Islamic unity - the need of the hour
ஆயதுல்லா செய்யிதலி காமெனே அவர்கள் 'முஸ்லிம்கள் இன்று உலக முஸ்லிம்களின்
ஒற்றுமையின்பால் கவனம் செலுத்துவது அவசியமாகும். முஸ்லிம்களான நாம் ஒரே உம்மா என்ற
சிந்தனை எம்முள் வந்துவிட்டால் பல பிரச்சினைகள் தானாக தீர்ந்துவிடும், முஸ்லிம் நாடுகள் அனைத்தும் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழமுடியும். எம்மை பிரித்து
வைப்பதிலேயே எதிரிகள் குறியாய் இருக்கின்றனர், அதில்தான் அவர்களின் பலம் தங்கியுள்ளது
கருதுகின்றனர். இந்த சதியினை நாம் சரியாக புரிந்துகொண்டால் எவரும் எம்மை
சீண்டிபார்க்க முடியாது. எம்மை அடக்கியாள நினைக்கும் இந்த சக்திகள் அமெரிக்க
முதலாளித்துவமும் ஆணவம்கொண்ட ஸியோனிஸமுமாகும். இந்த தீய சக்திகளுக்கெதிராக நாம்
எழுந்து நிற்க வேண்டும். இதற்கான பலத்தை நாம் இஸ்லாத்தில் இருந்தும் புனித குர்'ஆனிலிருந்தும் பெறவேண்டும்.' என்று கூறினார்கள்.
ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ்
(ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும்
அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர்.
வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில்
புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல்
மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள்
பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை
வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர்.
உலகில் ஷீஆ-சுன்னீ ஒற்றுமைக்காகக்
குரல் கொடுத்தவர்களுள் சுன்னீ அறிஞர்களைப் போலவே ஏராளமான ஷீஆ அறிஞர்களும்
இருக்கிறார்கள். இமாம் கொமெய்னி, இமாம்
காமெனயி, இமாம் சீஸ்தானி, இமாம் பாகிர்
ஸத்ர், ஷஹீத் முதஹ்ஹரி
இன்னும் பலர். தற்காலத்திலும் அவர்கள் அயராது இவ்வொற்றுமைக்காகப் பாடுபட்டு
வருகின்றார்கள்.
ஈரான் இஸ்லாமியப் புரட்சியும் கூட, ஷீஆ சுன்னீ
ஒற்றுமையின் பயனால் உருவானதே. எனவேதான், அப்போதே இமாம் கொமெய்னி அவர்கள், “ஷீஆவும் வேண்டாம்; சுன்னீயும் வேண்டாம்; இஸ்லாம் மட்டுமே வேண்டும்” என்ற கோஷத்தை பிரகடனப்படுத்தினார்கள்.
அமெரிக்க சியோனிச பிசாசுகளை
துரத்தியடிக்கூடியது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே. முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சனைகளை
உருவாக்க அமேரிக்கா சுன்னிகளைத் தூண்டுகிறது, பிரித்தானியா ஷியாக்களைத் தூண்டுகிறது.
இரண்டுமே ஒரு கத்தரிக்கோலில் உள்ள இரண்டு கத்திகளை போன்றது.
ஈரான்
இஸ்லாமியப் புரட்சியின் விளைவாக, ஷீஆ
இஸ்லாம் உலகெங்கும் உத்வேகம் பெற்றதென்பது உண்மை. ஆனால், ஈரான் ஒரு போதும் ஷீஆ இஸ்லாத்தை
ஏற்றுமதி செய்யவோ பரப்புரை செய்யவோ கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டது கிடையாது.
உலகின் பல
நாடுகளுக்கும் முஸ்லிமான, முஸ்லிமல்லாத
பல நாடுகளுக்கும் ஈரானின் பொருளாதார உதவிகள் செல்கின்றன. ஆனால், ஷீஆ இஸ்லாத்தை பரப்புவதை நோக்காகக்
கொண்டு அத்தகைய உதவிகள் செய்யப்படவில்லை என்பதை உண்மை வரலாறை ஆராய்வோர் விளங்கிக்
கொள்வர்.
உதாரணமாக, பலஸ்தீன மக்கள் அனைவரும் சுன்னீகளே.
அங்கு ஷீஆக்கள் யாருமே கிடையாது. எனினும், பலஸ்தீன மக்களுக்கு அவர்களது
பாதுகாப்பு, வாழ்வாதாரம்
என்பவற்றுக்காக கணிசமான உதவி செய்யும் நாடு ஈரான்.
ஈரானுக்குள்ளேயே
எத்தனையோ பள்ளிவாயல்களும் பல்கலைக்கழகங்களும் மார்க்கக் கல்விக்கூடங்களும்
சுன்னீகளுக்காக உள்ளன. ஈரான் பாராளுமன்றத்தில் கூட சுன்னீகள் பலர் உள்ளனர்.
இலங்கைக்கும்
ஈரானின் பொருளாதார உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், இவ்வுதவிகள் கொள்கை பரப்பும் நோக்கத்தை
அடிப்படையாகக் கொண்டவையல்ல; மாறாக
அவை மனிதாபிமான நோக்கை அடிப்படையாகக் கொண்டவை. பிறகெப்படி, இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் ஷீஆ
இஸ்லாம் துரிதமாக வளர்ச்சியடைகின்றது என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.
ஈரான்
இஸ்லாமியப் புரட்சியின் பிற்பாடு, அந்தப்
புரட்சியினால் கவரப்பட்டவர்கள் பலர், உலகின்
பல பாகங்களிலுமிருந்து ஈரானுக்கு விஜயம் செய்து, ஈரானியப் புரட்சியின் வெற்றியின்
பின்னணிகளை ஆராய்வதில் ஈடுபட்டனர். அதன் விளைவாக ஷீஆ இஸ்லாம் பற்றிய புரிதல்
அவர்களுக்கு ஏற்பட்டது. முழுமையாகத் திறந்த மனத்துடன், ஷீஆ இஸ்லாம் தொடர்பாக காய்தல்
உவத்தலின்றி தேடலில் ஈடுபடும் எவரும், அதன்
உண்மைத் தன்மையை அறிந்து அதன் ஆதரவாளராகவோ அதனைப் பின்பற்றும் ஒருவராகவோ மாறும் நிலை
இயல்பானது.
அதாவது, ஈரான் ஒரு போதும் யார் மீதும் ஷீஆ
இஸ்லாத்தை வலிந்து திணிக்கவோ பிரசாரப்படுத்தவோ இல்லை. அங்குள்ள உலமாக்கள், மற்ற நாடுகளிலுள்ள சுன்னி உலமாக்களைப்
போன்று தமது இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்கின்றார்கள். உண்மையினால்
கவரப்படுவோர் அதன் ஆதரவாளராகின்றனர்.
ஆனால், ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். சவூதி
சார்புடைய கடும்போக்கு உலமாக்கள் ஷீஆ இஸ்லாத்தை மிக மோசமாக எதிர்த்து அவதூறுகளை
அள்ளி வீசுவது போன்று, ஷீஆ
உலமாக்கள் யாரும் சுன்னி இஸ்லாம் தொடர்பாக அவதூறுகளை அள்ளி வீசுவது கிடையாது.
அவர்கள் எப்போதும் ஷீஆ - சுன்னி ஒற்றுமை கட்டியெழுப்பப்படுவதையே மிகவும்
விரும்புகின்றார்கள்.
உலகளாவிய ரீதியில் இன்று இஸ்லாமியர்களுக்கெதிரென சதித்திட்டங்கள் தீட்டபட்டு, அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.
ஆக்கரமிப்பாளர்கள் முஸ்லிம்களுக்கு தீவிரவாத முத்திரை குத்தி, பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும் கொன்றொழிக்கும் சம்பவங்கள்
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாமிய சமுதாயம் அதனை எவ்வாறு
எதிர் கொள்ள வேண்டும் என்ற எந்த சிந்னையுமின்றி,
ஏனோ தானோவென்று வாழ்ந்து வருவது
கவலையளிக்கும் விடயமாகும்.
அழுகையும் ஒப்பாரியும் பிரச்சினைகளைத்
தீர்க்காது.....!
பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, லெபனான், யெமன், பஹ்ரைன், மத்திய
ஆபிரிக்கா, பாகிஸ்தான், காஷ்மீர், மியன்மார்
மற்றும் இதுபோன்ற எத்தனையோ இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும்
அநியாயங்களை எண்ணி கவலைப் படுகிறோம், அழுகிறோம், ஒப்பாரி
வைக்கிறோம். இவை எமது உணர்வுகளின் வெளிப்பாடு தான். ஆயினும், வெளிப்படும் உணர்வுகளால் மாத்திரம்
எமது பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்பது உணரப்பட வேண்டும்.
பிரச்சினைகளின்
மூல காரணங்களை அறிந்து, அதற்கான
தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தற்போது எம்மத்தியில் பிரதான சவால். எம்மத்தியில்
உள்ள ஒற்றுமை இன்மையே பிரச்சினைகளின் மூல காரணங்களில் பிரதானமானது என்பதை எம்மில்
பலர் அறிவோம்.
இவற்றுக்கான தீர்வு சமுதாய ஓற்றுமையில் தான் உள்ளது என்பதை இஸ்லாம் எவ்வாறு
வலியுறுத்துகிறது என்பதை பாருங்கள்...
இஸ்லாமும் புனித குர்'ஆனும் அதற்கான வழிமுறைகளை மிகத்தெளிவாக
எமக்குக் காட்டித்தருகின்றன.
'இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை
வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து
அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின்
மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக்
காப்பாற்றினான்- நீங்கள் நேர் வழி பெறும்
பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.' –அல் குர்ஆன்.3:103.
அன்றைய அரபு மக்கள் பல குலங்களாக, கோத்திரங்களாக பிரிந்து நின்று ஆண்டாண்டு
காலமாக தங்களுக்குள் சண்டையிட்டு மனித உருவில் மிருகங்களாக நடமாடினார். இவர்கள்
நரகின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இம்மக்கள் முஸ்லிமாகி குர்ஆன்
கூறும் ஒற்றுமை கயிற்றை பற்றிப் பிடித்தவுடன் சகோதரத்துவம் பிறந்தது சண்டை சச்சரவு
ஒழிந்தது. இஸ்லாம் மலர்ந்தது. அல்லாஹ் மேலும் கூறுகிறான்.
'நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' சமுதாயம்(வேற்றுமை ஏதுமில்லா) ஒரே
சமுதாயம்தான்.' (அல் குர்ஆன் 21:92,
23:52) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
1. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே
பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப்
பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்-குர்ஆன் 7:3)
2. 'முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான
சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள்
கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி
செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்!
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு)
அறிந்தவனாக இருக்கின்றான்' (அல்-குர்ஆன் 5:8)
3. 'அன்றி, நீங்கள் அல்லா{ஹக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு
(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள்.
அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள்
பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல்
குர்ஆன் 8 :46).
ஆனால் இன்றைய முஸ்லிம்கள் இதன் ஒழுக்க மாண்புகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி
தனித்தனி கூட்டங்களாக இயக்கங்களாக பிரிந்து நிற்கின்றனர். இதில் கை சேதம்
என்னவென்றால், ஒவ்வொருவரும் தாங்கள்தான் நேர் வழியில்
இருப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள்.
எமக்குள்
இருக்கும் சிறிய வேற்றுமைகளை வளர்ப்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் கண்ணும்
கருத்துமாய் உள்ளனர் என்பதை ஏனோ நாம் உணரத் தவறிவிடுகிறோம். அல்லாஹ் வழங்கிய இஸ்லாம் மார்க்கமானது, முஸ்லிம்களின் சகோதரத்துவம் என்ற ஒற்றுமையில் உருவான ஒரு ஒப்பற்ற வாழ்க்கை
நெறி.
'நேரான வழி இன்னது என்று தனக்குத் தெளிவான
பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, மூமின்கள் செல்லாத வழியில் செல்பவனை நாம் அவன் செல்லும் தவறான வழியிலே
செல்லவிட்டு (பின்னர்) நரகத்தில் நுழையச் செய்வோம். அதுவே சென்றடையும் இடங்களில்
மிகக் கெட்டதாகும்' (அல் குர் ஆன் 4
:115) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்வோம்.
அனைவரும் 'முஸ்லிம்கள்'
என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதற்கு உதவி
செய்திடுவாயாக!
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment