பிராந்தியத்தில் ஈரானின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவதற்காக “அரபு நேட்டோ” என்ற ஒரு கூட்டணியை உருவாக்கும் அமெரிக்க மூலோபாய திட்டம் எகிப்து
பின்வாங்கியதால் சுருண்டது என்று நான்கு முக்கிய மூலாதாரங்களின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ்
செய்தி நிறுவனம் கூறியது. ஆக, இக்கூட்டணி பிறக்குமுன்னரே
மரணத்தைத் தழுவியுள்ளது.
அரபு உலகில் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு எகிப்தாகும்.
ஈரானுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் இந்தத் திட்டத்தில் இருந்து எகிப்து வாபஸ்வாங்கி உள்ளதானது, அமெரிக்காவினதும் சவூதி அரேபியாவினதும் திட்டத்துக்கு பெரும்
தோல்வியாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு ஒரு கடுமையான தோல்வி என்று நம்புகின்றனர்.
இது தொடர்பாக எகிப்திய 'அல்-மஜ்த்' பத்திரிகையின் கருத்துப்படி, எகிப்து இதிலிருந்து வாபஸ்வாங்க
எடுத்த முடிவானது, பொது எதிரி யார் என்பதை அடையாளம்
காணுவதில் அரபு கூட்டணி நாடுகளுக்கிடையில் தீவிர கருத்து வேறுபாடு நிலவுவதையே
எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
ஞாயிறன்று (ஏப்ரல் 14) ரியாத்தில் நடைபெற்ற ஈரானுக்கு
எதிரான 'அரபு-நேட்டோ' கூட்டணி அமைக்கும் திட்டம் ஆரம்ப
கூட்டத்திலேயே சரிந்து விழுந்ததது. லெபனானின் அல்-மார்கஸியா நியூஸ்
ஏஜென்சி இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் 'புதிய அரபு-நேட்டோ தோல்வி; மரண அடியா?' என்ற தலைப்பில் செய்தி பிரசுரித்தது. அரபு - நேட்டோ திட்டத்தில்
இருந்து எகிப்து பின்வாங்கியது கூட்டணி தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை
ஒன்றை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் ட்ரம்பின் தோல்வி பற்றி இந்த
கூட்டணியின் உறுப்பினர்கள் கவலைக்கொண்டுள்ளனர். அரபு - நேட்டோ திட்டத்தில் இருந்து எகிப்து பின்வாங்குவது, நிலைமையை மிகவும் சிக்கலானதாக்கி விட்டுள்ளது.
வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியைத்
தழுவி, வேறொருவர் அப்பதவியை ஏற்கும் பட்சத்தில், இந்த அரபு-நேட்டோ அமைப்பை புறக்கணித்து, நட்டாற்றில் விட்டுவிடுவாரோ
என்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டுள்ளது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில், வலுவான ஈரானுக்கு முன் இந்த நாடுகள்
நலிவடைந்த நிலையில் காணப்படும் என்ற அச்சமும் இவர்களை ஆட்டிப்படைக்கிறது.
அல்-மர்கஸியாவின் கூற்றுப்படி, எகிப்து சூடானில் ஆட்சி
கவிழ்ப்பதற்கு ஆதரவு வழங்கியது. எகிப்தின் தற்போதைய தேவை, ஈரானுடன் பகையை வளர்த்துக்கொள்வதல்ல; தனது தேசியப் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலாக இருக்கும் தமது அண்டை நாடுகளான லிபியா மற்றும் சூடானின் ஆபத்தான
அரசியல் கொந்தளிப்பு நிலையில் கூடிய கவனம் செலுத்துவதாகும்.
அரபு-நேட்டோவிலிருந்து எகிப்தின் பின்வாங்கல் கூட்டணிக்குள்
தற்போதிருக்கும் நிலைமையினையும் கூட்டணியின் பலவீனத்தை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது
என்று எகிப்திய பத்திரிகை அல்-மஜ்த் அதனது
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எகிப்து இணையாவிட்டால் அரபு-நேட்டோவிற்கு எந்தவிதமான அர்த்தமும்
இல்லை என்று கூறலாம், ஏனென்றால் ஏனைய அரபு-நேட்டோ உறுப்பு
நாடுகளில் அவசியமான வழிமுறைகளும் இல்லை, உறுதியான ராணுவ கட்டமைப்பும் இல்லை.
ஆகவே, எகிப்து இல்லாத கூட்டமைப்பு சாத்தியமில்லாத ஒன்றாகவே அமையும்.
தொடக்கத்தில், அரபு நேட்டோவின் உருவாக்கம் பற்றி இவர்கள்
மத்தியில் நிறைய உற்சாகம் இருந்தது. ஆயினும் காலப்போக்கில், எகிப்து அதில் அக்கறை
காட்டாததினால் அந்தத் திட்டம்
ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எகிப்து இல்லாத அரபு-நேட்டோ கூட்டமைப்பு என்ற ஒன்றுக்கு எந்த உற்சாகமும்
காணப்படவில்லை. இந்த கூட்டணியின் பொறுப்பும், பிரதான கடமையும் எகிப்தி மீதே சுமத்துவதற்கு
திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது எகிப்து இதனை விட்டு வெளியேறுவதால், கூட்டணிக்கு எந்த அர்த்தமும் இல்லை.
இது சம்பந்தமாக, இராணுவ நிபுணர் கலீல் அல் ஹாலோ, லெபனான் மார்கஸியா செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில்
அமெரிக்க மூலோபாயம் நிறைவேறாது என்று கூறினார். ஈரானுக்கு எதிராக இந்த நாடுகளுக்கு இடையேயான அரசியல் கூட்டணி ஒன்றை
அமைப்பதற்கு அரபு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தடையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அப்துல் பாரி அத்வான் என்பவர் ராய் அல்-யவ்ம் பத்திரிகைக்கு எழுதிய
ஒரு கட்டுரையில் அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவில்
விரிசல் ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்
சிசி சமீபத்தில் சுன்னி-அரபு-நேட்டோ என்று அழைக்கப்படும் மத்திய
கிழக்கு பாதுகாப்பு-பொருளாதார கூட்டணியிலிருந்து விலகிவிட முடிவு செய்ததும்
அமெரிக்கவின் விருப்பத்துக்கு முரணாக, அமெரிக்க தயாரிப்பான F-16 மற்றும் F-35 யுத்த விமானங்களுக்கு பதிலாக
ரஷ்யாவின் Su-35 யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய எடுத்தத் தீர்மானமும்
பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கையை நிலைகுலையச்செய்துள்ளது என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆய்வாளரின் கருத்தின்படி, அரபு-நேட்டோவில் இருந்து எகிப்து
விலகியிருக்க எடுத்திருக்கும் தீர்மானம் உண்மையாயின், அது அமெரிக்கா மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளின் அடிமைப்படுத்தலில்
இருந்து கெய்ரோவைக் காப்பாற்றி, அதன் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை
மீட்டெடுப்பதற்கான தைரியமான முடிவாக இருக்கும்.
எகிப்திய அரசாங்கத்தின் இந்த முடிவுடன் திறந்த மனதுடனான அரசியல்
அணுகுமுறை மற்றும் பல்வேறு எகிப்திய அரசியல் அமைப்புக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு
வரும் அடக்குமுறைக் கொள்கைகளை தவிர்ப்பதுடன், மனித உரிமைகளை மதிக்கும்
நடவடிக்கையாக அமையுமாயின், பிராந்திய மக்காளால் அது நிச்சயமாக
வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
'ஸ்பூட்னிக்' செய்தி நிறுவனத்தின் அரபு பகுதியின் செய்தியின் படி, இந்த பிராந்தியத்தில் ஒரு கூட்டணியை உருவாக்குவது என்பது எளிதானது
அல்ல, ஏனெனில் ரஷ்யாவுக்கு அமெரிக்காவுடனும் மற்றும் சில
பாரசீக வளைகுடா நாடுகளுடனும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பாக உடன்பாடு கிடையாது. இது தொடர்பாக, ஜோர்தானிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற
லெப்டினென்ட் மஹ்மூத் அல்-ராடிசாட் Sputnik செய்தி நிறுவனத்துக்கு கருத்துத்
தெரிவிக்கையில், ஓர் அரபு-நேட்டோவை உருவாக்கும் திட்டம்
நிறைவேற்ற முடியாத ஒன்று; ஏனெனில் அரபுலக்கு ஒரு தெளிவான
இலக்கு கிடையாது மேலும் அரபு நாடுகள் மத்தியில் ஒரு ராணுவ கூட்டணியை அமைக்கக்கூடிய
மனோ நிலையும் கிடையாது. மாறாக, அரபு உலகு உள்முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கின்றது என்பது
மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாடும் சிரியா, லிபியா, யெமென் ஈராக் மற்றும் பாலஸ்தின் பிரச்சினைகளில் சுயநல
சிந்தனையுடனேயே செயல் படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜியங்கள், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய
நாடுகளுடன் கட்டார் அரசு உடன்படுவதாய் இல்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த
கட்டார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பாரசீக வளைகுடா
நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடி தீர்க்கப்படாதுள்ளது என்றும் மத்திய
கிழக்கில் கூட்டணி அமைக்கும் அமெரிக்க திட்டம் தோல்வியையே தழுவும் என்றும்
குறிப்பிட்டார்.
ஜோர்தானிய ஆய்வாளர் கூறுகையில், 'அரபு நாடுகளுக்கிடையில்
தீர்க்கப்படாத ஏராளமான பிரச்சினைகள் இருக்கையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான
கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயத்திலும்
முரண்படும் நாடுகளை ஒன்றிணைத்து, கூட்டணி அமைப்பது முடியாத காரியம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும்
பஹ்ரைன் ஆகியவை மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் ஈரான் எதிர்ப்பு அரபு-நேட்டோ
அமைக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன. ஆயினும் கட்டார், குவைத் மற்றும் ஓமான் ஈரானுடன்
நல்லுறவைப் பேணி வருகின்றன. எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய
நாடுகளுக்கு வளர்ந்துவரும் ஈரானின்
செல்வாக்கைப் பற்றி கவலையில்லை. அவற்றின் முன்னுரிமை வெளியுறவு கொள்கை அரேபிய-இஸ்ரேலிய
பிரச்சினையை மையப்படுத்தியதாக உள்ளது.
No comments:
Post a Comment