Sunday, September 10, 2023

கஸ்வின் நகரம்; ஈரானின் கலை மற்றும் பாரம்பரியத்தின் சின்னம்

 Qazvin city; Symbol of Iran's art and traditions

1278 மீட்டர் உயரத்தில் அல்போர்ஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள கஸ்வின் ஈரானின் மிகவும் வரலாற்று நகரங்களில் ஒன்றாகும், மேலும் ஒரு காலத்தில் சஃபாவித் வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் தலைநகராக இருந்தது.

காஸ்வின் நகரம் சசானியப் பேரரசு சகாப்தத்தில், மன்னர் இரண்டாம் ஷாபூர் (கி.பி. 309 - 379) என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. தெயிலாமிகளின் படையெடுப்பைத் தடுக்க இந்த பகுதியில் ஒரு கோட்டையைக் கட்ட மன்னர் உத்தரவிட்டார் என்றும் இந்த உத்தரவின்படியே கோட்டையின் அஸ்திவாரம் படிப்படியாக அமைக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. சில வரலாற்றாசிரியர்கள் காஸ்வின் என்ற பெயர் எல்லை என்று பொருள்படும் 'காஷ்வின்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக நம்புகின்றனர், மேலும் சில ஓரியண்டலிஸ்டுகள் காஸ்வின் என்ற சொல் காஸ்பியன் கடலின் மேற்கில் வாழும் ஒரு குழுவான காஸ்பியன்ஸ் என்ற பழங்குடியினரின் பெயரிலிருந்து பெறப்பட்டது என்றும் நம்புகின்றனர்.

கஸ்வினின் நாட்டின் வரலாற்று கட்டிடங்களைக் கொண்டிருப்பதின் காரணமாக முதல் இடத்தைக் கொடுத்துள்ளன. பட்டுப் பாதை காரணமாக வணிகர்களுக்கு கஸ்வின் ஒரு முக்கிய கடக்கும் இடமாகவும் இருந்தது. இந்த நகரம் மிர் இமாத் கஸ்வினி (1554-1615) போன்ற பல சிறந்த ஈரானிய கலைஞர்களின் தாயகமாகவும் உள்ளது, மேலும் இவை அனைத்திற்கும் மேலாக, சுவையான உணவுகள் மற்றும் இனிப்புகளின் பேர்பெற்ற நகரமாகவும் உள்ளது.

கஸ்வின் பாரசீக தரைவிரிப்புகள் மற்றும் சிற்றோவியங்கள் மற்றும் எழுத்தணி போன்ற நுண்கலைகளுக்காகவும், அதன் திராட்சை மற்றும் சுவையான பழங்களுக்காகவும் புகழ் பெற்றது.

கஸ்வின், ஈரானின் எழுத்தணி கலையின் தலைநகரம்

பனாயி, மொஹாக்கக், தாலிக், மெய்தானி, நஸ்டாலிக், ஷெகஸ்தே-நஸ்தலிக், நஸ்க் மற்றும் சோல்ஸ் போன்ற பல்வேறு பாரம்பரிய எழுத்தணி பாணிகளில், கடைசி நான்கு மட்டுமே ஈரானில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. சஃபாவித் சகாப்தத்தில் மிர் எமாத் கஸ்வினி, ஜாண்ட் சகாப்தத்தில் மிர்சா ஜீனோலாபெடின் முஜேஸ்னேகர் மற்றும் ஈரானிய கலாச்சாரத்தை செம்மைப்படுத்த பங்களித்த கஜார் சகாப்தத்தில் மாலெக் முகமது மற்றும் மிர்சா முகமது ஹொசைன் சீஃபி கஸ்வினி (எமாடோல்கேதாப்) உள்ளிட்ட பல முக்கிய எழுத்தணி நிபுணர்கள் இந்த நகரத்திலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாஸ்டர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட எழுத்துப் பாணியை உருவாக்கினர். மீர் இமாத் கஸ்வினி மற்றும் பிற கஸ்வினி எழுத்தணி நிபுணர்களின் படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை.

கஸ்வின் வரலாற்று மற்றும் சுற்றுலா தளங்கள்

கஸ்வின் மாகாணம் நாட்டின் பழமையான மத்திய மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் சசானிய காலத்தைச் சேர்ந்தது. சஃபாவித் ஆட்சியின் போது சுமார் 57 ஆண்டுகள் ஈரானின் தலைநகராக கஸ்வின் நகரம் இருந்தது. இந்த காரணத்திற்காக, இந்த பண்டைய நகரத்தின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான சுற்றுலா ஈர்ப்புகள் உள்ளன. சில வரலாற்றுத் தளங்களாகவும், சில இயற்கையான இடங்களாகவும் உள்ளன.

