Was Hadith 'Qadeer
Khum' deliberately hidden from us...?
Understand the background of Ghadir Khumm and protect Islamic unity
பல நூற்றாண்டு காலமாக பிரிந்திருந்து ஒருவருக்கொருவர் குற்றம் குறை சொல்லிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை கருதியே இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இக்கட்டுரையானது, திறந்த மனதுடன் வாசிக்கப்பட்டால், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஷீஆ-சுன்னி கருத்து வேறுபாடுகள் ஓரளவு நீங்கி இரண்டு சமூகத்தவரும் புரிந்துணர்வுடன் வாழ வழிபிறக்கும் என்று நம்புகிறேன்.
நபி (ஸல்) அவர்கள்
அவர்களுக்குப் பிறகு ‘அலீ (அலை) அவர்களை கலீபாவாகவும் முஸ்லிம்களின்
பாதுகாவலராகவும் நியமித்தார்கள் என்பதற்கான உறுதியான சான்றுகளில் ஹதீஸ் கதீர் கும்
ஒன்றாகும் என்று ஷீஆ முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
இந்த விஷயத்தில், இங்கே தரப்படும் ஆதார ஆவணங்களும் குறிப்புகளும் இத்தனை
இருக்கும்போது, உலக முஸ்லிம்களிடமிருந்து, குறிப்பாக அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களிடமிருந்து, இந்த தெளிவான ஹதீஸ் ஏன் மறைக்கப்பட்டது என்று சிந்திப்போரை
நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும்!
அஹ்லுஸ் சுன்னா
இமாம்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகள், தர்க்கரீதியான பகுப்பாய்வுகள் மற்றும் முன்னர்
கவனத்தில் எடுக்கப்படாத உண்மைகள் துல்லியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்
என்பதற்காகவே கட்டுரையாக வடிக்கப்படுகிறது.
எம்மில் பலர் இந்த ‘கதீர்
கும்’ என்ற சொல்லையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்; ஏனென்றால் அது எங்களுக்கு சொல்லித்தரப்படவில்லை, வேண்டுமென்றே மறைக்கப்பட்டதோ என்று சந்தேகிக்கத்
தோன்றுகிறது.
‘கதீர்
கும்’ என்பது மக்காவிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள ஜுஃபாவுக்கு அருகில், மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலான ஒரு நீர்நிலை
இருக்கும் பகுதியாகும்.
அவ்விடத்தில் இருந்து
தான் நபி (ஸல்) அவர்கள் ஹி,பி, 10ம் ஆண்டு துல்-ஹஜ் மாதம் பதினெட்டாம் நாளில், ஹஸரத் அலீ (அலை) அவர்களை தனக்குப் பின் இஸ்லாமிய உம்மத்தை
வழிநடத்தும் தலைவராக, கலீபாவாக நியமித்தார்கள்
என்பதற்கான சரித்திர சான்றுகள் தாராளமாக உண்டு. இதுபற்றி ஷீஆ-சுன்னி இமாம்கள்
நிறையவே எழுதிவைத்துள்ளனர்.
ஆரம்பகாலத்தில்
அதிகாரத்தில் இருந்த சிலர் அரசியல் நோக்கங்களுக்காக இந்த மாபெரும் வரலாற்று
நிகழ்வின் நினைவகத்தை அழிக்க முயன்றுள்ளனர் வெளிப்படை, இப்போதும் கூட, சில தனிநபர்கள், சில காரணங்களுக்காக, அதை மறைக்க
முயற்சிக்கிறார்கள், ஆயினும்கூட, இந்த நிகழ்வு வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றில்
மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதியப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் இதை மறுத்தல்
என்பது இலேசான காரியமாக அமையாது.
நபி (ஸல்) அவர்களுக்குப்
பிறகு ‘அலீ (அலை) அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டார் என்பதற்கான உறுதியான
ஆதாரங்களில் கதீர் பாரம்பரியமும் ஒன்றாகும், இஸ்லாமிய ஆய்வாளர்கள் அதற்கு ஒரு சிறப்பு
முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள் என்பதையும்
காணக்கூடியதாக உள்ளது.
அலீ (அலை) அவர்களது
தலைமைத்துவம் குறித்து விவாதிப்பவர்கள் கூட இந்த ஹதீஸை நிராகரிப்பதில்லை; அதன் நம்பகத்தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பாது ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனெனில் 110க்கும் அதிகமான சஹாபாக்களால் அறிவிக்கப்பட்ட
முதவாத்திரான ஹதீஸ் அதுவாகும். ஆனால் குறித்த ஹதீஸில் வரும் "மௌலா" எனும்
சொல்லின் உட்பொருளிலேயே முரண்பாடு தெரிவித்து இணங்க மறுக்கிறார்கள் என்பது இங்கு
ஈண்டு கவனிக்கத்தக்கது.
இந்த ஹதீஸின் வெவ்வேறு
அம்சங்களை தெளிவுபடுத்துவதற்கு, இவ்விரு குழுக்கள் கூறுவதை உண்மையான மற்றும் சரியான
ஆதாரங்களுடன் ஆராய வேண்டியது அவசியமாகும்:
கதீரின் சம்பவத்தின்
பின்னணி
அல்லாஹ்விடமிருந்து
றஸூலுல்லாஹ்வுக்கு பின்வரும் வசனம் வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் இறக்கப்படுகிறது:
يَا أَيُّهَا الرَّسُولُ
بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ ۖ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا
بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ
தூதரே! உம்
இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவர் ஆக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து
காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை
நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)
வசனத்தின் தொனியை
நோக்குங்கள், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒரு தீர்க்கமான பணியை
நிறைவேற்ற நியமித்திருப்பதை அது குறிக்கிறது. இது அவருடைய தீர்க்கதரிசன பணிக்குரிய
விடயமாகும், அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் விரக்தியை
ஏற்படுத்தும் என்பதையும் இந்த வசனம் பூடகமாக குறித்து நிற்கிறது.
அவ்விடத்தில் கூடியிருந்த
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முன்னால் கலீபா, பாதுகாவலர் மற்றும் வாரிசு தரத்திற்கு அலீ (அலை) அவர்கள் நியமிக்கப்பட்டதை விட அச்சமயத்தில் வேறு எந்தவொரு
முக்கியமான பணியும் அங்கு இடம்பெற்றதா...? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
ரஸூலுல்லாஹி (ஸல்)
அவர்கள் தமது பரிவாரத்துக்கு முன் சென்றோரை திரும்பி வரும்படி அழைத்ததுடன்
பின்னால் வருவோருக்காக காத்திருந்து அவர்கள் மத்தியில் பின்வருமாறு
உரையாற்றினார்கள்:
புகழ் அனைத்தும்
அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நாம் அவனிடம் இருந்தே உதவியை நாடுகிறோம், அவனையே விசுவாசம் கொள்கிறோம். நம்முடைய தீங்கு
விளைவிக்கும் மற்றும் தீமையான செயல்களுக்காக அவனிடமே மீழுகின்றோம். இறைவா, வழிகாட்டி இல்லாதவர்களைக் காப்பாற்றுவாயாக. யார்
ஒருவன் இறைவனால் வழிநடத்தப் படுகிறானோ, அவனுக்கு எந்த கவலையும் இருக்காது. அல்லாஹ்வைத் தவிர வேறு
இறைவன் இல்லை என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன், அவனையே வழிபடுங்கள், முஹம்மத் அவனுடைய அடிமை மற்றும் தீர்க்கதரிசி.
மகா ஜனங்களே..! விரைவில், நான் இறைவனின் அழைப்பை ஏற்று சென்றுவிடுவேன், உங்களை விட்டும் பிரிந்துவிடுவேன். எனது
விடயங்களுக்கு நான் பொறுப்பு, உங்கள் விடயங்களுக்கு நீங்கள்! அவர் தொடர்ந்தும் கேட்டார்கள்: என்னைப் பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்!? (உங்களுக்கான எனது பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேனா?) கூட்டத்தினர் அனைவரும் சொன்னார்கள்: உங்கள்
தீர்க்கதரிசன பணியை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள், முயற்சி செய்தீர்கள் என்பதற்கு நாங்கள்
சாட்சியமளிக்கிறோம். இறைவன் உங்களுக்கு நல்ல வெகுமதிகளை வழங்குவான்.
நபி (ஸல்) அவர்கள்
கேட்டார்கள்: அகிலமனைத்தினதும் இறைவன் ஒருவன் என்பதையும், முஹம்மத் அவனது அடிமை, தூதன் என்பதற்கும் மேலும் சொர்க்கம், நரகம், மறுமை உலகில் நித்திய ஜீவியம் பற்றி எந்த சந்தேகமும்
இல்லை என்று நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்களா...? ஆம், அது உண்மை. நாங்கள் சாட்சியமளிக்கிறோம்..! என்று
அனைவரும் பதிலளித்தனர்:
அவர் மேலும் கூறினார்:
மக்களே, நான்
உங்களிடம் இரண்டு விலைமதிப்பற்ற விஷயங்களை விட்டு செல்கிறேன். இவ்விரண்டு
விடயங்களுடனும் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதை நான் அவதானிப்பேன்..!
நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: அவற்றில் ஒன்று புனித குர்ஆனாகும், அதன் ஒரு முனை வல்லோன் இறைவன் கையில் உள்ளது, மறுமுனை உங்களிடம் உள்ளது. அடுத்தது என்னுடை
அஹ்லுபைத் (குடும்பம்) ஆகும். இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றையொன்று பிரியாது என்று
வல்ல அல்லாஹ் எனக்கு அறிவித்திருக்கிறான்.!
மக்களே, உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், குர்ஆனையும் எனது குடும்பத்தையும் மிஞ்சாதீர்கள். அவை இரண்டையும் பின்பற்றத் தவறாதீர்கள். இல்லையெனில், நீங்கள் அழிந்து விடுவீர்கள்..!
பின்னர், அவர் ‘அலீயின் (அலை) அவர்களின் கையை பற்றி, அதை மிக உயரமாக உயர்த்தி மக்களிடம் வினவினார்கள்:
விசுவாசிகளுக்கு தம்மை விட அதிக அங்கீகாரமும் உரிமையும் உள்ளவர் யார்? என்று,
இறைவனும் அவனது தூதருமே
இதைப்பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர் என்று அனைவரும் பதிலளித்தனர்.
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: அல்லாஹ் என்னுடைய எஜமானன், நான் விசுவாசிகளின் தலைவன், நான் தங்களை விட அதிக அங்கீகாரமும் உரிமையும்
உடையவன்! மக்களே, ஜாக்கிரதை!
من کنت مولاه فهذا علی مولاه
நான் யார் யாருக்கெல்லாம்
தலைவனாகவும் அதிகாரமுடையவனாகவும் இருக்கின்றேனோ (எனக்குப் பின்) இந்த அலீ
அவர்களுக்கெல்லாம் தலைவராகவும் அதிகாரமுடையவராகவும் இருப்பார்.
எதிர்காலத்தில் எந்த தவறும் ஏற்படாமல் இருக்க நபி
அவர்கள் இந்த சொற்றொடரை மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார்!
اللهم وال من والاه و عاد من عاداه و احب من
احبه و ابغض من ابغضه و انصر من نصره و اخذل من خذله و ادر الحق معه حیث دار.
இறைவா,
‘அலீ’யுடன் நட்பு கொண்டோருடன் நீயும் நட்பாக இரு,‘
அலீ’க்கு
எதிரியாக இருப்போருடன் நீயும் எதிரியாய் இரு.
அலீக்கு
உதவி செய்பவருக்கு நீ உதவியாய் இரு,
அவரை
விட்டு விலகியவரை விட்டும் நீயும் விலகியிரு என்று கூறிவிட்டு,
சத்தியத்தின்
அளவுகோலாக அவரை ஆக்கு' என்றும் இறைஞ்சினார்கள்.
மேற்கண்ட பிரசங்கத்தை தங்கள் கிரந்தங்களில் விவரித்திருக்கும் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்:
- முஸ்னத் அஹ்மத்: தொகுதி. 1, பக். 84, 88, 118, 119, 152, 281, 331, 332, 370;
- சுனன் இப்னு மஜா, தொகுதி.
1, பக். 55, 58;
- அல்-முஸ்தத்ரக் அலீ - ஸஹீஹைன்
ஹக்கீம் நிஷாபுரி, தொகுதி. 3, பக். 118 & 613;
- சுனன் திர்மிதி, தொகுதி. 5, பக். 633;
- ஃபத் அல்-பாரி, தொகுதி. 79, பக். 74;
- பாக்தாதி போதகரின் வரலாறு, தொகுதி. 8, பக். 290; கலீபாக்கள் மற்றும் சுயூத்தியின் வரலாறு, ப. 114
ஸெய்த் இப்னு அர்க்கம்
கூறுகிறார்: முஹாஜிர்களில் இருந்து வந்த அபுபக்கர், உமர், உத்மான், தல்ஹா மற்றும் ஸுபைர் (அல்லாஹ் அவர்கள் அனைவரையம்
பொருந்திக் கொள்ளட்டும்) ஆகியோர் முதலில் ‘அலீ’க்கு மரியாதை செலுத்தியோராகும், அதைத்தொடர்ந்து வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை செலுத்தும்
நிகழ்வு சூரிய அஸ்தமனம் வரை தொடர்ந்தது. இது அஹ்மத் இப்னு முகமது தபரி தொகுத்த அலீ
பின் அபி தாலிப்பின் நல்லொழுக்கங்கள் என்ற புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
இந்த கதீர் வரலாற்று
நிகழ்வை எல்லா காலத்திலும், நூற்றாண்டுகளிலும், ஒரு நேரடி வரலாறாகவும், இதயங்களையும்
மனதையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாகவும், இஸ்லாமிய எழுத்தாளர்கள்
அதை விவரித்துள்ளனர்.
வரலாறு, பாரம்பரியம் மற்றும் இறையியல் புத்தகங்கள் மற்றும் மத
சொற்பொழிவாளர்கள் இமாம் அலீயின் (அலை) மறுக்க முடியாத நல்லொழுக்கங்கள் பற்றி
பேசுகையில் அவற்றில் ஒன்றான தலைமைத்துவம் பற்றியும் விரிவுரைகளை வழங்குவதற்கு, இவ்விடயம் விரிவாக விவாதிக்கபட வேண்டும் என்பது இறைவனின்
விருப்பம்.
இந்த பாரம்பரியத்தின்
நித்திய தன்மைக்கான காரணங்களில் ஒன்று சூரா
அல்-மாயிதா 5:3 மற்றும் 5:67 ஆகிய இரண்டு குர்ஆனிய வசனங்களாகும். குர்ஆன்
நித்தியமானது என்பதால், இந்த வரலாற்று நிகழ்வும்
ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.
".........
இன்றைய தினம் உங்களுக்காக
உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும்
நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; ...........". (சூரா அல்-மாயிதா 5:3)
“தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை
(மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு)
நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர்
நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை
மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக
அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.” (சூரா அல்-மாயிதா 5:67)
பாரம்பரியவாதிகள், இறையியலாளர்கள், தத்துவவாதிகள், வரலாற்றாசிரியர்கள், வர்ணனையாளர்கள், சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள், மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினரால் இந்த சம்பவம் பதியப்பட்டுள்ளது; வேறு வார்த்தைகளில்
கூறுவதானால், உலகில் எழுதப்பட்ட வேறு எந்த வரலாற்று நிகழ்வுக்கும் இந்த
அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனலாம்.
என்றாலும், சகீபா பனீ சாயிதாவில் நடந்தது ரசூலுல்லாஹ் (ஸல்)
அவர்கள் சொன்னதற்கு மாற்றமானது என்பதை நாம் சரித்திரத்திரத்தில் படிக்கின்றோம்.
1400 வருடங்களுக்கு முன்னும் அதன் பிறகும் நடந்த
வரலாற்றுத் தவறுகளை மறப்போம் என்று நேசக்கரம் நீட்டுகின்றனர் ஷீஆ உலமாக்கள். ஒரே
அல்லாஹ்வை ஏற்றுக்கொள்கிறோம், முஹம்மத் ரசூலுல்லாஹ்
(ஸல்) அவர்களை இறுதித் தூதர் என்று ஏற்றுக்கொள்கிறோம், ஒரே குர் ஆனை பின்பற்றுகிறோம், ஒரே கிபலாவை முன்னோக்குகிறோம்; ஆகவே, இந்த பிரிவினை கோஷத்தை
விட்டொழிப்போம்.
சம்பவம் நிகழ்ந்த
துல்-ஹஜ் 18ம் தினத்தை ஓர் உன்னத தினமாகவும் மகிழ்ச்சிக்குரிய பண்டிகைத்
தினமாகவும் "ஈத் கதீர்" பெருநாள் என்று உலகமனைத்திலும் உள்ள ஷீஆ
முஸ்லிம்கள் இன்றளவிலும் கொண்டாடி வருகின்றனர். உலகில் பல நாடுகள் இத்தினத்தை
விடுமுறை தினமாகவும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அபுரைஹான் அல் பிருனி, அஸ்ஸருல் பாகீஹில் “ஈத் கதீர்” நாளானது (ஷீஆ-சுன்னி
பேதமின்றி) அனைத்து
முஸ்லிம்களும் கொண்டாடி வந்த ஒரு திருநாள் என்று குறிப்பிடுகின்றார். இப்னு
கல்கானும் அவ்வாறே குறிப்பிடுகின்றார். அதுமட்டுமல்ல பிரபலமான அஹ்லுஸ்ஸுன்னா
அறிஞர்களில் ஒருவரான த’ஆபி, கதீர் இரவை இஸ்லாமிய உலகின் பிரபலமான இரவுகளில் ஒன்றாக
குறிப்பிட்டுள்ளார்.
இப்போது சிலர்
ரசூலுல்லாஹ் குர்ஆனையும் அவரின் வழிமுறைகளையும் (ஸுன்னாவையும்) பின்பற்ற வேண்டும்
என்று கூறி வருகின்றனர். அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. றஸூலுல்லாஹ்வின்
சுன்னா என்பது அவரின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் என்பனவாகும். ஆகவே
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறிய இந்த விடயத்தையும் ஆராய்வோம்.
முஸ்லிம்கள்
மத்தியில் ஒற்றுமையை வளர்ப்போம், புரிந்துணர்வுடன்
ஒன்றுபட்டு தலைநிமிர்ந்து வாழ்வோம்.
(இக்கட்டுரையை கண்ணியமான முறையில் சவாலுக்கு உட்படுத்தும் உரிமையும் வாசகர்களுக்கு உண்டு என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்).
தாஹா முஸம்மில்
ஷீயா சுன்னா பிரட்சினை வெறுமனே ஒரு அரசியல் பிரச்சினையே தவிர வேறொன்றும் இல்லை.. என்று முழு உலகுக்கும் இதுதெரியும்.. ரஸூலுல்லாஹ் அவர்கள் மூன்று தடவைகள் அல்லாஹ்வின் கட்டளைப்படி பெயர் குறிப்பிட்டுஅலி (ரலி) அவர்களை தலைவராக நியமித்து லட்சத்துக்கு அதிகமானவர்கள் தக்பீர் சொல்லி அங்கீகரித்து விட்டு அதுவும் அபூபக்கர் ரலி உமர் ரலி சஹாபாக்கள் அனைவருமே அங்கீகரித்து வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு அது மூடி மறைக்கப்பட்டது ஆச்சரியமான விடயம்தான்
ReplyDeleteஎன்றாலும்
நடந்ததை முஸ்லிம்களின் ஒற்றுமை கருதி மறப்போம் மன்னிப்போம்.
இதை இமாம் அபுஹனிபா அவர்களே கூறியுள்ளார்கள்