Sunday, October 6, 2019

அதிசயங்கள் நிறைந்த அற்புத தீவு ‘கேஷ்ம்’ (Qeshm)


"Qeshm" - Amazing Island of wonders
சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒரு சொர்க்கபுரியாகும். மத்தியகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை அழகு கொஞ்சும் ஒரே ஒரு நாடு ஈரான் என்றால் மிகையாகாது. பார்ப்பவர் கண்டு வியக்கும் அளவு இயற்கையின் அற்புதங்கள் அங்கு தாராளமாகவே காணலாம். இதிலொன்றுதான் கேஷ்ம் (Qeshm) தீவு.
ஈரானில் சுற்றுலா மேற்கொண்டவர்களுக்கு தெரியும் மிகவும் தனித்துவமான சுற்றுலா தலங்களில் ஒன்று கேஷ்ம் என்பது. பாரசீக வளைகுடாவில் ஈரானின் தெற்கில் அமைந்துள்ள இந்த தீவு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இந்த பிரபலத்திற்கு சில காரணங்கள் உள்ளன. கிஷ் தீவுடன் சேர்ந்து கேஷ்ம் ஒரு தடையற்ற வர்த்தக மண்டலமாகும். சுற்றுலாப் பயணிகள் கெஷ்மிற்குள் நுழையும்போது எந்த விசாவையும் பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை (அவர்கள் 14 நாட்கள் வரை விரும்பினால் தங்கலாம்). மேலும் இது வரியற்ற (Duty Free) பிரதேசம் என்பதால், ஈரானின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்களும் கெஷ்மில் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
கெஷ்மின் பிரபலத்திற்கு மற்றொரு காரணம் அதன் அழகிய இயல் தன்மை ஆகும். Qeshm என்பது பரிந்துரைக்கப்பட்ட யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் ஆகும், மேலும் இந்த தீவு யுனெஸ்கோவின் பாதுகாப்பில் உள்ள ஏராளமான இயற்கை மரபுரிமைத் தளங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் பெருநகர வாழ்வில் அலுத்துப்போய் இருந்தால், அல்லது நவீன காலத்தின் சலசலப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விலகியிருக்கும் அனுபவத்தை பெற விரும்பினால், Qeshm உங்களுக்கு சரியான இடமாகும்.
கேஷ்ம் தீவு இயற்கை ஈர்ப்புகள்
Qeshm இல் உள்ள இயற்கை ஈர்ப்புகள் புதியவை, களங்கப்படுத்தப் படாதவை மற்றும் இணையற்றவை.
ஹரா கடலோர சதுப்பு நில கண்டல் காடுகள்
ஹரா சதுப்புநில வனமானது கெஷ்மின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தடைசெய்யப்பட்ட உயிர்க்கோளமாகும். உலகின் பல நூறு பறவையினங்கள் குளிர் காலங்களில் ஹரா காட்டை நாடிவருகின்றன. குறிப்பிட்ட காலங்களில், நீங்கள் ஹரா காடுகளுக்கான உங்கள் பயணத்தின்போது ஹெரோன்கள், பெலிகன்கள், ஃபிளமிங்கோக்கள் மற்றும் எண்ணற்ற பிற அரிய பறவைகளைப் பார்க்கலாம்.
நீர்வழிகள் வழியாக வனத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். பல உல்லாச பிரயாணிகள் இவ்வாறு செல்கையில், படகில் இருந்து குதித்து நீர்வழிகளில் நீந்துவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு த்ரில் வேண்டுமென்றால், படகு ஓட்டுநரிடம் அதிக வேகத்தில் சவாரி செய்யச் சொல்லுங்கள்; அற்புதமான உணர்வை அனுபவியுங்கள்.
நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு
உங்கள் கேமராவைக் தயார்படுத்துங்கள், உங்கள் மூளையின் கலையுணரும் பகுதியை சுண்டிவிடுங்கள்; நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு உங்களை துள்ளிக்குதிக்கச் செய்துவிடும்.
இங்கு காணப்படும் சீரற்ற கல் பள்ளத்தாக்கு கெஷ்மின் மிக அழகான, களங்கப்படுத்தப்படாத இயற்கை ஈர்ப்புகளில் ஒன்றாகும். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த பள்ளத்தாக்கின் அசாதாரண கல் வடிவங்கள் ஒர் ஒளிரும் இரவில் ஒரு நட்சத்திரம் தரையில் விழுந்தபோது உருவானது என்று கூறப்படுகிறது.
பகல் நேரத்தில் நடந்து உலா செல்லவும், அழகான புகைப்படங்களை எடுக்கவும் ஓர் அற்புதமான இடம் இந்த பள்ளத்தாக்கு. இது, துரதிர்ஷ்டவசமாக, பார்வையாளர்களுக்கு இரவு நேரங்களில் மூடப்பட்டுள்ளது. அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், ஏனென்றால் ஜின்களும் பேய்களும் இரவில் பள்ளத்தாக்கில் சுற்றித் திரிகின்றன என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்! ப்பூ!
நமக்தான் உப்பு குகை
நமக்தான் கெஷ்மின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நமக்தான் எனும் உப்பு குகை. இதுவே உலகின் மிக நீளமான உப்பு குகை ஆகும். குகையின் கும் இருட்டுக்குள் பார்க்க உங்களுக்கு ஒரு டார்ச் லைட் தேவைப்படும். கைவசம் ஒன்று இல்லையென்று கவலைப்பட வேண்டாம், அவை அவ்விடத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
உள்ளே பயணம் எளிதாக இருக்காது; நீங்கள் தரையில் தவழ்ந்து வர வேண்டியிருக்கும் அல்லது சங்கடமான நிலைகளில் நடக்க வேண்டியிருக்கும். ஒரு த்ரிலிங் அனுபவம். எவ்வாறாயினும், இவற்றை கடந்துவிட்டால், வண்ணஜாலம் புரியும் அமைப்புகளின் அழகு உங்களை நிச்சயமாக பிரமிக்கச் செய்யும். இந்த அற்புதமான அனுபவம் பயணத்தை முற்றிலும் பெறுமதியான ஒன்றாகவும் மனதில் நீடித்து நிலைக்கும் ஒன்றாகவும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பயணத்தின் முழுமையான திருப்தியை பெறவேண்டுமென்றால், இந்த அதிசய குகையின் எந்த இடத்தையும் தவறவிடாது வழியை எளிதாக்க ஒரு தகுதிவாய்ந்த வழிகாட்டியின் துணையுடன் செல்வது சாலச் சிறந்தது.
சாஹ்கூ கனியன்
கெஷ்மின் ஏழு அதிசயங்களில்முதல் மற்றும் மிக முக்கியமானதாக சாஹ்கூ கனியன் (சாஹ்கூ பள்ளத்தாக்கு) என்று பலர் கருதுகின்றனர். சாஹ்கூ கனியன், அல்லது சாஹ்கூ பள்ளத்தாக்கு, சாஹு-யே ஷர்க்கி கிராமத்தில், கெஷ்மில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கனியன் சுமார் 100 மீட்டர் வரை தரையின் கீழ்நோக்கி செல்கிறது. இந்த கீழிறங்கும் பயணத்தில், சுவர்களில் மற்றும் துவாரங்களில் அற்புதமான வடிவங்களில் பரந்த அளவிலான வண்டல் பாறைகள் மற்றும் அவற்றின் அற்புதமான அரிப்பு வடிவங்களைக் காணலாம்.
நீங்கள் பாறைகள் மற்றும் வெளிப்புற வடிவங்களில் நடைபயணம் மேற்கொண்டால், சர்கூ கனியன் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

வரலாற்று ஈர்ப்புகள்
கெஷ்ம் முதன்மையாக அதன் இயற்கை அதிசயங்களுக்காக அறியப்பட்டிருந்தாலும், கெஷ்மில் இன்னும் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டை கீழே ஆராய்வோம்.
போர்த்துகீசிய கோட்டை The Portuguese Castle
கெஷ்மில் உள்ள போர்த்துகீசிய கோட்டை பாரசீக வளைகுடாவில் போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சியின் எச்சமாகும். இந்த சிவப்பு கல் கோட்டையின் அடர்த்தியான சுவர்கள் போர்த்துகீசிய வீரர்களை உள்ளூர் கலவரங்களிலிருந்து பாதுகாக்க 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த சிவப்பு கல் கோட்டை சமீபத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் பிரபலமான இடமாக மாறியுள்ளது. கோட்டையின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றது. பாரசீக வளைகுடா தீவுகளில் பரவியிருக்கும் சில போர்த்துகீசிய அரண்மனைகளில், மிகவும் பிரபலமாக உள்ளது கெஷ்மில் உள்ள அரண்மனையே.
நாதெரி கோட்டை Naderi Castle
லாஃப்ட் கிராமத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள நாதெரி கோட்டை, கெஷ்மில் பார்க்க வேண்டிய வற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த கோட்டை இஸ்லாத்திற்கு முந்தைய கால கோட்டைகளின் அஸ்திவாரங்களில் கட்டப்பட்டுள்ளன.
காலம் இந்த மாளிகையின் முகப்பில் சேதங்களை  ஏற்படுத்தியிருந்தாலும், அதில் எஞ்சியிருக்கும் அதன் நான்கு கோபுரங்களும் பண்டைய அரண்மனைகளின் அழகை நாடிவரும் கண்களுக்கு இன்னும் அவை கவர்ச்சியாகவே இருக்கின்றன.
அதிசயங்கள் நிறைந்த அற்புத தீவு ‘கேஷ்ம்’ (Qeshm)

No comments:

Post a Comment