Wednesday, January 25, 2023

மேற்குலகு: உலகில் முஸ்லிம்கள் ஒரு சக்தியாக வளர்வதை எப்படியாவது தடுத்து விட வேண்டும்

West: Muslims must somehow be prevented from growing as a power in the world

உலகின் வல்லாதிக்க சக்திகள் ஏனைய நாடுகளை, குறிப்பாக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு உலகை தனது இஷ்டப்படி ஆட்டிப்படைக்க எத்தனிக்கின்றன; இதில் அவை ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன என்று குறிப்பிடலாம்.

எண்ணெய் வளம் கொண்ட அரபு நாடுகள், ஒரு சிலதைத தவிர, அனைத்தும் வல்லாதிக்க சக்திகளின் சதிவலைக்குள் சிக்கவைக்கப்பட்டுள்ளன என்பது ரகசியமல்ல. என்றாலும் சில நாடுகள் என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை வல்லாதிக்க சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்ற தீர்மானித்தில் உறுதியாக உள்ளன. இதில் ஈரான் முன்னிலை வகிக்கின்றது.

ஈரான் நிலைக்கொண்டுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பூகோள இடமானது, ஈரான் இன்றி தமது நோக்கத்தை முழுமையாக செயற்படுத்த முடியாது எனபதை நன்றாக உணர்ந்துள்ள வல்லாதிக்க சக்திகள் எப்படியாவது அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன. பொருளாதாரத் தடை, வங்கிகள் முடக்கம் மற்றும் இன்னோரன்ன நெருக்குதல்கள் அனைத்தும் மேற்குலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கே ஆகும்.

ஈரான் மட்டுமல்ல, மேற்குலகின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியா கூட தம் நாட்டு விவகாரங்களை சுயமாக சிந்தித்து, சுயமாக தீர்மானங்களை எடுக்கும் நிலை ஏற்பட்டால், தற்போது ஈரான் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றே சவுதியும் எதிர்கொள்ள நேரிடும் என்பது நிச்சயம். ஏனெனில், உலகில் முஸ்லிம்கள் ஒரு சக்தியாக வளர்வதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதில் வல்லாதிக்க சக்திகள் உறுதியாக இருக்கின்றன.

மேலும், வல்லாதிக்க சக்திகளின் திட்டப்படி, இஸ்லாமிய உலகு ஏதாவது ஒரு விடயத்தில் முரண்பட்டு எப்போதுமே கொந்தளிப்பு நிலையில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த ஷீஆ-சுன்னா விவகாரம் பூதாகார வடிவெடுத்திருப்பது அவர்களின் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஏனெனில், இஸ்லாமிய உலக ஒற்றுமையின் விளைவை அவர்கள் நன்கு அறிவார்கள்.

எனினும் அவை எல்லா முஸ்லிம் நாடுகளையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ள மாட்டா. ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா எம் கண் முன்னுள்ள நல்ல உதாரணங்கள். ஒவ்வொன்றாக அணுகுவார்கள். முஸ்லிம் நாடுகள் எப்போதுமே பாதுகாப்பிற்காக அவர்களது தயாவிலேயே தங்கியிருக்க வேண்டும். அதற்காக பிரச்சனைகளை அவர்களே உருவாக்குவார்கள், ஆபத்தில் உதவுவோர் போல் பாசாங்கும் செய்வார்கள். இப்போது அவர்களின் இலக்கு ஈரானை நோக்கியதாக உள்ளது.

மேற்குலக நாடுகள் கடந்த சில தினங்களுக்கு முன் IRGC எனப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையினரை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்தன. பதிலுக்கு ஈரான் பாரசீக வளைகுடா நுழைவாயிலான ஹோர்முஸ் நீரிணையை மேற்குலக நாடுகளின் கப்பல்கள் நுழைய முடியாத வாறு தடுத்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் மேற்குலகின் நெருக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க ஈரான் அணு ஆயுத பரம்பல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோஷமும் வலுப்பெற்று வருகிறது.

இஸ்லாமிய புரட்சி காவலர் படை (IRGC) என்பது ஈரானிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னணிப் படையாகும். IRGCயின் உறுதியான நடவடிக்கைகள் இல்லையென்றால், ISIS தக்ஃபீரி பயங்கரவாதிகள் பிராந்தியம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தியிருப்பர்.

ISIS தக்ஃபீரி பயங்கரவாதிகள் சியோனிச சக்திகளின் உருவாக்கம் என்பது இப்போது மிகத்தெளிவாகத் துலங்கி வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதில் ஷஹீத் சுலைமானியின் பங்கு அளப்பரியது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார தடைகளுக்கு முகங்கொடுத்து வரும் ஈரான் சகல துறைகளிலும் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவது, இன்னபிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் மேற்குலக நாடுகளை இப்போது ஆட்டிப்படைக்கிறது. எண்ணெய் வளமிக்க பாரசீக வளைகுடா நாடுகளில் ஒரு சிலவேனும் ஈரானின் வழியைப் பின்பற்றுமாயின், மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் செல்வாக்கு செல்லாக்காசாகி விடும் என்பது நிச்சயம்.

யதார்த்தம் என்னவென்றால், பிராந்திய மற்றும் உலக அளவில் புதிய கலாச்சார அடித்தளங்கள் மற்றும் கொள்கைகளை திட்டமிடுவதன் மூலம் மேற்கு நாடுகளால் மிகவும் சரியானது என்று கருதப்படும் ஆளுகை மாதிரிகளை ஈரான் இஸ்லாமிய குடியரசு சவாலுக்கு உட்படுத்தி, இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி முறையை அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே ஈரானின் எதிரிகள் இஸ்லாமிய ஆட்சிமுறையையும் அதன் அடிப்படையிலான அரசை நசுக்குவதற்குக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உலக வல்லாதிக்க சக்திகள் அநேகமாக உலகின் எல்லா நாடுகளிலும் தமக்கென, தமது நலம்காக்கவென சில, பல குழுக்களை அமைத்து, போஷித்து வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த பகிரங்க ரகசியம். இவை ஸ்லீப்பிங் செல்களாக, மேலிடத்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும். இதுபோன்ற குழுக்கள் இஸ்லாமிய ஈரானிலும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு மேற்குலகால் ஈரானுக்கு எதிராக முடுக்கிவிப்பட்டுள்ள பிரசாரங்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசில் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பாத்திரங்களுடன் பிணைத்து வேண்டுமென்றே உலகெங்கும் பரப்பப்பட்டு வருகின்றன.

சமீபத்திய கலவரங்களின் போது, மஹ்ஸா அமினியின் இறப்பை புறக்கணித்து விட்டு, இஸ்லாமியக் குடியரசு அமைப்புக்கு எதிராக, மேற்குலகின் அதிகாரபூர்வ (அரசியல்) மற்றும் அதிகாரபூர்வமற்ற (ஊடக) நிறுவனங்களால் அனைத்து வகையான பொய்ச் செய்திகளையும் தயாரித்து கட்டவிழ்த்துவிடப்பட்டதை நாங்கள் கண்டோம்.

சத்தியம், சுதந்திரம், நீதி, அமைதி, இரக்கம், நேர்மை, விசுவாசம் மற்றும் அன்பு போன்ற மனித விழுமியங்களைத் தேடிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தாமே முன்னணியில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது.

பொருளாதார தடைகள் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டு, தனி ஒரு நபரில் கரிசனைக் காட்டும் இவர்களது இந்த இரட்டை நிலைப்பாட்டை ஈரான் இஸ்லாமிய குடிரசு ஆரம்பம் தொட்டே அம்பலப்படுத்தி வருகிறது. பலஸ்தீன் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தொடர்பாக வல்லாதிக்க சக்திகள் வெளிப்படையாகவே காட்டி வரும் நயவஞ்சகத்தனத்தையும் ஈரான் தன்னால் இயன்ற அளவு உலகறிய செய்து வருகிறது.

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் வெளிநாட்டவர்களின் குறுக்கீடு உலக சமாதானத்திற்கு நாசம் விளைவிப்பதாக உள்ளது. இப்பிராந்திய நாடுகளின் ராணுவத்தால் பாதுகாப்பை வழங்க முடியும். சில அரசுகள் தங்கள் சொந்த தேசத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், வெளிநாட்டு ராணுவத்தின் தலையீட்டையும் பிரசன்னத்தையும் அனுமதிக்கக் கூடாது. அனைத்து பிரச்சினைகளும் சம்பவங்களும் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும், இறுதியில் சத்தியமே வெல்லும் என்ற நிலைப்பாட்டிலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு உறுதியாக இருக்கின்றது.

-          தாஹா முஸம்மில்


No comments:

Post a Comment