கஸ்வினின் ஓவன் ஏரி

ஓவன் ஏரி கஸ்வினின் இயற்கை ஈர்ப்புகளில் ஒன்றாகும், இது பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, அதன் அற்புதமான மற்றும் கண்கவர் காட்சிகள் காரணமாக. இந்த அழகிய ஏரியைச் சுற்றி இவான், வெயின், ஜவர்தஷ்த் மற்றும் ஜராபாத் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன:

ஈரானின் இயற்கை ஏரிகளில் ஒன்றான ஓவன் ஏரி அதன் கண்கவர் காட்சிகளுக்கு பெயர் பெற்றது. ஏரிக்கு வசதியான சாலை மற்றும் ஏரியின் விளிம்பில் உள்ள வசதிகள் குடும்பங்களுக்கு சரியான பொழுதுபோக்கை வழங்கியுள்ளன. இயற்கை ஆர்வலர்களை இயற்கைக்கு ஈர்க்கும் ஓவன் ஏரியின் மற்றொரு அம்சம் இந்த கேம்ப்கிரவுண்ட் ஆகும்.

ஓவன் ஏரி குளிர்காலம் மற்றும் இலையுதிர்காலத்தில் உறைகிறது, மேலும் இது அன்னங்கள், வாத்துகள் போன்ற புலம்பெயர் பறவைகளுக்கு பொருத்தமான புகலிடமாக கருதப்படுகிறது.

1815 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் குளிர்காலத்தில் ஏரியின் மேற்பரப்பு உறைந்து பனிச்சறுக்கு வீரர்களை ஐஸ் ஸ்கேட்டிங் செய்ய அனுமதிக்கிறது. மறுபுறம், கோடையில் மீன்பிடித்தல், நீச்சல் மற்றும் படகு சவாரிக்கு ஏற்ற தலமாகவும் உள்ளது.

கஸ்வின் பெரிய பள்ளிவாசல்

கிராண்ட் மசூதி என்றும், அதிக் மசூதி என்றும் (ஜாமே மஸ்ஜித் என்றும் அழைக்கப்படுகிறது) பல்வேறு வரலாற்று காலங்களின் கட்டிடக்கலை பாணிகளின் தொகுப்பாகும். செல்ஜுக், சஃபாவித் மற்றும் ஓரளவிற்கு கஜார் காலங்களின் கட்டிடக்கலை பாணிகளை இங்கு காணலாம்.

ஷாஸ்தே ஹொசைன் நினைவாலயம்

ஷாஸ்தே ஹொசைன் எட்டாவது ஷியா இமாம் ரெஸா அவர்களின் மகன்களில் ஒருவரின் கல்லறை கஸ்வின் நகர மையத்தில் அமைந்துள்ளது. இதன் அற்புத கட்டிடக்கலை பார்ப்பவரை பிரமிக்கச் செய்யும்.

இந்த கல்லறை முதன்முதலில் 1220 களில் கட்டப்பட்டது, அதன்பிறகு சஃபாவித் மன்னர்களின் ஆட்சியின் போது இது சில மறுசீரமைப்புகளுக்கு உள்ளாகி அற்புதமான கட்டிடக்கலை வளாகமாக மாறியது. கட்டிடத்தின் உள்ளே கண்கவர் கண்ணாடி வேலைப்பாடுகள் 1840 களில் சேர்க்கப்பட்டது.

வடக்கு மற்றும் தெற்கு வாயில்களால் சூழப்பட்ட ஒரு பரந்த முற்றம், கட்டிடத்தைப் பார்க்க வருவோருக்கு போதுமான இடத்தை வழங்குகிறது. வடக்கு நுழைவாயில் ஒரு கம்பீரமான படைப்பாகும். கலை வடிவங்கள், அலங்கார ஓடு வேலைகள், உயரமான வாயில்கள் மற்றும் 6 மினி-மினாராக்கள் வடக்கு நுழைவாயிலுக்கு ஒரு தனித்துவமான அழகிய பாணியைக் கொடுத்துள்ளன.

லமுட் கோட்டை

லமுட் கோட்டை வடகிழக்கு காஸ்வின் மாகாணத்தில் கஸோர்கான் கிராமத்திற்கு அருகில் 2163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட கல் படிக்கட்டுகளைக் கொண்ட இந்த கோட்டையின் வடக்கு முகப்பில் ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. மலையின் தெற்கு சரிவில் ஒரு பள்ளம் உள்ளது, இது எந்த ஊடுருவலையும் தடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த கோட்டை கிட்டத்தட்ட 120 மீட்டர் நீளமும், 10 முதல் 35 மீட்டர் அகலமும் கொண்டது. கோட்டையின் உச்சியில் நிற்கும்போது, சுமார் 10 கி.மீ தூரத்தைக் காணலாம்.

நாற்பது தூண் பெரிய கட்டிடம்

செஹெல் சோடூன் அல்லது நாற்பது தூண்கள் கொண்ட மாளிகை என்பது பழைய நகரமான கஸ்வினில் அமைந்துள்ள ஒரு சஃபாவித் அரண்மனை ஆகும். ஒட்டோமான் துருக்கியர்களின் அச்சுறுத்தல் காரணமாக சஃபாவித் மன்னரான ஷா தஹ்மாஸ்ப் தலைநகரை கஸ்வினுக்கு மாற்றியபோது இந்த சதுர வடிவ மாளிகை கட்டப்பட்டது. இந்த அரண்மனை துருக்கிய கட்டிடக்கலைஞரின் வடிவமைப்பின்படி மிகவும் கவர்ச்சிகரமான மர ஜன்னல்களைக் கொண்ட ஒரு அழகான தோட்டத்தின் நடுவில் ஒரு மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது.

காஸ்வின் இனிப்புகள் சிறப்பு

ஈரானில், உணவு மற்றும் இனிப்புகள் தனித்துவமான சுவையை கொண்டதாக இருக்கும். ஈரானியர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கவும் உணவைப் பயன்படுத்துகின்றனர்.

ஈரானில் உள்ள நகரங்களில் இனிப்பு பண்டங்களுக்கு பிரசித்தமான இடமாக கஸ்வின் அறியப்படுகிறது. முக்கிய விழாக்களின் போது, காஸ்வின் இனிப்புகள் பரிமாறப்படுகின்றன.

விதைகள், உலர்ந்த பழங்களின் மாறுபட்ட வண்ணங்கள் மற்றும் சுவைகள் காஸ்வின் இனிப்புகளுக்கு தனி இடத்தை வழங்கியுள்ளன. காஸ்வின் மாகாணத்தில் உள்ள இல்லத்தரசிகள் பெரும்பாலும் வெவ்வேறு விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நிறம், வாசனை மற்றும் சுவையில் மாறுபடும் இனிப்புகளை தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள்.

கொடி பக்லாவா

பக்லாவா இனிப்பு (Baklawa Sweet) யாஸ்த், கஷான் மற்றும் இஸ்பஹான் பல ஈரானிய நகரங்களின் அடையாளமாகும், இருப்பினும், கஸ்வின் பக்லாவா தனித்துவமான ஈரானிய உணவுகளில் ஒன்றாகும். கொடியில் உள்ள ஒவ்வொரு அடுக்கும் காஸ்வின் பாரம்பரிய தோட்டங்களின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றைக் குறிக்கிறது. கஸ்வின் பக்லாவாவில் சேர்க்கப்படும் பிஸ்தா அங்கு அங்கு உற்பத்தி செய்தவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஏனெனில் இந்த பிஸ்தாவின் தரம் குறித்து கஸ்வினின் குடிமக்கள் ஒரு சிறப்பு கருத்தைக் கொண்டுள்ளனர்.

படேராஸி இனிப்புகள்

கஸ்வின் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான இனிப்புகளைப் போலவே, படேராஸியும் அரை இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது. இது அநேகமாக தேநீர் அல்லது காபியுடன் வழங்கப்படுகிறது. மூன்று வகையான மாவால் தயாரிக்கப்படும்  படேராஸி கோதுமை மாவு, கொண்டைக்கடலை மாவு மற்றும் அரிசி மாவுடன் முட்டை, இஞ்சி தூள், வெணிலா, குங்குமப்பூ, எள், சக்கரை, பால் மற்றும் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக ஈரானிய புதுவருடமான நவ்ரூஸுக்காக மூன்று வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கப்படுகிறது.

