Contributors

Friday, December 10, 2021

Iran - UAE உறவில் புது அத்தியாயம்

 UAE, Iran Hope to Turn Page in Bilateral Ties

பாரசீக வளைகுடா அரபு நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் அரிய விஜயத்தை அடுத்து ஈரான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான அதன் உறவுகளில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல்-நஹ்யான் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானியின் அழைப்பின் பேரில் கடந்த திங்கள்கிழமை ஈரான் நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின் போது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசியையும் சந்தித்தார்.

2016ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறைக்கப்பட்டதன் பின்னர் எமிரேட்ஸின் உயர் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது பயணம் இதுவாகும்.

மதிப்பிற்குரிய ஷியா உலமா ஒருவருக்கு ரியாத் மரணதண்டனை விதித்ததற்கு எதிராக ஆத்திரமடைந்த ஈரானிய எதிர்ப்பாளர்கள் சவூதி இராஜதந்திர அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியதை அடுத்து, சவுதி அரேபியா இஸ்லாமிய குடியரசுடனான உறவை துண்டித்தது. அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்சும் ஈரானுடனான அதன் தொடர்பை துண்டித்தது.

அதன் பிறகு எமிரேட்ஸின் உயர் அதிகாரி ஒருவரால் ஈரானுக்கு மேற்கொள்ளப்படும் முதலாவது பயணம் இதுவாகும்.

"இந்த பிராந்தியத்தின் நாடுகளுடன் நல்லுறவு புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என்று சந்திப்பின் போது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீசி கூறினார் என்று அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. 


"எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான உறவுகளின் வளர்ச்சியை நாங்கள் வரவேற்கிறோம்," என்று அவர் கூறினார்.

"வெளிநாட்டினரின் தலையீட்டால் இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கப்படக்கூடாது" என்று ரயீசி மேலும் கூறினார்.

ஈரான் மற்றும் சவூதி அரேபியா வும் பாரசீக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம்வகிக்கும் அதன் ஆறு நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பிராந்தியத்தில் பல்வேறு ஆயுத மற்றும் அரசியல் மோதல்களில், குறிப்பாக யெமன் மற்றும் சிரியாவில் எதிரெதிர் பக்கங்களில் நின்றன.

ஆனால் கடந்த மாதங்களில் சவூதி அரேபியாவும் ஈரானும் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியதால் நல்லுறவுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

ஈரான் இஸ்லாமிய குடியரசில் இப்ராஹிம் ரயீஸி நிர்வாகம் அதன் கோட்பாடு மற்றும் நடைமுறையில் அண்டை நாடுகளுடனும் பிராந்திய நாடுகளுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கான தீவிர விருப்பத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த கொள்கைஏனைய தரப்பினரிலும் தீவிர விருப்பம் இருந்தால், பிராந்தியத்தில் நீடித்த நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட வழிவகுக்கும்.

"ஈரான் இஸ்லாமிய குடியரசு அண்டை நாடுகளை அதன்  'உறவினர்கள் என்று கருதுகிறது மற்றும் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான மற்றும் முக்கிய முன்னுரிமையாகக் கருதுகிறது மற்றும் அவர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் விரும்புகிறது" என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஷேக் தஹ்னூன் “இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்”, என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று கூறியது.

மேலும், இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் ஒட்டுமொத்த விரிவாக்கத்துக்கும் இது வழி வகுக்கும் என அவர் நம்புவதாகவும் அவர் கூறினார்.

80 ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் 14 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தை பாரிஸ் செய்துகொண்டது. அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, பாரசீக வளைகுடா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் பிராந்தியத்தை "ஸ்திரமின்மைக்கு ஆளாக்கியதற்காக" தெஹ்ரான் பிரான்ஸைத் குற்றம்சாட்டியது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே பிரான்சை "இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார் மற்றும் "எங்கள் பிராந்தியத்தை இராணுவமயமாக்குவதை" விமர்சித்தார்.

ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், "பிராந்திய நாடுகள் எங்கள் ஏவுகணைகளைப் பற்றி பல கூட்டங்களை நடத்தினாலும், பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுத விற்பனையை நாங்கள் காண்கிறோம்" என்று காதிப்சாதே கூறினார். "இந்த நடவடிக்கைகளின் காரணமாக, நாங்களும் எங்கள் பாதுகாப்புக் கவசத்தை இன்னும் பலமானதாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு ஆலோசகரின் வருகையும் சிரிய வெளியுறவு மந்திரி பைசல் அல்-மெக்தாத் மற்றும் ஈரானிய வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் சந்திப்பும் ஒரே சமயத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் ஒரு நல்ல இருதரப்பு பேச்சுவாத்தைகளில் ஈடுபட்டோம்" என்று அமீர்-அப்துல்லாஹியன் ஒரு கூட்டு செய்தி மாநாட்டில் கூறினார்.

ஷம்கானி, நாடுகளுக்கிடையேயான "இணக்கமான மற்றும் நட்பான" உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளால் அவை பாதிக்கப்படக்கூடாது என்றும் கூறினார் (இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியைக் குறிக்கும்).

ஷேக் தஹ்னூனின் சகோதரர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியின் சக்திவாய்ந்த முடிக்குரிய இளவரசர் மற்றும் ஏழு அமீரகங்களின் கூட்டமைப்பான எமிரேட்ஸின் நீண்ட கால ஆட்சியாளர். ஷேக் முஹம்மதுவின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது இராணுவப் படைகளின் துரித விரிவாக்கத்தில் இறங்கியுள்ளது. எமிரேட்ஸ் அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படை தளங்களை வழங்குகிறது மற்றும் அதன் ஜெபல் அலி துறைமுகம் அமெரிக்காவிற்கு வெளியே அமெரிக்க கடற்படையின் மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாகும்.

ஆனால் யெமன் மீதான போரில் சவுதி தலைமையிலான கூட்டணியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் இப்போது பின்வாங்கியுள்ளது. அரசியல் சர்ச்சையின் காரணமாக பல ஆண்டுகளாக ஐக்கிய புறக்கணித்து வந்த துருக்கி மற்றும் கத்தாருடனான இராஜதந்திர உறவுகளை சீர்செய்ய இப்போது எமிரேட்ஸ்  முயன்று வருகின்றது.

https://kayhan.ir/en/news/97452/uae-iran-hope-to-turn-page-in-bilateral-ties 

No comments:

Post a Comment