Tuesday, December 25, 2018

ஏவுவதற்கு தயார் நிலையில் "தூஸ்தி" செய்மதி

‘Dousti Satellite’ will be launched in March




தெஹ்ரான் ஷரீஃப் பல்கலைக்கழக தொழில்நுட்பத்துறை  வல்லுநர்கள் 150 கொண்ட குழு இந்த செய்மதியையும் அதன் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்தையும் வெற்றிகரமாக அமைத்துள்ளதுள்ளது. மேலும் தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளை வெற்றிகரமாக அணி நடத்தி முடித்துள்ளது.


ஈரான் இஸ்லாமிய குடியரசு விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட "தூஸ்தி" (பாரசீக மொழியில் "நட்பு") செய்மதியினை விண்ணுக்கு ஏவுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று ஈரான் விண்வெளி நிறுவனம் (ISA) தலைவர் முர்தஸா பராரி தெரிவித்துள்ளார்.

எதிரிவரும் 2019 மார்ச் மாத இறுதியளவில் இச்செய்மதியை விண்ணுக்கு ஏவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பாரசீக மொழியில் "நட்பு" என்பதன் அர்த்தம் கொண்ட  "தூஸ்தி " தொலைதூர-உணர்திறன் செய்மதி ஆகும்.

52 கிலோகிராம் எடைகொண்ட இந்த சாதனம் பூமிக்கு 250 கிமீ மற்றும் 310 கிமீ உயரத்தில், குறைந்த பூமி சுற்றுப்பாதை என பொதுவாக அழைக்கப்படும் 2,000 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவில் சஞ்சரிக்கும். இது தொலைதொடர்பு பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட செய்மதியாகும் எனது குறிப்பிடத்தக்கது.


அதே சமயம் 
விஞ்ஞான உற்பத்தியில் ரஷ்யாவையும் சீனாவையும் பின்தள்ளியுள்ளது இஸ்லாமிய ஈரான்...!
ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகில் விஞ்ஞான உற்பத்தியில் 16 வது இடத்தையும், உலக அளவில் துறையில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகள் வரிசையில் 1 வது இடத்தையும் பெற்றுள்ளது.
டெஹ்ரானில் டிசம்பர் 24 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றுவரும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்கான 19 வது கண்காட்சியை ஆரம்பித்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஈரானின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மன்சூர் குலாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


"உலகில் விஞ்ஞான உற்பத்தியில், சீனா மற்றும் ரஷ்யா ஈரானுக்குப் பிறகு பட்டியலில் உள்ளன. ஈரான் பல்கலைக் கழகங்கள் விஞ்ஞானத்தில் பெரும் திறனைக் கொண்டுள்ளன," என குலாமி குறிப்பிட்டார்.
இன்று (24-12-2018) தெஹ்ரானில் ஆரம்பமான ஈரானின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கான 19 வது கண்காட்சி மற்றும் ஆய்வக உபகரணங்கள் மற்றும் பொருட்களின் 6 வது கண்காட்சி பன்னாட்டு நிறுவனங்களையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 20, 2018

யால்டா எனும் "நீண்ட இரவு" பாரசீக பண்டிகை

யால்டா இரவு (Shab e Chelleh)

ஈரானில் பண்டிகைகளுக்குப் பஞ்சமே கிடையாது. இஸ்லாமிய மார்க்கப் பண்டிகைகள், இஸ்லாத்துடன் சம்பந்தம் இல்லாத, தொன்றுதொட்டு வந்த கலாசார பண்டிகைகள் என்று அனைத்தும், இன்றளவிலும் பேணப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் "நீண்ட இரவு" ("ஷாப் ஏ செலேஹ்") பண்டிகையாகும்.  ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 20-21 இரவு அதிநீண்ட இரவாக இருக்கும் இந்த இரவை குடும்ப அங்கத்தவர்கள் ஒன்று கூடி, குதூகலிக்கும் இரவாக, இஸ்லாத்தின் வருகைக்கு முன்னிருந்தே பாரசீக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இவ்விரவில் அனைத்து தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகள் இந்த பண்டிகைக்காக விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உலகெங்கிலும் உள்ள பாரசீக மக்கள், அவர்கள் நாடுகடந்தவர்களாக இருந்த போதும், இவ்விரவுக்காகக் காத்திட்டிருப்பர்.
யால்டா இரவு என்றால் என்ன?
யால்டா என்றால் பிறப்பு என்பதை குறிக்கும். யால்டா இரவு ஒரு அழகான பண்டைய ஈரானிய கொண்டாட்டம் ஆகும். இலையுதிர் காலத்தின் கடைசி இரவு, குளிர்காலத்தை வரவேற்கும் இரவு, வருடத்தின் மிக நீட இரவாக இருப்பதால், அந்த விசேடத்தை அடிப்படையாக வைத்து ஈரானியர்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் பெரும்பாலான பாரசீக மக்கள் சோரோஸ்த்ரிய மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர் என்பது அறிந்த விடயம்.  அப்போதிருந்தே இந்த கொண்டாட்டம் இருந்து வருகிறது.
இந்த இரவு தீய சக்திகளின் ஆதிக்கம் கொண்ட இரவாக, பிரிவு, தனிமை மற்றும் காத்திருப்பு ஆகியவற்றை உருவாக்குகிறது என்றும் அதேவேளை இருளை ஒளி வெற்றிகொள்ளும் தினமாகவும் பண்டைய பாரசீகர்களால் நம்பப்பட்டு வந்துள்ளது என்பதை பழங்கால கவிதைகளினூடாக அறிய முடிகிறது.
ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற மற்ற நாடுகளும் இந்த இரவை மதவேறுபாடின்றி கொண்டாடுகின்றனர்.
யால்டா ஈரானில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது...?
இவ்விரவில் பாரசீக மாக்கள் நீண்ட நேரம் விழித்திருப்பர். உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடுவர்.
அவர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான, குறிப்பாக தாத்தா பாட்டி வீடுகளுக்குச் சென்று வருடத்தின் நீண்ட இரவை  சிரிப்பு, விருந்து, கவிதை  என்று  கழிப்பர். மகாகவி  ஹஃபீஸ் கவிதைகள் மாலை முழுவதும் மணம் வீசிக் கொண்டிருக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்களை சந்தோசப்படுத்துவதாலும் அவர்களது ஆசீர்வாதத்தாலும் குளிர்கால நோய்கள் தாக்காது என்பது அவர்களது நம்பிக்கை.
இவ்விருந்தில் பழங்கள் தாராளமாக பரிமாறப்படும். மாதுளையும் தர்பூசணியும் இல்லாது இப்பண்டிகையை இல்லையெனலாம்.
ஈரானிய மக்களின் வாழ்க்கையில் மகா கவி ஹாபிஸின் கவிதைகளுக்கு முக்கிய இடமுண்டு. ஒருவர் மனதில் ஒன்றை நினைத்து, ஹபீஸின் ஒரு புத்தகத்தைத் திறந்து, அவர்கள் பார்க்கும் முதல் கவிதையானது, நினைத்தது எவ்வாறு  நிறைவேறும் என்பதன் விளக்கம் என்று சிலர் நம்புகின்றனர். ஆகவே யால்டா இரவில் ஒன்று கூடியுள்ள ஒவொருவரும்  ஏதாவது ஒன்றை மனதில் நினைத்து, ஹாபிஸின் கவிதை புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து, அதிலுள்ள முதல் கவிதையினை மூத்த ஒருவரைக் கொண்டு சத்தமாக வாசிக்கச் சொல்வர்.
வேறு நாடுகளில் குடியேறியுள்ள ஈரானியர்கள் ஒன்று கூடி  அவர்களது குடும்பங்களுடன் ஈரானில் தாங்கள் செய்த அதே விஷயங்களை குடியேறியுள்ள நாடுகளில் செய்வர். யால்டா இரவு அவர்களுக்கு மறக்க முடியாததாக ஒன்றாக இருக்கிறது.






Monday, December 17, 2018

உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பு


Contribution of Persian Civilization to World Civilization

உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பை காண்பதற்கு நிச்சயம் நீங்கள் பாரசீக மண்ணுக்கு விஜயம் செய்தே ஆகவேண்டும்.

வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களா? கலாச்சார அம்சங்களா? இயற்கை வனப்புகளா? ஈரான் இஸ்லாமிய குடியரசில் இவற்றுக்கு எந்த பஞ்சமும் கிடையாது. அனைத்தையும் அபரிமிதமாகவே கொண்டுள்ளது.
ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு பயணம் செய்யும் நீங்கள் தவறாது பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றை இங்கே தருகிறோம்

பெர்சிபோலிஸ் (Persepolis)

உலக நாகரீகத்தின் வளர்ச்சியில் பாரசீக நாகரீகத்தின் பங்களிப்பை காண்பதற்கு ஒருகாலத்தில் பாரசீக பேரரசின் தலைநகராகவும் பாரசீக நாகரிகத்தின் பிறப்பிடமாகவும் இருந்த பெர்சிபோலிஸ் நகரத்தை நிச்சயம் நீங்கள் பார்த்தேயாகவேண்டும். இந்நகரத்துக்கு சென்றிராதோர் ஈரானுக்கே செல்லவில்லை என்று சென்றவர் கூறுவர். அவ்வளவு முக்கியத்துவம் மிக்க இடம் அதுவாகும். இவ்விடத்தை உலகின் வாசல் என்றழைப்பர். இது ஈரான், ஷிராஸ் நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.  அது சுமார் 2500 வருடம் தொன்மைவாய்ந்த நகரமாகும். இதனை உலக பாரம்பரிய தலமாக யுனெஸ்கோ 1979 ல் பிரகடனப்படுத்தியது.


நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு (Valley of the Stars)

கேஷ்ம் என்பது இயற்கை வனப்புமிக்க அற்புதமான பிரதேசமாகும். இங்கேதான் நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்தத் தீவு பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் நீரிணையை அண்டியதாக உள்ளது. இது இயற்கையின் பேரெழில் கொஞ்சும் ஒரு சுற்றுலா தளமாயினும் இதன் அழகிய கடற்கரையில் பிக்கினி அணிந்து பவனிவரும் பெண்களைக் காணமுடியாது. வருடாந்தம் பல இலட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு நட்சத்திரங்கள் விழுவதாக அப்பிரதேச மக்களிடம் ஓர் ஐதீகமுண்டு. அதன் காரணமாகவே இவ்விடம் நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு என்று இன்றளவிலும் அழைக்கப்படுகிறது.

சோஹா ஜான்பில்  (Chogha Zanbil)


யுனெஸ்கோவில் பதிவுசெய்யப்பட்ட முதல் ஈரானிய பாரம்பரிய தளம் சோஹா ஜான்பில் ஆகும். இது செங்கற்களாலான பண்டைய கட்டட அமைப்பாகும். கி.மு. 13 ஆம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. புராதன கல்வெட்டுக்கள் இங்கு காணக்கூடியதாக உள்ளன. ஒரு குழந்தையின் பாதம் பதிந்த கல் ஒன்று அடிப்பகுதியில் காணப்படுகிறது. இது பல நூற்றாண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குதஸ்தான் மாகாணத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும்.


பாபாக் கோட்டை (Babak Castle)

பாபாக் கோட்டை, ஈரானின் வடமேற்கில் கலிபார் நகரத்தின் 6 கிமீ தென்மேற்கில் 'கரதாக்' மலைத்தொடரில் உள்ள ஜோம்ஹோர் மலை உச்சியில் அமைந்துள்ளது. இது மிகப்பெரிய கோட்டையாகவும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கும் ஈரானியர்களின் தேசிய சின்னமாக உள்ளது. ஆழமான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட இந்த கோட்டையானது, 2,300-2,600 மீட்டர் (7,546-8,530 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. உயர் இட அச்சம் (acrophobia ) இருப்பவர்கள் தூரத்திலிருந்து அதனழகை ரசிக்கலாம்.


நாஸிர் அல்-முல்க் பள்ளிவாசல் (Pink Mosque)

நாஸிர் அல்-முல்க் பள்ளிவாசல், இது அதன் உட்புற வடிவமைப்பிற்கு கணிசமான இளஞ்சிவப்பு வண்ண ஓடுகள் பயன்படுத்துவதால் இளஞ்சிவப்பு (Pink Mosque) என்றும் அழைக்கப்படுகிறது. அல்-முல்க், ஈரானில் உள்ள ஷிராஸ் நகரில் ஒரு பாரம்பரிய மசூதியாகும். இந்த பள்ளிவாசல் கஜர் வம்ச ஆட்சியின்போது மன்னர் மிர்ஸா ஹசன் அலி (நசீர் அல்-முல்க்) உத்தரவின் பேரில், பாரசீக கட்டிடக் கலைஞர்களான முகம்மது ஹசன் மேமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, முகம்மது ரிஸா காஷி-சாஸே-ஷீராஸி என்பவரால் 1876 ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1888 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

இப்பள்ளிசலுக்குள் நுழைபவர்கள் பலவண்ணக் குழாய்க்குள் (kaleidoscope) நுழைந்தது போன்றதொரு உணர்வை நிச்சயமாகப் பெறுவார். இது ஈரானிலுள்ள மிக அழகான பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.


