International Day of Nowruz
பாரசீகம் என்பது
ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில
பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தன; அதிலொன்றுதான்
வசந்த காலத்தின் முல் நாளைக் கொண்டாடும் நொவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக
சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன்
'தனித்துவமான ஈரானிய பண்புகளுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.
ஈரான் இஸ்லாமிய
குடியரசுடன் ஆப்கானிஸ்தான்,
அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி
மற்றும் துர்க்மெனிஸ்தான்
ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக்
கொண்டாடுகின்றன.
மனிதகுலத்தின்
உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால் "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக
மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக ஒரு பூர்வீக பண்டிகை ஆகும். நவ்ரூஸ்
உலகம் முழுவதும் சுமார் 300
மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.
"இது
குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும்
மற்றும் நாடுகளுக்கு இடையேயான சமாதானம்,
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு
சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா.
குறிப்பிடுகிறது.
featured-image-index un.org |
இப்பண்டிகை
சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின்
வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக்
கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான
அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள
சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)
புத்தாண்டு
சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள், பசும்
புல், கோதுமை பண்டம்,
சிவப்பு வகை பெர்ரி, பூண்டு, விணாகிரி மற்றும் நாணயம் அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும்.
இவற்றுக்கு மேலதிகமாக புனித குர் ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும்
சுப்ராவில் (விரிப்பில்)
வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய
நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.
"சால்-தஹ்வில்" எனும் புது வருடம் பிறக்கும்
உரிய தருணத்தில், ஒன்றுகூடியுள்ள குடும்பத்தவர்கள் இஸ்லாமிய முறைப்படி முசாபஹா (ஆரத்தழுவுதல்)
செய்துகொள்வர். வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்வர். மூத்தவர்கள் இளையவர்களுக்கு
கைவிசேடமும் பரிசில்களும் கொடுத்து மகிழ்வர்.
புதிய
வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் கோதுமை அல்லது பயறை புத்தாண்டன்று கழுவி ஒரு தட்டில் உலர்த்த
வைப்பர். புது வருடத்தின் 13ம் நாளன்று தட்டில் முளைவிட்டிருக்கும் பயறை
முற்றத்தில் கொட்டிவிடுவர். ஒரு சில நேரங்களில் பொன் மீன்கள் (மிக எளிதாக
கிடைக்கக்கூடிய விலங்கு) ஒரு கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும். பண்டிகை
கால முடிவில் சிலர் அம்மீன்களை நதியில் விட்டுவிடுவர்; சிலர்
அலங்கார மீன் தொட்டிகளில் இட்டு வளர்ப்பர்.
வீட்டு
வைபவங்கள் நிறைவடைந்ததும் ஆரம்ப சில நாட்களில்
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களது வீடுகளுக்குச் சென்று அன்பை
பரிமாறிக்கொள்வர். வீட்டிலுள்ள சிறுவர்களுக்காக பரிசுப்பொருட்களை எடுத்துச்
செல்வார்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து குதூகலிப்பார்கள். சிறப்பு உணவு மற்றும்
"ஆஜில்" (திராட்சைகள் பாதாம் பிஸ்தா போன்ற பல்வேறு விதைகள் மற்றும் பிற
இனிப்பு பொருட்களை கொண்ட ஒரு கலவை) பரிமாறப்படும். நிறைய பழங்கள் சாப்பிடுவார்கள்.
மாதுளைக்கு முக்கிய இடமுண்டு.
புத்தாண்டுக்கு
முன் இரவில், புகையூட்டிய மற்றும் புதிதாக வறுத்த மீனுடன் பரிமாறப்படும்
"சப்ஸி போலோ மஹி" - புதிய மூலிகைகளுடன்
சமைக்கப்படும் சோறு - ஈரானியர்களுக்கு ஒரு சிறப்பு உணவாகும். அது அவர்களின்
பாரம்பரியமுமாகும். இடத்துக்கிடம் இந்த பாரம்பரியம் மாறக்கூடும். பிராந்திய
வேறுபாடுகளும் உள்ளன. ஆயினும் மிகவும் வண்ணமயமான விழாக்கள் எங்கும் காணப்படும்.
புதிய ஆண்டின் 13
வது நாள் "சிஸ்தாஹ்
பெடார்" என்று அழைக்கப்படுகிறது. ஈரானியர்கள் இத்தினத்தை பெரும்பாலும்
வெளிப்புறங்களில் மற்றும் சுற்றுலாக்களில் கழிப்பர். ஒரு
உற்சாகமான உல்லாச பொழுதுபோக்குக்காக பூங்காக்களுக்கு அல்லது உள்ளூர் சமவெளிகளில்
நாளைக் கழிக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டுச் செல்வார்கள். இயற்கையுடன் காலத்தை
செலவழிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
இந்த சிஸ்தாஹ் பெடாருக்காக,
சிறுவர்கள் ஏங்கிக்கிடப்பார்கள். விடுமுறை
நாட்களில் மிகவும் பிரபலமான நாள் இந்த நாளாகும். இந்நாளில்
சிறுவர்களின் குதூகலத்துக்குக் குறைவே இருக்காது!
- - தாஹா முஸம்மில்
No comments:
Post a Comment