Tuesday, April 7, 2020

ஈரான் மத்திய கிழக்கில் பழங்களின் சொர்க்க புரி


Iran the Paradise of Fruits in the Middle East

ஈரான் இஸ்லாமிய குடியரசை நாம் ஷீஆக்களை அதிகமாக கொண்ட நாடு, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு, அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத நாடு என்று தான் எம்மில் அநேகர் அறிந்துவைத்துள்ளோம். ஆனால் அது பல்வகைப்பட்ட விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் உலகில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது போன்ற விடயங்களை அரியமாட்டோம்.


மத்தியகிழக்கில் ஈரான் பிரதானமாக ஒரு விவசாய உற்பத்தி நாடு. ஈரானிய விவசாய உற்பத்தி பொருட்கள் பாரசீக வளைகுடா மற்றும் கிழக்காசிய  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சவூதி தலைமையிலான ஒரு சில அரபு நாடுகள் கத்தார் மீது பொருளாதார தடை விதித்ததும் ஈரான் இஸ்லாமிய குடியரசு அந்நாட்டுக்கு தம்மால் இயன்ற அனைத்து உற்பத்தி பொருட்களையும் ஏற்றுமதி செய்து அங்கு உணவு பஞ்சம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது.

நாற்பது ஆண்டுக்கும் மேலாக பொருளாதார தடைகளைகளுக்கு முகம்கொடுத்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு எண்ணெய் ஏற்றுமதியில் மட்டுமே தங்கி இருந்திருக்குமாயின், பொருளாதார தடையின் காரணமாக எப்போதோ வீழ்ந்திருக்கும். ஈரானில் உணவுப் பஞ்சம் என்று எப்போதும் ஏற்பட்டதில்லை எனலாம்.

இந்த கட்டுரையில் இஸ்லாமிய ஈரானின் பழ உற்பத்தி பற்றி பார்ப்போம்.

ஈரானின் நிலத்தை பழங்களின் சொர்க்க புரி என்றே கூற வேண்டும். ஈரானின் வளமான மண்ணில் பல்வேறு வகையான பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு உலக சஞ்சாரியான, ஜீன் சார்டின் ஈரானில் பயணம் செய்த பின்னர் ஈரானில் உற்பத்தி செய்யப்படும் முலாம்பழம், வெள்ளரி, திராட்சை, ஆப்ரிகாட், மாதுளை, ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, சீமைமாதுளம்பழம், பிளம்ஸ், அத்தி, பிஸ்தா, பாதாம், வால்நட், ஹேசல்நட் மற்றும் ஆலிவ் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களை குறிப்பிடுகின்றார். அவர் தனது பயணக் குறிப்பில் "ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் வகையான பழங்கள் ஈரானில் உள்ளன, ஆனால் ஈரானிய பழங்கள் ஐரோப்பாவில் உள்ள பழங்களை விட மிகவும் சுவையாக இருக்கின்றன" என்று குறிப்பிடுகின்றார்.

ஈரானின் புவியியல், அதன் காலநிலை, நிலப்பரப்பு மற்றும் கடல் மட்டத்திற்கு மேலே உள்ள உயரம் போன்றவை தெய்வீக அருட்கொடைகள் ஆகும், இது ஈரானியர்களுக்கு உலகின் சிறந்த தரமான பழங்களை அனுபவிக்க உதவுகிறது. அரை வெப்பமண்டல பேரீத்தம் முதல் குளிர்ந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பேரிக்காய், பீச் போன்ற பழங்கள் வரை அனைத்தும் ஈரானில் கிடைக்கின்றன.

ஈரான் நான்கு பருவகால நாடு. இதனால், வெப்பமண்டலத்திலிருந்து குளிர்ந்த பகுதிகள் வரையிலான பழ மரங்கள் ஈரானில் வளர்கின்றன. ஈரானின் வடக்கு மற்றும் தெற்கில் முறையே உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சு மற்றும் தர்பூசணியை ஒரே நேரத்தில் கடைகளில் காணலாம்! உண்மையில் ஈரான் ஒரு பழங்களின் சொர்க்கம் என்பதை அந்நாட்டுக்கு விஜயம் செய்வோர் அறிந்துகொள்வர்.


ஈரான் இஸ்லாமிய குடியரசு விவசாய பொருட்களின் பன்முகத்தன்மை குறித்து உலகின் நான்காவது இடத்திலும் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் உலகில் எட்டாவது இடத்திலும் அதேநேரம் மாதுளம் பழ உற்பத்தியிய ஈரான் உலகில் முதலாவது இடத்திலும் உள்ளது.

