What is the true
status of the hadith that there will be 73 sects...?
இஸ்லாத்தின்
எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் "இஸ்லாமிய உலகின்
ஒற்றுமை மட்டுமே" என்பதை இஸ்லாத்தின் எதிரிகள் நன்றாக புரிந்துவைத்துள்ளனர்; ஆகவேதான், அவர்கள்
முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக
இருக்கின்றனர்.
இந்நிலையை
உணர்ந்து இஸ்லாமிய ஒற்றுமைப் பற்றி பேசினால், அது ஒருபோதும்
நடக்காது, “எனது உம்மத் 73 குழுக்களாக பிரிந்து போகும், அதிலொன்று மட்டுமே சுவர்க்கம் செல்லும் மற்ற அனைத்தும் நரகம் செல்லும்"
என்று றஸூலுல்லாஹ்வே கூறிவிட்டார்கள், அதனால் இதற்கான
முயற்சியில் ஈடுபடுவது வீண் என்பதுபோல் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்
நம்பிக்கையாளர்களில் 73 பிரிவுகளைப்
பற்றி அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஹதீஸில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:
யூதர்கள் 71 பிரிவுகளாக பிரிந்தனர், கிறிஸ்தவர்கள் 72 பிரிவுகளாக பிரிந்தனர், மேலும் எனது சமூகம் 73 பிரிவுகளாகப் பிரியும் (இப்னு மாஜா, அபு தாவுத், அல் -திர்மிதி
மற்றும் அல்-நிஸாயி). இன்னும் பல பதிப்புகளிலும் வருகிறது.
இந்த ஹதீஸை நாம்
புரிந்து கொண்டுள்ளது சரியா என்று ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصًا دَخَلَ الْجَنَّةَ
1478 الدعاء للطبراني
அபு சயீத் அல்-குத்ரி அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உண்மையாகச்
சொல்பவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவார்." (துஆ லித்தபரானி 1478)
இவ்வாறு கூறப்பட்டிருக்கையில், எனது உம்மத் 73 கூட்டமாக பிரியும், அதில் ஒன்றே
சுவர்க்கம் செல்லும் மற்ற அனைத்தும் நரகம் செல்லும் என்ற ஹதீஸின் உண்மை நிலை என்ன?
நாம் இதை சற்று
ஆராய்வோமேயானால், இந்த ஹதீஸ் முஸ்லிம் உம்மாவை இரண்டு
பிரிவுகளாகப் பிரிக்கிறது: ஒன்று இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றது நரகவாசிகள்.
ஒன்று
தோன்றவிருக்கும் பிரிவுகளின் எண்ணிக்கை பற்றியது (எனது உம்மத் 73 பிரிவுகளாகப்
பிரியும்) என்ற இரட்சிப்பின் பகுதி. மற்றது 72 பிரிவுகள் தண்டிக்கப்படும்
எனும் தண்டனை பகுதி.
இப்னு அல்-வஸீர் அல்-அவாசிம்
என்ற அவரது புத்தகத்தில், இந்த உம்மத்தின்
சிறப்பைப் பற்றிப் சிலாகித்து கூறுவதுடன் எந்தவொரு முஸ்லிமையும் காஃபிர் என்று
குற்றம் சாட்டுவதில் ஈடுபடுவதற்கு எதிராக எச்சரிக்கை செய்கிறார்.. மேலும் அவர்:
"[சொற்றொடர்களால்] தவறாக வழிநடத்தப்படாதீர்கள், "ஒரு குழுவினரைத் தவிர மற்ற அனைவரும் நரக நெருப்பில் இருப்பார்கள்" என்பது ஒரு
தவறான மற்றும் ஆதாரமற்ற இடை சொறுகளாகும்
மேலும் அது இறை நம்பிக்கை அற்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்"
என்று குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர் இப்னு ஹஸ்ம் கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்:
"இந்த பிற்பகுதி இட்டுக்கட்டப்பட்டது; இது எந்தத் தோழர்களாலும் கூறப்பட்டதாகவோ அல்லது றஸூலுல்லாஹ்விடம்
இருந்து கேட்கப்பட்டதாகவோ' வகைப்படுத்தப்படவில்லை.
இதற்கு மாறாக, ஒரு ஹதீஸின் மற்றொரு பதிப்பு உள்ளது.
10 ஆம் நூற்றாண்டின்
புவியியலாளரான முகத்தஸி என்பவர் "72 பிரிவுகள் சொர்க்கம் செல்லும், ஒன்று நரகம்
செல்லும்" என்று உள்ள ஹதீஸைக் குறிப்பிடுகின்றார் என்று ராய்
முத்தஹிதே (இஸ்லாத்தில் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம்) என்ற புத்தகத்தில்
எழுதுகின்றார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை (இஸ்னத்) நம்பகமானது என்றும்
கூறுகின்றார். ஆக, முன் சொல்லப்பட்ட
ஹதீஸுக்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.