அன்சாலி லாகூன் (Anzali Lagoon)


வட ஈரானிய மாகாணமான கிலானில், பண்டார்-இ அன்சாலிக்கு அருகிலுள்ள கஸ்பியன் கடற்பகுதியில், அன்சாலி லாகூன் ஒரு கடற்கரைக்காயல் (lagoon) ஆகும். இவ்விடம் பறவை பட்சி தரிசனத்துக்கு ஒரு சொர்க்கபுரியாகும். அன்சாலி லகூனில் ஒரு படகுச் சவாரி ஊடாக பல்வேறு பறவையினாலும் கட்டப்பட்ட அந்தரத்தில் தொங்கும் கூடுகள் காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாகும்.


சாலூஸ் சாலை (Chalus Road)
சாலூஸ் சாலை (சாலை 59 என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஈரானின் தலைநகரான தெஹ்ரானின் புறநகர் பகுதியான சாலூஸ் இல் அமைந்துள்ள அழகிய, நிலக்கீல் சாலையாகும். சாலஸ் சாலை ஈரானில் மிகவும் அழகிய சாலைகளில் ஒன்றாகும். பாதை இருமங்கிலும் காடுகளால் சூழப்பட்டுள்ள, கரடி, நரி, ஒட்டகைச்சிவிங்கி போன்ற விலங்குகளின் வாழ்விடமாகும். குளிர்காலத்தில், அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக இப்பாதை சில சமயங்களில் மூடப்படுவதும் உண்டு.
மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள சாலை, பிரமிக்கவைக்கும் அழகிய காட்சிகள், சாலையின் வடிவமைப்பு பல வளைவுகளைக் கொண்டது. இரவிலும் பனிப்பொழிவு சமயங்களிலும் ஆபத்தானதும் கூட. கராஜ் என்ற இடத்திலிருந்து காஸ்பியன் கடலை நோக்கி, தெற்கே வரும்போது, சாலை தொடக்கத்தில், செங்குத்தான பாறைகளில், வளைந்து நெளிந்து செல்வது  மனதைவிட்டகலா ஒரு திகிலான அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம்.


நாக்ஷ்-இ ஜஹான் சதுக்கம் (Naqsh-e Jahan Square)

நாக்ஷ்-இ ஜஹான் சதுக்கம்: மைதான் இமாம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈரான், இஸ்ஃபஹான் நகரின் மையத்தில் இது அமைந்துள்ளது. 1598 மற்றும் 1629 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இது ஒரு முக்கியமான வரலாற்றுத் தளமாகும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
ஒரு காலத்தில் ராஜப் பிரதானிகளின் போலோ விளையாட்டு களமாகவும் இருந்துள்ள இதன் விஸ்தீரணம் 160 மீட்டர் (520 அடி) அகலம் 560 மீட்டர் (1,840 அடி) நீளமான (89,600 சதுர மீட்டர் (964,000 சதுர அடி) ஆகும்).
இந்த சதுக்கம் சஃபாவித் கால கட்டடங்களால் சூழப்பட்டுள்ளது. சதுக்கத்தின் கிழக்குப் பகுதியில் ஷேக் லுத்புல்லாஹ் மசூதியும் மேற்குப் பகுதியில் அலி கப்பு அரண்மனையும் தெற்குப் பகுதியில் ஷா மசூதியும்  வடக்குப் பகுதியில் பெரிய சந்தையும் அமைந்துள்ளன. வெள்ளிக்கிழமை ஜும்மாவும் இம்மைதானத்திலேயே வாராந்தம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வனைத்தையும் சுற்றிப்பார்ப்பதாயின் ஒருநாளின்  கணிசமான நேரத்தை செலவழிக்க வேண்டும். என்றாலும், நிச்சயமாக சலிப்புத்தட்டாது.






சுஷ்தார் நீரமைப்புத் திட்டம்  Shushtar Historical Hydraulic System


ஈரான் குஸஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சுஷ்தார் நீரமைப்புத் திட்டம். இது ஒரு சிக்கலான முறையில் அமைக்கப்பட்டுள்ள வியத்தகு நீரமைப்புத் திட்டம் ஆகும். 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இது பதிவு செய்யப்பட்டது. மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் பதிவு செய்யபட்டுள்ள ஈரானின் 10 வது கலாச்சார பாரம்பரிய தளம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷ்தார் நீரமைப்பின் உள்கட்டமைப்பானது நீராலைகள், அணைகள், சுரங்கங்கள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. கி.மு.5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுஷ்தர் நீர்ப்பாசன அமைப்பு, ஒரு பழங்கால வரலாற்று, பொறியியல் அற்புதமாகும். இதன் முழுமையான அழகை கண்டு ரசிக்க அருகிலுள்ள மலைமீது ஏறியே ஆகவேண்டும். நிச்சயம் பிரமித்துப் போவீர்கள்.