ஈரானிய நகரங்களில் பெரும்பாலானவை அவற்றின் பழங்களின் சிறப்பு கொண்டு அறியப்படுகின்றன. உதாரணமாக, (யாழ்ப்பாண மாம்பழம், மல்வானை ரம்புட்டான் போல). பழ உற்பத்தியாளர்கள், அவற்றின் சிறப்பு சுவைக்காக, சவே மாதுளை அல்லது நடான்ஸ் பேரிக்காய் என்று கூறுகிறார்கள். ஒரு பழ உற்பத்தியாளர் பழத்துடன் நகரத்தின் பெயரைக் குறிப்பிடும்போது, குறிப்பிட்ட பழம் உயர் தரத்தை கொண்டது என்று அர்த்தம், ஏனெனில் விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, சில பழங்கள் மண் மற்றும் வானிலை காரணமாக சில பகுதிகளில் சிறப்பாக விளைகின்றன, சிறப்பான சுவையையும் தருகின்றன. உதாரணமாக, தெற்கு ஈரானில் உள்ள மினாப் தர்பூசணி சூரிய ஒளியை நேரடியாக பெறுவதின் காரணமாக உயர் தரத்தைப் பெறுகிறது. ஆயினும் ஈரானின் வடக்கே இவ்வளவு தரமான தர்பூசணியை உற்பத்தி செய்ய முடியாது.


ஈரானின் வரைபடத்தை பார்த்தால் பல்வேறு பிராந்தியங்களின் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களையும் காணலாம். இது ஈரான் பழங்களின் நிலம் என்று அழைக்கப்படுவதற்கான சுருக்கமான காரணத்தைக் காட்டி நிற்கிறது. ஈரானின் ஒவ்வொரு நகரத்திலும் மாகாணத்திலும் புகழ் பெற்ற ஒரு பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறான பழங்களில் ஈரானிய செர்ரியும் ஒன்றாகும். இந்த செர்ரி மரம் சராசரி வெப்ப மற்றும் சராசரி குளிர்ந்த காலநிலைகளில் வளர்ந்து பழம் தரும். செர்ரி மரம் வளர்ந்து பயன் தருவதற்கு  சிறந்த வானிலை, சராசரி குளிர் மற்றும் அதற்கு உகந்த நிலம், போதுமான குளிர்கால மழை வீழ்ச்சி அவசியமாகும். மற்றும் கோடைகாலங்களில், குளிர்கொண்ட மலைப் பகுதிகளில் பல வண்ணம் கொண்ட செர்ரி வகைகள் இருக்கும். ஈரானில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு செர்ரிகள் உள்ளன.

ஈரானிய செர்ரிகள் மே மாதத்தில் பறிக்கப்பட்டு செப்டம்பர் வரை பழ சந்தைகளில் கிடைக்கின்றன. தரமான செர்ரிகளை வாங்க சிறந்த காலம் ஜூன் மாதமாகும். உலகின் சிறந்த தரமான செர்ரி ஈரானின் செர்ரி ஆகும். அவை மிகவும் சுவையானது என்பதற்கு அப்பால் செர்ரிகளில் அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. செர்ரியில் வைட்டமின்களான ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன.


ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க நல்ல அந்தோசயினின்கள் அவற்றில் உள்ளன. செர்ரிகளில் ஸ்ட்ரோபெர்ரி மற்றும் ப்ளாக்பெரியை விட ஐந்து மடங்கு அதிகம் மெலடோனின் உள்ளது, மேலும் இது தூக்கமின்மை நோயை குணப்படுத்தவும் மூட்டுகளின்  ஆரோக்கியமான செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது. அவை அழற்சி எதிர்ப்பு முகவராகவும் செயல்படுகின்றன. மற்றும் அவை புற்றுநோய் மற்றும் தொடர் தலைவலி போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் சீர்படுத்த செர்ரிகளும் உதவுகின்றன, இதனால் நமது இருதய செயற்பாட்டுக்கு உதவுகிறது.

செர்ரி பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அடங்கி இருப்பதால், இது மூளை ஆற்றலுக்கு மிகவும் நல்லது. செர்ரி உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது, ஏனெனில் அவை இரத்தத்தை சுரக்க செய்வதற்கும் பங்களிப்பது மட்டுமல்லாமல் அவற்றில் உள்ள சோடியம் காரணமாக அவை உடலுக்கு நெகிழ்வுத்தன்மையையும் தருகின்றன.

ஈரான் அழகான செர்ரி தோட்டங்களால் நிறைந்துள்ளது. மேற்கு அஸர்பைஜான் மாகாணத்தின் எல்லை நகரமான ஓஷ்னாவிஹ் ஏராளமான செர்ரி தோட்டங்களை கொண்டிருப்பதால் அது ஈரானின் செர்ரியின் தலைநகரம் என்று சிலர் நம்புகிறார்கள். ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகின் மூன்றாவது செர்ரி உற்பத்தி நாடாகும்.

ஈரானிய செர்ரியின் பிரபலமான வகைகளில், மஷ்ஹத் கருப்பு செர்ரி, லாவசனாட் இளஞ்சிவப்பு செர்ரி, ஹஜ் யூசெஃபி செர்ரி மற்றும் மெஷ்கின்ஷாஹர் செர்ரி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தக்டானே செர்ரி என்பது ஈரானிய செர்ரியின் மற்றொரு வகை ஆகும், இது உயர்தரமானது. நெய்ஷாபூர் மற்றும் ஓருமீயே நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் தக்டானே செர்ரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் ரஷ்யா மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியம் உட்பட ஏராளமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. செர்ரி பழ ஜேம், செர்ரி பழ சாறு போன்றவற்றுக்கு இந்நாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.

ஜூன் மாதத்தில் ஈரான் விஜயத்தை மேற்கொள்வோர் தரமான செரிப்பழத்தை சுவைக்க மறக்காதீர்கள்.



No comments:

Post a Comment