு மனசாட்சியின் குரல் ஓங்கிவிட்டால், அவர்கள் மன்னர் முன்னால் எதனையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதையும் மீறிப் பேசிவிட்டாலோ அவர் சிறையிலடைக்கப்படுவார் அல்லது கொல்லப்பட்டு விடுவார். இத்தகைய மூச்சடைக்கும் சூழல் பொதுமக்களின் உத்வேகத்தை முடக்கிவிட்டது. முஸ்லிம்கள் ஆர்வம் இழந்தனர். கோழைகள் ஆயினர். சந்தர்ப்பவாதிகளாக மாறினார். உயிரையும் பொருட்படுத்தாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் சத்திய சீலர்களின் எண்ணிக்கை அருகிக் கொண்டே போனது. போலிப் புகழ்ச்சிகளும் பசப்பு வார்த்தைகளும் பேசி ஜால்ரா அடிப்பவர்கள் சமூகத்தில் பெருகினர். வாய்மை வாய்ந்த மக்களுக்கு எந்த மதிப்பும் எஞ்சி இருக்கவில்லை. மிகவும் தகுதி வாய்ந்த, நேர்மையான மக்களும் தனிப்பட்ட கருத்து கொண்டவர்களும் அரசாங்கத்துடன் தமது தொடர்பை துண்டித்துக் கொண்டனர்.
ஆட்சித் தலைவர் குறித்தும் அரசு குறித்தும் மக்கள் மனங்களில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. ஆட்சிக் கவிழ்ப்பும் ஆட்சி மாற்றமும் நிகழும்போது பழைய ஆட்சியாளர்கள் மீது மக்களின் அனுதாபம் துளி கூட இருக்கவில்லை. புதிய ஆட்சியாளர்கள் மீதும் எவ்விதப் பற்றும் இல்லாதவர்களாக இருந்தனர். அரசுகள் வந்தன. அரசுகள் கவிழ்ந்தன. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக ஆட்சி மாற்றங்கள் தொடர்ந்து நடந்தாலும் மக்கள் இவை எவற்றிலும் ஆர்வம் காட்டாமல் தனிப்பட்ட பார்வையாளர்களைப் போல கவனித்தனர்.

4. படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்புணர்வு

இஸ்லாமிய அரசுத் தலைவரான கலீஃபாவும் அவரது நிர்வாகமும் தமது செயல்பாடுகள் குறித்து இறைவனிடம் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். இந்தப் பொறுப்புணர்வு வாட்டியெடுத்ததால் முதல் நான்கு கலீஃபாக்கள் இந்தக் கவலையில் உழன்றனர். இரவும் பகலும் அவர்களது இதயங்களை இதே சிந்தனை ஆக்கிரமித்திருக்க, எந்நேரமும் இறைவனுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு குறித்து கவலையுடன் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் தமது ஒவ்வொரு செயல் குறித்தும் இறைவனுக்கும் மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்கிற உணர்வு நிரம்பப் பெற்றவர்களாக இருந்தனர்.
மக்களவை கூட்டப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தான் பிரச்சினைகள் குறித்து ஆட்சித் தலைவரிடம் கேட்க வேண்டும் என்கிற நிலை இருக்கவில்லை. கலீஃபாக்கள் நாள்தோறும் ஐவேளைத் தொழுகைகளின் போது மக்களை சந்தித்தனர். வெள்ளிக் கிழமை தோறும் மக்களுக்கு அரசுத் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அறிவித்து சொற்பொழிவு நிகழ்த்தினர். இத்தகைய தருணங்களில் அவர்களிடம் கேள்வி கேட்கவும், புகார் கொடுக்கவும், நீதி கேட்கவும் பாமர மக்களுக்கு முழு உரிமை இருந்தது.
அது மட்டுமல்ல, கறுப்பு பூனைக் காவற்படையினர் வட்ட வடிவில் வியூகம் அமைத்துப் பாதுகாக்க, உள்ளே இருப்பவர் யாரெனத் தெரியாத வகையில் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வண்டிகளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் அவர்கள் உலா வருவதில்லை. அவர்கள் எந்தவிதப் பந்தாவும் இன்றி சந்தையை சுற்றி வந்தனர். செல்லும் வழிகளிலெல்லாம் மக்களின் குறைகளைக் கேட்டனர். மெய்க்காப்பாளர்கள் எவருமின்றி அவர்கள் மக்களோடு இயல்பாக சங்கமித்தனர்.
அவர்கள் மாடமாளிகைகளில் தங்களை அடைத்துக் கொள்ளவில்லை. எளிமையான இல்லங்களில் வசித்தனர். அங்கு எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இருக்கவில்லை. எந்நேரமும் ஆட்சித்தலைவரை இயல்பாக சந்தித்துப் பேச முடிந்தது. பார்வையாளராக எவரும் எந்நேரமும் சென்றுவர முடிந்தது. தமது குறையைச் சொல்லி கலீஃபாவிடம் தீர்வு கேட்க முடிந்தது. கலீஃபாக்களோ எந்நேரமும் எவருக்கும் பதில் அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். பிரதிநிதிகள் மூலம்தான் கலீஃபாவை அணுகமுடியும் என்ற நிலை இருக்கவில்லை. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அந்த உரிமை இருந்தது.
மக்களின் ஆதரவு பெற்றே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஒரு கலீஃபாவை நீக்கி இன்னொருவரை தேர்ந்தெடுக்கும் முழுமுதல் அதிகாரம் மக்களிடமே இருந்தது. இதனால் மக்களைச் சந்திப்பதில் கலீஃபாவுக்கு எவ்வித ஆபத்தும் இருக்கவில்லை. தாம் பதவியை விட்டு நீக்கப்படுவோம் என்கிற கிலியும் அவர்களுக்கு இருக்கவில்லை.
ஏகாதிபத்திய, சர்வாதிகார மன்னர்களின் ஆட்சிமுறையிலோ இத்தகைய பொறுப்புணர்வு எதுவுமே எஞ்சி இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இறைவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு வாயளவில் இருந்தது. மக்களுக்குப் பதிலளிப்பதா? கேட்கவே வேண்டாம். எவருக்குமே அவர்களை எதிர்த்து எதையும் சொல்லத் துணிவு இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மீது முழுமையான அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர்.
அந்த ஏகாதிபத்திய, சர்வாதிகார மன்னர்கள் ஆயுத, ஆள்பலத்தின் அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். பலத்தின் அடிப்படையில் எவராவது எமது ஆட்சியை பிடிக்க முடியுமா என அவர்கள் சவால் விடுத்தனர். இத்தகைய நபர்களால் பொதுமக்களுடன் எப்படி இரண்டறக் கலக்க முடியும்? பொதுமக்கள்தான் அவர்களை எளிதில் அணுகிவிட முடியுமா? ஏன், அவர்கள் பள்ளிவாசலுக்கு தொழ வரும்போது கூட பலத்த பாதுகாப்புடன் குறிப்பிட்ட சில பள்ளிவாசல்களிலேயே தொழுதார்கள். திறந்தவெளியில் தொழ நேரிடும்போது அவர்களைச் சுற்றிலும் நெருங்கிய அதிகாரிகள் நின்று கொள்வார்கள். அவர்கள் வாகனங்களில் எங்காவது சென்றாலும் கூட அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் காவல் வாகனங்கள் அணிவகுத்தன. அவர்களுக்கான பாதையை க்ளியர் செய்வது அந்த பாதுகாப்பு படையினரின் கூடுதல் பணியாக இருந்தது. மக்களோடு மக்களாக கலந்து மக்களின் பிரச்சினைகளை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவே இல்லை.

5. பைத்துல்மால் – அரசுக் கருவூலம் ஒரு அமானிதம்

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடுத்த முக்கிய அம்சம் பைத்துல்மால் என்கிற அரசுக் கருவூலத்தின் அந்தஸ்து ஆகும். பைத்துல்மால் – அரசுக் கருவூலம் முழுவதும் இறைவனுக்கே சொந்தமானது. அது முஸ்லிம்களின் அமானிதப் பொருளாகும் என இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக விளக்குகிறது. சட்டபூர்வமான வழிமுறைகள் மூலமே அதன் வருமானம் சேகரிக்கப்படும். சட்டத்துக்கு விரோதமான வழியில் ஒரு துரும்பு கூட பைத்துல்மாலில் சேர்க்கப்படாது. பைத்துல்மாலின் பொருள் சட்டபூர்வமான வழிமுறைகளிலேயே செலவழிக்கப்படும். பருவ வயதை எட்டியிராத ஒரு அனாதையின் செல்வத்தின் மீது அவரது தாளாளருக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அந்த அளவுக்கே கலீஃபா-ஆட்சித் தலைவருக்கும் பைத்துல்மால் மீது உரிமை இருக்கிறது.
அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அனாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். (திருக்குர்ஆன் 4:6)
பைத்துல்மாலின் வரவு செலவுக் கணக்கை காட்ட வேண்டிய பொறுப்பு கலீஃபாவுக்கு உண்டு. பைத்துல்மாலின் முழுமையான வரவு செலவுக் கணக்கு விபரத்தை கேட்கும் முழு உரிமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.
நேர்வழி நின்ற கலீஃபாக்கள் இந்தக் கொள்கையை வாய்மையுடன் பின்பற்றினார்கள். பைத்துல்மாலின் எந்தவொரு பொருளும் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு உட்பட்டே சேர்க்கப்பட்டது. செலவுகளும் சரியான விதத்திலேயே செய்யப்பட்டன. அவர்களில் வசதி வாய்ப்பை பெற்றவர்கள் பைத்துல்மாலில் இருந்து ஒரு சல்லிக்காசைக் கூட தமக்கென எடுத்துக் கொண்டதில்லை. ஊதியம் எதுவும் எடுத்துக் கொள்ளாமலேயே சேவையாற்றினார்கள். இன்னும் சொல்லப்போனால் தமது சொந்தப் பணத்திலிருந்து மக்கள் நலன்களுக்காக செலவழிக்கவும் அவர்கள் தயங்கியது கிடையாது. ஊதியம் வாங்காமல் சேவையாற்றக் கூடிய வசதிவாய்ப்பு பெறாதவர்கள் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையே எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட ஊதியம் மிகக் குறைவானது என்பதை எவரும் ஒப்புக் கொள்வார்கள். துவேஷம் கொண்ட விமர்சகர்களும் இதனை மறுக்க மாட்டார்கள்.
பொதுமக்களின் பைத்துல்மால்-கருவூலத்தின் வரவு செலவு கணக்கு விவரத்தை கேட்கும் உரிமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தது. கலீஃபாக்களும் அந்த விவரங்களை அளிக்கவும் விளக்கவும் எப்போதும் தயாராக இருந்தார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் கலீஃபாவைப் பார்த்து “யமனிலிருந்து வந்த துணி சரிசமமாக எல்லோருக்கும் பங்கிடப்பட்டிருக்க, கலீஃபாவால் மட்டும் எவ்வாறு அந்த துணி அளவை விட இரு மடங்கு நீளமான அங்கியை தைத்துக்கொள்ள முடிந்தது?” என்று பொதுமக்கள் முன்னிலையில் எதிர்த்துக் கேள்வி கேட்கும் சுதந்திரமான நிலை இருந்தது.
கலீஃபா மன்னராக மாறியபோது பைத்துல்மால் கூட பொதுமக்களின் கருவூலம் என்கிற அந்தஸ்தை இழந்து, தனிப்பட்ட நபரின் சொத்தாக மாறியது. சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் அனைத்து வழிமுறைகள் மூலமும் பைத்துல்மாலில் பணம் சேர்க்கப்பட்டது. பைத்துல்மால் பணம் தான்தோன்றித் தனமாகவும் சட்ட விரோத வழிகளிலும் செலவழிக்கப்பட்டது. எவருக்கும் இதனைத் தட்டிக் கேட்கவோ தடுக்கவோ துணிவு இருக்கவில்லை. வரவு செலவுக் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும் ஆட்சியாளர்கள் இழந்துவிட்டிருந்தார்கள்.
அரசு வருமானம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. அரசு எந்திரத்தில் பணியாற்றிய சாதாரண ஊழியர் முதல் மாநில நிர்வாகி வரை தத்தமது அதிகாரத்துக்கு ஏற்ப தம்மால் முடிந்தளவுக்கு அரசுப் பணத்தை சூறையாடினார்கள். பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கான உரிமமாக அவர்கள் தமது நிர்வாகப் பொறுப்பை நினைத்துக் கொண்டார்கள். இது தவறானது என்கிற உறுத்தல் கூட அவர்களிடம் இருக்கவில்லை. ‘நம்மால் முடிந்தவரை மக்கள் பணத்தை சூறையாடத்தான் செய்வோம். எவருக்குமே எதிர்த்துக் கேட்க துணிவு இருக்காது’ என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

