Hazrat Al-Abbass symbol of courage, loyalty, sacrifice
அபுல் ஃபஸ்ல் அல்-அப்பாஸ்
என்ற பெயரை நாம் ஒவ்வொரு வாரமும் இரண்டாவது குத்வாவில் கேட்டிருப்போம். யார் இவர்? முக்கிய
ஸஹாபாக்கள் வரிசையில் இவர் பெயரும் கூறப்படுவது ஏன்? அவரின் சிறப்பு என்ன? என்பது
பற்றியெல்லாம் நாம் எப்போதாவது சிந்தித்ததுண்டா? குத்பாக்களில் கூட இவர் யார் என்பது பற்றி
விளக்கப்படுவதை இதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் எமது ஷீஆ சகோதரர்கள் இவரை ஒருபோதும் மறப்பதில்லை.
தைரியம், அன்பு, விசுவாசம்
மற்றும் சுய தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஹஸ்ரத் அபுல் ஃபஸ்ல் அல்-அப்பாஸ்
அவர்களின் பிறந்த நாளை உலகெங்கிலும் உள்ள புனித அஹ்லுல் பைத்தின் மீது அன்பு
கொண்டோர் மற்றும் ஷியா சகோதரர்கள் நினைவுகூர்வதற்கு ஒருபோதும் தவறுவதில்லை.
இமாம் அலி இப்னு அபு
தாலிப் (அலை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் ஹஸ்ரத் ஃபாத்திமா ஸஹ்ரா (அலை) அவர்கள்
காலமான பல ஆண்டுகளுக்குப் பிறகு பாத்திமா பின்த் ஹிஸாம் அவர்களை மணம் செய்து
கொண்டார்கள். இவர்களுக்கு
பிறந்தவரே அல்-அப்பாஸ் ஆவார். அவரது தாயாரின்
முழுப் பெயர் உம் அல்-பனீன் பாத்திமா பின்த் ஹிஸாம் ஆகும். அல்-கிலாபிய்யா
குலத்தைச் சேர்ந்த நல்லொழுக்கமுள்ள பெண்மணி (அல்-கிலாபிய்யா குலம் அக்காலத்தில்
அதன் தைரியம் மற்றும் துணிச்சலுக்காக போற்றப்படும் ஒன்று).
ஹஸ்ரத் அபுல் ஃபஸ்ல்
அல்-அப்பாஸ் அவர்கள் ஹிஜ்ரி 26 ஆம் ஆண்டு ஷபான் மாதம் 4 ஆம் தேதி புனித மதீனாவில் பிறந்தார்.
ஹஸ்ரத் பஸல் அல் அப்பாஸ் தனது மூத்த சகோதரர்களான திரு நபியின் பேரன்கள், இமாம் ஹசன் (அலை)
மற்றும் இமாம்
ஹுசைன் (அலை) ஆகியோரை விட
இருபது வயதுக்கு மேல் குறைந்தவர்கள், சிறுவயதிலிருந்தே ரசூழுலுல்லாஹ்வின் குடும்பத்துடன் மிகவும்
நெருக்கமாக இணைந்திருந்தார்.
இஸ்லாத்தைப்
பாதுகாப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க கர்ம வீரர்; கர்பலா போரில்
இமாம் ஹுசைனின் இராணுவத்தில் துணிச்சலாக செயற்பட்ட தியாகி ஆவார்.
கர்பலா களத்தில் ஹஸ்ரத்
அல் அப்பாஸ்
இமாம் ஹுசைன் (அலை)
அவர்களின் அரை சகோதரரான அவர் கர்பலா போரில், இமாம் ஹுசைன் (அலை) அருகில் ஒரு
நிழல் போல் இருந்தார். அவரது
புனைப்பெயரே அபு ஃபாதில் (நல்லொழுக்கங்களின் தந்தை) ஆகும். அவர் சத்தியம், இறை நீதி நிலைக்க வேண்டும் என்பதற்காக ஆஷுரா
நாளில் தனது உயிரை அர்ப்பணித்தார்.
இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்தின் கொடியை ஏந்தியவர் அவர், எதிர்தரப்பினர் பயந்து நடுங்கும் அளவிற்கு மாவீரர், இமாமின் தீவிர விசுவாசியாக இருந்தார். தாகத்தால் தவித்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது புதல்விகளுக்கு குடிப்பதற்கு நீர் எடுத்து வர சென்ற வேளையில் மறைந்திருந்து தாக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்.
இமாம் ஹுஸைன் (அலை) அவர்களினதும் அவரது குழந்தைகளினதும் தாகத்தை தீர்க்க நீரை கொண்டு வருவதற்கு விரைந்த அபு பஸல் ஆற்றை அடைந்ததும், நா வறண்ட நிலையில் தானும் நீரருந்த முயன்றார். கூடாரத்தில் தாகத்தால் தவிப்போரின் நிலை அவர் கண் முன் வந்து நின்றது, தான் தாகம் தணிக்கும் முன் அவர்களது தாகத்தைத் தீர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற எண்ணம் காரணமாக அவர் தான் கையில் ஏந்திய நீரையும் குடிக்காமல், நீர் நிரப்பட்ட கூஜாவை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்கு திரும்புகையில், மறைந்திருந்து தாக்கிய யஸீதின் இராணுவத்தால் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாளில் அவர் எமக்கு வழங்கிய பல பாடங்களில் இதுவும் ஒன்று. சுயநலமின்மை, தன்னலத்தை விட பிறர் நலனே முக்கியம் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.
இமாம் ஹுசைன் (அலை) அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், றஸூலுல்லாஹ்வின் வீட்டுப் பெண்கள் தங்கியிருந்த கூடாரங்களைப் பாதுகாத்தல், குழந்தைகளைப் பராமரித்தல், முகாமில் தரித்திருந்தோருக்கு தண்ணீர் கொண்டு வருவதல் போன்றவற்றில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் மிக அழகான மற்றும் உச்சக்கட்ட தியாகத்தின் வெளிப்பாடுகளாகும்.
அவரது நினைவாக
கட்டப்பட்டுள்ள கம்பீரமான கல்லறை மாடம் இன்றுவரை இமாம் ஹுசைனின் (அலை) அவர்களின் சன்னதியைக் காக்கும் ஒரு காவலாளி போல் உள்ளது. கர்பலாவிற்கு
விஜயம் செய்யும் எவரும் அபூ பஸல் அவர்களின் அடக்கஸ்தலத்தை பார்வையிடாமல்
வருவதில்லை.
அப்பாஸ் அவர்கள் ஷீஆ சகோதரர்களால் இறையச்சம், தைரியம், வீரம், அன்பு, நேர்மை மற்றும் சுய தியாகம் ஆகியவற்றின் இறுதி முன்னுதாரணமாக கருதப்படுகிறார். ஹஸ்ரத் அல்-அப்பாஸுக்கும் இஸ்லாத்தில் மிகப் பெரிய பதவி உண்டு.
- தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment