Thursday, December 20, 2018

யால்டா எனும் "நீண்ட இரவு" பாரசீக பண்டிகை

யால்டா இரவு (Shab e Chelleh)

ஈரானில் பண்டிகைகளுக்குப் பஞ்சமே கிடையாது. இஸ்லாமிய மார்க்கப் பண்டிகைகள், இஸ்லாத்துடன் சம்பந்தம் இல்லாத, தொன்றுதொட்டு வந்த கலாசார பண்டிகைகள் என்று அனைத்தும், இன்றளவிலும் பேணப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் "நீண்ட இரவு" ("ஷாப் ஏ செலேஹ்") பண்டிகையாகும்.  ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 20-21 இரவு அதிநீண்ட இரவாக இருக்கும் இந்த இரவை குடும்ப அங்கத்தவர்கள் ஒன்று கூடி, குதூகலிக்கும் இரவாக, இஸ்லாத்தின் வருகைக்கு முன்னிருந்தே பாரசீக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்விரவில் அனைத்து தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகள் இந்த பண்டிகைக்காக விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உலகெங்கிலும் உள்ள பாரசீக மக்கள், அவர்கள் நாடுகடந்தவர்களாக இருந்த போதும், இவ்விரவுக்காகக் காத்திட்டிருப்பர்.
யால்டா இரவு என்றால் என்ன?
யால்டா என்றால் பிறப்பு என்பதை குறிக்கும். யால்டா இரவு ஒரு அழகான பண்டைய ஈரானிய கொண்டாட்டம் ஆகும். இலையுதிர் காலத்தின் கடைசி இரவு, குளிர்காலத்தை வரவேற்கும் இரவு, வருடத்தின் மிக நீட இரவாக இருப்பதால், அந்த விசேடத்தை அடிப்படையாக வைத்து ஈரானியர்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் பெரும்பாலான பாரசீக மக்கள் சோரோஸ்த்ரிய மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர் என்பது அறிந்த விடயம்.  அப்போதிருந்தே இந்த கொண்டாட்டம் இருந்து வருகிறது.
இந்த இரவு தீய சக்திகளின் ஆதிக்கம் கொண்ட இரவாக, பிரிவு, தனிமை மற்றும் காத்திருப்பு ஆகியவற்றை உருவாக்குகிறது என்றும் அதேவேளை இருளை ஒளி வெற்றிகொள்ளும் தினமாகவும் பண்டைய பாரசீகர்களால் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதை பழங்கால கவிதைகளினூடாக அறிய முடிகிறது.
ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற மற்ற நாடுகளும் இந்த இரவை மதவேறுபாடின்றி கொண்டாடுகின்றனர்.
யால்டா ஈரானில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது...?
இவ்விரவில் பாரசீக மாக்கள் நீண்ட நேரம் விழித்திருப்பர். உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடுவர்.
அவர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான, குறிப்பாக தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்று வருடத்தின் நீண்ட இரவை  சிரிப்பு, விருந்து, கவிதை  என்று  கழிப்பர். மகாகவி  ஹஃபீஸ் கவிதைகள் மாலை முழுவதும் மணம் வீசிக் கொண்டிருக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்களை சந்தோசப்படுத்துவதாலும் அவர்களது ஆசீர்வாதத்தாலும் குளிர்கால நோய்கள் தாக்காது என்பது அவர்களது நம்பிக்கை.
இவ்விருந்தில் பழங்கள் தாராளமாக பரிமாறப்படும். மாதுளையும் தர்பூசணியும் இல்லாது இப்பண்டிகையை இல்லையெனலாம்.
ஈரானிய மக்களின் வாழ்க்கையில் மகா கவி ஹாபிஸின் கவிதைகளுக்கு முக்கிய இடமுண்டு. ஒருவர் மனதில் ஒன்றை நினைத்து, ஹபீஸின் ஒரு புத்தகத்தைத் திறந்து, அவர்கள் பார்க்கும் முதல் கவிதையானது, நினைத்தது எவ்வாறு  நிறைவேறும் என்பதன் விளக்கம் என்று சிலர் நம்புகின்றனர். ஆகவே யால்டா இரவில் ஒன்று கூடியுள்ள ஒவொருவரும்  ஏதாவது ஒன்றை மனதில் நினைத்து, ஹாபிஸின் கவிதை புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து, அதிலுள்ள முதல் கவிதையினை மூத்த ஒருவரைக் கொண்டு சத்தமாக வாசிக்கச் சொல்வர்.
வேறு நாடுகளில் குடியேறியுள்ள ஈரானியர்கள் ஒன்று கூடி  அவர்களது குடும்பங்களுடன் ஈரானில் தாங்கள் செய்த அதே விஷயங்களை குடியேறியுள்ள நாடுகளில் செய்வர். யால்டா இரவு அவர்களுக்கு மறக்க முடியாததாக ஒன்றாக இருக்கிறது.






No comments:

Post a Comment