Tuesday, October 1, 2024

நஸ்ரல்லாஹ் எவ்வாறு எதிர்ப்பு அச்சினது முதுகெலும்பாக உயர்ந்தார்?

 How did Nasrallah rise to be the backbone of the axis of resistance...?

- தாஹா முஸம்மில் 

லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ், ஒரு தொலைநோக்கு கொண்ட தலைவரும், எதிர்ப்பு அச்சினது முதுகெலும்புமாக செயல்பட்டவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை 2024 ஆகஸ்ட் 27 அன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட பாரிய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

தெற்கு பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாஹ்வின் முக்கிய கோட்டையான ஹரேட் ஹிரெய்க் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பல குடியிருப்புக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இத்தாக்குதல் காரணமாக குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி குடிமக்களும் உயிரிழந்தனர்.

நாம் எமது பெருமதிப்பிற்குரிய தலைவரை இழந்துவிட்டோம் என்று ஹிஸ்புல்லாஹ் செயலகம் மறுநாள் அறிவித்தது. 

செய்யத் நஸ்ருல்லாஹ் புத்திசாதுரியம் மிக்கவர், மிகவும் தைரியசாலி, தூரநோக்கு, நுண்ணறிவு கொண்ட தளபதி, அவர் விரும்பிய ஷஹீத் எனும் அந்தஸ்தை அடைந்து, தியாகிகளான தமது தோழர்களுடன் இணைந்துகொண்டார்.

"சியோனிச எதிரிக்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடரவும், காஸா மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு உறுதுணையாக நிற்பதற்கும், லெபனானையும் அதன் திடமான உறுதி கொண்ட, கௌரவமான மக்களையும் பாதுகாப்பதற்கும், தியாகங்கள் மற்றும் தியாகிகள் நிறைந்த எங்கள் மார்க்கத்தில் தொடர்ந்தும் பயணிப்போம் என ஹிஸ்புல்லா செயலகம் மதிப்புக்குரிய தியாகிகளுக்கு உறுதியளிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பயங்கரவாத ஆட்சி கடந்த வாரத்தில் இருந்து லெபனானுக்கு எதிரான அதன் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த திங்களிலிருந்து ஏராளமான அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட 720 பேருக்கும் அதிகமானோரை கொன்றுள்ளது.

ஒரு வருடம் நிறைவடையும் தருவாயில் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41,500 ஐ தாண்டியுள்ள நிலையில், பாலஸ்தீன தேசம் மற்றும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் இந்த காலம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது தமது இஸ்லாமிய கடமை என்றும் அது கருதுகிறது.

 وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌ ۚ وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙۚ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ؕ‏

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது?      (குர் ஆன் 4:75)

முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது இனப்படுகொலை போரை கட்டவிழ்த்து விட்ட நாளுக்குப் பிறகு, அக்டோபர் 8, 2023 முதல் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கியது, ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட தினசரி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறது. காஸாவில் இஸ்ரேலிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை எமது போராட்டம் தொடரும் என்று உறுதியுடன் செயல்பட்டும் வருகிறது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் நஸ்ரல்லாஹ்வின் இரும்பு போன்ற உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் பாலஸ்தீன் விடுதலை என்ற நோக்கத்திற்கான அவரது அசைக்க முடியாத ஆதரவு ஆகியவை அவரை எதிர்ப்பின் அச்சில் ஒரு பிரபலமான மற்றும் நேசிக்கப்பட்ட நபராக ஆக்கியது.

اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.(குர்ஆன் 4:76)

பெரிய  இலட்சியங்களை சுமந்த இளைஞன் நஸ்ரல்லாஹ் பற்றி சில தகவல்கள்:

சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் ஆகஸ்ட் 31, 1960 அன்று பெய்ரூட்டின் கிழக்கு புறநகர்ப் பகுதியில், மாட்ன் மாவட்டத்தில் பிறந்தார். ஒரு வறிய முஸ்லிம்  சன்மார்க்க குடும்பத்தில் வளர்ந்த அவர் தனது இளவயதிலேயே தெற்கு லெபனானுக்கு இடம்பெயர்ந்தார்.

பல சவால்கள் இருந்தபோதிலும், நஸ்ரல்லாஹ் இஸ்லாமிய போதனையின் உந்துதலுடன் இறை அச்சமுள்ள மாணவராக இருந்தார், மேலும் 1975 ஆம் ஆண்டில் அவர் தனது 16 வயதில் ஈராக்கின் நஜாப்பில் உள்ள ஆயதுல்லா முகமது பாக்கிர் அல்-சதரின் செமினரியில் இறையியல் படிக்கச் சென்றார்.

கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய அறிஞரான அல்-சதர் (ரஹ்) அவர்கள், நஸ்ரல்லாஹ்வின் அறிவு, திறமை, உத்வேகம் போன்ற பண்புகளைக் கண்டு "தலைமைத்துவத்தின் வாசனையை நான் உங்களில் உணர்கிறேன்; நீங்கள் மஹ்தியின் அன்சார்களில் [சீடர்களில்] ஒருவர்...." என்று வர்ணித்ததாக அறிய கிடைக்கிறது.

1979 ஆம் ஆண்டில், இளம் நஸ்ரல்லாஹ் லெபனான் ஷியா அரசியல் குழுவான அமல் இயக்கத்தில் சேர்ந்தார். இருப்பினும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர் 1982 இல் க்குழுவை விட்டு வெளியேறி புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நஸ்ரல்லாஹ் விரைவில் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் அணிகளில் இருந்து உயர்ந்து, 1980 களில் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஒரு முக்கிய இராணுவத் தளபதியாக உயர்வுபெற்றார்.

1985 இல், நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ்விற்குள் பிராந்தியத்தின் துணைத் தலைவரின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் தலைமை நிர்வாகியாக பதவி உயர்வு பெற்றார். இது மூலோபாய முடிவுகளை எடுப்பதற்கும் குழுவிற்கான கொள்கைகளை வகுப்பதற்கும் பொறுப்பான நிர்வாகக் குழுவான ஷூரா கவுன்சில் எடுத்த முடிவுகளை நிறைவேற்றுவதை உள்ளடக்கிய பொறுப்பாகும்.

தலைமை நிர்வாகியாக, குழுவின் முடிவுகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், இயக்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்குமான பொறுப்பை அவர் ஏற்றார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார், மற்றும் அவரது மூலோபாய திட்டங்கள் சக போராளிகள் மற்றும் தளபதிகளின் மரியாதையையும் போற்றுதலையும் அவருக்கு பெற்றுத் தந்தது.

இந்த பதவிக்கு நஸ்ரல்லாஹ்வின் நிலையான உயர்வானது அவரது தலைமைத்துவ திறன்கள் மற்றும் குழுவின் குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகள் மீதான அவரது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

சிக்கலான நிலையிலும் கூட அரசியல் மற்றும் இராணுவத்தை வழிநடத்தக்கூடிய நம்பகமான மற்றும் திறமையான தலைவராக அவர் காணப்பட்டார்.

ஹிஸ்புல்லாஹ்வின் தலைமை நிர்வாகியாக அவர் நியமிக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருந்தது மற்றும் செயலாளர் நாயகம் பதவிக்கு அவர் உயர்வதற்கு களம் அமைத்தது.

ஹசன் நஸ்ரல்லாஹ்ஹ் (நடுவில்அப்பாஸ் மூசவியியை (வலது
நஜாப்பில் தங்கியிருந்தபோது சந்தித்தார்.

அப்பாஸ் மூசவியின் வாரிசு

1992 இல், லெபனான் ஷியா மதகுருவும் ஹிஸ்புல்லாஹ்வின் இணை நிறுவனரும், குழுவின் பொதுச் செயலாளருமாக பணியாற்றிய அப்பாஸ் அல்-மூசவி இஸ்ரேலிய ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டார்.

அவருக்குப் பிறகு பிப்ரவரி 16, 1992 அன்று நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ்வின் தலைவரானார், கடந்த வெள்ளிக்கிழமை அவர் உயிர்த்தியாகம் வரை அப்பதவியில் இருந்தார்.

அவரது தீட்சண்யம் மிக்க திறமையான தலைமையின் கீழ், ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பிராந்தியத்தில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக வளர்ந்தது, லெபனானின் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்களிடையே ஒரு வலுவான ஆதரவுத் தளம் அவருக்கு இருந்தது.

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் மாறிவரும் அரசியல் மற்றும் இராணுவ யதார்த்தங்களுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் அமைப்பின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களை மறுவடிவமைக்கத் தொடங்கினார்.

நஸ்ரல்லாஹ்வின் தலைமையின் கீழ், ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக தொடர்ச்சியான மிகத் திறமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது, அவை தெற்குப் பகுதிகளை இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்க முடியாதவாறு மாற்றும் வடிவமைப்பைக் கொண்டிருந்தன, இறுதியில் அந்த இலக்கை அடைவதில் வெற்றி பெற்றன.

2000ம் ஆண்டில், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் போராட்டத்திற்கு பின்னர், இஸ்ரேலியப் படைகள் இறுதியாக தெற்கு லெபனானில் இருந்து பின்வாங்கின; இது ஹிஸ்புல்லாஹ் மற்றும் அப்பகுதியில் பரந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் குறிக்கிறது.

 وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏

“(விசுவாசிகளே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.” குர்ஆன் 3:139.

ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியதன் மூலமும், லெபனான் அரசாங்கம் மற்றும் பிற பிராந்திய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவரது அரசியல் நுணுக்கம் காரணமாக இந்த வெற்றியில் நஸ்ரல்லாஹ் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

2004ம் ஆண்டு நஸ்ரல்லாஹ் இஸ்ரேலிய ஆட்சிக்கும் ஹிஸ்புல்லாஹ்விற்கும் இடையே கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கைக் வகித்தார்; இதன் விளைவாக இஸ்ரேலால் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான லெபனிய, பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். குறிப்பிட்ட கைதிகள் பரிமாற்றம் ஒரு திறமையான இராஜதந்திரி என்ற அவரது நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தியது.

இந்த பரிமாற்றம் தனிப்பட்ட மட்டத்திலும் நஸ்ரல்லாஹ்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது, ஏனெனில் இது 1997 இல் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட அவரது மகனின் எச்சங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அவரது மகனின் எச்சங்கள் திருப்பி அனுப்பட்டதானது நஸ்ரல்லாஹ்வின் எதிர்ப்புக்கான அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த அடையாளமாகவும், தனது மக்களுக்காக தனிப்பட்ட தியாகங்களைச் செய்வதற்கான அவரது விருப்பத்தின் அடையாளமாகவும் இருந்தது.

2006 ஆம் ஆண்டில் 33 நாள் லெபனான் போரின் போது நஸ்ரல்லாஹ்வின் தலைமை லெபனானுக்கு உள்ளேயும் பரந்த அரபு மற்றும் இஸ்லாமிய உலகெங்கிலும் "எதிர்ப்பின் தலைவர்" என்ற அவரது புகழை மேலும் உறுதிப்படுத்தியது.

போர் காலம் முழுவதும், ஹிஸ்புல்லாஹ்வினால் ஒரு பாரிய இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு எதிரா நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது மற்றும் அந்த போரில் பெரிதும் உயர்த்தப்பட்ட நிலையில் வெற்றி பெற்றது.

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்களை எதிர்த்து நிற்கும் ஹிஸ்புல்லாஹ்வின் திறனும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் தொடர்ந்து ஏவுவதும், அதன் மகத்தான இராணுவ வலிமையையும், சியோனிச ஆக்கிரமிப்பிற்கு எதிரான அதன் உறுதிப்பாட்டையும் நிரூபித்தன.

தெஹ்ரானில் இஸ்லாமிய புரட்சியின் தலைவரான அயதுல்லா செய்யத் அலி காமனேயியை 
நஸ்ரல்லாஹ் சந்திக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். (படம்: Khamenei.ir)

வலுவான கூட்டணிகளைக் கொண்ட மனிதர்

ஈரான் மற்றும் சிரியா உள்ளிட்ட பிற பிராந்திய சக்திகளுடன் கூட்டணியை உருவாக்குவதிலும், டெல் அவிவ் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதிலும் நஸ்ரல்லாஹ் முக்கிய பங்கு வகித்தார்.

கூலிப்படையினர் மற்றும் பயங்கரவாதிகள் மூலம் அசாத் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கான மேற்கத்திய ஆதரவிலான முயற்சிகளை எதிர்த்து, 2011 இல் தொடங்கிய நாட்டின் உள்நாட்டுப் போரின் போது, சிரியாவுக்கு, குறிப்பாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவாக நஸ்ரல்லாஹ் குரல் கொடுத்தார்.

ஹிஸ்புல்லா போராளிகள் சகோதர அரபு நாடான சிரியாவிலும் மற்றும் பிராந்தியத்தில் தீவிரவாத குழுக்கள் பரவுவதைத் தடுக்க அமெரிக்க ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அரசாங்கப் படைகளுடன் இணைந்து போராடி வருகின்றனர்.

நஸ்ரல்லாஹ் ஒரு திறமையான பேச்சாளர்தனது உரை மற்றும் நாவன்மைக்காக மக்களால் மிகவும் கவரப்பட்ட ஒருவர்.

அவரது உரைகள் பிராந்தியம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தன, மேலும் எதிர்ப்பு மற்றும் சுயநிர்ணயம் பற்றிய அவரது செய்தி பாலஸ்தீனியர்கள் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களிடையே எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

அவரைப் படுகொலை செய்வதற்கும் அவரது தலைமைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் பல முயற்சிகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும், நஸ்ரல்லாஹ் நீதி மற்றும் விடுதலைக்கான தனது உறுதிப்பாட்டில் தளர்ந்து விடவில்லை, உறுதியாக இருந்தார்.

லெபனானின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதிலும், புதிய தலைமுறை போராளிகளை ஊக்குவிப்பதிலும் அவரது வழிகாட்டல் முக்கியமானது.

கடந்த ஆண்டு அக்டோபரில் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியவுடன், "பாலஸ்தீனிய எதிர்ப்பை ஆதரிக்க தெற்கு லெபனானில் ஒரு முன்னணி" அமைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இந்த நோக்கத்திற்காக அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன், அவர் பல உரைகளில் இந்த முன்னணி காஸா மீதான பேரழிவுகரமான போர் முடிவடையும் வரை அயராது விடாமுயற்சியுடன் இருக்கும் என்று சூளுரைத்தார்.

நஸ்ரல்லாஹ் எதிர்ப்பு அச்சின் உண்மையான ஹீரோவாக இருந்தார், மேலும் அவரது மரபு நீதி மற்றும் விடுதலைக்கான போராட்டத்தில் எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் மற்றும் வழிகாட்டும் என்பது நிச்சயம்..

 فَلْيُقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ ؕ وَمَنْ يُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏

மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (குர்'ஆன் 4:74)



No comments:

Post a Comment