6. சட்டத்தின் ஆட்சி

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அம்சம் சட்டத்தின் ஆட்சி நிலைபெறுவதாகும். இறைச்சட்டங்களை இத்தரணியில் நிலைநிறுத்துவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும். இறையரசை நிர்மாணிப்பதையே இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
சட்டத்தின் முன் எல்லோரும் சமம். சட்டத்திற்கு அப்பாற்பட்டோ, சட்டத்திற்கு மேலாகவோ எவருமே இல்லை. சட்டம் விதிக்கின்ற வரம்புகளை மீறுவதற்கு எவருக்குமே உரிமை இல்லை. சாதாரண குடிமகன் முதல் அரசுத் தலைவர் வரை எல்லோருக்குமே ஒரே சட்டம்தான். இந்தச் சட்டங்கள் எந்தவித விதிவிலக்கோ பாரபட்சமோ இல்லாமல் எல்லோர் மீதும் அமல்படுத்தப்பட வேண்டும். நீதிக்கும் நியாயத்திற்கும் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பாரபட்சமாக நடந்து கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை. நீதிமன்றங்கள் வெளிப்புற திணிப்புகள், வற்புறுத்தல்கள், நிர்பந்தங்களுக்கு ஆளாகாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நேர்வழி நின்ற கலீஃபாக்கள் சட்டம் சம்பந்தப்பட்ட இந்தப் பொதுவான கோட்பாடுகளிலிருந்து கிஞ்சிற்றும் வழுவாமல் ஆட்சி புரிந்தார்கள். பெரும் பேரரசர்களை விட அதிகமாக அதிகாரத்தைப் பெற்றிருந்த நிலையிலும் அந்த கலீஃபாக்கள் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்.
விதிகள், சட்டங்கள், வரம்புகளைப் பேணி நடப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நட்போ, பந்த பாசமோ குறுக்கிட அவர்கள் என்றுமே இடம் அளித்தது கிடையாது. தங்களது விருப்பு வெறுப்புகளால் இஸ்லாமிய சட்ட விதிகளுக்கு பாதிப்பு வராதவாறும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். தங்களது சொந்த உரிமைகள் மீறப்படும்போது கூட அவர்கள் சாதாரண குடிமக்களைப் போலவே விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.
எவராவது அவர்களுக்கெதிராக புகார் கொடுத்தால் அவை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதைப் போலவே படைத் தளபதிகளும் ஆளுநர்களும் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய வழக்குகளில் சிக்கிய எவருமே தமது செல்வாக்கால் நீதிபதியை தமக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கும்படி நிர்பந்திக்கத் துணியவில்லை. சட்டத்தை மீறி எவர் நடந்து கொண்டாலும் அவர் சட்ட விளைவுகளிலிருந்து தப்பவே முடியாத நிலைமை இருந்தது.
கலீஃபா ஆட்சி முறையை அகற்றி மன்னராட்சி வந்ததும் இந்த இஸ்லாமியக் கோட்பாடுகளும் நடைமுறைகளும் காணாமல் போயின. அரசர்கள் என்ன, இளவரசர்கள் என்ன, அதிகாரிகள் என்ன, படைத் தளபதிகள் என்ன, மேலிடத்து சம்பந்தம் கொண்ட வேலைக்காரர்களும், மன்னர்களின் ஜால்ராக்களும் கூட நீதிபதிகளை மிரட்டிப் பணிய வைத்தனர். தாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற சிந்தனை இந்த அதிகார வர்க்கத்தில் வேரூன்றியதால் பெரும் குழப்பங்கள் அரங்கேறின. இதன் காரணமாக பொது மக்கள் அதிகாரிகளின் இரும்புப் பிடியில் சிக்கி அவதியுற்றார்கள்.
‘ஏழைக்கு ஒரு நீதி, செல்வந்தனுக்கு ஒரு நீதி’ என்கிற இழிநிலைக்கு நாடு தள்ளப்பட்டது. அந்த நிலையிலும் இறையச்சம் மேலிட, நீதி வழுவாமல் தீர்ப்பளித்த நீதிபதிகள் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். இறையச்சம் மிக்க நீதிபதிகள் சிறைவாசத்தையும் சித்ரவதையையும் ஏற்றுக் கொண்டார்களே தவிர அநீதிக்கும் அராஜகத்துக்கும் துணைநின்று இறைகோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை.

7. சம அந்தஸ்து, சம உரிமை

இஸ்லாமிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது அம்சம் சம அந்தஸ்தும், சம உரிமையும் ஆகும். இஸ்லாமிய அரசின் துவக்க காலத்தில் சம உரிமையும் சம அந்தஸ்தும் சிறப்பாக நிலைநாட்டப்பட்டது. இன, மொழி, பிறந்த வட்டாரம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை. இனம், குலம், குடும்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எவருமே உயர்வாக போற்றப்படவில்லை. எல்லோருமே சமம். எல்லோருமே ஒரே இறைவனை வழிபடுபவர்களே. எல்லோருமே இறுதி இறைத்தூதரை ஏற்றுக் கொள்பவர்களே என்கிற அடிப்படையில் நடத்தை, திறமை, ஒழுக்கம், சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் முன்னுரிமை வழங்கப்பட்டனர்.
கலீஃபா ஆட்சி அகற்றப்பட்டு ஏகாதிபத்திய மன்னராட்சி புகுத்தப்பட்டபோது எல்லாவிதமான துவேச பூதங்களும், மாச்சரிய சாத்தான்களும் சமூகத்தில் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டன. மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்,  மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் அந்தஸ்து கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. அரச குடும்பத்தை சேர்ந்த கோத்திரத்தினர் மற்ற கோத்திரத்தினரை விட சிறப்பிடம் பெற்றார்கள். அரபுக்களுக்கும் அரபு அல்லாதவர்களுக்கும் இடையேயான பாகுபாடுகள் கூர்மை பெற்றன. அதிகார மோகமும், பதவி வேட்கையும் அரபுக் குலங்களுக்கு இடையே இருந்த உறவுகளில் நஞ்சை பாய்ச்சின. இந்த உட்பூசல்களாலும் சண்டைகளாலும் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கு வரலாறே சான்று பகர்கிறது.

இமாம் ஹுசைனின் தொலைநோக்கு

இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிமுறையை மாற்றி ஏகாதிபத்திய மன்னராட்சியை நடைமுறைக்கு கொண்டுவந்ததால் ஏற்பட்ட விளைவுகள் இவை. முஆவியா தனது வாரிசாக தனது மகன் யஸீதை நியமித்தது தான் இந்த மாற்றங்கள் அனைத்துக்கும் துவக்கமாக அமைந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. யஸீதின் நியமனத்துக்குப் பிறகு குறுகிய காலத்தில் எல்லா தீய நடைமுறைகளும் அமலில் வந்தன என்பதை மறுக்க முடியாது. இந்த அதிரடி மாற்றம் (யஸீதின் நியமனம்) நிகழ்ந்தபோது இப்படிப்பட்ட தீய விளைவுகள் ஏற்படும் என்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இருக்கவில்லை. ஆனால் தொலைநோக்கும் இஸ்லாமியத் தெளிவும் கொண்ட எவரும் இந்த அதிரடி மாற்றத்தால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை கணித்துவிட முடியும்.
அரசு நிர்வாகத்திலும், அரசியல் விவகாரங்களில் இஸ்லாம் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் எல்லாமே இந்த அதிரடி மாற்றத்தால் சீர்குலைந்து போகும்; ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்பதையும் அவர்கள் கணித்து விடுவார்கள். இந்தக் காரணத்தினால் தான் இமாம் ஹுசைனால் இந்த அதிரடி மாற்றத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு, மெளனமாக இருக்க முடியவில்லை. தொலைநோக்குடன் எதிர்கால விளைவுகளை துல்லியமாகக் கணித்து விட்டதால் அதனை தடுத்து நிறுத்த வீறுகொண்டு எழுந்தார். விளைவுகள் குறித்து கவலைப்படாமல் அரசுக்கு எதிராக எழுந்து நின்றார். இமாம் ஹுசைன் எடுத்த தீர்க்கமான, உறுதியான நிலை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.
ஆனால் இமாம் ஹுசைனைப் பொறுத்தவரை இஸ்லாமிய அரசின் அடிப்படைக் கோட்பாடுகள் மிக மிக விலை மதிப்புமிக்க சொத்தாக இருந்ததது. அதற்காக எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்வதற்கு அவர் தயாராக இருந்தார். இந்த மகத்தான விழுமங்கள் மிக மிக உயர்வானவை; விலைமதிப்பு மிக்கவை; உயிர், உடமை எல்லாவற்றையும் விட மேன்மையானவை. தமது உயிரையும் தமது இதயத்துக்கினியவர்களின் நலனையும் பொருட்படுத்தாமல் யஸீதின் நியமனத்தை எதிர்த்து களத்தில் குதித்த இமாம் ஹுசைன் இதனைத்தான் வலியுறுத்த விரும்பினார். இந்த மகத்தான விழுமங்களை பாதுகாப்பதற்காக உயிரைக் கொடுப்பதும், குடும்பத்தவர்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்குவதும் மிகப் பெரிய விலை கிடையாது என்பதை இமாம் ஹுசைன் உணர்ந்தார். மகத்தான உயரிய கோட்பாடுகளுக்கு முன்னால் உயிர் எம்மாத்திரம் என அவர் நினைத்தார்.
இஸ்லாமிய மார்க்கமும் அது கொண்டுவரும் புரட்சிகரமான அரசியல் நடைமுறைகளும் ஆபத்துக்குள்ளாகி நிற்கும்போது ஒரு இறைநம்பிக்கையாளர் கைகட்டி வாய்மூடி மெளனமாக இருக்க முடியாது. தம்மிடம் இருக்கிற அனைத்தையும் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்காக அர்ப்பணித்துவிட முன்வர வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கே உலைவைக்கக் கூடிய மாற்றங்களை தடுத்துநிறுத்த தம்மிடம் இருக்கின்ற அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதற்கு இறைநம்பிக்கையாளர் முன்வரவேண்டும் என்றே இமாம் ஹுசைன் (ரழி) விரும்பினார்.
இமாம் ஹுசைனின் கிளர்ச்சியை, ஆட்சியை பிடிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக துவேஷத்துடன் முத்திரைகுத்தி ஒதுக்கிவிட ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் இமாம் ஹுசைன் இப்னு அலீக்கோ அது அடிப்படையில் ஒரு மார்க்கக் கடமையாக இருந்தது. அதனால் அவர் அந்த நோக்கத்திற்காக உயிரையே கொடுத்தார். ஷஹீத் என்கிற உயர்ந்த அந்தஸ்தை ஈட்டினார்.

