Sunday, August 27, 2023

மருத்துவத்துறையில் அழியா தடம்பதித்த அல்-ராஸி

Al-Razi who left his mark in the field of medicine

முஹம்மது இப்னு ஸக்கரியா அல்-ராஸியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 27 ஈரானில் மருந்து தினமாக அனுசரிக்கப்படுகிறது.

முஹம்மத் இப்னு ஸக்கரியா அல்-ராஸி, (865–925) பெரும்பாலும் (அல்-) ராஸி அல்லது அவரது லத்தீன் பெயரான Rhazes என்றும் அழைக்கப்படுகிறார், இவர் இஸ்லாமிய பொற்காலத்தில் வாழ்ந்த ஒரு பாரசீக மருத்துவர், தத்துவவாதி மற்றும் இரசவாதத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்.

இவர் மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் தர்க்கவியல், வானியல் மற்றும் இலக்கணம் குறித்தும் பரவலாக எழுதியுள்ளார்.

ஒரு பரந்த சிந்தனையாளரான அல்-ராஸி பல்வேறு துறைகளில் அடிப்படை மற்றும் நீடித்த பங்களிப்புகளை மருத்துவ உலகுக்கு வழங்கியுள்ளார், அவற்றை அவர் 200 க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் பதிவு செய்துள்ளார் மேலும் அவரது அவதானிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவத்தில் பல முன்னேற்றங்களுக்காக இன்றளவிலும் நினைவுகூரப்படுகிறார்.

இவரது "அல்-ஜுதாரி வல் ஹசாபா" பெரியம்மை மற்றும் தட்டம்மை பற்றிய முதல் ஆய்வு நூலாகும், மேலும் இது பெரும்பாலும் ராஸியின் அசல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது: இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், பெரியம்மை மற்றும் தட்டம்மை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை மருத்துவ ரீதியாக வேறுபடுத்தி, முந்தையவற்றிற்கு சிறந்த சிகிச்சையை பரிந்துரைத்த முதல் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மருத்துவ ஆசிரியராக, அவர் அனைத்து பின்னணி மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களை தன்பால் ஈர்த்தார், மேலும் செல்வந்தர் அல்லது ஏழை என்ற பாகுபாடின்றி தனது நோயாளிகளின் சேவையில் இரக்கமும் அர்ப்பணிப்பும் கொண்டு செயல்பட்டார். பரிசோதனை மருத்துவத்தின் ஆரம்பகால ஆதரவாளரான அவர் பாக்தாத் மற்றும் ரே மருத்துவமனைகளின் அக்கால தலைமை மருத்துவராக பணியாற்றினார்.

இவரது ஆக்கங்களின் மொழிபெயர்ப்பின் மூலம், அவரது மருத்துவ படைப்புகள் மற்றும் கருத்துக்கள் இடைக்கால ஐரோப்பிய பயிற்சியாளர்களிடையே சென்றடைந்து மிகவும் செல்வாக்கு செலுத்தின மேலும் மேற்கில் மருத்துவ கல்வியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

ராஸியின் படைப்பான அல்-மன்சூரியின் சில தொகுதிகள், அதாவது "அறுவை சிகிச்சை" மற்றும் "சிகிச்சை குறித்த ஒரு பொது புத்தகம்" ஆகியவை மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் மருத்துவ பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.

கூடுதலாக, இவர் குழந்தை மருத்துவத்தின் தந்தையாகவும், மகப்பேறியல் மற்றும் கண் மருத்துவத்தின் முன்னோடியாகவும் விவரிக்கப்படுகிறார். குறிப்பாக, கண் பாவையில் ஏற்படும் ஒளியின் எதிர்வினையை அடையாளம் கண்ட முதல் மருத்துவர் இவரே ஆகும்.

மருத்துவத்தில் கடுமையான ஆய்வு ஆதார அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்துவதற்கான ஆரம்பகால ஆதரவாளராக இருந்தார். அவர் தனது அவதானிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவத்தில் பல முன்னேற்றங்களுக்காக நினைவுகூரப்படுகிறார்.

மதுசாரம் (ஆல்கஹால்) மற்றும் கந்தக அமிலம் உள்ளிட்ட பல சேர்மங்கள் மற்றும் வேதிப்பொருட்களையும் அவர் கண்டுபிடித்தார்.

இவரது புத்தகங்களில் மிக முக்கியமானது ஒன்பது தொகுதிகள் கொண்ட மருத்துவ கலைக்களஞ்சியமான "நற்பண்பு வாழ்க்கை (அல்-ஹாவி)" ஆகும், இந்நூலில் பல்வேறு மருத்துவப் பாடங்களின் பரிசீலனைகளும், கிரேக்க மற்றும் அரிஸ்டாட்டிலியக் கருத்துக்கள் பற்றிய விமர்சனங்களும் அடங்கி உள்ளன. இது பல புதுமையான கருத்துக்களை வெளிப்படுத்துகிறது, எனவே, பல அறிஞர்கள் ராஸியை மத்திய காலத்தின் மிகச்சிறந்த மருத்துவராக கருதுகின்றனர்.

அவரது படைப்பான "கிதாப் அல்-மன்சூரி"யின் சில தொகுதிகள், அதாவது 'அறுவை சிகிச்சை குறித்த ஒரு புத்தகம்' மற்றும் 'சிகிச்சை குறித்த ஒரு புத்தகம்' ஆகியவை மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மருத்துவ பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக மாறியது.

அவர் ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், சோதனை மற்றும் கோட்பாட்டு அறிவியலுக்கு தன்னை அர்ப்பணித்தார். "கிதாப்-அல்-அஸ்ரார்" என்பது வேதியியல் பொருட்கள் தயாரித்தல் மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகியவற்றைக் கையாளும் நூல்களில் ஒன்றாகும். இதில் பல வேதிவினைகளை மிக விரிவாக சித்தரித்துள்ளார், மேலும் வேதியியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் சுமார் 20 கருவிகளின் முழு விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.

ராஸி பல நடைமுறை, முற்போக்கான, மருத்துவ மற்றும் உளவியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். அவரது தத்துவ எழுத்துக்கள் பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன, என்றபோதும் 20 ஆம் நூற்றாண்டில் அவை பல அறிஞர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பாராட்டப்பட்டன.

அவரது 40 கையெழுத்துப் பிரதிகள் ஈரான், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவரது பங்களிப்பு அறிவியல் மற்றும் குறிப்பாக மருத்துவத்தின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதாக மருத்துவ மேதைகள் இன்றளவிலும் பாராட்டுகின்றனர்.

- தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment