Double standard of the West exposed
Photo: Aljazeera |
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மூன்று மாதங்களாக தொடரும் நிலையில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் பொதுவாக மேற்கு நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் பெருகி
வருகிறது.
ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா பல மேற்குலக நாடுகளின் விரைவான கண்டனத்தையும் எதிர் நடவடிக்கைகளையும் சந்தித்து வருகிறது., ரஷ்ய வங்கிகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ ஏற்றுமதிகளைக் குறிவைத்து அமெரிக்காவும் மற்றும் பிற மேற்குலக நாடுகளும் உடனடி பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலிலும் (UNSC) இது தொடர்பாக அவசர தொடர் சந்திப்புகளை நடத்தியுள்ளது.
ஆனால் இஸ்ரேலின் அடாவடித்தனம் தொடர்பாக இவர்கள் பாராமுகமாக இருந்து வருகின்றனர்.
பிராந்தியத்தில் இஸ்ரேலின் இடைவிடாத தலையீடு பிராந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும்
நல்வாழ்வை சீர்குலைக்கிறது என்பது கண்முன்னே தெரிகிறது. எனினும் அமெரிக்கா மற்றும் அதன்
கூட்டாளிகள் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான இராணுவ மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
உலகெங்கிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தாமே
முன்னணியில் இருப்பதாக காட்டிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் பொய்களை இது அம்பலப்படுத்துகிறது.
இவர்களின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஈரான் இஸ்லாமிய குடிரசு ஆரம்பம் தொட்டே அம்பலப்படுத்தி
வருகிறது. பலஸ்தீன் மற்றும் இஸ்லாமிய நாடுகள் தொடர்பாக அமேரிக்கா வெளிப்படையாகவே காட்டி வரும்
நயவஞ்சகத்தனத்தையும் ஈரான் தன்னால் இயன்ற அளவு உலகறிய செய்து வருகிறது.
Iranian President Ebrahim Raisi |
அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை பற்றி ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அணு ஆயுத பரம்பல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள ஈரான் அணு ஆயுத தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பிரயோகித்தல் போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டவையாக பலமுறை பிரகடனப்படுத்தியும்
உள்ளது.
இவ்வாறிருக்க, ஈரான் இஸ்லாமிய குடிரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மேற்குலகம் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதை எல்லோரும்
அறிவர்.
ஈரான் இஸ்லாமிய குடியசு அதனது பாதுகாப்பு தேவைக்காக செய்யும் சகல ஆராய்ச்சிகளையும்
நிறுத்த வேண்டுமாம்..... குறிப்பாக ஏவுகணை ஆராய்ச்சியை கைவிட வேண்டுமாம்..... அணு ஆராய்ச்சியெல்லாம்
இஸ்லாமிய நாடொன்றுக்கு உரியதல்லவாம்..... அது அமெக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இஸ்ரேலுக்கும்
இருக்கும் ஏகபோக உரிமையாம்..... அரபு நாடுகளைப் போல ஈரானும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டுமாம்.....
பலஸ்தீன் விடுதலைக்கான எந்த உதவியும் ஈரான் செய்யக்கூடாதாம்..... இஸ்ரேல் அதிருப்தியுறும்
விதத்தில் நடந்துகொள்ளக் கூடாதாம்..... அமெரிக்காவின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிய
வேண்டுமாம்.
அதேவேளை, அணு ஆயுத பரம்பல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து, நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களை தன்னகத்தே கொண்டுள்ள இஸ்ரேல் பற்றி மேற்குலகு எந்த
வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது மட்டுமல்லாமல் அதற்கு எல்லாவித உதவிகளையும்
செய்து அதை நியாயப்படுத்தவும் செய்கிறது.
மஹ்மூத் அப்பாஸ்
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சுமார் 75 வருடகால இஸ்ரேலின் "குற்றங்களை"
புறக்கணிக்கும் அதே வேளையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக
ரஷ்யாவிற்கு தண்டனை வழங்குவதாக பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை
மேற்கின் "இரட்டைத் தரங்களை" விமர்சித்தார்.
Palestinian President Mahmoud Abbas |
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் உள்ள பாலஸ்தீனிய ஜனாதிபதி இல்லத்தில் செய்தியாளர்களுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வருகைக்கு அப்பாஸ் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
"ஐரோப்பாவில் தற்போதைய நிகழ்வுகள் அப்பட்டமான இரட்டைத் தரத்தைக் காட்டியுள்ளன," என்று அவர் பிளிங்கனிடம் கூறினார்.
"இஸ்ரேலின் தொடர் குற்றங்கள் மற்றும் அதன் இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப் பாகுபாடு
போன்றவற்றை எவரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இஸ்ரேல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நாடாக நடந்து வருகிறது.
மனித இனத்துக்கு எதிராக இஸ்ரேல் செய்துவரும் அட்டூழியங்களுக்காக அதைப்பொறுப்புகூறலுக்கு
உற்படுத்தும் எவரையும் நாங்கள் காணவில்லை," என்று அவர் கூறினார்.
இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் பலஸ்தீன அதிகாரிகள்
கண்டன அறிக்கையை வெளியிட வேண்டும் வலியுறுத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளை எதிர்கொள்வதில் உள்ள பெரும் சவால்களில்
ஒன்று, உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நெருக்கடிகளைக் கையாள்வதில் உள்ள அப்பட்டமான
இரட்டைத் தரங்களுக்கு அவர்களின் கண்களைத் திறப்பதாகும்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அமைதியான அண்டை நாடு மீது அப்பட்டமான ஆக்கிரமிப்பு
எனவும், சர்வதேச சட்டத்தை மீறும் செயல் எனவும் மற்றும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை
உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி சிந்தனையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்கிரமிப்பும் அதுபோன்ற ஒன்றே
என்பதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.
இதனால்தான் இளவரசர் துர்கி அல்-ஃபைசலும் மேற்குலகின் பாசாங்குத்தனத்தை கண்டனம்
செய்தார். (சவுதியின் இந்த நிலைப்பாடு எவரும் எதிர்பாராத ஒன்று, இருந்தாலும் பலஸ்தீன் தொடர்பாக மனமாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை
வரவேற்போம்).
Sadi Arebia's Prince Turki Al-Faisal |
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அநீதியான முறையில் தள்ளப்பட்டிருக்கும் இந்த நூற்றாண்டின் திறந்தவெளி சிறைச்சாலையின் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய குண்டுவீச்சுகளில் ஏற்பட்ட இடிபாடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.
உக்ரேனிய அகதிகள் போலந்திற்குள் நுழைவதை பார்க்கும்போது அமெரிக்க சியோனிச சக்திகளால்
இன்னல்களுக்கு உள்ளான அப்பாவி பலஸ்தீன மக்கள், தாம் ஏனைய நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்வதை அவர்கள் ஞாபகத்தில் கொண்டு வருகிறார்கள்.
பாலஸ்தீனியர்கள் தங்கள் நக்பா அல்லது பேரழிவைப் பற்றி நினைக்கிறார்கள், 74 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் 70 சதவீத மக்கள் அகதிகளாக
ஆக்கப்பட்டார்கள்.
ஐரோப்பியர்கள் உக்ரேனியர்களை வரவேற்கும் போது அவர்களது இனவெறி நன்றாகவே வெளிப்படுகிறது, ஏனெனில் அவர்கள் "நம்மைப் போன்றவர்கள்" மஞ்சள் நிற முடி மற்றும் நீலக்கண்கள்
கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது தமது கடமை என்று எண்ணுகிறார்கள்.
ரஷ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் தீவிரமும் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் வேகமும் கடினத்தன்மையும், எம்மை விழிபிதுங்கச்செய்கிறது, ஆனால் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு
தண்டனைக்கு பதிலாக அவர்களது ஆதரவும் ஆசீர்வாதமும் இருந்து வருகிறது.
உக்ரைன் மீதான சமீபத்திய ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பே மேற்குலகின் இரட்டை வேடம்
தெளிவாக தெரிந்தது; 2014 இல் மாஸ்கோ மீது ஐரோப்பிய
ஒன்றியம் கிரிமியா படையெடுப்பு மற்றும் இணைப்பின் போது ஒரு சில நாட்களுக்குள்ளேயே பொருளாதாரத் தடைகளை விதித்தது.
மேற்கு நாடுகளும் இஸ்ரேல் போன்ற அதன் நண்பர்களும் ஏனைய நாடுகளை போலவே அதே விதிகளுக்கு
தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொள்ள வேண்டும்; அதுவே நியாயமாகும்.
இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிப்பது, பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று கோருவது பல சந்தர்ப்பங்களில், குற்றமாக காணப்பட்டது.
கிழக்கு ஜெருசலேம், காசா பகுதி மற்றும் கோலன் குன்றுகள்
உள்ளிட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் 55 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு குடிமக்களை மாற்றியதாக ரஷ்யா
மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது போல், இஸ்ரேல் 650,000க்கும் மேற்பட்ட யூத மக்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு
மாற்றியுள்ளது.
ரஷ்யாவும் இஸ்ரேலும் முறையே உக்ரேனியர்களையும் பாலஸ்தீனியர்களையும் ஆக்கிரமிக்கப்பட்ட
பகுதிகளில் இருந்து வெளியேற்றியுள்ளன, இது நான்காவது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
பல நொண்டி சாக்குகளை கூறி காசாவில் உள்ள பொதுமக்களின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல்
தொடர்ச்சியாக குண்டுவீசித் தாக்கி வருகிறது, ஆனால் அது எதையும் கவனத்தில் கொள்ளாமல் ரஷ்யா நொண்டி சாக்குகளை கூறி வருவதாக மேற்குலகு
குற்றம்சாட்டுகிறது என்று லண்டனை தளமாகக் கொண்ட அரபு-பிரிட்டிஷ் புரிந்துணர்வு கவுன்சிலின்
இயக்குநர் கிறிஸ் டொய்ல் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளுடன் இணைந்து அமேரிக்கா ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். அமெரிக்காவின் மிருகத்தனத்திற்கு
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்கள் இன்றும்
சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோல் அமேரிக்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு
கௌந்தனாமோ பே இன்றும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கிறது. 1950 இல் இருந்து முஸ்லிம் நாடுகளை கடித்து குதறுவதில், அமேரிக்கா முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதில் அலாதி பிரியத்தை காட்டி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நாடு, ரஷ்ய விடயத்தில், சர்வதேச சட்டம், ஜனநாயகம், மனித உரிமை என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது நயவஞ்சகத்தின் உச்சம் என்பதை காட்டுவதே
இந்த கட்டுரையின் நோக்கம். அவ்வாறன்றி உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துவதல்ல
என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
- - தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment