Thursday, August 11, 2022

இஸ்லாத்தில் சிறுபான்மையினர் உரிமைகள்...!

How did the prophet of Islam treat minorities?

What does Quran command?

(Part 1)

திருத் தூதர் (ஸல்) சிறுபான்மையினரை எவ்வாறு நடத்தினார்?

அது தொடர்பாக குர்ஆன் என்ன கூறுகிறது?

(பகுதி 1)

சமகால சகாப்தம் என்பது கருத்து சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் சகாப்தமாகும். சிறுபான்மையினரின் மத நம்பிக்கைகள் அல்லது சடங்குகளுக்காக யாரையும் கொடுமைப்படுத்தவோ அல்லது தொந்தரவு செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை, மேலும் உலகில் எங்கும் எவரும் அவர்களின் நம்பிக்கைகள், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வரை, அவர்களின் மதத்தின்படி வாழ சுதந்திரம் உள்ளது. இருப்பினும், இன்று உலகின் பல பகுதிகளில், மக்கள் தங்கள் மதம் மற்றும் மத நம்பிக்கைகளுக்காக தாக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுவதை நாம் காண்கிறோம்.

ISIS இனால் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட யெஸ்திகள் மற்றும் கிறிஸ்தவர்களின் படுகொலைகள்; ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் முஸ்லிம் பெண்களை தலை மறைப்பதற்காக துன்புறுத்துதல் மற்றும் கொலை செய்தல்; மற்றும் மியான்மரில் பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான படுகொலை; இந்தியாவில் இந்துத்துவா வெறியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் படுகொலைகள் போன்றன இதில் அடங்கும். இச்சம்பவங்கள் 'மத சுதந்திரம்' என்ற உயரிய பண்பை யாரும் செயலில் கடைப்பிடிப்பதில்லை என்பது மட்டுமல்லாமல் அதை ஓர் அடிப்படையற்ற கூற்றாகவும் மாற்றியுள்ளன.

இக்கட்டுரையானது, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூறுவது போலல்லாமல், ஐஎஸ்ஐஎஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் போலிப் பிரதிகள் உலகிற்குக் காட்டியதைப் போலன்றி, இஸ்லாம் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களை மிகவும் மதிக்கும் மற்றும் கண்ணியப்படுத்தும் ஒரு மதம் என்பதைக் காட்ட விரும்புகிறது.

உண்மையில், இஸ்லாமிய தேசம் என்பது மத சிறுபான்மையினர் வாழ்வதற்கு உலகின் பாதுகாப்பான இடமும் மற்றும் பிராந்தியமுமாகும்.

இஸ்லாத்தின் தீர்க்கதரிசியின் சீரா (இறை தூதரின் வாழ்க்கை முறை) எவ்வாறு இஸ்லாத்தின் சரியான பாதையையும் தூய்மையான வடிவத்தையும் குறிக்கிறது என்பதற்கு பதிலளிக்க இந்தக் கட்டுரையின் மூலம் முயற்சிப்போம். இதன்போது, குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் பார்வையில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களிடையே இருந்து வந்த பல்வேறு தொடர்புகளை ஆராய்வோம்.

முஸ்லிமல்லாதவர்களுடனான தொடர்பு

கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தின் மகத்துவமிக்க தீர்க்கதரிசிகளுக்குப் பிறகு இஸ்லாத்தின் நபி (ஸல்) தீர்க்கதரிசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில், அரபு தீபகற்பத்தில் வசிப்பவர்கள் பல தெய்வ கொள்கை கொண்டவர்களாகவோ, பல கடவுள்கள் மற்றும் சிலைகளை வணங்குவோராகவோ அல்லது கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தைப் பின்பற்றுபவர்களாகவோ இருந்தனர். அவர்கள் மத்தியில் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மதத்தை தொடர்ந்து நம்பியவர்களும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலைகளின் போதுதான் இஸ்லாத்தின் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், ஏக இறை கொள்கையான இஸ்லாம் மார்க்கத்தை அறிமுகப்படுத்தினார், அதே சமயம் அதை ஏற்றுக் கொள்ளுமாறு உலகளாவிய மற்றும் பரவலான அழைப்பை முன்வைத்தார்.

நபித்துவத்தின் முதல் ஆண்டுகளில், இஸ்லாத்தின் பால் மக்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டபோது அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் அவரது அழைப்பை நிராகரித்தது மட்டுமல்லாமல், அவரைத் துன்புறுத்தி மிக மோசமாக நடத்தினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் மற்றும் அவரது சீடர்களும், அவரது உற்றார் உறவினர்களாலேயே பொருளாதார மற்றும் அரசியல் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்; மேலும், அவர்கள் அபு-தாலிப் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டவர்களாக, கடுமையான பொருளாதார முற்றுகைக்கு முகம்கொடுத்தவர்களாக இருந்தனர். அந்தத் தடைகள் எவ்வளவு கடுமையாக இருந்ததென்றால், அது றஸூலுல்லாஹ்வுக்கு மிக நெருக்கமான துணையான அவரது மனைவி கதீஜா நாயகியின் உயிரைப் பறித்தது.

ஆயினும்கூட, எவ்வளவு துன்புறுத்தல்கள், கொடுமைகள் மற்றும் துன்பங்கள் இழைக்கப்பட்ட போதிலும், இறைத் தூதர் தனது அழைப்பை மேம்படுத்த ஒருபோதும் வன்முறை வழிகளைப் பயன்படுத்தவில்லை: அவரது சமூக இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகும், அரபு தீபகற்பத்தின் அதி பலம்வாய்ந்த சக்தியாக இஸ்லாம் மாறிய பிறகும் கூட, அவர் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட நினைத்ததில்லை என்று சரித்திரவியலாளர்கள் சாட்சியமளிக்கிறார்கள்.

நட்பும் சகிப்புத்தன்மையும் புனித நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்த சமூக வாழ்வியல் முறையானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச அம்சங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது சமூக உறவுகள் மற்றும் மக்கள் தொடர்புடைய விவகாரங்களில் சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தது. அவ்வாறில்லாமல் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கடின போக்கைக் கடைப்பிடித்திருந்தால், தூதை எடுத்துச் சொல்வதற்கும் பிரச்சாரம் செய்வதற்குமான களம் அமைந்திருக்காது.

சர்வவல்லமையுள்ள அல்லாஹ் புனித தூதரின் நல்ல குணத்தையும் சகிப்புத்தன்மையையும் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (அருளின்) காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக………..” [குர்ஆன் 3:159]

மானுடர் மீதான அவரது காருண்யமும் அன்பும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது; பல ஆண்டுகளாக தனக்கு எதிரான விரோதப் போக்கைக் கடைப்பிடித்த மக்கத்து காபிர்ளைக் கூட கருணையுடன் நடத்தினார், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். இரத்தம் சிந்தாமல், வன்முறை அற்ற முறையில் அமைதியாக மக்கா வெற்றி பெற்ற நாளில், றஸூலுல்லாஹ்வின் தோழர் ஒருவர் “இன்றைய நாள் கொலைக்கு கொலை, போருக்கு போர் மற்றும் பழிக்கு பழிவாங்கும் நாள் ஆகும்; இது எல்லைகளை உடைக்கும் நாள்." என்று உரக்க சத்தமிட்டார். கருணையே உருவானரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அந்த நபரின் முழக்கத்தை உடனடியாக கண்டித்து, "இன்று கருணையின் நாள்", "இது கருணை மற்றும் இரக்கத்தின் நாள்." என்று கூறினார்:

இவ்வாறு றஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை  எதிர்த்தவர்களை எந்த விதமான பழிவாங்களுக்கும் உட்படுத்தவில்லை; அவர்களுக்கு எதிரான எவ்வித ஆக்கிரமிப்பு மற்றும் தீவிரவாத செயல்களையும் தடுப்பவராகவே இருந்தார்கள்; மேலும் அவர் பலதெய்வ கொள்கையுடைய குறைஷிகளை நோக்கி "நீங்கள் அனைவரும் இப்போது இருப்பது போல் சுதந்திரமாக இருக்கலாம்" என்று உத்தரவாதமளித்தார்கள்.

இறைவன் அவனுடைய மகத்துவமிக்க தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை முஸ்லிமல்லாதவர்களுக்கும் கனிவான மற்றும் அன்பு செலுத்தும் ஒருவராக அறிமுகப்படுத்தினான்.

  وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. [குர்ஆன் 21:107]

உண்மையில், முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாத்திற்கான அழைப்புப் பணி, எவரையும் வற்புறுத்துவதாகவோ அல்லது கட்டாயப்படுத்தி அடிபணியச் செய்யும் வகையிலோ இருக்கவில்லை. இஸ்லாம் அதிகாரம் செலுத்தும் சக்தியாக ஆன பின்னும் கூட, எந்த சமயத்திலும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனக்கு இன்னல் விளைவித்த எதிரிகளைக் அடிபணியச் செய்தோ அல்லது வற்புறுத்தியோ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள செய்யவில்லை; மாறாக, அவர்கள் தொடர்ந்து இஸ்லாம் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எதிரிகளை இஸ்லாமிய பிரதேசத்திற்கு வெளியே சென்று வாழுமாறு மட்டும் பணித்தார்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு, அரபு உலகம் முழுவதும் ஒரு புதிய மார்க்கத்தின் வருகை பற்றிய செய்தி காட்டுத் தீ போல் பரவியது, அண்டைய நாடுகளிலும் இது முக்கிய பேசுபொருளானது. இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது; அதேசமயம், புதிய தீர்க்கதரிசி முஹம்மத் (ஸல்) மற்றும் அவரது புதிய மார்க்கம் பற்றிய வாத விவாதங்களும் பரவலாக இடம்பெற்றன. பல இடங்களில் இருந்து வந்த பல்வேறு தனிநபர்கள் மற்றும் மத அமைப்புகள், முஹம்மத் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய தூதை விமர்சிக்கவும் செய்தனர் என்பது மட்டுமல்லாது சவாலுக்கும் உட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறமதத்தவர்களை, பல தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தவர்களையும், கூட தன்னிடம் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வர அனுமதிக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆனில் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ

"(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்". [குர்ஆன் 9:6]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு வருவோரை சந்தித்து உபசரிப்பதற்காக மதீனாவில் ஒரு வீட்டை ஒதுக்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது; சிலர் றஸூலுல்லாஹ்வின் பரிந்துரையின் பேரில் நபித் தோழர்களால் உபசரிக்கப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள் வருகைத்தரும் போது, நபி (ஸல்) அவர்கள் தமது போர்வையை அவர்கள் அமருவதற்காக விரிப்பார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவ்வாறு வருவோரை கண்ணியமாக நடத்துவார்கள்; உதாரணமாக, நஜ்ரான் தேச கிறிஸ்தவ சமூகத்தின் பிரதிநிதிகளை வரவேற்று உரையாடியபோது, ​முஹம்மத் (ஸல்) அவர்கள் ஈஸா (அலை) தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த தெய்வீக நம்பிக்கையை விமர்சித்து மற்றும் இஸ்லாத்தை பின்பற்ற அவர்களை அழைத்தார்கள். எனினும், அவர் அவர்களை இஸ்லாத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, கிறிஸ்தவர்கள் தமது வழிபாட்டுச் சடங்குகளை செய்வதற்காக மதீனா பள்ளிவாசலை பயன்படுத்தவும் அனுமதித்தார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பைஸாந்திய பேரரசர் மற்றும் பாரசீக பேரரசர் உட்பட பிற நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்ப முடிவு செய்தபோதும், அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது (இஸ்லாமியர்) வழியிலிருந்து விலகி இருங்கள் என்று தான் கேட்டுக் கொண்டார். அதனால் குறிப்பிட்ட தேசங்கள் புதிய மார்க்கத்தை அறிந்துகொள்ளவும் தங்கள் மதத்தை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கவும் அவர்களால் முடியுமாக இருந்தது.

முகம்மது நபியின் அமைதியான அணுகுமுறை, இஸ்லாமிய அழைப்பை நிராகரித்த பல தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மத அமைப்புகளை சுதந்திரமாக மதீனாவிற்கு குடிபெயர தூண்டியது. மதீனாவுக்கு வந்த இந்த குழுக்களில் சில எத்தியோப்பியாவினது மற்றும் ஹிம்யாட் போன்ற மன்னர்களை பிரதிநிதித்துவப்படுத்தின. சுமார் நாற்பது மத மற்றும் அரசியல் அமைப்புகள் புதிய தூதை பற்றி அறிந்துகொள்வதற்காக நபிகள் நாயகத்தின் காலத்தில் மதீனாவிற்கு வருகை தந்ததாக வரலாறு கூறுகிறது.

எந்த ஒரு தேச மக்களும் தங்கள் எண்ணங்கள் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த இறைத்தூதர் முயன்றார். சத்தியத்தின் மீது ஒளி பாய்ச்சப்பட்டால் அந்த மக்கள் இறை கட்டளைகளைத் தவிர வேறு எந்த கட்டளைகளுக்கும் அடிபணியாமல், தாம் கடவுளாக நினைத்து வணங்குவதை நிறுத்தி ஏகத்துவ நம்பிக்கையை ஏற்கலாம் என்ற அடிப்படையிலேயே அவ்வாறு செய்தார்கள்.

இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், சமூகங்கள் சுதந்திரமாக கற்றுக்கொள்ளவும், ஆய்வு செய்வதற்கும், இறைவேதத்தை ஏற்றுக்கொள்ளவும் தடைபோடும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டியது அவசியமாகும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள எந்த நிர்பந்தமும் இல்லை, ஆனால் அதை கற்றுக்கொள்வதற்கு யாரும் தடை போட முடியாது என்பதுவே இதற்கு காரணமாகும்.

https://english.khamenei.ir/news/4606/How-did-the-prophet-of-Islam-treat-minorities-What-does-Quran

No comments:

Post a Comment