முத்தஹிதேயின்
கூற்றுப்படி, 72 கூட்டத்தினரை மத
நம்பிக்கையின் அடிப்படைகளில் பிரிவு என்று அர்த்தப்படுத்தினால், அவர்கள் இந்த
எண்ணிக்கையை நிச்சயமாக எட்ட மாட்டார்கள் ஏனெனில் இவர்களின் இஸ்லாமிய அடிப்படை
நம்பிக்கையில் பெரிய மாற்றங்கள் எதையும் காண முடியாது; அடிப்படைக்கு
அப்பாற்பட்ட விடயங்களில் என்றால்
கூட்டத்தின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும் என்று
குறிப்பிடுகின்றார்.
'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்ற அடிப்படையில் இருந்து விலகிய எந்த ஒரு
முஸ்லிம் பிரிவும் உலகில் கிடையாது.
அவ்வாறாயின் இந்த
73 என்ற எண் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எங்கிருந்து
வருகிறது என்று சிலர் கேட்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்த ஹதீஸைக் குழுவாத விளக்கங்களுக்கு அப்பால்
இன்னும் புறநிலையாகப் பார்க்கும் நல்ல போக்கு இப்போது ஏற்பட்டு உள்ளது. பிரத்தியேகமான
வழிகளைக் காட்டிலும் பிரிவுகளின் பன்மையை உள்ளடக்கிய வெளிச்சத்தில் பார்க்கும்
முயற்சியும் உள்ளது. சமீப காலமாக, இந்த ஹதீஸின்
பின்னணியை அலசி ஆராய்ந்து அதன் தாக்கங்களை ஆராயும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதைக்
காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பிட்ட ஹதீஸின்
மற்றொரு பார்வை என்னவென்றால், இவ்விடத்தில் 73 என்பது உண்மையில் எண்ணிக்கையைக்
குறிப்பதல்ல; மாறாக நாம் ஏராளமான என்ற சொல்லுக்கு பதிலாக பேச்சு வழக்கில் பயன்படுத்தும்
('ஆயிரத்தெட்டு' பிரச்சனைகள்) போன்ற ஒன்றாகும். ஆக, இது சூழ்நிலைக்கு
ஏற்ற விதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லேயாகும் என்று அடையாளப்படுத்துகின்றனர்.
முத்தஹிதே இதற்கான விரிவான பல வரலாற்று உதாரணங்களைத் தருகிறார். "70 என்பது ‘ஏராளமான’ என்பதை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அதை
நாம் 'உருப்படிகளின் எண்ணிக்கை' என்று கொள்ளல்
ஆகாது என்று கூறுகின்றார்.
‘ஒரு முஃமினுக்கு
துன்பத்தில் உதவி செய்பவரை இறைவன் 73 துன்பங்களில் இருந்து நீக்கிவிடுவான்’ என்று ஒரு ஹதீஸை
ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இங்கே இறைவனின் தாராளமான வெகுமதியை குறிக்கும் சொல்லாக 73 இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மதம் சார்ந்த விடயங்கள்
இதுபோன்ற குறியீட்டு மொழியிலும் எழுதப்படுகிறது, என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எனது சமுதாயம் 70 குழுக்களாகப் பிரியும்; அவர்கள் அனைவரும் ஜன்னாவில் (சொர்க்கத்தில்) இருப்பார்கள்.
காஃபிர்களைத் தவிர" [அத்-தைலமி தனது முஸ்னத் அல்-ஃபிர்தவ்ஸில் பதிவு
செய்துள்ளார்].
முகமது இபின் அஹ்மத் அல்-பிஷாரி அல்-மக்திசி தனது அஹ்சன்
அத்-தகாசிம் என்ற புத்தகத்தில் இரண்டு விதமாக குறிப்பிடப்படும் இந்த ஹதீஸ் பற்றி
இவ்வாறு குறிப்பிடுகின்றார்: "72 குழுவினர் சொர்க்கத்தில் இருப்பார்கள், ஒரு குழுவினர் நரக நெருப்பில் இருப்பார்கள்" மற்றது
"72 குழுவினர் நரக நெருப்பில்
இருப்பார்கள், ஒரு
குழுவினர் [நரக நெருப்பிலிருந்து]
காப்பாற்றப்படுவார்கள்" என்ற ஹதீஸின் இரண்டு வெவ்வேறு சொற்றொடர்களைக்
குறிப்பிட்டு, பின்னர், அவர் இவ்வாறு கூறுகிறார்: "இரண்டாவதாக
கூறப்பட்டுள்ள ஹதீஸின் வாசகம் பிரபலமானது, அதே சமயம் முதல் கூறப்பட்டுள்ள வாசகம் மிகவும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்
சங்கிலியைக் கொண்டுள்ளது."
மற்றுமொரு இஸ்லாமிய அறிஞரான இப்னு அல்-வஸீர் என்பவர்
குறிப்பிட்ட ஹதீஸின் இரண்டாவது பகுதியான
"72 குழுவினர் நரக
நெருப்பில் இருப்பர், ஒரு குழுவினர்
[நரக நெருப்பிலிருந்து] காப்பாற்றப்படுவர்" என்பதை நிராகரிக்கின்றார். அவரைப்
பொறுத்தவரை இது பிற் சேர்க்கையாகும். ஏனென்றால், இந்த கூடுதல் சொற்றொடர் உம்மத்தினரிடையே தவறான வழிகாட்டுதலை
ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குஃப்ர்
[நம்பிக்கையின்மை] குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுக்கிறது.
சில கடந்த கால மற்றும் தற்போதைய அறிஞர்கள் இந்த ஹதீஸின்
இரண்டாம் பகுதியை அதன் அறிவிப்பாளர் சங்கிலியின் அடிப்படையில் மறுத்துள்ளனர்,
மற்றவர்கள் அதன் பொருள் மற்றும் உரையின்
அடிப்படையில் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். உதாரணமாக, அபு முகமது இப்னு ஹஸ்ம் என்பவர், அகீதாவில் உள்ள
வேறுபாடுகள் காரணமாக மற்றவர்களை வழிதவறியவர்கள் என்று குற்றம் சாட்டுபவர்களின்
குற்றச்சாட்டுகளை, குறிப்பிட்ட சில ஆதாரங்களின்
அடிப்படையாகக்கொண்டு மறுத்துரைக்கின்றார்.
சொர்க்கத்தின்
பால் நம்பிக்கை ஊட்டும் இவ்வாறான ஹதீஸ்கள் பல உள்ளன என்பதை நாம் அறிவோம்.
நிச்சயமாக அல்லாஹுத்தஆலா மிக்க கருணையாளன் என்பதை நான் மறந்துவிடல் ஆகாது.
அதேநேரம், ரஸூலுல்லாஹி
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "எனது உம்மத் 73 குழுக்களாகப்
பிரியும் என்று கூறுகின்றார்கள், இங்கு "எனது உம்மத்" என்று கூறுவதை ஈண்டு
கவனிக்கவும். அல்லாஹ்வின் மீது பூரண விசுவாசம் கொள்ளாத எவரும் றஸூலுல்லாஹ்வின்
உம்மத்தில் அடங்கமாட்டார்கள் என்பது தெளிவு.
இரண்டு பிரபலமான
இஸ்லாமிய ஆளுமைகள், அல்-பாக்தாதி (இ.
1037) மற்றும் அல்-ஷஹ்ரஸ்தானி
(இ. 1153) ஆகியோர் 'பிரிவு' மற்றும் எண்கள்
ஆகியவற்றின் பின்னணிகள் பற்றிய வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கின்றனர். இதற்கு நிலையான
விளக்கம் என்று ஒன்று கிடையாது; ஒவ்வொருவரும் அவரவர் பின்னணி மற்றும் வாழ்ந்த காலத்தின்படி அவர்கள்
புரிந்துகொண்ட விதத்தில் மதவாத நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளை
முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
தாம்தான் தூய
இஸ்லாத்தை பின்பற்றுகிறோம்,
ஏனையவர்கள் வழிகேடர்கள்
என்று சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் உண்மையை அடக்கி
கட்டுப்படுத்த முடியாது. நமது சமூகங்களின் குறுகிய எல்லைகளுக்கு வெளியே அடியெடுத்து வைக்கும் போது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய
இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம்.
வரலாறு முழுவதும், சமூகங்கள்
ஒன்றிலிருந்து ஒன்று நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இன்றும், பல வழிகளில்
நம்பிக்கைகளின் பன்முகத்தன்மையைக் கற்றுக்கொள்வதற்கும் கொண்டாடுவதற்கும் உலகளாவிய
போக்கு அதிகரித்து வருகிறது.
இஸ்லாத்தின்
மூலாதாரங்களை ஆராய்ந்த பல அறிஞர்கள் தாம் புரிந்துகொண்ட கோணத்தின் அடிப்படையில்
கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு முஸ்லிம் பிரிவினரும் தங்கள் பிரிவு
மட்டுமே 'இரட்சிக்கப்பட்டது' என்றும் மற்ற
அனைத்து பிரிவுகளும் நரகத்திற்கு விதிக்கப்பட்டவை
என்றும் கூறுகின்றனர். இவற்றில் உண்மை யார் பக்கம் உள்ளது என்பதை ஆராய்தல்
முடிவு காண முடியாத சிக்கலான பிரச்சினைகள் என்பதை இந்த
விவாதம் நமக்கு உணர்த்துகிறது.
ஆகவே, முஸ்லிம்களின் பன்முகத்தன்மையை எமது கொள்கையின் அடிப்படையில் சரி, பிழை பார்க்காமல் மரியாதை, பணிவு, பொறுப்பு மற்றும் புரிந்துணர்வுடன் நோக்க வேண்டும்.
தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment