Saturday, April 20, 2019

ஈரான் எனும் பழத்தோட்டம்

Fruits of Iran

எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடென்றால் பார்க்கும் இடம் எல்லாம் பாலைவனமும் கட்டாந்தரையுமாக இருக்கும் என்ற எண்ணத்தை பொய்ப்பிக்கும் விதமாக ஈரான் இஸ்லாமிய குடியரசில் விவசாயம் இடம்பெற்று வருகின்றன. சுய தேவையைப் பூர்த்தி செய்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அங்கே விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கிலும், வட ஆபிரிக்காவிலும் பழ உற்பத்தியில் 1 வது இடத்தில் உள்ளது ஈரான் இஸ்லாமிய குடியரசாகும். உலகளவிலும் பழ உற்பத்தியில் ஈரான் பல்வேறு ஆண்டுகளில் 8 வது மற்றும் 10 வது இடங்களுக்கு இடையில் உள்ளது. பாரசீக வால்நட், முலாம்பழம், டாங்கரின், சிட்ரஸ் பழங்கள், கிவி பழங்கள், பல்வகை ஈத்தம் பழங்கள், செர்ரி, மாதுளை, பீச், ஆரஞ்சு, அத்தி, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்ற 50க்கும் அதிகமான பழவகைகளை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கிறது. இவைபோக, ஈரானின் பாதாம், பிஸ்தா போன்ற உலர்பழங்களும் உலக பிரசித்தம் வாய்ந்தவையாகும்.

பழ உற்பத்திக்கு சாதகமான காலநிலையுடன் கூடிய பாக்கியம் பெற்ற நாடு ஈரான். காஸ்பியன் கடலின் வடக்குக் கரையோரப் பகுதிகள் சிட்ரஸ் (நாரத்தை) உற்பத்திக்கான சிறந்த சூழலை வழங்குகிறது. உலகளவில் ஈரான் இஸ்லாமிய குடியரசு மாதுளை மற்றும் பிஸ்தா உற்பத்தியில் 1ம் இடத்திலும் ஈத்தம் பழ உற்பத்தியில் 2ம் இடத்திலும் அத்தி மற்றும் செர்ரி உற்பத்தியில் 3ம் இடத்திலும் ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழ உற்பத்தியில் 7ம் இடத்திலும் உள்ளது.

உலகின் இந்த பகுதியில் கிவி பழ உற்பத்தி, ஒப்பீட்டளவில் புதிய செயல்பாடாய் இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த பலனை தந்திருப்பதோடு ஈரானிய கிவி பழம் நாட்டின் விவசாய துறையில் ஒரு பாரிய ஏற்றுமதி பொருளாக ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

ஈரான் இஸ்லாமிய குடியரசில் 2.7 மில்லியன் ஹெக்டயரில் பழமர நடுகை செய்யப்பட்டுள்ளதோடு, கடந்த ஆண்டு 16.5 மில்லியன் டன் பழ அறுவடை செய்யப்பட்டுள்ளது. FAO (ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு)வின் உத்தியோகபூர்வ புள்ளியியல் படி, உலகில் சராசரி தனிநபர் பழ உற்பத்தி வருடத்துக்கு 80 கிலோ என்றிருக்கையில் ஈரானில் அது 200 கிலோவாக உள்ளது.

ஈரானின் புள்ளிவிவர மையம் நடத்திய ஒரு ஆய்வின் படி, ஈரானின் பழ உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 2017-18 மார்ச்) 11.6 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.8% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஆப்பிள் (2.4 மில்லியன் டன்), திராட்சை (1.75 மில்லியன் டன்), ஆரஞ்சு (1.2 மில்லியன் டன்) மற்றும் ஈத்தம்பழம் (1.76 மில்லியன் டன்) ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்துப் பொருட்களின் 61 சதவிகிதமாகும். (Source: financialtribune.com)

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் சுங்க சேவை அறிக்கையின் படி  கடந்த ஈரானிய நிதி ஆண்டின் முதல் பாதியில் ஈரானில் இருந்து 741 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு வகையான பழங்களின் 1.13 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17% அதிகரிப்பாகும். இந்த ஆண்டின் முதல் பாதியில், 438 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1.11 மில்லியன் டன் காய்கறிகளையும் ஈரான்  ஏற்றுமதி செய்திருக்கிறது. (Source: irna.ir)

நாம் இங்கு வட்டக்காய் என்றழைக்கும் பரங்கிக்காயின் விதைகளை அநேகமாக பயன்படுத்துவதில்லை; ஆனால் ஈரானில் அதனை உப்பிட்டு உலர்த்தி, விற்பனை செய்கின்றனர்; ஏற்றுமதியும் செய்கின்றனர்.

குறிப்பிட்ட ஒரு சீஸனில் பழ விளைச்சல் அபரிமிதமாக இருக்கும். பழங்களை ஆய்வதற்கான கூலி, பழ விலையை விட அதிகரித்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், சில பழத்தோட்ட சொந்தக்காரர்கள், "தமது தோட்டத்தில் இருந்து வேண்டிய அளவு பழங்களை இலவசமாக பறித்துச் செல்லலாம்" என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்வர் என்ற சுவாரஸ்யமான செய்தியை எனது ஈரானிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment