Wednesday, August 28, 2024

ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது நடைமுறைவாத இராஜதந்திரம்

 Abbas Araghchi: Iran’s new foreign minister and his diplomacy of pragmatism

ஈரான் இஸ்லாமிய குடியரசு அரசியலமைப்பின் படி மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதி துறைசார் நிபுணர்களைக் கொண்ட அமைச்சரவையை தெரிவுசெய்து மஜ்லிஸுக்கு (பாராளுமன்றத்திற்கு) முன்மொழிவார். பரிந்துரைக்கப்பட்ட அனைவரின் தகுதி தராதரங்களையும் நன்கு பரிசீலனை செய்து மஜ்லிஸ் அங்கீகரித்தால் மட்டுமே ஒருவர் அமைச்சராக முடியும். (பாராளுமன்ற அங்கத்தவர் எவரும் அமைச்சராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.)

By Xavier Villar

வெளியுறவு மந்திரி பதவிக்கு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயித் அப்பாஸ் அரக்சி புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2024 பாராளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்று, ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியானுக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசின் அடுத்த உயர்மட்ட இராஜதந்திரியாக தெரிவுசெய்யப்பட்டார்.

61 வயதான அரக்சி பல தசாப்தங்களாக நீடித்த விரிவான பின்னணியைக் கொண்ட ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி ஆவார்.

ஈரானுக்கும் உலக சக்திகளுக்கும் இடையிலான 'கூட்டு விரிவான செயல் திட்டம் (ஜே.சி.பி.ஓ.ஏ) என்றும் அழைக்கப்படும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டோரில் ஒருவராக அரக்சி அங்கீகாரம் பெற்றுள்ளார்.  இந்த (ஜே.சி.பி.ஓ.ஏ) ஒப்பந்தம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் மே 2018 ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டது.

அரக்சியின் இராஜதந்திர வாழ்க்கை, மறைந்த முன்னோடி அமீர்-அப்துல்லாஹியானுக்கு இணையானது. மே 19ல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன அமீர்-அப்துல்லாஹியானைப் போலவே, அரக்சியும் வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு அரசியல் ஆய்வாளராக தனது தொழிலைத் தொடங்கினார்.

தெஹ்ரானில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்த அரக்சி ஆரம்பத்தில் தனது இரண்டு மூத்த சகோதரர்களுடன் இணைந்து வணிகத்தில் ஈடுபட்டார், இப்போது அவரின் சகோதர்கள் தொடர்ந்து குடும்ப வணிகத்தை நிர்வகித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தையின் சக்தி’ (The Power of Negotiation’) என்ற தனது புத்தகத்தில், அரக்சி தனது வணிக குடும்ப பின்னணி உலகளாவிய இராஜதந்திரம் குறித்த ஒரு தனித்துவமான முன்னோக்கை எவ்வாறு வழங்கியது என்பதை விவரிக்கிறார்.

அந்த நேரத்தில் பல இளம் ஈரானியர்களைப் போலவே, அரக்சியும் சதாமின் மேற்கு ஆதரவு பாத்திஸ்ட் ஆட்சிப் படைகளுக்கு எதிராக புனித பாதுகாப்பில் (1980-1988) போரிட முன்வந்தார், அவர் தனது அரசியல் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துக்காட்ட இந்த அனுபவத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

"இஸ்லாமிய ஈரானுக்கு எதிரான ஈராக்கின் போருக்கு உறுதுணையாய் இருந்த பிரெஞ்சு சூப்பர் எடென்டர்ட் போர் விமானங்கள், பிரிட்டிஷ் சீஃப்டென் டாங்கிகள், ஜெர்மன் இரசாயன ஆயுதங்கள், அமெரிக்க அவாக்ஸ் விமானங்கள் மற்றும் சவுதி டாலர்கள் ஆகியவற்றை நாங்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம்," என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணை திட்டம் குறித்த 2018 உரையில் அவர் ஞாபகமூட்டினார்.

இஸ்லாமிய புரட்சி காவலர் படையுடன் (.ஆர்.ஜி.சி) அவர் ஆற்றிய தன்னார்வ பணியும் அவர் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

2015 நேர்காணல் ஒன்றில், அவர் 1989 இல் வெளியுறவு அமைச்சகத்தில் சேர்ந்தபோது, அவர் அதிகாரப்பூர்வமாக ஐ.ஆர்.ஜி.சி.யில் இருந்து பிரிய நேர்ந்தது, ஆனால் அவரது இதயத்தின் ஆழத்தில், அவர் இன்னும் அதனுடன் இணைந்திருந்தார்.

அரக்சி சர்வதேச உறவுகளில் பட்டமும், தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும் (1991), ஐக்கிய இராச்சியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் அரசவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தனது இராஜதந்திர வாழ்க்கை முழுவதும், அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார், அதே நேரத்தில் தொடர்ந்து பதவிகளில் உயர்ந்து வருகிறார்.

அவர் 1999 முதல் 2003 வரை பின்லாந்திற்கான ஈரானின் தூதராக பணியாற்றினார் மற்றும் 2003 முதல் 2004 வரை வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஐரோப்பா துறைக்கு தலைமை தாங்கினார். ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டம் தொடர்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளின் போது அதில் கலந்துகொண்டார்.

2005 ஆம் ஆண்டில், அரக்சி சட்ட விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். 2008 இல், அவர் ஜப்பானுக்கான தூதராக ஆனார், 2011 இல், அவர் ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டார், 2013 வரை அவர் அந்த பாத்திரத்தை வகித்தார்.

2013 ஆம் ஆண்டில் ஹசன் ரூஹானி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய வெளியுறவு மந்திரி ஜவாத் ஷரீஃப் அரச்சியை அரசியல் விவகாரங்களுக்கான தனது துணையாக நியமித்தார்.

பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த அமெரிக்க தூதர் வெண்டி ஷேர்மன், ஜேசிபிஓஎ உடன்படிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அவரது நினைவுக் குறிப்புகளில் அரச்சியை "தீர்மானகரமான, மற்றும் அமைதியான" நபர் என்று விவரித்தார்.

தொடர் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது, அவரது உணர்ச்சிகள் அல்லது எதிர்வினைகளை அறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்ததன் காரணமாக அரக்சி தன்னை ஒரு தீவிர இராஜதந்திரி என்ற தனித்துவமான தோற்றத்தை வளர்த்துக் கொண்டார்.

வெளியுறவு மந்திரி பாத்திரத்திற்கு ஜனாதிபதி பெசெஷ்கியானால் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை மீதான நாடாளுமன்றக் குழுவின் முன் தோன்றுவதற்கு முன்னர் "விரிவான, செயலூக்கமான மற்றும் பயனுள்ள வெளியுறவுக் கொள்கை" ("Comprehensive, Active, and Effective Foreign Policy") என்ற தலைப்பில் தனது நிகழ்ச்சி நிரலை விளக்கமாக தெளிவுபடுத்தினார்.

"தேசிய நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் தேசிய செல்வத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்," "தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அதிகாரத்தை உயர்த்துதல்", "கண்ணியத்தைப் பேணுதல் மற்றும் அந்தஸ்தை உயர்த்துதல்" உள்ளிட்ட பதினான்காவது நிர்வாகத்திற்கான முக்கிய நோக்கங்களை குறிப்பிட்ட ஆவணம் எடுத்துக்காட்டுகிறது.

"அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியின் விரோதக் கொள்கைகளை" எதிர்த்துப் போராடுவதற்கான அவரது நோக்கத்தை வலியுறுத்தும் அதேவேளையில், ஐரோப்பாவுடன் சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து ஒரு "கெளரவமான, செயல்பாட்டு மற்றும் வாய்ப்பு சார்ந்த தொடர்புகளை" வளர்ப்பதற்கு அரக்சி உறுதியளித்துள்ளார்.

அவரது திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மற்றொரு முன்னுரிமை ஈரானின் உரிமைகள் மற்றும் தாழ்வாரங்கள் மற்றும் வர்த்தக தொடர்பு வழிகளில் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும். அராச்சி "நாட்டின் புவியியல் திறன்களை, குறிப்பாக பிராந்திய வர்த்தக தொடர்பு, சர்வதேச வர்த்தக தொடர்பு மற்றும் எரிசக்தி துறையில் பிறர் சுரண்டுவதை தடுக்க" மற்றும் ஆற்றல் இராஜதந்திரத்தை திறம்பட பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

"சீனா மற்றும் ரஷ்யாவுடன் பலமான உறவுகளைப் பேணுதல், இந்தியா, இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்," "அண்டை நாடுகளுடன், குறிப்பாக எல்லைப் பகுதிகளில், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை எளிதாக்குதல்," மற்றும் "நீர் இராஜதந்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலமாக காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வது" ஆகியவை கூடுதல் இலக்குகளில் உள்ளடங்கி உள்ளன.

"பொருளாதார இராஜதந்திரம்" என்ற துறையில், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துவதையும், தொழில்முனைவோர், குறிப்பாக தனியார் துறைக்குள், தொழில்முனைவோரை ஆதரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதை அரக்சி நோக்கமாகக் கொண்டுள்ளார்.

புதிய வெளியுறவு மந்திரி தனது பாத்திரத்திற்கான தொடர்ச்சியான முக்கிய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ், யூரேசிய பொருளாதார ஒன்றியம் மற்றும் பிற பிராந்திய அமைப்புகளின் திறனை அதிகப்படுத்தி, அதிபர் ரெய்சியின் நிர்வாகத்தால் நிறுவப்பட்ட அண்டை நாடுகளுடனான நல்ல உறவு கொள்கையை முன்னெடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவை உள்ளடக்கும் வகையில் "இராஜதந்திர களத்தை" விரிவுபடுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அவரது முதன்மை நோக்கங்களில், அரக்சி "விடுதலை போராட்ட குழுக்கான விரிவான ஆதரவு மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள்" மீது கவனம் செலுத்தும் ஒரு "சமநிலையான மற்றும் செயல்பாட்டு இராஜதந்திரத்திற்கு" வாதிடுகிறார்.

ஈரானின் தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரதிநிதித்துவங்களின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கும், "சகோதரத்துவ, பொறுப்பான மற்றும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான" ஒரு உள்நாட்டு அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதற்கும் அவர் முன்மொழிகிறார்.

தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை, பிற அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, சக்தியை வளப்படுத்தல் மற்றும் நிர்வாகத்திற்கான ஒரு முக்கியமான கருவியாக இராஜதந்திரத்தை உயர்த்துவதை அரக்சி நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அவரது அணுகுமுறையில் "கடின சக்தி, மென் சக்தி, சாதுரியமான சக்தி மற்றும் அர்த்தமுள்ள சக்தி போன்ற சக்தியின் கூறுகளுடன் ஆன்மீக கூறுகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு" அடங்கும்.

கூடுதலாக, "இராணுவ மற்றும் இராஜதந்திர துறைகளுக்கு இடையே முழுமையான ஒருங்கிணைப்புடன், செயலூக்கமான பிராந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரத்தின் மூலமாக பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நாட்டின் பாதுகாப்பு திறனைப் பேணுவதற்கும் பலப்படுத்துவதற்கும்" அவர் உறுதிபூண்டுள்ளார்.

"ஈரானுடன் நட்பு கொண்ட அல்லது அதனுடன் தொடர்புபட்ட நாடுகள் மற்றும் அமைப்புகளைப் பலப்படுத்தவும், அந்நாட்டின் புவிசார் அரசியல் ஆழத்தை, குறிப்பாக எதிர்ப்பு அச்சுக்குள், விரிவாக்கவும் ஒருங்கிணைக்கவும்" அவர் நோக்கம் கொண்டுள்ளார்.

அவரது திட்டத்தில், ஆராச்சி "ஆபத்துக்கான இடங்கள் மற்றும் அச்சுறுத்தும் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களுக்கு உறுதியான, பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் பதிலளிப்பதை" வலியுறுத்துகிறார்.

"ஈரானுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை, குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்குள்" மீண்டும் கட்டியெழுப்பப்படுவதைத் தடுப்பதற்கான அவரது நோக்கத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தொகுத்து கூறுவதானால், அவரது திட்டம் இராஜதந்திரத்திற்கும் இராணுவ எந்திரத்திற்கும் இடையிலான மொத்த ஒருங்கிணைப்பையும், ஐரோப்பாவை நோக்கிய ஒரு நடைமுறைவாத அணுகுமுறையான "எதிர்ப்பின் அச்சுக்கு" நிபந்தனையற்ற ஆதரவையும், .நா. பாதுகாப்பு சபையில் ஈரான்-விரோத கூட்டணி உருவாவதைத் தடுப்பதையும், மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

கட்டுரையாளர் சேவியர் வில்லர் இஸ்லாமிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் ஸ்பெயினை தளமாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்.

https://www.presstv.ir/Detail/2024/08/21/731796/abbas-araghchi-iran-new-foreign-minister-diplomacy-pragmatism

தமிழில்: தாஹா முஸம்மில்