Friday, December 20, 2019

நம்பிக்கை ஒளியூட்டும் மலேசிய உச்சி மாநாடு


Malaysian Summit Illuminating Hope

இஸ்லாமிய நாடுகள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளை அடையாளம்கண்டு அவற்றுக்குரிய தீர்வுகளை ஒன்றுபட்டு எடுப்பததற்காக மலேசியப் பிரதமர் மகாதீர் முஹம்மது உச்சிமாநாடொன்றை ஏற்பாடு செய்தார். இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட நாடுகளில் துருக்கி, ஈரான் இஸ்லாமிய குடியரசு, சவூதி அரேபியா, பாகிஸ்தான், கட்டார் மற்றும் இந்தோனேசியா போன்றனவும் அடங்கும்.

சவூதி அரேபியா இவ்வழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், இம்மாநாட்டை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்தது கவலையளிக்கும் விடயமாகும்.

ஆரம்பத்தில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திய பிரதமர் இம்ரான் கான், அவரின் சவூதி விஜயத்தைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக்கொண்டார். முன்னதாக இந்த நிகழ்வில் பேச்சாளராக பட்டியலிடப்பட்ட இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவும் மாநாட்டுக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்புக்கு இது போட்டியாக அமைந்துவிடும் என்று காரணம்காட்டி சவூதி அரேபியா இம்மாநாடு நடக்கவிடாமல் செய்வதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது. (பலஸ்தீன் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பிரச்சினை, உய்குர் முஸ்லிம்கள் பிரச்சினை போன்ற எதற்கும் OIC உருப்படியாக எதனையும் செய்யாது, முஸ்லீம் நாடுகளுக்கு எதிராக அமேரிக்கா மற்றும் மேற்குலகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது அரபு நாடுகள் ஆக்கிரமிப்பாளர் சார்பாக முடிவுகளை மேற்கொண்டனர் என்பதுவே கசப்பான உண்மையாகும்).
இம்மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றிய மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமட், முஸ்லீம் உலகம் ஒரு "நெருக்கடி நிலையில்" இருப்பதாகவும்,  "செயல்படுத்தக்கூடிய" தீர்வுகளுக்கு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு  அழைப்பு விடுத்தார்.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் கட்டாரி எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் தங்களது உரைகளில் பல தசாப்தங்களாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் பாலஸ்தீனியர்களின் அவல நிலையை எடுத்துரைத்திருந்தனர், அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு  மகாதீர் அழைப்பு விடுத்தார்.
"முஸ்லிம்களும் அவர்களின் மதமும் மற்றும் அவர்களின் நாடுகளும் நெருக்கடி நிலையில் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். எல்லா இடங்களிலும் முஸ்லீம் நாடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம், அவர்களின் குடிமக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள், முஸ்லிம் அல்லாத நாடுகளில் தஞ்சம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்று மகாதீர் கூறினார்.
94 வயதான பிரதமர் மகாதீர் இரண்டாம் உலகப் போரினால் பேரழிவிற்குள்ளான பிற நாடுகள் மீண்டு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், பல முஸ்லீம் நாடுகள் நிர்வாகத்திறமை குறைபாட்டினால், அபிவிருத்தி அடையாது, வளமிழந்து காணப்படுவதை சுட்டிக்காட்டினார்.
மகாதீர் சகோதர்ச் சண்டை, உள்நாட்டுப் போர்கள், தோல்வியுற்ற அரசாங்கங்கள் மற்றும் பல பேரழிவுகள் முஸ்லீம் நாடுகளையும் இஸ்லாத்தையும் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளாகும். அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ குறைப்பதற்கோ அல்லது மதத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவதற்கோ எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிடையே ஒரு ஒருங்கிணைந்த குரலை அவர் நாடியபோதும், சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் உட்பட சில  நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது கவலைத்தரும் விடயமாகும்.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி ஹசன் ரூஹானி முஸ்லீம் உலகமும் மத்திய கிழக்கும் எதிர்கொள்ளும் "கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு "சியோனிச ஆட்சி" மீது குற்றம் சாட்டினார். பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். பாலஸ்தீனியர்களின் அவலநிலை முஸ்லீம் உலகில் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்று ரூஹானி கூறினார்.
சவூதி அரேபியாவைப் பற்றி ஒரு மறைமுகமான விமர்சனத்தில், சில முஸ்லீம் நாடுகளில் "மன மற்றும் நடத்தை தீவிரவாதம்" மத்திய கிழக்கில் "வெளிநாட்டு தலையீடுகளுக்கு வழி வகுத்துள்ளது" என்று ரூஹானி கூறினார்.
"சிரியா, யேமன் மற்றும் ஈராக், லெபனான், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கலவரம் மற்றும் கொந்தளிப்பு ஆகியவை உள்நாட்டு தீவிரவாதம் மற்றும் வெளிநாட்டு தலையீட்டின் கலவையாகும்" என்று அவர் கூறினார்.
முஸ்லீம் நாடுகள் வங்கி மற்றும் நிதி ஒத்துழைப்புக்கான சிறப்பு வழிமுறைகளை நிறுவ முடியும், மேலும் வர்த்தகத்தில் தேசிய நாணயங்களைப் பயன்படுத்தலாம். ஈரான் 2018 முதல் அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ளது, மேலும் பிற நாடுகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள சர்வதேச நிதி முறையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானை "எதிர்ப்பின் மாதிரி" என்று குறிப்பிட்ட ரூஹானி, அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க நிதி ஆட்சியின் ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்காக முஸ்லிம் உலகம் அதன் சொந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

துருக்கி ஜனாதிபதி தய்யிப் எர்டோகன் உரையாற்றுகையில் இந்த உச்சிமாநாட்டின் வெற்றி, தற்போதுள்ள தலைவர்களிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட "திட்டங்களை செயல்படுத்துவதும்" ஆகும், முஸ்லீம் நாடுகள் தங்கள் தோல்விக்கான காரணங்களை சரியாக அடையாளம் கண்டு கொண்டு குறிப்பாக மத்திய கிழக்கில் மற்றும் பிற இடங்களில் மோதல்களைத் தடுப்பதில் "விதிமுறைகளுக்கு வர வேண்டும்" என்று கூறினார்.
"உள் சச்சரவுகளில் நாங்கள் எங்கள் சொந்த சக்தியை வீணடிக்கிறோம் என்பது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் முஸ்லிம் உலகில் தற்போதைய நிலைமையைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
ஐ.நா.பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களாக அமர்ந்திருக்கும் ஐந்து உறுப்பு நாடுகள் உட்பட 1.7 பில்லியன் முஸ்லிம்களின் தலைவிதியை மேற்கத்திய சக்திகளின் கைகளில் முஸ்லிம் நாடுகள் விடக்கூடாது என்று அவர் கூறினார்.
"உலகம் இந்த ஐந்து நாடுகளை விட பெரியது" என்று எர்டோகன் கூறினார். சர்வதேச அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களைப் பற்றி அவர் மறுபரிசீலனை செய்தார், அதன் வீட்டோ அதிகாரம் சிறிய நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் "அதன் காலாவதி தேதியை கடந்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.
கத்தார் எமிர் ஷேக் தமீம் உரையாற்றுகையில் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு "எங்கள் பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்" என்று கூறினார்.
பாலஸ்தீனிய நிலங்களை பலாத்காரமாக இணைத்தல், சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் "ஜெருசலம் நகரத்தின் அரபு தன்மையைத் துடைத்து, யூதமயமாக்கல் ஆகியவை எல்லா இடங்களிலும் அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டும் செயல்களாகும்”, என்றார்.
உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பாலஸ்தீனிய குழு ஹமாஸின் முன்னாள் தலைவரான காலித் மேஷால் கோலாலம்பூரில் நடந்த இந்த மாநாடு முஸ்லீம் உலகில் "எந்தவொரு தேசத்துக்கும் இடையே பகைமையை உருவாக்குவதற்காக அல்ல" என்று அல் ஜசீராவிடம் கூறினார்.


No comments:

Post a Comment