Mount Damavand
ஈரான் எரிமலை "தமாவாந்"
ஈரான் இஸ்லாமியக்
குடியரசில் மலைகளுக்குப் பஞ்சமில்லை. தலைநகர் தெஹ்ரானைச் சுற்றி அல்போர்ஸ்
மலைத்தொடரைக் காணலாம். எப்போதும் பனிபடர்ந்து காணப்படும் மலை முகடு, காண்பதற்கு கண்கொள்ளா காட்சி. குளிர்
காலத்தில் வெண்பஞ்சு போர்த்தப்பட்டது போன்று நகர் முழுவதும் அழகாக காட்சியளிக்கும்.
இந்த
மலைத்தொடருக்கு மத்தியில் "தமாவாந்" என்ற எரிமலை (உயரம்: 5,671 மீ) கம்பீரமாக காட்சியளிக்கும். தெஹ்ரான் நகரிலிருந்து வடகிழக்கில் 66
கிலோமீட்டர் (41 மைல்) தூரத்தில் உள்ள மஸந்தரான் மாகாணத்தில், காஸ்பியன் கடலின் தென் கரையோரத்தில்
இது அமைந்துள்ளது. ஈரானின் அதி உயர்ந்த மலையும் ஆசியாவில் மிகவும் உயர்ந்த எரிமலையும்
இதுவேயாகும். பாரசீக புராண மற்றும் நாட்டுப்புற கதைகளில் தமவாந்துக்கு ஒரு சிறப்பு இடம் உள்ளது.
"தமாவாந்" செயல்படும் ஒரு
சக்திவாய்ந்த எரிமலையாகும். இருந்தபோதும், அது கடைசியாக வெடித்தது கி.மு. 5300 ஆண்டளவிலாகும். (அதாவது இப்போதிருந்து 7300
ஆண்டுகளுக்கு முன்). அதன் பின் பல்லாயிரம் வருட வரலாற்றில் வெடிப்பு எதுவும் பதிவு
செய்யப்படவில்லை. என்றாலும், எரிமலை அடிவாரத்திலும், பக்கவாட்டிலும், மற்றும் உச்சிக்கு அருகில் சூடான
நீரூற்றுகள் மலைக்கு கீழே சூடான ‘மாக்மா’ உள்ளதைக் குறிக்கின்றன. மலை, இடைக்கிடையே, கந்தகத்தைக் கக்குவதால் தீவிர செயற்பாட்டைக்கொண்ட எரிமலை என
கருதப்படுகிறது. இதன் இவ்வாறான செயற்பாடு, 2007 ஜூலை மாதத்தில் இடம்பெற்றது பதிவாகியுள்ளது.
"தமாவாந்" என்ற எரிமலை
உலகிலேயே மிக முக்கியமான சிகரங்களில் 12 வது சிகரமாகும். ஆசியாவில் எவரெஸ்ட் சிகரத்திற்குப் பிறகு இது
இரண்டாவது மிக முக்கியமானதாகும். இது ஆசியாவில் அதிக உயரமான எரிமலையாகும்.
"தமாவாந்" எரிமலை பாரசீக கவிதை இலக்கியத்தில் மற்றும் புராணங்களில் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு அடங்காமை மற்றும் வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு எதிரான ஈரானிய எதிர்ப்பின் அடையாளமாகவும் உள்ளது.
இந்த மலைக்குள்ளே மூன்று தலைகள் கொண்ட ஓர்
அரக்கன் விலங்கிடங்கிடப் பட்டுள்ளான் என்றும் உலகின் இறுதி வரை அவன்
அவ்வாறே இருப்பான் என்றும் சொராஸ்ட்ரிய நூல்களிலும் மற்றும் புராணங்களிலும்
குறிப்புகளைக் காணக்கூடியதாக உள்ளது. அதே புராணத்தின் ஒரு பதிப்பில், கொடுங்கோலனான ஸஹ்ஹாக் என்பவன் காவேஹ் மற்றும் பெரிதூன் ஆகியோரால்
தோற்கடிக்கப்பட்ட பின்னர், சங்கிலியால்
பிணைக்கப்பட்டு "தமாவாந்" மலையின் ஏதோ ஒரு
குகைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளான் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற பாரசீக கவிஞரான
பிர்தவ்ஸியும் இந்த நிகழ்வை அவரது தலைசிறந்த காவியமான ‘ஷானாமா’வில் சித்தரிக்கிறார், அத்தோடு இந்த மலைக்கு ஓர் அற்புத
சக்தி உண்டெனவும் அதில் குறிப்பிடுகின்றார்.
"தமாவாந்" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்று தெளிவாக தெரியவில்லை
என்றாலும் சில முக்கிய ஆராய்ச்சியாளர்கள், "புகை மற்றும் சாம்பல் கக்கும்
மலை" என்று பொருள்படும் என்று ஊகித்துள்ளனர்.
இந்த எரிமலை உச்சியில் உள்ள ஒரு
பள்ளத்தில் கந்தக படிமங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் வாயு வெளியேறும் துளைகள், கனிம படிமங்கள் மற்றும்
வெந்நீரூற்றுக்கள் என்பனவும் உள்ளன.
கனிம வெப்ப நீரூற்றுகள் முக்கியமாக
எரிமலையின் முகட்டுப்பகுதியிலும் மலையடிவாரத்தும்
அமைந்துள்ளன,
ஒப்பீட்டளவில் பூமியின்
மேற்பரப்பிற்கு அருகே அதிகரித்த எரிமலை வெப்பம் உள்ளது.
இந்த வெந்நீரூற்றுக்களில் மிகவும்
முக்கியமானவை லாரிஜான் மாவட்டத்தில் லார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. இந்த
நீர், மருத்துவ குணம் கொண்டது எனவும் நாள்பட்ட காயங்கள் மற்றும் சருமநோய்
கண்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
என்று நம்பப்படுகிறது. இந்த நீரூற்றுகளுக்கு அருகே, மக்கள்
வசதிக்காக, பொது குளியல்
குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மலை ஏறுவோருக்கும் பனிச்சறுக்கு விளையாட்டில்
ஈடுபடுவோருக்கும் இது ஒரு சொர்க்கபுரியாகும்.
மலையுச்சிக்கு செல்வதற்க்கு அறியப்பட்ட 16 வழிகள் உள்ளன, சில பல்வேறு சிரமங்களைக்
கொண்டுள்ள பாதைகள்; அவற்றில் சில
ஆபத்தானவையும் கூட.
மிகவும் பிரபலமான வழி, ஏறுவதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்ட
தெற்கு வழியாகும். இடைநடுவே ஓய்வெடுப்பதற்கு வசதியாக, 4220 மீட்டர் உயரத்தில்
ஒரு மண்டபமும் அமைக்கப் பட்டுள்ளது. ஆயினும், சூரிய
அஸ்தமனத்தின் அழகை ரசிக்க நாடுவோர் மேற்குத் திசை வழியை நாடுவர். அவ்வழியில் 4100 மீட்டர் உயரத்தில் இரண்டடுக்கு ஓய்வுமண்டபம் ஒன்று புதிதாக அமைக்கப் பட்டுள்ளது.
ஏறும் வழியில், 5100 மீட்டர்
உயரத்தில், 12 மீட்டர் உயரம் கொண்ட எழில்மிகு உறைபனி
நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. ஈரானிலும் மத்தியகிழக்கிலும் மிக உயரத்தில் உள்ள
நீர்வீழ்ச்சி இதுவேயாகும்.
ஈரானுக்கு சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக தவறவிடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.
ஈரானுக்கு சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக தவறவிடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment