Monday, February 18, 2019

சீன பெருஞ்சுவரை விட 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோர்கான் (பாரசீக) பெருஞ்சுவர்.


The Great Wall of Gorgan

உலகில் கட்டப்பட்ட மிகச் சிக்கலான எல்லை பாதுகாப்பு சுவர்களில் ஒன்று என்று இது கருதப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பினது மரபுரிமைப் பட்டியலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

காஸ்பியன் கடலின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து அல்போர்ஸ் மலைத்தொடரின் அருகில், உலகின் மிகப் பெரிய அரணாக இருந்த, 195 கிலோமீட்டர் நீளமான கோர்கான் பெருஞ்சுவர் கைவிடப்பட்டு, புதைந்துபோன மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை.
இந்தச் சுவர் பற்றி எந்த பண்டைய சரித்திர நூலும் குறிப்பிட்டிருக்கவில்லை; இது தொடர்பான எந்த கல்வெட்டும் இன்னும்  கண்டுபிடிக்கப்படவில்லை; இது பொறிக்கப்பட்ட எந்த நாணயமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த வரலாற்றுப் பதிவுகளும்  இந்த அற்புதமான கட்டுமானம் பற்றி எதையுமே அறிவித்திருக்கவில்லை என்பது ஆச்சரியமான விடயமே. அனேகமாக நம்மில் அநேகர் இதுவரை இச்சுவர் பற்றி கேள்விப்பட்டே இருக்கமாட்டார்கள்.

வட ஈரானில் அமைந்துள்ள இந்த பெருஞ்சுவரானது (The Great Wall of Gorgan) கி.பி. 4ம் மற்றும் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்  கட்டப்பட்டுள்ளது என்று இதன் ஒருபகுதியை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதோடு புதிய ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
ஈரானின் வடகிழக்காக, காஸ்பியன் கடலின் தென்கிழக்கு பகுதியில், கோர்கான் மாகாணத்தில் இந்த எல்லை பாதுகாப்பு சுவர் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது.
இந்தச் சுவர் சசானிய பேரரசினால் பகைவர்களிடமிருந்து நாட்டு மக்களைக் காப்பதற்காகவும் அந்நிய இராணுவ படையெடுப்பு அச்சுறுத்தகளில் இருந்து சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளது என்றும்  நம்பப்படுகிறது.
உலகில் கட்டப்பட்ட மிகவும் சிக்கலான எல்லைப்புற பாதுகாப்பு சுவர்களில் ஒன்றாகவும் இது விவரிக்கப்படுகிறது. சசானிய பேரரசு யுகம் நாகரீகத்தின் உச்சநிலையில் இருந்துள்ளதை இந்த சுவர் எடுத்துக்காட்டுவதாக ஈரானிய மக்கள் நம்புகின்றனர்.
195 கிமீ நீளமான இந்த சுவர் 6-10 மீ (20-33 அடி) அகலமும் கொண்டது, மேலும் 38 கோட்டை அரண்களைக் கொண்டுள்ளது.

செந்நிற கற்களினால் எழுப்பட்டுள்ளதன் காரணமாக இச்சுவர் "சிகப்பு நாகம்" என்று ஆய்வாளர்களினால் வர்ணிக்கப்படுகிறது. சசானிய பேரரசின் பொறியியல் திறன் மற்றும் இராணுவ அமைப்பிற்கு கோர்கான் பெருஞ்சுவர் ஒரு தனிப்பட்ட சாட்சியமாகும்.
இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகளில், செங்கல் உற்பத்திக்கான நீரை பெறுவதற்காக, கால்வாய்கள் அமைக்க வேண்டியிருந்தது. கோர்கான் ஆற்று நீரை, நிலத்தடி சுரங்க வாய்க்கால்கள் ஊடாக பெற்றுக்கொண்டனர். பாரசீகத்துக்கே பிரத்தியேகமான வியத்தகு "கனாத்" (Qanat) நிலத்தடி சுரங்க வாய்க்கால்கள் மூலம் பெறப்படும் நீரே இச்சுவருக்காகவும் குடிநீராகவும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்கான் எனும் இப்பிரதேசம் சரித்திராசிரியர்களுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தங்கச் சுரங்கம் போன்றதொன்றாகும். இந்தச் சுவர் அவர்களது ஆவலை மென்மேலும்  தூண்டும் ஒன்றாகவும் உள்ளது.

இந்தச் சுவரினது அற்புதமான மற்றும் சிக்கலான வடிவமைப்பு, சீன பெருஞ்சுவரின் நீளத்துடன் ஒப்பிடுகையில், அதற்கு அடுத்தபடியானது என்று கூறலாம். சீன பெருஞ்சுவரின் ஆரம்ப வடிவங்களைவிட, கோர்கான் பெருஞ்சுவர் இன்னும் திடமானதாகவும் உறுதியானதாகவும் கட்டப்பட்டுள்ளது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லா சிறப்புகளுக்கும் மேற்குலக பெருமைப் பாடும் இவ்வுலகில், ரோமானியர்களுடன் சமமாக அல்லது அவர்களை விடவும்  இராணுவ வலிமை, நிறுவன திறன்கள், பொறியியல் மற்றும் நீர் மேலாண்மை திறன் கொண்டவர்களாக பாரசீகர்கள் இருந்துள்ளனர் என்பதை தயக்கத்துடனாவது ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

- தாஹா முஸம்மில்   

தகவல்களும் படங்களும்:


No comments:

Post a Comment