நன்றி 
http://www.meipporul.in/

Tuesday, September 11, 2018

குர்ஆனியக் கண்ணோட்டத்தில் இமாம் ஹுஸைனின் போராட்டமும், உயிர்த்தியாகமும்

Imam Hussain Alaihissalam
ஆஷிகே மஃசூமீன்
அராஜகம், அட்டூழியம், இன சுத்திகரிப்பு மற்றும் அநியாயம் போன்ற சொற்பிரயோகங்களை செவியுறும் போதெல்லாம், அவற்றை எதிர்த்துப் போராடவேண்டும் எனும் உணர்வு மனதில் எழுவது மனிதனின் இயல்பாகும். என்றாலும், எவ்வாறு இவ்வியல்புக்கு செயல்வடிவம் கொடுப்பது என்பதே, இன்றைய சமூகத்தில் காணப்படும் மாபெரும் சவாலும், முடியாமையுமாகும். ஆனால், இஸ்லாமிய வரலாற்றிலே நாம் சற்று பின்நோக்கிச் சென்றால், அதனை நிகழ்த்திக் காட்டிய பல கதாநாயகர்களையும், அவர்களின் நேசர்களையும் கண்டுகொள்ள முடியும்.
சிலரின் வாழ்க்கைச் சரித்திரங்கள், அவர்கள் உயிரோடிருக்கும் வரைக்கும் பலம் பொருந்தியதாகக் காணப்படும். இன்னும் சிலர், மரணத்தின்பின் குறிப்பிட்ட காலம் மட்டும் பேசப்பட்டதன் பிறகு, காலவோட்டத்தில் மக்கள் மனங்களிலிருந்து மறக்கடிக்கப்பட்டுவிடுவர். ஆனால், காலத்தால் மறக்கடிக்கப்படுவதற்கு பிறரால் முயற்சித்தும் கூட, முடியாதுபோன சிலர், தம் சிந்தனையாலும், இலட்சியக்கொள்கையாலும் இன்றுவரை உயிர்ப்புடன் நினைவு கூறப்படுவோராகவே இருந்து வருகின்றனர். மேலும், அவ்வாறே இவர்கள் உலகு முடியும் வரைக்கும் நிலைத்திருப்பர்.
இதன்தொடரிலே தம் சிந்தனையாலும், இலட்சியக்கொள்கையாலும் இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சியில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியவரும், இமாம் குமைனி (ரஹ்) அவர்களின் ‘ஒவ்வொரு தின மும் ஆஷுறா, ஒவ்வொரு நிலமும் கர்பலா’ என்ற சுலோகத்துடைய கருத்தாக்கத்திற்குச் சொந்தக்காரருமான இறுதித்தூதரின் பேரர், சுவனத்தின் தலைவர் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், எப்போதும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறார்.
தியாகிகளின் தலைவரான இமாம் ஹுஸைனை, வரலாற்றுக் கோணத்தில் மட்டுமே தமிழுலகில் வாழும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், கர்பலா நிகழ்வைப் பொருத்தமட்டில் அவரையும், அவரின் தியாகத்தையும் மதிப்பிடவேண்டிய சூழலில் இன்று நாம் வாழ்ந்துகொண்டி ருக்கிறோம். இவ்வகையில், குர்ஆனிய கண்ணோட்டத்தில் அவர் குறித்த மதிப்பீட்டை இங்கே நான் பகிர்ந்துகொள்ள விரும்புறோம்.
நாம் எமது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டுள்ள திருக்குர்ஆன், பொதுவாக தெளிவான கருத்துக்களையும், சிலநேரங்களில் மறைமுகமான கருத்துக்களையும் கொண்டிருக்கின்றது. நாம் அன்றாடம் எமது தொழுகையில் ஓதும் சூறா ஃபாத்திஹாவிலும் கூட, இவ்வாறான ஒன்றைக் கண்டு கொள்கிறோம்.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
‘எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழியான, நிலையான வழியே எம்மை நேர்வழிப் படுத்துவாயாக. (அவ்வழியோ, உன்) கோபத்திற்கு உள்ளானோரினதோ, வழிதவறிப் போனோரினதோ வழி யல்ல’ என்று நாளாந்தம் ஓதி வருகிறோம்.
இவ்விரு வசனங்களிலே, ஒட்டுமொத்த கர்பலாத் தியாகத்தின் கருத்தாக்கங்களும் பொதிந்துள்ளன. அதாவது, நாம் இறைவனிடம் எமக்கு நேரான பாதையை வேண்டுகிறோம். ஆனால், அப்பாதை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது, நம்மத்தியில் கேள்விக் குறியாக இருக்கலாம். என்றாலும், எவர்களின்மீது அருள்பாளிக்கப்பட்டதோ அவர்களின் பாதை என்றும், மேலும் எவர்களின் மீது கோபம் இறங்கியதோ அல்லது வழிதவறிவிட்டனரோ அவர்களின் பாதையல்ல என்றும் மிகத்தெளிவாக அல்லாஹு தஆலா குறிப்பிடுவதன் மூலம் ‘சத்தியப்பாதை’யை வரையறுத்துத் தந்துள்ளான். எனவே, இவ்விரு வசனங்களினூடாகவும், அதேபோன்று ஏனைய குர்ஆனிய வசனங்களைக் கொண்டும் கர்பலா சம்பவத்தைப் பொருத்தமட்டில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் எந்த வழியில் உள்ளார் என்பதை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து பார்க்கலாம்.
இறைவனால் அருள்பாளிக்கப்பட்டோரின் பாதை
இறைவனின் அருளைப் பெற்றோருடைய பாதையிலே பயணிப்பதாயின், அவ்வாறு அருளைப் பெற்றோர் யார் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த அருள்பாளிக்கப்பட்டோர் யாரென திருக்குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்த்தால், ஆம் திருக்குர்ஆன் அதனை மிகத்தெளிவாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப்போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியோருடன் இருக்கிறார்கள். இவர்கள்தாம் மிக அழகான தோழர்கள். (சூரா நிஸா, வசனம் 67)
இங்கே இறைவன் தனது அருளைப் பெற்றோரைப் பற்றி குறிப்பிடுகையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லொழுக்கம் உடையவர்கள் என்போரைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளான். இவர்களின் பாதைதான் நாம் அன்றாடம் வேண்டும் ‘சிராதுல் முஸ்தகீம்’ (நேரான பாதை) ஆகும். இவ்விடத்திலே, நாம் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைக் கவனிப்போம்.
இவ்வசனத்தில் வந்துள்ள நபிமார்கள் என்ற அந்தஸ்தைத் தவிர, ஏனைய அனைத்து அந்தஸ்துகளிலும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைக் கண்டுகொள்ள முடியும். பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட குழந்தையான இமாம் ஹுஸைன் (அலை), பொய்யுரைக்காது எப்போதும் உண்மையாளராகவே இருந்திருக்கிறார். இவ்வகையில், இமாமவர்கள் ‘சித்தீகீன்’ எனும் உண்மையாளர்களின் வட்டத்திற்குள் நுளைந்துவிட்டார்.
தமது பாட்டனாரால் கொண்டுவரப்பட்டு, அவரது மறைவிற்குப்பின் தமது தந்தையாரால் பாதுகாக்கப்பட்ட சன்மார்க்கம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், தம்முயிரையும், தம்குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் இறைபாதையில் அர்ப்பணித்து ‘செய்யிதே ஷுஹதா’ எனும் உயிர்த்தியாகிகளின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டார். இவ்வகையில், இமாமவர்கள் ‘ஷ{ஹதா’ எனும் உயிர்த்தியாகிகளின் வட்டத்திலே இடம் பிடித்துக் கொண்டார்.
மேலும், ‘சாலிஹீன்’ எனும் நல்லொழுக்கம் உடையவர்களின் வட்டத்திற்குள்ளும் சுவனவாதிகளின் தலைவர்களில் ஒருவரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் காணப்படுகிறார். அவருடைய வரலாற்றை எவ்வளவுதான் ஆராய்ந்து பார்த்தாலும், ஒரு தீயகுணத்தை அவரிடம் எம்மால் கண்டுகொள்ள முடியாது. மாறாக, முழுநிறைவான நற்பண்புகளையே அவரிடம் கண்டுகொள்ள முடியும். இதற்கு முக்கிய காரணம், புனித அல்-குர்ஆனிலே பரிசுத்தப்படுத் தப்பட்டோரின் வரிசையில் அவரும் இடம்பெறுகிறார். இதனால், அவரின் பரிசுத்தத்தில் நாம் சந்தேகம் கொண்டால், திருக்குர்ஆனின் உத்தரவாதத்திலே சந்தேகிப்பதுபோல ஆகிவிடும். அல்லாஹ் தஆலா, பின்வருமாறு கூறுகிறான்.
اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا
வீட்டுடையோரே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தப் படுத்திவிடவே அல்லாஹ் விரும்புகிறான். (சூரா அஹ்ஸாப், வசனம் 33)
மேலும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடத்திலே ‘நற்பண்பு’ என்பது யாது? என வினவப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், இமாமவர்கள் ‘நீர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, சந்திக்கும் ஒவ்வொருவரையும் தன்னை விடவும் சிறந்தவராகவும், உயர்ந்தவராகவும் கருதுவதாகும்’ என்பதாகக் குறிப்பிட்டார்.

நற்பண்பு குறித்த இவ்விளக்கம், இமாமின் நற்பண்பு எவ்வாறு இருந்திருக்கும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது. இவ்வாறு, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், ‘சாலிஹீன்’ எனும் நற்பண்பாளரின் வட்டத்திற்குள் இருப்பதைக் காணலாம்.
எனவே, இறைவனால் அருள்பாளிக்கப்பட்ட கூட்டத்திலே இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும் உள்ளடங்குகிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் எனும் கடமை, இஸ்லாத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்பட்ட ஒரு பொதுக்கடமையாகும். அதுவும் நபிமார்களுக்கும், நபிமார்களின் வாரிசுகளுக்கும் மிகவும் வலியுறுத்தப்பட்ட கடமையாக இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰئكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையோர்தான் வெற்றி பெற்றவர்கள். (ஆல இம்ரான், வசனம் 104)

இஸ்லாமிய அரசு என்பது, இஸ்லாத்தின் மூலாதாரங்களால் கட்டியெழுப்பப்பட்டது. மேலும், அவற்றின் அடிப்படையிலேயே ஆட்சியைப் புரிதல் வேண்டும். ஆனால், அதற்கு மாற்றமாகவே உமையாக்களால் இஸ்லாத்திற்கு முரணான ஆட்சி அமைக்கப்பட்டது. அதனைக் கட்டிக்காக்கும் தோரணையில் முஆவியாவின் மகன் யஸீத், தந்தையின் தந்திரோபாயங்களால் ஆட்சி பீடம் ஏறினான். இவ்விடத்தில், யஸீத் யார்? என்பதையும், அவனின் குணாதிசயங்கள் என்ன? என்பதையும் கவனிப்பது சிறந்தது.

‘பனூஹாஷிம்’ குலத்தாருக்கு காலகாலமாக, தலைமுறை தலைமுறையாக எதிரிகளாக இருந்துவந்த உமையாக்களின் பரம்பரையில் தோன்றிய முஆவியாவிற்கும், மைசூன் பின்த் பத்ஜல் அல்-குலைப் அல்-நசரானியா என்ற பெண்ணுக்கும் ஹிஜ்ரி 26யில், ரமழான் பிறை 23ல் யசீத் பிறந்தான். இவனது வாழ்க்கை, முழுவதுமாக இஸ்லாத்திற்கு மாற்றமாகவே அமைந்திருந்தது. இஸ்லாம் ஹராம் (தடுக்கப்பட்டது) எனக் கூறியவற்றை, தனக்கு ஹலால் (ஆகுமானது) ஆகவும், ஹலாலை ஹராமாகவும் மாற்றி வாழ்ந்தான். மது, மாது, சூது என்பவை மட்டுமன்றி, நாய்-குரங்கு போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கக் கூடியவனாகவும் காணப்பட்டான். மேலும், சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடியவனாக இருந்த இவன், திருமணம் புரிவதற்கு ஹராமாக்கப்பட்ட பெண்களோடும் கூட, உடலுறவைக் கொண்டிருந்ததாக பின்வரும் வராலாற்று நூற்களில் பதியப்பட்டுள்ளது. (தபகாத்துல் குப்ரா, பா 5, பக் 66 – திக்ரு அப்தில்லாஹ் பின் கன்லலா, பா 4, பக் 283 – தாரீகுல் குலஃபா, பக் 209 – சவாயிகுல் முஹ்ரிகா, பக் 132 – அல் இஸாபா, பா 3, பக் 46 – யனாபிஉல் மவத்தா, பக் 326)
இவ்வாறான தீயபண்புகளை உடைய ஒருவனால், எவ்வாறு இஸ்லாமிய ஆட்சியை கட்டிக்காக்கவோ அல்லது நிலை நிறுத்தவோ முடியும். அவ்வாறு நாம் எதிர்பார்ப்பது, நமது முட்டாள்தனத்தையும், இஸ்லாமிய அரசியல் பற்றிய அறிவீனத்தையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, இவ்வாறான தீயபண்புகளைக் கொண்ட ஒருவனின் கையிலே இஸ்லாமிய ஆட்சி அமைந்திருப்பது தீமை என்பதும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதும் நம் அனைவராலும் புரிந்து கொள்வதற்கு முடியுமான ஒன்றே. இதேநிலை தொடர்ந்தால் இஸ்லாத்தின் தூரநோக்கு மங்கிவிடுவதனூடாக இஸ்லாத்தின் மேன்மையும், மகிமையும் அழிந்திவிடும். எனவே, இவ்வாறான ஒருநிலையில் இமாம் ஹுஸைன் (அலை), ‘நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்’ எனும் கடமையை மிகச்சிறப்பாக நிறைவேற்றுவதற்குத் தீர்மானித்தார்.

அப்போது, கூஃபா நகரவாசிகள், இக்கொடிய ஆட்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு ஆயிரக்கணக்கான கடிதங்கள் மூலமாக இமாமுக்கு அழைப்புவிடுத்தனர். இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில், இமாமவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியில் இறங்கி, அதிலே வெற்றியும் கண்டார்.
இந்நிலையில்தான் யஸீத், மக்காவில் தனது ஆளுநராக இருந்த வலீதை, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் தனக்காக ‘பைஅத்’ எனும் விசுவாசப்பிரமாணம் வாங்குவதற்கு அனுப்பிவைத்தான். ஆனால், இமாமவர்கள் வலீதை நோக்கி, இவ்வாறு கூறினார்.
‘வலீதே! நிச்சயமாக நாம் அஹ்லுபைத்தினர். இறைவன் (இம்மார்க்கத்தை) எம்மைக் கொன்டே ஆரம்பித்தான். அதேபோல், எம்மைக் கொன்டே அதனை முடித்தும் வைப்பான். குடியும், பாவமும், நல்லோரைக் கொல்லும் வக்கிரபுத்தியும் கொண்ட யஸீதைப்போன்ற ஒருவனுக்கு, என்னைப்போன்ற ஒருவர் விசுவாசப்பிரமாணம் செய்யமாட்டார் என்பதை நீர் அறியமாட்டீரா?.’
இதனைத் தொடர்ந்து, பதவிமோகம் கொண்ட யஸீத், இமாம் ஹுஸைனைக் கொன்றேனும் விசுவாசப் பிரமாணத்தை வாங்கிவிட வேண்டும் என்ற நிலைக்கு வந்தான். அதற்கான திட்டங்களையும் தீட்டினான். மறுபுறத்திலே, இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தம்குடும்பத்தோடும், தோழர்களோடும் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு, கூஃபா நகருக்கு செல்லும் நோக்கில் மக்காவுக்குச் சென்றார். ஆனால், ‘அபயமளிக்கும் இந்நகரத்தின்மீது சத் தியமாக’ என்று இறைவன் சத்தியமிட்டுக் கூறிய புனிதத்தலத்திலே வைத்து, இமாம் ஹுஸைனையும், அவரது ஆதரவாளர்களையும் கொலை செய்துவிடுவதற்கு, யசீதின் கைக்கூலிகள் திட்டம் தீட்டினர். இதனால், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஹஜ்ஜைக் கூட முழுமையாக நிறைவேற்றுவதற்கு முடியாமல், உம்ராவை நிறை வேற்றிவிட்டு கூஃபா நோக்கிப் புறப்பட்டார்.

இமாமின் கர்பலாவை நோக்கிய பயணத்தை சிலர் தவறாகச் சித்தரிக்கின்றனர். அவர் கர்பலாவை நோக்கிச் செல்வதை பல ஸஹாபாக்கள் தடுத்திருந்த போதிலும், அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் சென்றிருந்தார் எனவும், அதனால்தான் கொலை செய்யப்பட்டார் எனவும் இமாம்மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், இக்கர்பலாவை நோக்கிய பயணம் உண்மையிலே இறைவனால் இறைத்தூதருக்கு முன்னறிவிப்புச் செய்யப்பட்ட ஒன்றே. எனவேதான் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் அங்கே செல்வதையும், அங்கேயே வீரமரணத்தை அடைந்துகொள் வதையும் நாம் காண்கிறோம். இதன்படி, நடந்தேறியவை இறைவனது முன்னறிவிப்பு என்பதையும், இதற்காக பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது துயரை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் புரிந்து கொண்டால், இவ்விடயத்திலே இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடத்தில் குற்றம் கண்டுகொள்ள முடியாது.
மேலும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் யுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்றிருக்கவில்லை. அவர் தம்மோடு அழைத்துச் சென்றிருந்த வயது முதிர்ந்தவர்களும், பெண்களும், குழந்தைகளும் சான்றாக உள்ளனர். போரிடச்செல்பவர் இவ்வாறு சென்றிருக்க முடியாது. அதேபோன்று, இமாமவர்கள் கூஃபா நோக்கிப் புறப்பட்ட மாதமும், யுத்தம் செய்வதற்கு இறைவனால் தடுக்கப்பட்ட மாதமாகும். இம்மாதம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங் ளையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்பு வாய்ந்தவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். (சூரா தௌபா, வசனம் 36)
எனவே, திருக்குர்ஆனையே தம்வாழ்வாகக் கொண்டிருந்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஒருபோதும் இம்மாதத்திலே யுத்தத்திற்காக புறப்பட்டிருக்க மாட்டார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறிருக்க, யுத்தம் செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட முஹர்ரம் மாதத்திலே, இமாமவர்கள் ஏன் யுத்தம் செய்வதற்குத் தள்ளப்பட்டார்? என்ற வினா எழலாம். இதற்கு, மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆனிய வசனத்தின் தொடரில் பதிலைக் கண்டுகொள்ள முடிகிறது.
وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ
இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மா தங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (சூரா தௌபா, வசனம் 36)
இவ்வசனத்தில் அம்மாதத்திலே யுத்தம் செய்வதற்குத் திணிக்கப்பட்டால், நாமும் யுத்தம் செய்வதற்கு இறைவன் அனுமதியை தந்திருக்கிறான். எனவேதான், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், யஸீதிற்கு பைஅத் செய்தால் அது இறைகுற்றமாக ஆகிவிடும் என்று இமாமவர்கள் பைஅத் செய்யாதுவிட்டதன் காரணமாக, கர்பலாக் களத்திலே யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அல்லாஹு தஆலாவுடைய அருள்வாக்கின் அடிப்படையில் இமாமவர்கள் யுத்தத்தை மேற்கொண்டிருந்ததில் தவறேதுமில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
முஹர்ரமாத் எனும் பத்து நாட்கள்
وَالْفَجْرِۙ‏

விடியற்காலையின் மீது சத்தியமாக
وَلَيَالٍ عَشْرٍۙ‏

10 இரவுகள் மீது சத்தியமாக
இவ்விருவசனங்களில் வரும் பத்து நாட்கள் என்பதை சில முபஸ்ஸிர்கள், துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் என்பதாகவும், இன்னும் சில முபஸ்ஸிர்கள் முஹர்ரம் மாதத்தின் பத்து நாட்கள் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். திருக்குர்ஆன் பல்வேறு அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால், இக்கருத்துக்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த சூராவில் தொடர்ந்துவரும் வசனங்கள், அநியாயக்காரர்கள் மற்றும் அப்படியான ஆட்சியாளர்களின் நிலை என்னவானது என்பதையும், அவர்களின் குணாதிசயங்களையும் குறிப்பிடுகின்றன. யசீதியர்களால் அநீதி, அட்டூழியங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட இக்கர்பலா யுத்தமானது, முன்சென்ற நபிமார்களுடன் அக்கால அநியாயக்கார ஆட்சியாளர்கள் மேற்கொண்ட யுத்தங்களைப் போன்றதாகும். நபிமார்கள் மரணித்திருந்தபோதிலும், அவர்களின் அந்த புரட்சிகரமான பணி ஓயவில்லை என்பதையும், அது அவர்களின் பிரதிநிதிகளால் உயிர்ப்புடன் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பச்சிளம் குழந்தையாக இருந்த அலீ அஸ்கரின் தாகமும், தாகம் போக்கிவைப்பதற்காகச் சென்ற அபுல் பழ்ல் அப்பாஸின் தியாகமும் கர்பலாவின் அகோரத்தை புலப்படுத்தின. இவ்வாறு கர்கலாக்களத்திலே பலமுஃமீன்கள் தமது இரத்தத்தைச் சிந்தியதனூடாக இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக தம்மையே அர்ப்பணித்திருந்ததைக் காணலாம்.

திருப்தியடைந்த ஆத்மா
அல்லாஹு தஆலாவின் திருப்தியையும், சாந்தியையும் நாடியே கர்பலாப் போராட்டம் நிகழ்ந்திருந்தது. உண்மையில் இமாம் ஹுஸைனின் தரப்பிலே, கர்பலாவில் உயிர் நீத்தோரின் ஆத்மாக்கள், இமாமின் ஆத்மாவோடு இணைந்து சாந்தியைப் பெற்றநிலையில் இறைவனிடம் மீண்டிருக்கின்றன. சாந்தியைப் பெற்ற ஆத்மா குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌ۚ‏ فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ‏ وَادْخُلِىْ جَنَّتِى

‘சாந்தியைப் பெற்ற ஆத்மாவே! அவனைக் கொண்டு நீ திருப்தியடைந்த நிலையிலும், உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்த நிலையிலும் நீ உன் இறைவனின் பக்கம் மீண்டுவிடு! எனவே, நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு (என்றும் கூறுவான்)’. (சூரா பஜ்ர், வசனங்கள் 27-30)

அதேபோன்று, இஸ்லாத்தின் வளர்;;ச்சிக்கு தன்னுயிரைக்கூட தியாகம் செய்தோரை ‘மரணித்தவர்கள்’ என்று வாய்கூசாமல் சிலர் அழைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு கூறுவது இறைக்கட்டளைக்கு மாற்றமாகும். இது குறித்து அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகிறான்.
ولَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏

‘இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை ‘(அவர்கள்) இறந்துவிட்டார்கள்’ என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்களே. எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்’. (சூரா பகரா, வசனம் 154)

மேலும் ஓர் இடத்தில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்.

وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْواتا بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ ‏

‘(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ணிவிடவே வேண்டாம். என்றாலும், அவர்கள் தம் இறைவனிடத்தில் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது’. (சூரா ஆல இம்ரான், வசனம் 169)

இவ்விரு வசனங்களையும் தொகுத்து நோக்கும்போது, இஸ்லாத்தை உயிர்ப்பிக்கும் போராட்டத்திலே உயிரைத் தியாகம் செய்த ஷஹீதுகளை நாம் மரணித்தோர் என்று கூறுவதை இறைவன் தடுத்துள்ளான். அத்தோடு, அவர்கள் உயிரோடுள்ளதையும், உணவளிக்கப்படுவதையும் அல்லாஹு தஆலா கூறிவிட்டு, இதனை நாம் உணர்ந்து கொள்ள மாட்டோம் என்பதாகக் குறிப்பிட்டுள்ளான்.
எனவே, இஸ்லாத்தை உயிர்ப்பிக்கப் போராடிய நிலையில் ஷஹீதாகிய இமாம் ஹுஸைனும், தமது தோழர்களும் இன்றும் உயிருடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் இன்றுவரையிலும் ‘ஹுஸைனிய உணர்வு’ நம்மனைவரிடமும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இமாமை நேசிப்பது குர்ஆன் கூறும் கடமை
இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை நேசிப்பது மார்க்கக்கடமை மட்டுமன்றி, பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள், இப்புனித மார்க்கத்தை எமக்கு எத்திவைத்த தூதுத்துவப் பணிக்கு பிரதியுபகாரமாகக் கேட்கும் கூலியே இதுவாகும். உண்மையில், இது இறைவனின் கட்டளையும் கூட. இதுவிடயத்தில் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى‌ؕ

‘(மார்க்கத்தை உங்களுக்கு எத்திவைத்தேனே) அதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை, (என்) உறவினர்களை நேசிப்பதைத் தவிர என கூறுவீராக’. (அஷ்ஷுறா, வசனம் 23)

எனவேதான் ‘அஹ்லுல்பைத்’தினரை நேசிப்பது எம்மனைவர் மீதும் கடமையான ஒன்றாகும். இறைத்தூதருக்குச் செலுத்தும் கூலியாகவே இது இருக்கிறது. இப்படியானதொரு சிறப்பம்சத்தை, உமையாக்கள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், யசீதுக்கு எதிரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் போராட்டம் நியாயமற்றதாக இருந்திருப்பின், அவரை நேசிக்குமாறு கூறுகின்ற குர்ஆனின் கட்டளையும் நியாயமற்றதே. அதனால், இமாமவர்கள் எதனைச் செய்தாலும் அதற்கான அங்கீகாரத்தை திருக்குர்ஆன் வழங்கியிருப்பதை இவ்வசனத்தின் மூலம் மறைமுகமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இங்கே, கர்பலாக்களத்திலே சண்டையிட்டுக்கொண்ட இரு தரப்பினருக்கும் மத்தியில் எத்தரப்பினரை நாம் ஆதரிக்க வேண்டும்? யார்மீது அன்பு செலுத்துவது நமது கடமை? என்பவற்றைப் புரிந்துகொள்வதற்கு மேலே எடுத்துக் காட்டப்பட்ட திருக்குர்ஆனிய வசனங்கள் நமக்கு உதவு கின்றன.
எங்கெல்லாம் அநீதியும், அட்டூழியமும் இடம் பெறுகிறதோ அங்கெல்லாம், பல்வேறு தியாகங்களைச் சுமந்துவந்த கர்பலாப் போராட்டத்தின் கதாநாயர்களைப் போல் நாமும் நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டுவதனூடாக இஸ்லாத்தின் உயரிய விழுமியங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இதனையே, கர்பலாக்களமும் எம்மிடம் எதிர்பார்க்கிறது. இவ்-எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பது, எம்மனைவரினதும் கையிலேயே தங்கியிருக்கிறது. எனவே, நாம் அனைவரும் புனித கர்பலாவின் ஹுஸைனியப் பாதையிலே புறப்படுவதற்குத் தயாராகுவோம்.
‘ஒவ்வொரு தினமும் ஆஷுறா, ஒவ்வொரு நிலமும் கர்பலா’