Shahr-e Sukhteh
City
in Iran
ஈரானின்
தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூச்சிஸ்தான் சமவெளிக்கு கீழே புதைந்துள்ள 5,200 ஆண்டுகளுக்கு
முன்னர் தோன்றிய ஒரு புகழ்பெற்ற, பெண்ணாதிக்க சமூகத்தின் மர்மமான தடயங்கள்.
இந்நகர
நிர்மாணம் கி.மு. 3200 ஆண்டுகளில், ஹெல்மாண்ட் ஆற்றங்கரையில், (தற்போதைய சாஹிதான்-சபோல் செல்லும் வழியில்) அமையப்பெற்றுள்ளது. எனினும் அதற்கு 1000 வருடங்களுக்குப் பின், நான்கு புறநகர்
அமைக்கப்பட்ட நிலையில், அறியப்படாத எதோ
ஒரு காரணத்தினால் இந்நகரம் கைவிடப்பட்டுள்ளது.
பாரசீக மொழியில்
"ஷஹரே சுக்தேஹ்" (எறிந்த நகரம்) என்று அழைக்கப்பட்டு, பாரிய தீ ஒன்றின் விளைவாகவே இந்நகரம் கைவிடப்பட்டுள்ளது போன்ற ஒரு கருத்தை
தந்தபோதிலும், உண்மை
அதுவன்று. அங்கு ஆங்காங்கே காணப்படும்
சாம்பல் திட்டுக்கள் காரணமாகவே கடந்த 300 ஆண்டுகளாக இவ்விடம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அந்த சாம்பல் தடயங்கள் அந்நகரவாசிகளினால் பயன்படுத்தப்பட்ட அடுப்புகளினால்
ஏற்பட்டது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது "உலக
பாரம்பரிய தளம்" என யுனெஸ்கோ அமைப்பினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்
மற்றும் வறட்சி காரணமாக நகரம் கைவிடப்பட்டதாக சில கோட்பாடுகள் தெரிவித்தபோதும்
இந்த நாகரிகத்தின் அழிவுக்கான உண்மையான காரணங்கள் இன்னமும் மர்மமாகவே உள்ளன.
புராதன
மெசொப்பொத்தேமிய நாகரீகத்தில் இருந்து சுயாதீனமான, பிரசித்தி
பெற்ற நாகரீகமொன்று கிழக்கு பாரசீகத்தில் இருந்துள்ளது என்பதற்கான உறுதியான
ஆதாரங்களை, வெண்கல காலத்திய நகர்ப்புற குடியேற்றம்
தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம்
பெறலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இதுவரை
மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இந்நகரம் மெசொபொத்தேமியா மற்றும் ஈரானுக்கும்
இடையில், முக்கிய வர்த்தக
பாதையாகவும் இந்திய மற்றும் சீன நாகரிக இணைப்பு சந்தியாவும் இருந்துள்ளது என்பதையும்
அறிய முடிகிறது.
நகரம் களிமண்
மற்றும் செங்கற்களால் ஆன, சிக்கலான
வடிவமைப்பையும், கட்டமைப்புகளையும் கொண்டுள்ள இந்நகரம் ஒரு பெரிய அரண்மனை, குடியிருப்புத் தேவைகளுக்காக தனித்தனி
சுற்றுப்புறங்கள், தொழில்துறை
நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் பொருட்களின் உற்பத்தி போன்றவற்றுக்கான பிரத்தியேக இடங்களையும்
உள்ளடக்கியுள்ளது.
மகத்தான
நாகரிகம்
151
ஹெக்டயர்
நிலப்பரப்பைக்கொண்ட இவ்விடத்தில் 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள்
இடம்பெற்றுவருகின்றன. இதுவரை இந்த நகரம் அமைந்துள்ள இடத்தின் 4 வீதமே தொல்லியல் ஆய்வுக்குற்பத்தப்பட்டுள்ள
போதும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள புராதன வஸ்துக்கள் இந்த நாகரீகம் தொடர்பான
வியக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டதாய் இருக்கின்றன.
இந்த நகரத்தில் முக்கிய
தொழில்களில் ஒன்றாக நெசவு இருந்துள்ளது என்பதையும் இங்கு வாழ்ந்த மக்கள் தரைவிப்பு, கூடை போன்ற
பல்வேறு வகையான நெய்த பொருட்கள் தயாரித்துள்ளனர் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
மண்பாண்டம் நகரில்
ஒரு பெரிய அளவிலான உற்பத்தி என்பதை பாரிய அளவில் சிதறிக்கிடக்கும் பண்டைய மட்பாண்ட
பாத்திரங்களின் சிதைவுகள் காட்டுகின்றன.
படம்:
உலகின் முதல் அறியப்பட்ட அசையும் சித்திரம் பொறிக்கப்பட்டுள்ள ஒரு பாத்திரம். ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூச்சிஸ்தானில்
இந்த பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது, தற்போது அது ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட
பொருட்களில் இருந்து அனிமேஷன்
சித்திரம் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். படத்தில் காணப்படும் இந்தக் குவளை சுழலும்போது ஓர் ஆடு குதித்து, மேய்வது போன்று
அச்சித்திரம் அமைந்துள்ளது. தற்போது இக்குவளை
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது அனிமேஷன் சித்திரமாக இது கருதப்படுகிறது.
பிற
கண்டுபிடிப்புகளில் உலகில் முதல் அறியப்பட்ட விளையாட்டுப் பலகை, அரை மில்லிமீட்டர் துல்லியம் கொண்ட ஓர்
அளவுகோல் மற்றும் அங்கு வாழ்ந்தவர்கள்
கட்டிடக்கலை, கணிதம், அறிவியல், மருத்துவம்
மற்றும் பொறியியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதைக் காட்டும்
ஆச்சரியப்படத்தக்க பல கருவிகளையும் கண்டெடுத்துள்ளனர்.
பெண்ணாதிக்க
சமூகம்
இந்த நகரத்தில்
வாழ்ந்தோர் உலகில் அரிதாக அறியப்படும் பெண்ணாதிக்க சமூகமாக வாழ்ந்துள்ளனர்
என்பதைக் காட்டும் பல அத்தாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குடும்பம் மற்றும்
பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்களே தலைமைத்துவம் வகித்துள்ளனர்
என்பதற்கான சான்றுகள் பலவும் கிடைத்துள்ளன. இவ்விடத்தில்
மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில்
குறிப்பாக பெண்களின் கல்லறைகளில் உரிமைசாண்று முத்திரைகள் இருந்ததை இதற்கு
ஆதாரமாகக் கருதுகின்றனர். உற்பத்திகள் மற்றும் உணவு வழங்கல் ஆகியவற்றின்
கட்டுப்பாடு பெண்கள் வசம் இருந்திருப்பதும் இதிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது
என்றும் புதைபொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நகரத்தின்
புகழ்பெற்ற மாதர்கள் என்று கருதப்பட்டோரின் கல்லறைகளில் அடையாள முத்திரைகள்
பத்திக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சில தொல்மானிடவியலாளர்கள், பெண்கள் தமது மதிப்புமிக்க ஆவணங்களை
பிரத்தியேக முத்திரை பதிப்பதன் ஊடாக தத்தமது உயர் சமூக அந்தஸ்தை குறிக்க
பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
மருத்துவ அறிவு
தொல்பொருள்
ஆய்வாளர்கள் 2006ம் ஆண்டில்
வியக்கத்தக்க கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டனர். 4800 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட செயற்கை கண்விழி தான் அது. 32-36 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கு அது சொந்தமானது. அரைக்கோள வடிவக் கண்; 2.5 சென்டிமீட்டர்
அளவுக்கு விட்டம் கொண்டதுடன், மிக மென்மையான பிற்றுமின் பொருளினால் ஆக்கப்பட்டுள்ளது. கண்விழியினை சுற்றி தங்க நூலினால் இழைக்கப் பட்டுமிருந்தது.
இது ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் பலூச்சிஸ்தான்
பிரதேசத்தின் எரிந்த நகரில்
கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை கண்விழியுடன் கூடிய
ஒரு பெண்ணின் எலும்புக்கூடு, 4800 வருடங்கள் பழைமையானது.
4,000
ஆண்டுகளுக்கு
முன்னர் நகரில் மூளை
அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளதற்கான தடயங்களையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
12-13
வயதான பெண்
எலும்புக்கூடு ஒன்றின் மண்டை ஓட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து அப்பெண்
மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, அறுவை சிகிச்சையின் பின்னர் ஒன்பது
மாதங்களுக்கு உயிர்வாழ்ந்துள்ளார் என்பதையும் காட்டுவதாகக் கூறுகின்றனர்.
பல்வேறு
கலாச்சாரங்களின் சங்கமம்
நகரின் மேற்கில், 25-ஹெக்டயர் நிலப்பரப்பில், பெரிய மயான பூமி ஒன்றுள்ளது. 10 க்கும்
மேற்பட்ட வெவ்வேறு வகையான 25,000 கல்லறைகள் இங்கு உள்ளன. இது இப்பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்திருப்பதையும் அவர்கள் பல
கலாச்சார பின்னணிகளைக்கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் சகவாழ்வு மற்றும்
பல்வேறு கலாசாரங்கள் சங்கமித்ததற்கான சாத்தியக்கூறுகளை குறிப்பதாகவும் உள்ளன.
இறந்த உடல்களை உள்ளடக்கிய
கல்லறைகள் பொதுவாக அரைவளைவு கொண்டவையாகும். சில கல்லறைகளின் நுழைவாயிலில் சீல்வைத்து
மூடப்பட்ட அறைகளில், அக்காலத்தில் பெறுமதியானதாக கருதப்பட்ட சில பொருட்களும் காணப்பட்டன.
கல்லறைகள்
மண்ணைக்கொண்டு நிரப்பப்படாத காரணத்தால், அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின்
எலும்புக்கூடுகளும் அவற்றுக்குரிய பொருட்களும் அதிகம் சிதைவடையாது காணப்படுகின்றன.
சில கல்லறைகள்
புனரமைக்கப்பட்டு, இந்த
மயானபூமிக்கு மிக அருகில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.
தோண்டப்பட்ட
கல்லறைகள் சிலவற்றில் எலும்புக்கூடுகள் நேராகவன்றி, வளைந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
ஒரு மனிதன் - ஆணோ, பெண்ணோ - கருவாக, தாயின்
கர்ப்பத்தில் எந்த நிலையில் இருந்திருப்பரோ அதையொத்த நிலையில் அடக்கம்
செய்யப்பட்டிருந்தன. மனிதன் உலகுக்கு வந்த நிலையிலேயே உலகைவிட்டுப் பிரியவேண்டும் என்பது
அம்மக்களின் நம்பிக்கையாய் இருந்திருக்கக் கூடும். அந்த நம்பிக்கையின்
அடிப்படையில் சடலங்கள் இவ்வாறு அடக்கம் செய்யப்படிருக்கலாம். கல்லறைகளின்
மற்றுமொரு விசேட தன்மை என்னவென்றால் மனைவியும் கணவனும் ஒரே கல்லறையில், எதிரெதிரே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகும்.
அகழ்வாராய்ச்சியின்போது
பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், 5,000 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய மேம்பட்ட நாகரீகம் எவ்வாறு தோன்றியது, அதன் பிறகு அந்த நாகரீகத்துக்கு என்ன ஆனது? அவர்கள் கொண்டிருந்த அறிவு எவ்வாறு தொலைந்தது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை காண
முடியாதுள்ளது.
No comments:
Post a Comment