Sunday, April 12, 2020

கொரோனா உக்கிரமடைந்துள்ள நிலையிலும் தொடரும் அமெரிக்க வல்லாதிக்கம்.


Coronavirus: Sanctions And Suffering

by Dr Chandra Muzaffar


சமீபத்திய தசாப்தங்களில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடியின் மத்தியில், ஐக்கிய அமேரிக்க மேலாதிக்க மையம், சில நாடுகளுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் அவற்றில் சிலவற்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் அதிக வேதனையையும் துன்பத்தையும் மரணத்தையும் கூட பரந்த அளவில் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவையும் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிப்பாட்டைக் கொண்டுள்ள  சமூகங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அமேரிக்கா நீக்க முற்படும் என்று சிலர் நினைக்கலாம்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மூன்று நாடுகளின் தற்போதைய நிலையின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக குறிப்பிட்ட நாடுகள் முகம்கொடுக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்களை முன்னிலை படுத்தி, வல்லாதிக்க சக்திகளின் மோசமான திட்டங்கள் பற்றி விரிவாக விளக்குவதற்கு விழைகின்றேன்.

மோசமான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ள நாடுகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசு முதன்மை பெறுகிறது. இஸ்லாமிய குடியரசின் மீது 1980 ல் தொடங்கிய இந்த பொருளாதாரத் தடை இன்று கடுமையான ஒன்றாக மாறியுள்ளது. பிப்ரவரி 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரான் இஸ்லாமிய குடியரசு அமெரிக்க ஆணைகளுக்கு அடிபணிய மறுத்ததோடு மட்டுமல்லாது பலஸ்தீன் விடயத்தில், வெறும் பேச்சளவில் மட்டுமல்லாது, அதன் முழுமையான விடுதலைக்கு செயல் ரீதியான உதவிகளை செய்துவந்ததன் காரணமாக அமெரிக்க வல்லரசின் இலக்காக மாறியது என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. கொரோனா கொரோனா வைரஸின் விளைவாக பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்த போதும், அமெரிக்கா அதன் சட்டவிரோத பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால், இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் எந்த உதவியையும் ஏற்காது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு ஈரான்  விண்ணப்பித்துள்ளது. ஆனாலும்,  சில ஆதாரங்களின்படி, அமேரிக்கா அதை தடுத்துள்ளதாக அறிய முடிகிறது.. இந்த சர்வதேச நாணய நிதியத்தின் மீது அமெரிக்க அரசாங்கம் கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது என்பது ரகசியமல்ல. இந்த நிலையில், சீனாவும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு உதவ முன்வந்துள்ளன. இவ்வாறு இருக்கையில், ஈரானில் உள்ள சிவில் அமைப்புகள், தொற்றுநோய் காரணமாக முடங்கிக்கிடக்கும் அமெரிக்க வாழ் வறிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றது கியூபா; இந்நாடு அமெரிக்கத் தடைகளின் கீழ் 1961 முதல்  நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. ஐ.நா பொதுச் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தவிர்த்து, கியூபாவுக்கு எதிரான தொடர் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகின்றன. இன்னும் 10,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொரோனா காவுகொண்டுள்ள நிலையிலும் கூட திமிர்பிடித்த அமெரிக்க அரசு இந்த கோரிக்கையை காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வருவதில் கியூபா, அதன் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட நிலையிலும், பிற நாடுகளை விட அதிகமாக உதவிகளை செய்து வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. கியூபாவின் உதவி அமெரிக்க மக்களையும் சென்றடைந்துள்ளது.

அடுத்து வெனிசுலா, இது கடுமையான அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள மூன்றாவது நாடு ஆகும். வெனிசுலா மக்கள் தமது நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கான நியாயமான விருப்பத்திற்கு பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் கியூபாவைப் போலவே, வெனிசுலாவும் மூச்சுத் திணறச் செய்யும் பொருளாதாரத் தடைகளுக்கு மட்டுமல்ல அனைத்துவிதமான சதித்திட்டங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றது. அப்போதைய வெனிசுலா ஆட்சியாளர் ஹ்யூகோ சாவேஸுக்கு எதிரான ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தோல்வியில் முடிந்தது. எனினும், இப்போதும் கூட வெனிசுலா மக்களின் விரோதிகள் அவர்களது சூழ்ச்சிகளை கைவிட்டதாகத் தெரியவில்லை. தற்போதைய ஜனாதிபதி நிக்கோலோ மடுரோ ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் அமெரிக்க சந்தையில் கொக்கைன் போதை மருந்தை பரப்புவதற்காக சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஒரு வினோதமான கதையை சோடித்துள்ளனர். பிராந்தியத்தில் உள்ள போதைப்பொருள் கொண்டுசெல்லப்படும் பாதை மற்றும் உற்பத்தி மையங்கள் பற்றி அறிந்த எவரும் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் நகைப்புக்கிடமானது என்பதை இலகுவில் புரிந்துகொள்வர். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியை பதவி கவிழ்ப்பதற்காக கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் அமேரிக்கா மேற்கொண்டுவரும் சமீபத்திய முயற்சியாகும்.

ஒரு பாரிய புவிசார் நெருக்கடிக்கு மத்தியில், அதனால் பலநாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் அவதியுற்றும் உயிரிழந்தும் இருக்கையில், அமெரிக்க மேலாதிக்க மையத்தின் தீங்கிழைக்கும் அரசியல் சூழ்ச்சிகள் எப்போதும் போலவே தொடர்கிறது என்பது வெளிப்படையானது. அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் கூட மனித அவலங்கள் மிகவும் பரவலாகவும் இருப்பதால், அமெரிக்க மேலாதிக்க மையம் தமது இறுக்கத்தில் சற்று தளர்வைக் காட்டும் என்றும், பல தசாப்தங்களாக கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மில்லியன் கணக்கான மனிதர்களுக்கு இவ்வளவு வேதனையையும் துயரத்தையும், உயிர் இழப்பையும் ஏற்படுத்திய பொருளாதாரத் தடைகளை நீக்கும் என்றும் நம்மில் பலர் நம்பினோம்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அவலத்தின் காரணமாக பேரிடருக்கு உள்ளாகியுள்ள இந்த மக்கள் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய போர்நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தன. இந்த வேண்டுகோளை ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் உட்பட பல அரசாங்கங்களும் ஆதரித்தன ஆயினும் அந்த வேண்டுகோள்கள் அனைத்தையும் அமேரிக்கா உதாசீனம் செய்தது.

கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடிக்க ஒன்றுபட்ட செயற்பாடு அவசியம். உலகளாவிய ஒற்றுமையை ஸ்தாபிக்க பலரும் செயல்பட்டு வருகின்றனர். புவிசார் அரசியல் அடிப்படையில், அனைத்து மோதல்களையும் நிறுத்துதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் போர் நிறுத்தங்களைக் கடைப்பிடித்தல் என்பன பொதுவான மனித நேயத்தின் உறுதியான சான்றுகளாகும்.

14 ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞர் ஷேக் ச'அதியின் காலத்தால் அழியாத கவி வரிகளில் பொதிந்துள்ள ஞானத்தின் உண்மையை அவை பிரதிபலிக்கும்:

மனித இனம் ஓருடலைப் போன்றது
ஒரு ஆபரணத்திலிருந்து உருவாக்கப்பட்டது
உடலில் ஓர் உறுப்பு தாக்கப்பட்டால்
உடல் முழுதும் அதை உணர வேண்டும்
மற்றவர்களின் வலியை உணர்பவர் மட்டுமே
மனிதர் என்று அழைக்கப்பட தகுதியானவர்.

டாக்டர் சந்திரா முஸஃபர் அவர்கள் மலேசியாவின் ஒரு நியாயமான உலகுக்கான சர்வதேச இயக்கத்தின் International Movement for a Just World (JUST) தலைவராகும்



No comments:

Post a Comment