Sunday, June 17, 2018

சவால்களை முறியடித்து நாற்பது ஆண்டுகளைக் கடக்கும் ஈரான்...!

Forward march of Iran through forty years of revolution
இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் இஸ்லாமிய புரட்சி வெடிக்கிறது. 
'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமென்றே போதும்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. 
அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது. 

இஸ்லாம் இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக உருவாக முடியாத படி அதனை நலிவடைய செய்துவிட்டோம். எமக்கு வேண்டிய விதத்தில் இஸ்லாமிய உலகைத் துண்டாடி எல்லைகளை வகுத்துள்ளோம். எல்லா முஸ்லீம் நாடுகளிலும் எம்முடைய நலன்களை காக்கும் விதத்தில் எமது முகவர்களை அமர்த்தியுள்ளோம். எமது கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாதபடி திட்டங்களையும் வகுத்துக் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் ஏகாதிபத்தியவாதிகள் சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கையில் மேற்குலக நாகரீகத்தில் மூழ்கிக்கிடந்த ஈரானில் திடீரென ஒரு புரட்சி வெடிக்கிறது. 
அதுவும் இமாம் கொமெய்னி என்ற உலமாவின் தலைமையில் இஸ்லாமிய புரட்சியாக வெடிக்கிறது. 'கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம் இஸ்லாமென்றே போதும்' என்ற கோஷம் வானுயர எழுகிறது. அது ஈரானுக்குள் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அல்லாது, உலக மாற்றத்துக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிக்கிறது. ஈற்றில், 1979ம் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று, ஈரானில் இஸ்லாத்தின் அடிப்படையிலான ஆட்சி நிறுவப்படுகிறது. 

அப்போது அவர்கள், அரசியலில் எந்த முதிர்ச்சியும் அற்ற உலாமாக்களால் ஒரு நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும்? அரசியலைப்பற்றி முல்லாக்களுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கேலி செய்தனர். இஸ்லாமிய அரசு இரண்டு வருடங்களில் கவிழ்ந்து விடும் என்றெல்லாம் ஹேஷ்யம் கூறினர். அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாமிய குடியரசு இன்று 40 ஆண்டுகளை கடந்துகொண்டிருக்கிறது.

இந்த நான்கு தசாப்த காலத்தில் ஈரான் சந்தித்த சவால்களோ எண்ணிலடங்கா. சதாம் ஹுசைனைக்கொண்டு யுத்தமொன்றைத் திணித்தனர், பொருளாதாரத் தடைகளை விதித்தனர், அடங்கிப்போகாவிட்டால் அணுகுண்டை போட்டு அழித்துவிடுவோம் என்று அச்சுறுத்தினர். தொடரும் இவ்வச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் இன்று எல்லா துறைகளிலும் வீறுநடை போட்டுவருகிறது என்பது கண்கூடு.

மேற்கின் சதித்திட்டங்களை அடையாளம்காணல்

மேற்குலகம் வரையறுத்த பூகோளமயமாக்கல் என்ற இந்த சர்வதேச வர்த்தக கொள்கையின்; விரிவாக்கத்தின் ஊடாக, சர்வதேச முதலீட்டின் (வெளிநாட்டு முதலீட்டின்) வளர்ச்சியை துரிதப்படுத்தலும், நாடுகளுக்கு இடையே நுகர்வு தொழில்நுட்பத்தை அதிகரித்து, உலகை தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுமாகும். இது அடிமைப்படுத்தலின் நவீன வடிவமாகும் என்பதை ஈரான் நன்கு புரிந்துகொண்டது.

பொருளாதார பயங்கரவாதம்

இந்த பூகோளமயமாக்கலின் காரணமாக நம்முடைய தேசிய வளங்கள்மூலம் பெறப்படும் பாரிய செல்வம் நமது சொந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுவதற்குப் பதிலாக வளர்ந்த நாடுகளில், அந்நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறன. ஈற்றில் செல்வந்த நாடுகள் அவற்றின் செல்வத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றன, அதற்கு நாமே அறிந்தோ அறியாமலோ உடந்தையாகியும் விடுகின்றோம். எம்மவர்களால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தையே இங்கு கொண்டுவந்து எங்
கள் நாடுகளில் முதலீடு செய்கின்றனர்; என்பதை பலர் அறியாதுள்ளனர்,

முதலீடு செய்யப்படும் நாடுகளில் தமக்கு சாதகமான சூழல் இருக்கும் வரை இவர்கள் பிரச்சினை எதனையும் படுத்துவதில்லை. ஆனால், தமது நலனுக்கு, இலாப நோக்கத்துக்கு பாதிப்பு ஏதாவது ஏற்படுமானால் அவர்கள் பொருளாதார பயங்கரவாத்தில் ஈடுபட்டுவிடுவர். திடீரென தங்கள் முதலீட்டை வாபஸ் வாங்கிக்கொண்டு எமது பொருளாதாரத்தை சீர்குலைத்து எம்மை வறுமையில் தள்ளி, இறுதியில் அவர்களிடமே மண்டியிடச்செய்வர் என்பதும் ஈரானுக்குத் தெரியும். 

1997ம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இந்த பொருளாதார பயங்கரவாதத்தை இவர்கள் செய்தனர் என்பது ஞாபகம் இருக்கும். பொருளாதாரத்தை ஒரே இரவில் தலைகீழாக புரட்டிவிட்டனர்;. இதன் காரணமாக, தாய்லாந்து கோடீஸ்வரர்கள் பாதை ஓரத்தில் சேன்ட்விச் (ளுயனெறiஉர்) விற்கும் நிலையும் ஏற்பட்டது என்பதையும் நாம் அறிவோம். 

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யமாட்டோம், மீன்களை இறக்குமதி செய்யமாட்டோம், ஜி.எஸ்.டி. (புளுவு) சலுகையை நிறுத்திவிடுவோம் என்றெல்லாம் வந்த மிரட்டல்களை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. எல்லா வறிய நாடுகளின்; நிலையும் இதுதான். இந்த மேற்குலக அரசுகள் அவற்றின் உத்தரவுகளுக்கமைய வறிய நாடுகள் செயற்படாவிட்டால் அவை நடந்துகொள்ளும் விதமே வேறு. 

பல நாடுகள் தமது பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதை பெருமையாக கருதுகின்றன. தமது தேசிய சுதந்திரம் வெளிநாட்டவருக்கு அடகு வைக்கப்படுகிறது என்பதும் கல்வியில் பின்தங்கியுள்ள எமது பரிதாபகரமான நிலையை அவர்கள் லாவகமாக பயன்படுத்தி, எம்மையே அடிமையாக்கி வைக்கின்றனர் என்பதும் எமக்கு எதிராகவே அவற்றை பயன்படுத்துகின்றனர் என்பதும்; தலைவர்களுக்குப் புரிவதில்லை. சொந்த நாட்டின் இயற்கை வளங்களை அந்தந்த நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துவதற்குக் கூட லாயக்கற்றவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இந்த நிலை அறபு நாடுகளுக்கு மிகவும் பொருந்தும். இந்த விடயத்தில் ஈரான், பல இன்னல்களை சந்தித்தபோதும், மிகவும் சாதுர்யமாக, திட்டமிட்டு செயற்பட்டது என்பதை அதன் எதிரிகளும் இன்று ஏற்றுக்கொள்கின்றனர்.

அறபுலகின் நிலை வேறு. அங்கு ஆட்சியாளர்கள், தமக்கு உலகெங்கிலும் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் அவர்களது செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்காக, வெளி அச்சுறுத்தல்களில் இருந்து தமது ஆட்சி அதிகாரத்தை மேற்குலகு பாதுகாக்கும் என்றும் வெகுளித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். அதற்காக, தேசிய செல்வத்தை எதிரிகளின் காலடியிலேயே கொட்டிக்கொண்டுமிருக்கின்றனர். 

நவீன காலனித்துவம்

வலிமை வாய்ந்த நாடுகள் இப்போதெல்லாம் ராணுவ பலத்தால் ஒரு நாட்டை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதை விட வேறு வழிகளையே கையாளுகின்றன. பூகோளமயமாக்கல் என்ற கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாணய வர்த்தகத்தின் ஊடாக நாடுகளை கட்டுப்படுத்தி இதே விளைவுகளை அவை பெற்றுக்கொள்கின்றன. இலங்கை போன்ற வறிய நாடுகள் மீது கடன் சுமையை அதிகரிப்பதன் மூலம் அந்நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.  ராணுவ வீரர்களின் உயிர்களை பலியிடாமலேயே 'காலனித்துவத்தின்' இந்த வடிவத்தை அடைய முடியும் என்பதை அந்த சக்திகள் நன்றாக அறிந்து வைத்துள்ளன. 

ஒரு நாடு ஏழ்மை நிலை அடைந்துவிட்டால், அது அரசியலளவில் உறுதியற்றதாக இருக்கும், அங்கு அதிகாரப் போராட்டம் ஏற்படும். இதன் விளைவாக, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். உலக வல்லரசுக்கு அடிபணியத் தயாராக உள்ள ஒரு வேட்பாளர் அடையாளம் காணப்பட்டு, பதவியில் அமர்த்தப்படும் வரை இந்நிலை தொடரும். அவர்களது இந்த சதித்திட்டத்துக்கு ஜனநாயகம் என்றும் பெயர் வைப்பர். இவர்களின் இந்த திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், செல்வந்த நாடுகள், அவற்றின் செல்வத்தையும் தொழில்நுட்பத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளும்; என்று நம்பச்செய்வர். ஆனால், பூகோளமயமாக்கலானது, அவர்களின் பெரிய மூலதனத்தையும் அதிநவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஏழை நாடுகளின் வளங்களை எவ்வாறு சுரண்டமுடியும் என்பதிலேயே குறியாய் இருக்கும் என்பதை பலர் அறியார்.

அறபு வசந்தம் 

அறபு வசந்தம் என்ற சொற்றொடரை மறந்திருக்க மாட்டீர்கள். வளங்களை கொள்ளையடிக்க வேண்டும் என்று அவர்கள் பட்டியலிட்டுள்ள அறபு நாடுகளில் தமது அடியாட்களைக்கொண்டு கலகங்களை ஏற்படுத்தி, அவர்களே அதற்கு 'அறபு வசந்தம்' என்று பெயரிட்டு அவர்களது ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். அறபு நாடுகளில் ஏதோ பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்று முஸ்லிம்களையும் உலக மக்களையும் நம்பச் செய்தனர். இப்படி வசந்தம் வீசிய எந்த நாட்டிலாவது இஸ்லாம் மறுமலர்ச்சி பெறவில்லை. மாறாக இறைமையை எதிரிகளிடம் பறிகொடுத்தது தான் மிச்சம். எமது முட்டாள்தனத்தை எதிரிகள் நன்றாகப் பயன்படுத்தி, அவர்களது திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டனர். இப்போது அறபு வசந்தம் என்ற சொல்லையே உச்சரிப்பதில்லை.

இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்கையிலும், சடவாதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான ஒரு சமநிலையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. மேற்குலகில் ஆன்மீக பெருமானங்களின்  மதிப்பிழப்பு தடையற்ற சடவாதத்தை நோக்கி உலக நாடுகள் விரைந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் மிக முக்கியமான விடயமாக பணமே கருதப்படுகிறது. இதன் விளைவாக, பணம் என்பது, இலக்கை அடையும் ஓர் ஊடகம் என்றல்லாமல் அது மட்டுமே இலக்காக மாறியுள்ளது. அதற்குத் தடையாக எதனையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. மனிதாபிமானம், மனித உரிமை எல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே. மனித விழுமியங்கள் எதுவும் அவர்களுக்கு பொருட்டே அல்ல. பணத்துக்காகவும் வள சுரண்டலுக்காகவே இவர்களால் நாடுகள் அழிக்கப்படுவதையும் அப்பாவி மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் நாமும் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆயுத உற்பத்தியில் முழுமூச்சாக ஈடபட்டுள்ள நாடுகள் அவற்றை சந்தைப்படுத்துவதற்காக நாடுகளுக்கிடையில் சண்டைகளை மூட்டிவிடுவதற்கும் தயங்குவதில்லை. இந்த அனைத்து அநியாயங்களையும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைக் கொண்டு நியாயப்படுத்தி;, உலக மக்களையும் நம்பச்செய்வர்.

அபிவிருத்தி என்ற மாயை

இந்த நவகாலனித்துவ வாதிகள் 'புர்ஜ் கலீபா' போன்ற வானுயர் கட்டிடங்கள் கட்டுவதற்கு உதவுவார்கள், அதுவே அபிவிருத்தி என்று மூளை சலவையும் செய்வார்கள். இவர்கள் ஒருபோதும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்பது எமது ஆட்சியாளர்களுக்கு புரிவதில்லை. இந்தக் கட்டிடங்கள் எல்லாம் அவர்கள் வைத்துள்ள நவீன ஆயுதங்களுக்குத் தாக்குப்பிடிக்காது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். 

இவர்களது இந்த சதித்திட்டத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் ஆயதுல்லாஹ் கொமைனி புரட்சியின் ஆரம்ப காலத்திலேயே புரிந்து கொண்டு, ஈரானை சரியான பாதையில் வழிநடாத்தினார். எதற்கும் எவரிலும் தங்கியிருக்காத நிலையினை உருவாக்கினர். கல்விக்கு முன்னுரிமை வழங்கினார். ஈரானை வெளிநாட்டு கடனற்ற நாடாக மாற்றினார். இதனால்தான் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்த நிற்கும் நாடாக இன்று ஈரான் இஸ்லாமிய குடியரசு மிளிர்கிறது.

காலனித்துவ வாதிகள் அவர்களின் அடக்கியாளும் கொள்கையினை கைவிட்டுவிட்டனர் என்று ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இப்போதும் நாம் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை மக்கள் உணர வேண்டும்;. காலனித்துவத்துக்கு உள்ளாகியிருந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து எவ்வாறு போராடினோமோ அதுபோல் இன்றும் ஒன்றுபட்டு போராடவேண்டிய காலகட்டத்திலேயே இருக்கின்றோம்;. 

- தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment