Monday, June 8, 2020

இனவாதத்தால் அழியும் அமேரிக்கா..!

US implodes due to racism 

அமெரிக்க கறுப்பினத்தவரான ஜார்ஜ் பெர்ரி ஃபிலாய்ட் ஜூனியர் (அக்டோபர் 14, 1973 - மே 25, 2020)  மே 25, 2020 அன்று மினியாபோலிஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு முழங்காலினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க மக்கள் கொதித்தெழுந்தனர். இந்த இனவெறி கொலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

அமெரிக்காவில் பரந்த அளவில் தொடர்ச்சியாக கறுப்பின மக்களை இலக்குவைத்து போலீசார் மேற்கொண்டுவரும் வன்முறைக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவின. மூன்று வாரங்களைக் கடந்து, கொரோனா தோற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், இவ்வார்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கறுப்பின மக்களுக்கு எதிரான இந்த பாரபட்சம், இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாகவே தொடர்கிறது.

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் பாரபட்சம் என்ற ஓர் ஆய்வில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

  1. 2015–2016 கல்வி ஆண்டில், கறுப்பின மாணவர்கள் மொத்த அமெரிக்க மாணவர் சேர்க்கையில் 15% மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினர்.
  2. நியூயார்க் நகரில், 2018 ஆம் ஆண்டில் 88% பொலிஸ் சோதனைகள் கருப்பு மற்றும் லத்தீன் மக்களையும், 10% வெள்ளை மக்களையும் உள்ளடக்கியது. (அந்த சோதனைகளில், 70% முற்றிலும் நிரபராதிகள்.)
  3. ஓர் அமெரிக்க கணக்கெடுப்பில், 15.8% மாணவர்கள் இனம் சார்ந்த கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலை அனுபவிப்பதாக தெரிவித்தனர். இன அடிப்படையில் மாணவர்கள் கொடுமைப்படுத்துதல் மற்றும் எதிர்மறை மன மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளதை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
  4. 2013 முதல் 2017 வரை, ஹிஸ்பானிக் நோயாளிகள், கருப்பு நோயாளிகள் மற்றும் பூர்வீக அமெரிக்க நோயாளிகளை விட அமெரிக்காவில் வெள்ளை நோயாளிகள் சிறந்த தரமான சுகாதார சேவையைப் பெற்றனர்.
  5. பிரசவம் தொடர்பான மரணங்களில் கறுப்பின பெண்கள் வெள்ளை பெண்களை விட 3 முதல் 4 மடங்கு அதிகம் சந்திக்கின்றனர்.  வருமானம் மற்றும் கல்வி மட்டங்களில் கூட இதே அளவிலான உயர்வு தாழ்வைக் காணலாம்.
  6. கைது செய்யப்படும் வெள்ளை அமெரிக்கர்களை விட கருப்பு அமெரிக்கர்கள் அதிகம். கைது செய்யப்பட்டவுடன், அவர்கள் குற்றவாளிகளாக காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நீண்டகால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
  7. போதைப்பொருள் பயன்படுத்துவோர்  கறுப்பின அமெரிக்கர்களும் வெள்ளை அமெரிக்கர்களும் ஒரே விகிதத்தில் இருந்தபோதும், கறுப்பின அமெரிக்கர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் 6 மடங்கு அதிகம்.
  8. சராசரியாக, அமெரிக்காவில் உள்ள கறுப்பின ஆண்கள் அதே குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வெள்ளை ஆண்களை விட 19.1% அதிகமான தண்டனைகளைப் பெறுகிறார்கள்.
  9. அமெரிக்காவில், கறுப்பின நபர்கள் வெள்ளை நபர்களை விட இரண்டு மடங்கு வேலையற்றவர்களாக உள்ளனர். பணியமர்த்தப்பட்டா லும் கறுப்பின நபர்கள் வெள்ளைக்காரர்களை விட கிட்டத்தட்ட 25% குறைவாக ஊதியத்தையே பெறுகிறார்கள்.
  10. அமெரிக்காவில், தம் திறமைக்கும் தகைமைக்கும் ஏற்ற தொழில் வாய்ப்பு பெறுவதில் கறுப்பினத் தொழிலாளர்கள் வெள்ளைத் தொழிலாளர்களைக் காட்டிலும் குறைவானவர்கள்.

https://www.dosomething.org/

காலனித்துவ காலத்திலிருந்தே அமெரிக்காவில் இனவெறி நிலவுகிறது. வெள்ளை அமெரிக்கர்களுக்கு சட்டரீதியாக அல்லது சமூக ரீதியாக அனுமதிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் வழங்கப்பட்ட உரிமைகள் மற்ற இனங்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மறுக்கப்பட்டே வந்துள்ளன.

ஐரோப்பிய அமெரிக்கர்கள்-குறிப்பாக வசதியான வெள்ளை ஆங்கிலோ-சாக்சன் புராட்டஸ்டன்ட்டுகள்-கல்வி, குடியேற்றம், வாக்களிக்கும் உரிமைகள், குடியுரிமை, நிலம் கையகப்படுத்தல் மற்றும் அமெரிக்க வரலாறு முழுவதும் குற்றவியல் நடைமுறை போன்ற விஷயங்களில் பிரத்தியேக சலுகைகளை அனுபவித்தனர்.

ஐரோப்பாவிலிருந்து வந்த புராட்டஸ்டன்ட் அல்லாதவர்கள், குறிப்பாக ஐரிஷ் மற்றும் இத்தாலியர்கள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க சமுதாயத்தில் இனவெறி துன்புறுத்தல் மற்றும் பிற இன அடிப்படையிலான பாகுபாடுகளை அனுபவித்தனர்.

அமெரிக்க வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டே வந்துள்ளனர்.

இன்னும் கறுப்பினத்தவர் மட்டுமல்லாது, முஸ்லிம்கள் மற்றும் அரேபியர்கள் போன்ற குழுக்கள் அமெரிக்காவில் தொடர்ச்சியான பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளன, இதன் விளைவாக, வெள்ளையர் அனுபவித்துவந்த எல்லா உரிமைகளையும் இந்த குழுக்களைச் சேர்ந்தோரால் அனுபவிக்க முடியவில்லை.

அமெரிக்காவில் இன அரசியல் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது, மேலும் இனவாதம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலும்  தொடர்ந்து பிரதிபலிக்கிறது.

வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, கல்வி, கடன் வழங்கல் மற்றும் அரசாங்கத்தில் இனரீதியான பாகுபாடு தொடர்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க மனித உரிமைகள் வலையமைப்பின் பார்வையில், "அமெரிக்காவில் பாகுபாடு வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஊடுருவி வெள்ளையர் அல்லாத அனைத்து சமூகங்களுக்கும் பரவியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக சராசரி அமெரிக்கர்கள் சிறுபான்மையினர் தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களின் தன்மை கணிசமாக மாறியுள்ள நிலையில், ஏபிசி நியூஸ் போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நவீன அமெரிக்காவில் கூட, ஏராளமான அமெரிக்கர்கள் தாங்கள் ஏனையோர் விடயத்தில் பாகுபாடு காட்டுவதாக ஒப்புக்கொள்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, 2007 ஆம் ஆண்டு ஏபிசியின் ஒரு கட்டுரை, அமெரிக்கர்களில் பத்து பேரில் ஒருவர் ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு எதிராக தப்பெண்ணங்களை வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டதாகவும், நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் அரபு அமெரிக்கர்களுக்கு எதிராக தப்பெண்ணங்களை வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறது.

பராக் ஒபாமா 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக, நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக ஆனதும் சில அமெரிக்கர்கள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்ததற்கான அடையாளமாக அதை பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த காணவில்லை. 2010 களில், அமெரிக்க சிறுபான்மை சமூகம் தொடர்ந்து உயர் மட்ட இனவெறி மற்றும் பாகுபாட்டை அனுபவித்து வந்தது. அமெரிக்காவிலிருந்து சிறுபான்மையினரை வெளியேற்ற முற்படும் ஒரு வெள்ளை தேசியவாத கூட்டணியான "Alt-Right" இயக்கத்தின் எழுச்சி ஒரு புதிய பரிமாணத்தை பெற்றது. டொனால்ட் ட்ரம்ப் அவரின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பிறகு அவ்வியக்கத்தின் கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கலானார்.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் உரைகளிலும் செயல்களிலும் இனவாதம் வெளிப்படையாகவே தெரிந்தது. பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் அவர் அமெரிக்காவில் இனவெறியைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர் மற்றும் சில அறிஞர்கள் டிரம்பின் சொல்லாட்சிக் கலை மற்றும் செயல்திறனை வெள்ளை மேலாதிக்கத்தின் பின்னணியில் வைத்து கணிக்கின்றனர். ட்ரம்ப் பலமுறை இனவெறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்,  அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் அவர் இனவெறி அற்றவர் என்று பதிவுசெய்துள்ளனர்.

1973 ஆம் ஆண்டில், டிரம்ப்உடன் அவரது நிறுவனமான டிரம்ப் மேனேஜ்மென்ட் ஆப்பிரிக்க-அமெரிக்க வாடகைதாரர்களுக்கு எதிரான வீட்டு பாகுபாடு காரணமாக நீதித் துறையால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது; தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்புதல் ஆணைக்கு இணங்கினார். ஒப்புதல் ஆணையை மீறும் வகையில் தொடர்ந்து இன பாகுபாடு காட்டுவதாகக் கூறி 1978 ஆம் ஆண்டில் நீதித்துறை மீண்டும் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது.

2011 முதல் 2016 வரை, ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவரல்ல என்ற பிரசாரத்தை மேற்கோடு ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருந்த "Birtherism" சதிக் கோட்பாட்டின் முன்னணி ஆதரவாளராக டிரம்ப் இருந்தார். 1989 ஆம் ஆண்டு ஒரு வெள்ளை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கருப்பு மற்றும் லத்தீன் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம்சாட்டப்பட்டு, விசாரணையின் பின் அவர்களை குற்றவாளிகள் அல்ல என்று நிரூபணமானத்தைத் தொடர்ந்து ஐந்து ஆண்கள் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டனர். அக்குற்றத்தை செய்தவர் வெள்ளையினத்தை சேர்ந்த தொடர் கற்பழிப்பாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.என்.ஏ ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இனரீதியாக குற்றம் சாட்டப்பட்டு, கிரிமினல் வழக்கில் கோர்த்துவிடப்பட்ட கருப்பு மற்றும் லத்தீன் இளைஞர்கள் குற்றவாளிகள் தான் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

டிரம்ப் தனது 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார ஆரம்ப உரையில்  குடியேறிய மெக்சிகன் மக்கள் பற்றி பேசினார்: "அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்கள் குற்றங்களைக் இங்கு கொண்டு வருகிறார்கள், அவர்கள் கற்பழிப்பாளர்கள். அவர்களில் சில நல்ல மனிதர்களும் இருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன்." "மெக்சிகன் பாரம்பரிய பின்னணி கொண்ட ஒரு நீதிபதி தனக்கு எதிரான வழக்குகளைத் தீர்மானிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வெள்ளை அமெரிக்கர்களின் பெரும்பான்மையான கொலைகளுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களே காரணம் என்று கூறி தவறான புள்ளிவிவரங்களை அவர் ட்வீட் செய்தார், மேலும் சில உரைகளில் அவர் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் ஹிஸ்பானியர்களையும் வன்முறைக் குற்றங்களுடன் பலமுறை இணைத்து பேசியுள்ளார். பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப் கறுப்பினத்தவர்கள் பற்றிய வெள்ளை தொழிலாள வர்க்க வாக்காளர்களின் அச்சங்களைப் பயன்படுத்தினார், மேலும் தேசத்திற்கு ஒரு சவாலாகக் கருதப்படும் குழுக்களின் உலகளாவிய ஆபத்து பற்றிய தோற்றத்தை உருவாக்கினார்.

2018 ஆம் ஆண்டில், குடியேற்ற சீர்திருத்தம் குறித்த ஓவல் அலுவலகக் கூட்டத்தின் போது, டிரம்ப் எல் சால்வடார், ஹைட்டி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை "shitholes" (சாக்கடை) என்று குறிப்பிட்டார், இது ஒரு இனவெறி கருத்து என்று பரவலாக கண்டிக்கப்பட்டது. ஜூலை 2019 இல், ட்ரம்ப் ஜனநாயக காங்கிரஸின் கறுப்பினத்தவரான பெண்ணைப் பற்றி ட்வீட் செய்தார்: "அவர்கள் ஏன் திரும்பிச் சென்று, அவர்கள் வந்த முற்றிலும் சிதைந்த மற்றும் குற்றச் செயல்களால் நிறைவந்துள்ள இடங்களை சரிசெய்ய உதவக்கூடாது என்று வினா எழுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர்கள் திரும்பி வந்து அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை எங்களுக்கு சொல்லிக்காட்டட்டும் என்று குறிப்பிட்டார். அட்லாண்டிக் போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த கருத்தை ஒரு பொதுவான இனவெறி சொல்லாடல் என்று விமர்சித்தன. பின்னர் அவர் தனது கருத்துக்களை இனவெறி என்று குற்றம்சாட்டப்படுவதை நிராகரித்தார், "எங்கள் நாட்டில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், யாராவது நம் நாட்டில் இருக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் வெளியேற வேண்டும்" என்று கூறினார்.

டிரம்பின் இதுபோன்ற எண்ணற்ற சர்ச்சைக்குரிய அறிக்கைகள் உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்களால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் டிரம்பின் அரசியல் ஆதரவாளர்கள் சிலரில் அவரின் செயல்பாட்டை சரிக்கண்டு நியாயப்படுத்தும் ஒரு சிலரும் உண்டு. பல ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் இனவெறி மனப்பான்மையும் இன வெறுப்பும் டிரம்பின் அரசியல் உயர்வுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளன என்றும், அமெரிக்க வாக்காளர்களின் கட்சி விசுவாசத்தை தீர்மானிப்பதில் பொருளாதார காரணிகளை விட முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறியுள்ளன. இனவெறி மற்றும் இஸ்லாம் வெறுப்பு அணுகுமுறைகள் ட்ரம்பிற்கு ஆதரவின் சக்திவாய்ந்த குறிகாட்டியாகக் காட்டப்பட்டுள்ளன.

தேர்தல் வெற்றிக்காகவும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் ட்ரம்ப் போன்றோர் செய்யும் இனவாத அரசியல், நாட்டை அழிவுப் பாதைக்கே  இட்டுச்செல்லும் என்பதற்கு இன்றைய அமேரிக்கா நல்ல எடுத்துக்காட்டாகும்.

- தாஹா முஸம்மில் 


No comments:

Post a Comment