International Qud's Day 2023
சர்வதேச குத்ஸ் தினம் என்பது
பாலஸ்தீனியர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடனான ஒருமைப்பாட்டை தெரிவித்தது
ஆதரவு வழங்கும் தினமாகும் அதேவேளை ஒடுக்குமுறை மற்றும் அநீதியைக் கண்டிக்கும்
நாளுமாகும்.
குத்ஸ் தினமென்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய
தினமல்ல..... அது அடக்குமுறைக்கு எதிரான அனைத்து மக்களினது தினம். அல் குத்ஸ் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும்
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை
தெரிவிப்பது நீதி நியாயத்தை நாடும் அனைத்து மக்களினதும் கடமையாகும்.
உலகம் முழுவதும் அமைதிகாக்கவும், நீதிகாக்கவும்
போராடும் மக்களின் முயற்சியை அங்கீகரிப்பது கட்டாயம். இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் வலியுறுத்தியது
போல் "குத்ஸ் தினம் என்பது ஒரு சர்வதேச தினம். இது குத்ஸுக்கே பிரத்தியேகமான
நாள் அல்ல. அடக்கி ஒடுக்கப்பட்ட
அனைவருக்காகவும், ஆணவ சக்திகளுக்கு எதிராக எழுந்து நிற்கும் தினமாகும்."
புனித பூமியான பலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின்
முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இஸ்ரேலிய ராணுவம் புரிந்துவரும்
அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே
கொலை செய்வதற்கு தயங்காத யூத வெறியர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும், வயோதிபர்களையும் அப்பாவிப் பெண்களையும்
மிருகத்தனமாக கொன்று குவித்து வருகின்றனர். அமெரிக்காவின் தலைமையிலான இஸ்லாம் விரோத சக்திகள் அனைத்தும் இதற்குத் துணைபோய்க்
கொண்டிருக்கின்றன. ஐ.நா.சபையும்
நேர்மையாக நடந்துகொள்கிறதா என்ற சந்தேகம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. ஐ.நாவை நம்பி எந்தப்பிரயோசனமும் இல்லை ஐ.நா. வை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலைக்கு
பாலஸ்தீனர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில்
முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடே இதற்கான ஒரே தீர்வு என்பது தெளிவு.
மறைந்த இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள்
இவ்வாறு கூறினார்கள்: “இந்த ஆக்கிரமிப்பாளரின் (இஸ்ரேல்) மற்றும் அதன்
ஆதரவாளர்களின் கைகளை பாலஸ்தீனத்திலிருந்து துண்டிக்க அனைத்து முஸ்லிம்களையும்
முஸ்லிம் அரசாங்கங்களையும் ஒன்றிணைய நான் அழைப்பு விடுக்கிறேன் மேலும் ரமலான்
மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை 'குத்ஸ் தினம்' என்று பெயரிடுமாறு
உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் மற்றும்
(பாலஸ்தீனிய) முஸ்லிம்களின் சட்டபூர்வ உரிமைகளை ஆதரிப்பதில் முஸ்லிம்களின் சர்வதேச
ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றேன்." இந்தத் தினமானது
பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்லாது, பிற ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு உலகளாவிய ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
"இங்கிலாந்து ஆங்கிலேயருக்கு சொந்தமானது போல், பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானது போல் பலஸ்தீன் அரபிகளுக்கு சொந்தமானது. அரபிகளின் நிலத்தில் யூதர்களை சுமத்துவது தவறானது, மனிதாபிமானமற்றது". - மகாத்மா காந்தி
சியோனிசம் என்பது ஒரு இயக்கமாக, 1800களின்
பிற்பகுதியில் யூதர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்டது மற்றும் பாலஸ்தீன
மண்ணில் வெறும் 5% மட்டுமே இருந்த யூத மக்களால் இஸ்ரேல் என்ற ஓர் அரசு
சட்டவிரோத மற்றும் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது; இரண்டாம் உலகப் போருக்குப்
பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட, பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூமி அபகரிக்கப்பட்டு,
1948 இல் மேற்கத்திய சக்திகளால் இஸ்ரேல் என்று அறிவிக்கப்பட்டு
அங்கீகரிக்கப்பட்டது.
இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல்
முகத்தஸை பாதுகாப்பதற்காகவும் பலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும்
மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள்
அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர். பலஸ்தீனர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய
ஆதரவை தெரிவிக்கும் வகையில் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை “அல் குத்ஸ் தினமாக” அனுஷ்டிக்க வேண்டும் என்று இமாம் கொமெய்னி (ரஹ்)
அவர்கள் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்ற ஆரம்ப நாட்களிலேயே பிரகடனம் செய்தார்கள்.
பலஸ்தீன் போராட்டத்திற்கு ஆதரவான சிறப்பு
கட்டுரைகள், ஊர்வலங்கள்
மற்றும் பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க மற்றும்
ஜரோப்பிய நகரங்களில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்களும்
சியோனிஸத்துக்கு எதிரான யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் எமது பிரதேசங்களில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே
உள்ளது. பலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும் வெறும் பலஸ்தீன
பிரச்சனை என்றோ அல்லது அப்பிராந்தியத்தின் பிரச்சனை என்ற அளவில் சுருக்குவதற்கான
சூழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தின் எதிரிகளின்
சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த அரபுத்
தலைவர்களே, 'எமக்கு இதில் எந்த
சம்பந்தமும் இல்லை' என்று
கூறுமளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.
"பலஸ்தீன் விடுவிக்கப்படும் வரை எமது சுதந்திரம் பூரணத்துவம் அடையாது என்ப நாம் நன்கு அறிவோம்." - நெல்சன் மண்டேலா
பலஸ்தீன் பூமி நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு
பிரதேசம்; பைத்துல் முகத்தஸ்
முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான
மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தொழுகை நடத்திய இடம், நன்மையை நாடி
பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம்
பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும்
சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்றுவோம்.
இந்த வருடம் ஏப்ரல் 14ம் திகதி
வெள்ளிக்கிழமை இலங்கையில்
விடுமுறை தினமாக இருப்பதால், இரண்டு தினங்கள் முற்படுத்தப்பட்டு, ஏப்ரல் 12 ஆம் இடம்பெறவுள்ள ‘சர்வதேச குத்ஸ்
தினத்தில்’, போராடி
கொண்டிருக்கும் பஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்.
அன்றைய தினம் ஃபலஸ்தீன போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய
பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வோம். குத்பா மேடைகளை அதற்காக
பயன்படுத்துவோம், இந்த புனித
ரமலான் மாதத்தில் ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் பலஸ்தீர்களின் வெற்றிக்காக
பிரார்த்திப்போம்.
புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய
பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும்
அனுஷ்டிப்போம். குத்ஸ் முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட
சொத்து என்பதை மக்களுக்கு ஞாபகம் ஊட்டிக்கொண்டு இருப்போம்.
எனவே, எமது ஒன்றுபட்ட செயற்பாடே முஸ்லிம்களின் மூன்றாவது புனித தளமும் மற்றும்
முதல் கிப்லாவுமான பைத்துல் முகத்தஸின் விடுதலையை உறுதி செய்யக்கூடிய ஒரே வழி என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையே பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற ஒடுக்கப்பட்ட
மக்களின் விடுதலைக்கான இறுதி நம்பிக்கை.
உண்மையில், இமாம் கொமெய்னி
(ரஹ்) அவர்களின் செய்தியின் முக்கிய கருப்பொருளும் அதுவே ஆகும்.
இந்த வருடம் ஏப்ரல் 14ம் திகதி
வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பயான்களிலும் இரவுத் தொழுகைக்கு பிந்தைய பயான்களிலும்
பைத்துல் முகத்தஸை நினைவு கூர்வதுடன் அதனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம்
வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment