Sunday, October 7, 2018

ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை சட்டவிரோதமானது - சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு.



ICJ Verdict on American sanction against Iran
ஈரானை சூழ ஏன் இத்தனை ராணுவ தளங்கள்...?
ஈரானிய இஸ்லாமிய குடியரசின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அண்மையில் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை, சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்றும் அத்தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் ஒரு அங்கமான சர்வதேச நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பானது டொனால்ட் டிரம்ப்பின் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஹேக் நகரிலுள்ள சர்வதேச  நீதிமன்றம்  கடந்த புதனன்று (3 ஒக்டோபர், 2018) வழங்கிய தீர்ப்புக்கு அப்பீல் கிடையாது. நிச்சயமாக இது ஈரானுக்கு கிடைத்த வெற்றியாகும்.
ட்ரம்பின் தன்னிச்சையான இந்தத் தீர்மானம் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட "அமிட்டி உடன்படிக்கை" விதிமுறைகளை மீறுவதாக ஈரான் தொடர்ந்த வழக்கை, பல மாதங்களாக ஆராய்ந்த சர்வதேச நீதிமன்றம், அது மனிதாபிமான உதவி மற்றும் உள்நாட்டு விமான பாதுகாப்பு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன என்றும்  மேற்கண்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல் காவி அஹ்மத் யூசுப் அவர்களால் வாசிக்கட்ட தீர்ப்பு பின்வருமாறு குறிப்பிட்டது:
"ஈரானுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் விவசாய பொருட்கள் மற்றும் விமான பாகங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடற்ற ஏற்றுமதிக்கு மே 8 ம் தேதி அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து எழும் சகல தடைகளையும் அமெரிக்கா அகற்ற வேண்டும் மேலும் இந்த தடைகள் "ஈரான் பிரதேசத்தில் உள்ள தனிநபர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வின் மீதான ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
விமான உதிரிப் பாகங்கள் மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் "ஈரானில் உள்நாட்டு விமானப் பாதுகாப்பு மற்றும் அதன் பயனர்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்குகின்றன" என்றும் அத்தீர்ப்பில் சேர்த்துக்கொண்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈரான் வரவேற்றிருந்தாலும், இன்னும் அமெரிக்காவிடம் இருந்து உத்தியோகபூர்வ விடையிறுப்பு எதுவும் இல்லை. வாஷிங்டன் இந்த தீர்ப்பைக் கடைபிடுக்குமா அல்லது தீர்ப்பினை ஏற்க மறுத்து, அதன் அச்சுறுத்தல்களுடன் சர்வதேச ரீதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. எதிர்வரும் நவம்பர் 5 ம் தேதி ஈரானுக்கு எதிராக இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை திணிக்கவும் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது சர்வதேச சட்டங்களை மதிக்காத, அமெரிக்காவின் திமிர்பிடித்தத் தனமாகும்.
போயிங் விமான தயாரிப்பாளர்கள் பல பிரயாணிகள் விமானங்களுக்கான கட்டளையை ஈரானிடமிருந்து பெற்றுள்ளனர். ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் இவ்விமானங்களை ஈரானுக்கு வழங்கவிடாது தடை செய்வாராயின், அவர்கள், தாம் நம்பத்தகாத பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், பயங்கரவாதிகள், மற்றும் சர்வதேச ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் என்பதையும் உலகுக்கு நிரூபிப்பர்.
ஈரான் தனது அணுசக்தி தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பு நாடுகளுடன் ஜெர்மனியும் இணைந்த (5+1) செய்துகொண்ட ஒப்பந்தத்தை அணுவளவும் பிசகாது கடைப்பிடித்து வருகிறது என்று சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சியோனிச இஸ்ரேல் மற்றும் பிற்போக்கு ஆட்சிகளான சவூதி அறேபியா, ஐக்கிய அரபு எமிரேட் போன்றன, மேற்கு ஆசியாவில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி, ட்ரம்பின் பயங்கரவாத வலையமைப்பை விரிவாக்கியுள்ளன. 
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற இடங்களில் மனிதகுலத்திற்கு எதிரான அமெரிக்க குற்றங்களுக்கு சாத்தியமான தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து தமது அங்கத்துவத்தை திரும்பப் பெறப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இது பல நாடுகளையும் முகம்சுளிக்க வைத்தது. அவ்வாறிருக்க, அவர் இந்த சர்வதேச நீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனம் செய்வாராயின், சர்வதேச சட்டங்களை மதிக்காத தறுதலை என  உள்நாட்டிலும் சர்வதேச நாடுகள் மத்தியிலும் இழிவுபடுத்தப்படுவார் என்பது நிச்சயம். அமெரிக்காவின் மதிப்பு, மரியாதை அனைத்தும் அடிமட்டத்தைத் தொடும். 
ட்ரம்ப்பும் அவரது சட்டவிரோத நடவடிக்கைகளில் பங்கேற்கும்  கூட்டாளிகளும் சுதந்திரமான நாடுகளை அச்சுறுத்தி  அடிபணியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மிகத்தெளிவு. என்றாலும் அவர்கள் இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்.
ஈரான் அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ போர் தொடர அல்லது போரை தூண்டிவிட முயன்றது கிடையாது. அதன் கொள்கைகள் மிகத்தெளிவானது.
அமெரிக்காவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கு ஈரான் தனது கடற்படைகளை அனுப்பவில்லை, கனடாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் எந்தவிதமான ராணுவ தளங்களையும் அது நிறுவியிருக்கவில்லை, பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அது தலையீடு செய்யவில்லை. பொதுவாக, அமெரிக்காவைப்போல், தமது ஆயுதபலத்தைக்  காட்டி, எவரையும் அச்சுறுத்தும் விதத்தில் ஈரான் ஒருபோதும் நடந்துகொண்டதும் கிடையாது.
மாறாக, உலகில், குறிப்பாக மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் இராணுவ இருப்பைக் கொண்டிருக்க எவ்வித உரியும் கொண்டிராத அமெரிக்கா, பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டி, ஈரானுக்கு எதிரான அதன் சதிகளை தொடர்ச்சியாக செய்துகொண்டு, ஈரானின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், யேமன் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியம் ஆகியவற்றில் சண்டித்தனம் புரிந்துகொண்டு ஈரானை நிராயுதபாணியாக்க வேண்டும் என்று கோருகிறது. ஏனைய அரபு நாடுகளைப்போன்று ஈரானும் அமெரிக்காவினதும் சியோனிச இஸ்ரேலினதும் கருணையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.
  • ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் நலன்களையும் பாதுகாப்பு திறன்களையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; அதுபோல் பிராந்தியத்தில் சகோதர, நட்பு நாடுகளின் மக்களுடைய நலன்களையும் பாதுகாக்க ஒருபோதும் பின் நிற்காது. பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளுக்கு சகோத நட்பு நாடுகளால் விடுக்கப்படும் உதவிக்கான கோரிக்கைகளை ஒருபோதும் நிராகரிக்காது.
சுருக்கமாக, வாஷிங்டன் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும்; சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க வேண்டும்; பொருளாதாரத் தடை போன்ற அதன் அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும்; பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தனது முகவர்களைக்கொண்டு திணித்துள்ள யுத்தங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்; பிராந்திய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடுவதிலிருந்து விலகவேண்டும்; சட்டவிரோத சியோனிச ஆட்சிக்கான கண்மூடித்தனமான ஆதரவை கைவிட வேண்டும். இதுவே அமைதிக்கான ஒரே வழியாகும்.



No comments:

Post a Comment