Wednesday, September 22, 2021

போரின் போது இமாம் கொமைனி கடைபிடித்த இஸ்லாமிய மனிதாபிமான சட்டம்

The place of “humanitarian law” in Imam Khomeini’s worldview


ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது அண்டை நாடான ஈராக்கின் முழு அளவிலான படையெடுப்பு 22 செப்டம்பர் 1980 இல்  தொடங்கியது. இந்த போரின் போது அனைத்து வல்லரசுகளும், சிரியா, லிபியா தவிர, சகல அரபு நாடுகளும் சதாமிற்கு பக்கபலமாக இருந்தன.

மனித வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து, மோதல்கள் மற்றும் போர்கள் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும் மேலும் கொள்ளை, கொடூரமான படுகொலைகள் மற்றும் பெண்களை மற்றும் குழந்தைகளை பல்வேறு காலகட்டங்களில் சிறைபிடிப்பது போன்ற நிகழ்வுகள் மற்றவர்களின் உரிமைகளை மீறுவது மற்றும் மனிதாபிமான கொள்கைகளை உதாசீனம் செய்வது ஆகியவை வரலாற்றில் தொடர்கதையாக இருந்துவருகின்றன.

துரதிருஷ்டவசமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உபகரணங்களின் வளர்ச்சியுடன், அடக்குமுறை மற்றும் கொடுங்கோலர்கள் அதைப் பயன்படுத்துவதில் எந்த வரம்புகளும் இல்லை என்றாகிவிட்டது, ஏனென்றால் எதிரியை எந்த முறையிலாவது, எந்த விலை கொடுத்தாவது முற்றிலுமாக அழிப்பதே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மனிதாபிமான சட்டமானது போர்களில் காட்டுமிராண்டித்தனத்தையும் கொடுமையையும் குறைக்கும் முயற்சியில் சில கொள்கைகளை உருவாக்க வழி வகுத்தது என்பது உண்மையே. இந்த ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இடையே விரோதங்கள் மற்றும் போர்களின் நோக்கம் மற்றும் விளைவுகளை குறைக்கவும் உதவியது.

இக்கட்டுரையானது இமாம் கொமைனியின் சிந்தனையில் கோட்பாடு மற்றும் நடைமுறையில் மனிதாபிமான சட்டத்தின் கொள்கைகளை விவாதிக்கவும் ஆராயவும் முயற்சிக்கிறது. ஈரானுக்கு எதிராக சதாமினால் திணிக்கப்பட்ட 8 வருட போரின் போது இமாம் கொமெய்னியின் தலைமைத்துவதிற்கு இவ்விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மனிதாபிமான சட்டத்தின் கருத்து, குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள்

சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பது மோதல்களின் விளைவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் கொள்கைகளின் தொகுப்பாகும். சர்வதேச சட்டத்தின் இந்த அம்சம் மோதல்களில் ஈடுபடாத அல்லது போர்க்களத்தை விட்டு வெளியேறியவர்களின் உரிமைகளை காக்கிறது, மேலும், இராணுவ உபகரணங்கள் மற்றும் போர் முறைகளைப் பயன்படுத்துவதில் வரம்புகளை விதிக்கிறது. சர்வதேச மனிதாபிமான சட்டம் தனிநபர்கள் மற்றும் நாடுகளின் ஆயுத மோதல்களின் போது உரிமைகள் மற்றும் இவ்வாறான மோதல்களின் போது அவர்களின் கடமைகள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. மேலும், ஆயுத மோதல்களின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் சேதங்களை கட்டுப்படுத்துவதன் மூலமும், சில ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலமும், இது இராணுவத்தையும் பொதுமக்களையும் மற்றும் ஆயுத மோதல்களில் இராணுவமற்ற இலக்குகளையும் காப்பதை ஆதரிக்கிறது.

சர்வதேச மனிதாபிமான சட்டம் முக்கியமாக தனிநபர்களை காக்கும் கொள்கை விடயத்தில் கவனம் செலுத்துகிறது. அதன் இலக்கை பாரம்பரிய மற்றும் நவீனமாக வகைப்படுத்தலாம்:

அ) போரின் போது மனித துன்பங்களைக் குறைத்தல் மற்றும் போரில் சில கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துதல் அல்லது தடை செய்தல் ஆகியவை பாரம்பரிய குறிக்கோள்;

ஆ) மறுபுறம், மனிதர்களின் உயர்ந்த நிலை மற்றும் கண்ணியத்தை மதிப்பது மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பின்தொடர்வது, விசாரணைக்கு உட்படுத்துவது மற்றும் தண்டிப்பது, நவீன குறிக்கோள் ஆகும்.

மறுபுறம், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கண்ணோட்டத்தில், பின்வரும் கொள்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

மனிதாபிமான நடத்தை மற்றும் பாரபட்சம் காட்டாமை

இந்த கோட்பாட்டின் படி, அனைத்து மனிதர்களும் மனிதாபிமானத்துடன், எந்த தேசியம், இனம், மதம் போன்ற பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். இங்கு "மக்கள்" என்ற வார்த்தையில் சண்டையில் பங்கேற்க முடியாத அல்லது விரும்பாத அனைவரும் அடங்குவர்.

இராணுவத் தேவை

இராணுவத் தேவை என்பது எந்தவொரு இராணுவ தாக்குலையும் அல்லது நடவடிக்கையும் நியாயமான, ஏற்றுக்கொள்ளத்தக்க இராணுவ காரணங்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நியாயமின்றி செயல்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, போர்க்களத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தல்

மட்டுப்படுத்தல் கொள்கையின் மிக முக்கியமான விளக்கம் என்னவென்றால், தேவையற்ற அல்லது அதிகப்படியான அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மனிதாபிமான சட்டம் தடைசெய்துள்ளது.

 வேறுபாடு காணல்

பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாடு காணல்  சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை மற்றும் முழுமையான கொள்கையாகும்.

பரிமாணம்

இந்த கொள்கையின்படி, "சாத்தியமான எந்த வழியிலும்" எதிரி மீது வெற்றி பெறுவதை ஏற்க முடியாது. எனவே, போரை வழிநடத்துவதில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ஓர் இராணுவத் தாக்குதலில் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நேரடி மற்றும் முழுமையான இராணுவ நன்மைகளுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான எதிர்பாரா  துன்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

இஸ்லாமும் மனிதாபிமான சட்டமும்

புனித குர்ஆனின் படி, இஸ்லாமிய போதனைகள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன, பூமியில் ஒரு நபர் எங்கு வாழ்கிறார் மற்றும் எந்த இனம் அல்லது தேசியத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. இதனடிப்படையில், ஆரம்பத்தில் இருந்தே, இஸ்லாம் அமைதியான வாழ்க்கை என்ற திட்டத்தை கொண்டு வந்தது, மற்றும் போரை விடுத்து மற்ற நாடுகளுடனான முஸ்லிம்களின் உறவுக்கு அமைதியை அடிப்படையாக அமைத்தது. அதன்படி, அமைதி மற்றும் பாதுகாப்பின் மார்க்கமான இஸ்லாம் போரை ஒரு வேண்டப்படாத நிகழ்வாகவே கருதுகிறது. ஆகவே இது மற்றவர்களுடனான உறவின் அடிப்படையாக அமைதியையும் அமைதியான சகவாழ்வையும் அமைத்துள்ளது.

முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் எங்களது சுதந்திரம் மற்றும் இஸ்லாமிய ஆட்சியை அச்சுறுத்தும்போது மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஆக்கிரமிப்புக்கு எதிராக பாதுகாப்பது அவசியமானது மற்றும் கட்டாயமானது.  இந்த நோக்கத்திற்காக, இஸ்லாம் நீதி, கருணை, மற்றும் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பேணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. எதிரிகளுக்கு எதிரான வரம்புகள் என்னவென்பது குர்ஆனில் மிகவும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. மேலும், போரின் போது நடந்துகொள்ளவேண்டிய முறைகள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாடு, சிறைப்பிடிக்கப்பட்டவர்களிடம் சகிப்புத்தன்மை போன்ற மனிதாபிமானக் கருத்தில் அவர் மிகவும் கவனம் செலுத்தினார்.

அவர் போர்க்களத்துக்கு ஆயுதப்படைகளை அனுப்பிய போதெல்லாம் போரில் மனிதாபிமான கொள்கைகளை கடைபிடிக்க பரிந்துரைத்தார்.

பாத் சோஷலிச ஆட்சியினால் ஈரான் மீது திணிக்கப்பட்ட போரில் மனிதாபிமான சட்டம் மீறப்பட்டது பற்றிய சுருக்கமான பார்வை

ஈரானின் இஸ்லாமிய குடியரசின் மீதான படையெடுப்பில், ஈராக் இராணுவம் தெற்கு ஈரானின் பல எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை ஆக்கிரமித்து, அவற்றில் சிலவற்றில் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ முடியாத வகையில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. பாத் சோஷலிச ஆட்சி போரை போர்க்களத்திற்கு மட்டுப்படுத்தவில்லை மற்றும் அஹ்வாஸ் மற்றும் கெர்மன்ஷா போன்ற நகரங்களில் குடியிருப்பு பகுதிகளையும் பொதுமக்களையும் பல முறை தாக்கியது. தவிர, மக்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான பள்ளிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய மற்றும் தொழில்துறை வசதிகளை அளித்தது மட்டுமல்லாமல் உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்களையும் ஈராக்கிய ராணுவம் மேற்கொண்டது. இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதானது ஈரானுக்கு எதிராக பாத் சோஷலிச ஆட்சி எடுத்த மற்றொரு மனித-விரோத நடவடிக்கை ஆகும்; இந்த பாத் சோஷலிச ஆட்சி ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது. அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஈராக்கிற்கு இந்த சட்டவிரோத ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. ஐநா நிபுணர்களின் அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்தின. ஈராக்கிய பாத் சோஷலிச ஆட்சி இரசாயன குண்டுகளை பயன்படுத்தியது ஈரானிய போராளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் சர்தாஷ்ட் போன்ற எல்லை நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு எதிராகவும் அவற்றை பயன்படுத்தியது.

மனிதாபிமான கொள்கைகள் மற்றும் விதிகள் குறித்த இமாம் கொமெய்னியின் பார்வை

இமாம் கொமெய்னி தனது அறிக்கைகள் மற்றும் உரைகளில் "மனிதாபிமான சட்டம்" என்ற வார்த்தையை நேரடியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், திணிக்கப்பட்ட 8 வருட போரின்போது அவர் நாட்டை வழிநடத்திய முறையானது மனிதாபிமான கொள்கைகள் மற்றும் நியமங்களுக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது.

பின்வரும் பிரிவில், இமாம் கொமைனியின் சிந்தனை மற்றும் உலகக் கண்ணோட்டத்தில், மற்றும் நடைமுறை கோட்பாட்டில் இந்த கொள்கைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விவாதிக்க உள்ளோம்.

பாரபட்சமின்றி மனிதாபிமான நடத்தையில் கவனம் செலுத்துதல்

பாரபட்சமின்றி மனிதாபிமான நடத்தையை கவனிப்பது இஸ்லாத்தின் மிக அடிப்படையான மனிதாபிமான கொள்கைகளில் ஒன்றாகும். இமாம் கொமைனியின் கண்ணோட்டத்தில், மன்னிப்பு, இரக்கம் மற்றும் மனிதாபிமான-இஸ்லாமிய நடத்தை ஆகியவை எதிரி படைகளுடன் மோதலில் காட்டவேண்டிய அடிப்படை நெறிமுறை மதிப்புகளில் ஒன்றாகும், அவற்றை ஆயுதப்படைகள் கவனத்திகொள்ள வேண்டும். உதாரணமாக, இது தொடர்பாக அவர் கூறியதாவது:

"சதாம் மற்றும் அவரைப் பின்பற்றி போர்க்களத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணான வகையில் பழிவாங்க இந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.... நாம் உயிர் தியாகம் மற்றும் இறப்பு வரை மனிதாபிமான கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்."

ஆயுத மோதல்களில் ஒடுக்குமுறையை நிராகரித்தல்

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (புனித குர்ஆன் 2:190) என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. மற்றொரு வசனத்தில், போர்க்களத்தில் உள்ள முஸ்லிம் போராளிகள் நீதி மற்றும் அறநெறியை மறந்துவிடக் கூடாது என்று புனித குர்ஆன் எச்சரிக்கிறது: "முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்." (புனித குர்ஆன் 5:8). இந்த இஸ்லாமிய போதனையின் அடிப்படையில் மற்றும் ஈரானிய நகரங்கள் மீது ஈராக் தாக்குதல் நடத்தி பொதுமக்கள் கொல்லப்பட்ட பிறகும் கூட, போராளிகளை நோக்கி உரையாற்றுகையில், இமாம் கொமைனி கூறினார்: உங்கள் நகரங்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி அழிந்தும், உங்கள் அன்புக்குரியவர்கள் கொல்லப்பட்டு இருப்பினும் பழிவாங்குவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் ... ஒரே ஒரு தோட்டாவை அவர்களது நகரங்களை நோக்கி [இராணுவ இலக்குகளுக்கு அன்றி] குறிவைப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள்.”

குடிமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டின் கொள்கை

இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில், போரில் பங்கேற்காதவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில், இமாம் கொமெய்னி பொதுமக்களைத் தாக்குவதைத் தடைசெய்தார் மற்றும் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே உள்ள  வேறுபாட்டை சுட்டிக் காட்டினார்: "ஈரானின் ஆயுதப் படைகளின் தளபதிகளுக்கும் ஈராக்கிற்கும் இடையே வேறுபாடு உள்ளது, வித்தியாசம் என்னவென்றால் ஈரானிய தளபதிகள் இஸ்லாத்தை மனதில் இருத்தி இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் பாதுகாப்பற்ற நகரங்களைத் தாக்கமாட்டாங்கள், சந்தையில் உள்ள மக்களை அல்லது வேறு எங்கும் உள்ள மக்களை, நிர்கதிக்குள்ளான ஏழைகளையும் தாக்க மாட்டார்கள் ... ஆனால் ஈராக் தளபதிகள் தங்கள் குண்டுகளை நகரங்களை நோக்கி வீசுகிறார்கள்.

இமாம் கொமைனியின் இந்த உரை பொதுமக்கள் மற்றும் போராளிகள் மற்றும் இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத இலக்குகளுக்கு இடையே வேறுபாட்டை அறிந்துகொள்ளும் தேவையை எடுத்துக்காட்டுகிறது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டுகிறது.

ஆயுதங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு

போர்க்களத்திற்கான ஒரு மனிதாபிமான கட்டமைப்பை இஸ்லாம் ஒரு பொது மற்றும் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் வரையறுத்துள்ளது. அதன்படி போரொன்றில் கொல்வது நியாயமானதாக இருந்தாலும் கூட, எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த ஒரு முஸ்லிம் தளபதிக்கு சுதந்திரம் இல்லை; போரில் இரசாயன மற்றும் நச்சு ஆயுதங்கள் உட்பட சில ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இமாம் கொமெய்னி உலகில் அழிவு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் குவிப்பு பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தி, அவற்றை இன்றைய உலகின் அவலங்களில் ஒன்றாக கருதி, இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு எதிராக நிற்க சிந்தனையாளர்களையும் நாடுகளையும் தூண்டினார். ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஈராக் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக ஈரான் ஒருபோதும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. இமாம் கொமெய்னி இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஹராமாக அறிவித்தார் (மத ரீதியாக தடைசெய்யப்பட்டது). அமெரிக்க பத்திரிகையாளர் கரேத் போர்ட்டர் தனது "தயாரிக்கப்பட்ட நெருக்கடி: ஈரான் அணுசக்தி அச்சத்தின் சொல்லப்படாத கதை" என்ற தனது நூலில், "ஈரான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்ததற்கான உண்மையான காரணம்… இமாம் கொமெய்னி இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அதை தடை செய்திருந்தார் என்பதாகும்" என்று எழுதியுள்ளார்.

இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவரான இமாம் கமேனி, மனித நேயமற்ற பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அதே கொள்கையையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது; இந்த ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் குவிப்பு ஆகியவற்றை அவர் ஹராமாக (தடைசெய்யப்பட்டதாக) கருதுகின்றார். இது சம்பந்தமாக, அவர் ஒருமுறை இவ்வாறு கூறினார், "அணு ஆயுத பயன்பாடு பரவலான கொலை மற்றும் அழிவுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், பொதுவாக இராணுவமென்றோ, பொதுமக்களென்றோ, இளைஞர்கள், முதியவர்கள் என்றோ, ஆண்கள், பெண்கள் என்றோ குழந்தைகள் என்றோ எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை., மற்றும் இதன் மனித விரோத விளைவுகள் அரசியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கு மட்டுப்பத்தப்படாமல் அடுத்த தலைமுறைகளுக்கு மீள முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது; எனவே, இந்த ஆயுதத்தின் எந்தவொரு உபயோகமும் மற்றும் அச்சுறுத்தலும் கூட மிக அடிப்படையான மனிதாபிமானக் கோட்பாடுகளின் கடுமையான மீறலாகும் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஒரு தெளிவான உதாரணமாகும்என்று குறிப்பிடுகின்றார்.

இராணுவ நடவடிக்கைகளில் பரிமாணத்தை பேணல்

இமாம் கொமைனியின் கண்ணோட்டத்தில், "சாத்தியமான எந்த வழியையும்" பயன்படுத்தி எதிரிகளை வெல்லும் உத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தாக்குதல்கள் சாதாரண மக்களை கொல்ல வழிவகுக்கக்கூடாது மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கௌரவ ஈராக்கிய மக்களை தாக்கி காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை; ஈராக்கிய மக்களை தாக்கி காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை; அதற்கு மாற்றமாக நாங்களும் எங்களது இராணுவமும் தேச மக்களும்  சதாம் போலவே நினைத்திருந்தால், குழந்தைகளையும் பெண்களையும் பொதுமக்களை கொன்றாயினும் முன்னேறிச் செல்லலாம் என்று நினைத்திருந்தால்.., ஈராக்கிற்கு உதவி செய்வோர் எவரும் இல்லை என்பதை நீங்கள் இன்று பார்ப்பீர்கள்... எங்கள் இராணுவம் இஸ்லாத்தில் உறுதியாக உள்ளது .. மேலும் ஈராக் நகரங்கள் மீது ஒரு குண்டையும் அது வீசவில்லை."

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாத்தின் சட்டத்தின் மூலாதாரமான குர்ஆன் சுற்றுச்சூழலைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டுள்ளது மற்றும் பல வசனங்களில் இதை வலியுறுத்தியுள்ளது. ஈராக்கின் பாத் சோஷலிச ஆட்சி ஈரானின் எண்ணெய் வயல்களில் குண்டுவீச்சு உட்பட சூழல்களை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயத்தில், இமாம் கொமெய்னி அதைக் கண்டித்து இவ்வாறு கூறினார்: "அமைதிக்காக ஆதரவு கோரிய எவரும் இதை ஆரம்பித்த சதாமை தட்டிக் கேட்கவில்லை, வேண்டாத இந்த போரை திணிக்க இந்த தேசம் (ஈரானிய தேசம்) என்ன குற்றம் அல்லது பாவம் செய்தது?, பல்லாண்டுகளாக அவர்கள் அயராது உழைத்து அமைத்த தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களில் முதலீடு செய்ததன் விளைவை அழித்து எரிக்கச் செய்தது ஏன்? என்று எவரும் கேட்கவில்லை."

போர்க் கைதிகளுக்கு அன்பு காட்டுதல்

திணிக்கப்பட்ட போரில், ஈராக் இராணுவப் படைகள் இஸ்லாமியப் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்டபோது, ​​அவர்களுடன் தயவுடன் நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதையும் துன்புறுத்துவதையும் தவிர்க்க வேண்டும், என்று கூறினார். இமாம் கொமைனி, அவர்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் விருந்தினர்களாகக் கருதி இவ்வாறு கூறினார்: "எங்கள் இராணுவம் மற்றும் புரட்சிகர காவலர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களிடம் மனிதாபிமான நடத்தை கொண்டிருக்க வேண்டும் மற்றும் இந்த மனிதாபிமான நடத்தையில் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்; உங்களது பொறுப்பில் உள்ள இந்தக் கைதிகள் உங்களுக்கு விருந்தினர்கள் போல இருப்பதால் அவர்களை நல்ல முறையில் மனித நேயத்துடன் நடத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன்." அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில், "நீங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் போர்க் கைதிகளுக்கு அனுதாபம் காட்டுங்கள் மற்றும் அவர்களிடம் இஸ்லாமிய-மனிதாபிமான நடத்தையைக் காட்டுங்கள் மற்றும் காயப்பட்ட ஈராக்கியர்களை மருத்துவமனைக்கு அனுப்புங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். - அவர்களது கடின உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது, - காயப்பட்ட கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் போல் நடத்த வேண்டும்; அவர்களின் இஸ்லாமிய நடத்தையால் காயம் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் குரோதத்தை தணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

முடிவுரை

இந்த கட்டுரையானது இமாம் கொமைனியின் உலகக் கண்ணோட்டத்தில் அவர் வழங்கிய மனிதாபிமான சட்டத்தின் மற்றும் கோட்பாடுகளின் இடத்தை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய முயன்றது. மனிதாபிமான சட்டத்தின் முக்கிய கோட்பாடுகள் இமாம் கொமைனியின் சிந்தனையில் இருந்ததையே இது காட்டுகிறது. இவை நிச்சயமாக இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தது மற்றும் பெறப்பட்டது என்பது சந்தேகமில்லை. இமாம் கொமைய்னியின் உலகக் கண்ணோட்டத்தில் மனிதாபிமானச் சட்டத்தின் கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்லாது, அதன் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான 8 ஆண்டு ஈராக்கிய போரின் போது கூட நாட்டின் தலைமைத்துவத்தில் இத்தகைய கொள்கைகள் தெளிவாக காணப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இமாம் கொமெய்னி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுமீது சதாம் திணித்த போர் போன்ற மிக கடினமான சூழ்நிலைகளில் கூட, ஈரான் மனிதாபிமானமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை நாடாது, எப்போதும் மனித ஒருமைப்பாடு மற்றும் கௌரவத்தை மதிக்க முயன்றது என்பது சரித்திரம்.

 

https://english.khamenei.ir/news/8518/The-place-of-humanitarian-law-in-Imam-Khomeini-s-worldview

 

தமிழில்: தாஹா முஸம்மில்

No comments:

Post a Comment