Monday, February 11, 2019

இஸ்லாத்தினால் ஈரானுக்கு பெருமை ஈரானினால் முஸ்லிம்களுக்கு பெருமை...!!

The Achievements of Islamic Revolution


இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்று வெறும் கிரியைகளுக்கும் அனுஷ்டானங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதுமட்டுமே இஸ்லாம் என முஸ்லிம்கள் நம்பவைக்கப்பட்ட காலகட்டத்தில், அல்லாஹ்வின் இறைமை, ஆட்சி அதிகாரம், சட்டமியற்றும் அதிகாரம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவிடாது, அற்பவிடயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிகளில் உலமாக்களை முடக்கிவைத்திருந்த காலகட்டத்தில் வெடித்ததே ஈரானில் இஸ்லாமிய புரட்சி; அதுவும் உலமாக்களின் தலைமையில்.

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். இஸ்லாமிய உலகைத் துண்டாடி, எமக்கு வேண்டிய விதத்தில் எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லிம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில், மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் வெடித்த இந்த புரட்சி ஏகாதிபத்தியவாதிகளை திக்குமுக்காட வைக்கிறது.

'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமொன்றே போதும்; அல்லாஹு அக்பர்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது.


அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு ஆள முடியும்…? நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும்? என்றெல்லாம் முஸ்லிம் ஆட்சியாளர்களே கேலி செய்தனர். இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர்.

அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 40 ஆண்டுகளை கடந்துகொண்டிருக்கிறது. இந்த 40 ஆண்டுகளில் இஸ்லாமிய ஈரான் கண்டுள்ள வளர்ச்சி கண்டு இஸ்லாத்தின் எதிரிகள் மிரண்டுப்போயுள்ளனர்.

இவர்களால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், உள்நாட்டு கலவரங்கள், யுத்தம், பொருளாதாரத்தடை எல்லாவற்றையும் தாண்டி இஸ்லாமிய ஈரான் அடைந்துவரும் முன்னேற்றம் இவர்களை அச்சமடையச் செய்துள்ளது.

இஸ்லாமிய புரட்சியினூடாக, வியத்தகு சாதனைகளை படைத்து வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசு.... அதன் மீது யுத்தம் ஒன்று திணிக்கப்படாதிருந்திருந்தால், பொருளாரத்தடை விதிக்கப்படாதிருந்தால், இஸ்லாம் விரோத அரபு ஆட்சியாளர்கள் நெருக்குவாரங்களை கொடுக்காதிருந்திருந்தால்...??? இன்று இஸ்லாமிய ஈரான் எங்கோ சென்றிருக்கும்.

இஸ்லாமிய புரட்சியின் பயனாக ஈரான் பெற்றுள்ள வெற்றிகளில் சில:

பாதுகாப்புத் துறையில் ஈரான் பிராந்தியத்தில் வல்லரசு என்றே கூறுமளவுக்கு வளர்ந்துள்ளது. தனது பாதுகாப்புத் தேவையில் 85% ஈரான் சுயமாக உற்பத்திசெய்கிறது. ஏவுகணைகள், யுத்த விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ரேடார்கள், யுத்த டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் அவசியமான யுத்தத் தளபாடங்கள் அனைத்தையும்  தாமே உற்பத்தி செய்து, தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

இது ஈரான் இஸ்லாமிய குடியரசின் சுய தயாரிப்புகளில் ஒன்று. மூன்று வருடங்களுக்குமுன் காட்சிப்படுத்தப்பட்டது.

கல்வித்துறையில் ஈரான்

கல்வித்துறையில் ஈரான்தான் இப்பிராந்தியத்தில் மத்திய ஸ்தானமாகும். கலை, மருத்துவம், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்குவதால் பிராந்தியத்தில் மாணவர்கள் ஈரானிய பல்கலைக்கழகங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

ரோபோக்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரான் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. வாகன உற்பத்தியிலும் ஈரான் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சைக்காக ஈரான் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது.




விண்வெளி ஆய்வு

விண்வெளி ஆய்வுத் துறையில் ஈரான் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. தனது முயற்சியில் ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும், கொஞ்சமும் தாளராது பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சிலவருடங்களுக்கு முன் ஈரான் குரங்கொன்றை விண்ணுக்கு அனுப்பியும் ஆய்வுகளை நடத்தியது. விண்வெளி ஆய்வுத் துறை உலகில் வல்லமைக் கொண்ட 9 நாடுகளில் ஈரான் இஸ்லாமிய குடியரசும் ஒன்று.











அணு ஆய்வு

அணு ஆய்வுத்துறையில் ஈரான் அடைந்துவரும் முன்னேற்றம் வல்லரசுகளையும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் பொறாமைக் கொள்ளச் செய்துள்ளது. அணு சக்திகொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்து பாகிஸ்தான், ஈராக் மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளுக்கும் ஈரான் ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல (ஹராம்) என்று இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் பத்வாவே வழங்கியுள்ளார். 

ஆக, அணு சக்தியை மனித தேவைக்காக மட்டுமே அன்றி, ராணுவ தேவைக்காக பயன்படுத்துவதில்லை என்று ஈரான் மிக உறுதியாக இருக்கிறது.

மருத்துவத் துறை

ஈரான் தமக்கு அவசியமான மருந்து வகைகளில் 90% த்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

ஈரானிய மருத்துவ மனைகளில் சர்வதேச தரத்திலான வைத்திய சேவைகள்  வழங்கப்பட்டு வருகின்றன. எந்த ஓர் ஈரானியத் தலைவரும் வைத்தியம் பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை என்பதில் இருந்து இதனை புரிந்துகொள்ளலாம்.

அறிவியல் ரீதியாக இஸ்லாமிய ஈரான் பிராந்தியத்தில் கொடிகட்டிப்பறக்கிறது.  அல்லாஹ் அந்த நாட்டுக்கு இன்னும் இன்னும் அருள்புரியவேண்டும்.




============
தாஹா முஸம்மில் 

No comments:

Post a Comment