May 1, Iran's Teachers' Day; Memorial Day of Ayatollah Morteza Motahhari
மே 1, ஈரானின் ஆசிரியர் தினம்;
ஆயதுல்லாஹ் முர்தசா
முதஹ்ஹரியின் நினைவு நாள்
இஸ்லாமிய மார்க்க பேரறிஞர், தத்துவஞானி, விரிவுரையாளருமான ஆயத்துல்லாஹ் முர்தசா முதஹ்ஹரி (1919 - 1979) அவர்கள் கல்விக்காக
ஆற்றிய அளப்பரிய சேவையின் நிமித்தம் அன்னாரின் நினைவு
நாளை ஈரான் இஸ்லாமிய குடியரசு ஆசிரியர் தினமாக பிரகடணப்படுத்தி கொண்டாடிவருகிறது.
1979 ஆம் ஆண்டு, மே முதலாம் திகதி இஸ்லாமியப் புரட்சியின் தந்தை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தலைமையில் ஈரானிய மக்கள் இயக்கத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு வீண் முயற்சியாக, இஸ்லாமிய மற்றும் ஈரானின் எதிரிகளால், தெஹ்ரானில் உள்ள ஒரு பொது இடத்தில் பேராசிரியர் ஆயத்துல்லாஹ் முர்தசா முதஹ்ஹரி படுகொலை செய்யப்பட்டார். அன்னாரின் ஷஹாதத்தை நினைவு கூரும் முகமாக இந்நாள் இஸ்லாமிய குடியரசின் நாட்காட்டியில் 'ஆசிரியர் தினம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அவர் பிப்ரவரி 3,
1919 அன்று ஈரானின் கோரசன் மாகாணத்தில் உள்ள
புனித நகரமான மஷ்ஹத் அருகே உள்ள ஃபாரிமான் நகரில் ஒரு ஆன்மீக குடும்பத்தில்
பிறந்தார். தனது சொந்த ஊரில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர், புனித அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய போதனைகள் மீதான அன்பும்
ஆர்வமும் அவரை மஷ்ஹத் அறநெறியில் சேர வழிவகுத்தது. 1937 ஆம் ஆண்டு அவர் உயர்கல்வியைத் தொடர கும்மிலுள்ள
அறநெறி பாடசாலைக்கு சென்றார், மேலும்
தத்துவஞானியும் புனித அல்குர்ஆனின் விரிவுரையாளருமான அல்லாமாஹ் செய்யித் முஹம்மது
ஹுசைன் தபதபாயி மற்றும் பல புகழ்பெற்ற அறிஞர்கள், குறிப்பாக இஸ்லாமியப் புரட்சியின் தந்தை இமாம் கொமெய்னி
(ரஹ்) ஆகியோரின் தத்துவங்களில் பயனடைந்தார். புனித கும்மிலுள்ள அறநெறி பாடசாலையில் 12 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்தில், அவர் இமாம் கொமெய்னியின் நெறிமுறைகள், தத்துவம், ஞானம், நீதித்துறை மற்றும் கொள்கைகள் குறித்த கற்கைநெறிகளில் கலந்து தன்னை
பயிற்றுவித்தார்.
அவர் குறுகிய காலத்தில் புனித அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்
இஜ்திஹாத் அந்தஸ்தை பெற்றார். அவர் அக்காலத்தின் பிரபலமான மற்றும் நன்கு
அறியப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் மாறினார். மேலும் அவரது வகுப்புகள் அறிவு மற்றும் ஞானத்திற்கான தேடல் கொண்ட மாணவர்களால் நிறைந்திருந்தன.
இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவரான ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ கமேனியி, ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரியின் தனித்துவமான பண்பை
விவரிக்கிறார்: “தியாகி முதஹ்ஹரி கல்வியை தனது முக்கியமான பணியாகக் கருதினார்.
அவர் வகுப்பறையில் ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல், அவரது நண்பர்கள் மத்தியிலும், சமூகத்திலும் ஒரு திறமையான ஆசானாக
அறியப்பட்டார். அவர் இறையச்சமுள்ளவர், தூய்மையான இதயம் கொண்டவர், எப்போதும் புனித அல்குர்ஆனை ஓதி, அல்லாஹ்வின் முன்னிலையில் கண்ணீருடன் நள்ளிரவு தொழுகைகளைச் செய்தவர். அவர்
கற்றல் மற்றும் அறிவியலில் அதிக கவனம் செலுத்தினார். அவர் அறிவியலில் பேராசிரியராக
இருந்தபோதும், தனது வாழ்க்கையின் இறுதி வரை கற்றலைத்
தேடிக்கொண்டிருந்தார்.”
பேராசிரியர் ஆயத்துல்லாஹ் முர்தசா
முதஹ்ஹரி நவீன காலத்தின் மிக முக்கியமான அறிவுசார் மற்றும் கலாச்சார பிரமுகர்களில்
ஒருவர். இஸ்லாமிய போதனைகளில் மிக உயர்ந்த தேர்ச்சியுடன், தற்போதைய தலைமுறையின் எண்ணற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக புதுமையான
கருத்துக்கள், நவீன சிந்தனைகள் மற்றும் இஸ்லாத்தைப் பற்றிய
சரியான புரிதலைக் கொண்டிருந்த பேராசிரியர் ஆயத்துல்லாஹ் முர்தசா முதஹ்ஹரி, சமூக ஆர்வலர்கள்,
குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை
அறிவூட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி நாடுகடத்தப்பட்ட காலத்தில், உலமாக்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடையேயான
ஒருங்கிணைப்பின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக பேராசிரியர் முதஹ்ஹரி இருந்தார்.
அவர் எப்போதும் இஸ்லாத்தில் மிகவும் அறிவார்ந்த
நிபுணராகவும்,
சமகால நிலைமைகளை அறிந்த ஒரு சக்திவாய்ந்த
தத்துவஞானியாகவும் போற்றப்படுகிறார்.
ஆயத்துல்லாஹ் முர்தசா முதஹ்ஹரி தத்துவம், மதம், பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு முக்கிய துறைகளில் தனது கருத்துக்களை
வெளிப்படுத்தினார். இளம் தலைமுறையினர்க்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பேராசிரியர்
முதஹ்ஹரியின் முக்கிய நோக்கமாகும், மேலும் அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் 1965 ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருதைப் பெற்ற
"தஸ்தான்-இ ரஸ்தான்" அடங்கும். பேராசிரியர் முதஹ்ஹரி
இஸ்லாம், ஈரான் மற்றும் வரலாற்று தலைப்புகள் குறித்து பல
புத்தகங்களை எழுதியுள்ளார். புத்தகங்களை எழுதுவதற்கு மேலாக இஸ்லாம் பற்றிய
சொற்பொழிவுகளை வழங்குவதிலேயே அவர் பெரும்பாலும் பணியாற்றினார். இருப்பினும், அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மாணவர்கள் சிலர் இந்த சொற்பொழிவுகளை எழுதி அவற்றை நிர்வகித்து
புத்தகங்களாக வெளியிடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் மார்க்க கல்வி மற்றும் இஸ்லாமிய போதனைகள் துறையின் தலைவராக
பணியாற்றினார். அவர் படுகொலை செய்யப்பட்ட காலத்தில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பு சபையின் தலைவராகவும், புரட்சிகர சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றிக்கொண்டிருந்தார்.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் போது
பொருத்தமான அரசியல் கட்டமைப்பிற்கு இஸ்லாமிய ஜனநாயகத்தை வலியுறுத்தியதில் முதஹ்ஹரிக்கு
முக்கிய பங்கு உள்ளது. அவரது செயல்பாடுகள்
காரணமாக, அவர் புரட்சிகர
மக்களால் ஆதரிக்கப்பட்ட அதேவேளை இஸ்லாமிய ஃபுர்கான் குழு போன்ற எதிர்ப்புக்
குழுவால் வெறுக்கப்பட்டார். மே 1, 1979 அன்று, யதொல்லாஹ் சஹாபியின் வீட்டில் நடந்த
கூட்டத்திலிருந்து வெளியேறிய போது, தெஹ்ரானில் முர்தசா முதஹ்ஹரி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை
செய்யப்பட்டார். அப்படுகொலைக்கு ஃபுர்கான் குழு பொறுப்பேற்றது.
சர்வதேச ரீதியாக யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட உலக ஆசிரியர் தினத்தை அக்டோபர் 5 ஆம் திகதி உலகில் பல நாடுகளால் கொண்டாடப்பட்டாலும் ஜஃபரீ
மத்ஹபனின் மார்க்க அறிஞர், தத்துவஞானி, விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதியான ஆயத்துல்லாஹ் முர்தசா முதஹ்ஹரியின்
தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஈரானில் மே முதலாம் திகதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் என்பது இளைய தலைமுறையினருக்கு கல்வி கற்பதில் ஆசான்கள் ஆற்றிய
சிறப்புப் பங்களிப்புகளுக்காக அவர்களை கௌரவிக்கும் வைபவங்கள் உட்பட அவர்களின்
முயற்சிகளைப் பாராட்டி,
சேவைகளை அங்கீகரிக்கும் ஒரு சிறப்பு நாளாகும். உலகளவில், கற்பித்தல் என்பது மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு பணியாகும். குழந்தைகளுக்கு
நல்ல மதிப்புகளைப் புகட்டவும், அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றவும்
ஆசிரியர்கள் முதன்மையானவர்கள். ஆசிரியர்கள்
சமூகத்தின் சிற்பிகள்,
அவர்கள் இல்லாமல் எந்த சமூகமும் முன்னேற்றப்
பாதையில் பயணிக்க முடியாது. கற்பித்தல் ஒரு கலை, ஆசிரியரும் ஒரு கலைஞர். அறிவு, சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவை நவீன அறிவியலுடன் இணைந்து செல்லும் ஒரு ஆசிரியரின்
பண்புகள்.
உலகின் பல நாடுகளைப் போலவே, ஈரானிலும் கற்பித்தல் புனிதமாக கருதப்படுகிறது, மேலும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் அறிவை
மேம்படுத்த கடுமையாக பாடுபட்ட ஆசான்களுக்கு அழியா மதிப்பை வழங்குகிறார்கள். இந்த நாளில் அவர்களுக்கு ஒரு சிறிய பரிசு
அல்லது பூக்களைக் கொடுத்து மாணவர்கள் கௌரவிக்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில்
ஆசிரியர் தினத்தன்று சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.