கொண்டைக்கடலை இனிப்புகள்

கொண்டைக்கடலை இனிப்புகள் ஈரானின் பெரும்பாலான நகரங்களில் பிரபலமாக இருந்தபோதிலும் அவை முதலில் கஸ்வின் மாகாணத்திலிருந்து வந்தவை ஆகும். அவை பெரும்பாலும் ஈரானிய புதுவருடமான நவ்ரூஸில் விருந்தினர்களை மகிழ்விக்கின்றன. கொண்டைக்கடலை இனிப்பு தயாரிப்பதற்கு விரைவானது மற்றும் மிகவும் திருப்திகரமானது. இந்த சுவையான இனிப்புகள் பொதுவாக பிஸ்தா, பட்டாணி மாவு, முட்டையின் மஞ்சள் கரு, சக்கரை, தூள் சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

பிஸ்தா ரோல்

எள் ரோல், அக்ரூட் ரோல் போன்ற பல வகையான மெல்லிய ரோல்கள் (Thin Roll) இருந்தபோதிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது பிஸ்தா மெல்லிய ரோல் ஆகும். கஸ்வின் உள்ளூர் மக்களால் இது பெசாக் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளை மாவு, சக்கரை தூள், முட்டை, திட எண்ணெய், வெணிலா, தயிர், உருகிய வெண்ணெய், உப்பு, பேக்கிங் பவுடர், புளிப்புத் தூள், வால்நட் பவுடர், பிஸ்தா தூள், குங்குமப்பூ மற்றும் எள் ஆகிய பொருட்கள் இந்த சுவையான ரொட்டியில் சேர்கின்றன.

கஸ்வினின் சுவையான உணவுகள்:

மத்திய அல்போர்ஸ் மலைத்தொடரால் சூழப்பட்டிருப்பதால் கஸ்வின் மாகாணம் ஒரு தனித்துவமான புவியியல் இருப்பிடத்தையும் காலநிலையையும் கொண்டுள்ளது, மேலும் இந்த நகரத்தின் பண்டைய வரலாற்றுக்கு கூடுதலாக, இந்த பகுதியின் உள்ளூர் உணவு வகைகள் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான கஸ்வினி உணவுகள் இனிப்பு மற்றும் மென்மையான சுவையைக் கொண்டதாக்க இருக்கும், மேலும் அவை பீன்ஸ், இறைச்சி, அனைத்து வகையான உண்ணக்கூடிய விதைகள் மற்றும் நறுமணமுள்ள உள்ளூர் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகின்றன.

கெய்மே நெசார்

கெய்மே நெசார் கஸ்வின் மாகாணத்தின் பிரபலமான மற்றும் உள்ளூர் உணவுகளில் ஒன்றாகும். இது மட்டன் அல்லது மாட்டிறைச்சி துண்டுகள், வெங்காயம், பாதாம் துண்டுகள், பிஸ்தா துண்டுகள், ஆரஞ்சு தோல் துண்டுகள் மற்றும் பார்பெர்ரி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களை சாதத்தின் மீது தூவி பரிமாறுகின்றனர்.

கஸ்வினி அனார் போலோ (மாதுளை மற்றும் சோறு)

அனார் போலோ என்பது மிகவும் சுவையான ஈரானிய உணவுகளில் ஒன்றாகும், இது வழக்கமாக 'யால்டா' எனப்படும் நீண்ட இரவில் பரிமாறப்படுகிறது. கஸ்வினி அனார் போலோ என்பது மாதுளை, அரிசி, திராட்சை, குங்குமப்பூ, கொத்தமல்லி மற்றும் பிஸ்தா துண்டுகளின் கலவையாகும், இந்த உணவின் அற்புதமான சுவை மற்றும் தோற்றம் உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும்.

கல் ஜூஷ்

கல் ஜூஷின் முக்கிய பொருட்கள் காஷ்க் (பாலில் இருந்து ஒரு தயாரிப்பு), அக்ரூட் பருப்புகள் மற்றும் புதினா. ஆனால் நாட்டின் சில பகுதிகளில், இந்த உணவை தயாரிக்க அவர்கள் தயிரைப் பயன்படுத்துகிறார்கள், இது ஒரு அற்புதமான சுவையைத் தருகிறது. இதில் மாமிசம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், கல் ஜூஷ் சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். கல்ஜூஷ் ஒரு நீர் நிறைந்த உணவு என்பதை அறிந்து கொள்வது நல்லது, அவர்கள் வழக்கமாக அதில் ரொட்டியை வைத்து கலவையை சாப்பிடுவார்கள். நீங்கள் இந்த உணவை ஒரு பசியூட்டியாகவோ, சிற்றுண்டியாகவோ அல்லது ஒரு சைட் டிஷ் ஆகவோ கூட சுவைக்கலாம்.

தொகுப்பு: முஹத்தசே பக்ரவன்

https://en.mehrnews.com/news/204742/Qazvin-city-Symbol-of-Iran-s-art-and-traditions#:~:text=Qazvin%20is%20famed%20for%20Persian,its%20grapes%20and%20delicious%20sweets.&text=Of%20the%20various%20traditional%20calligraphy,are%20still%20used%20in%20Iran

No comments:

Post a Comment