Thursday, May 30, 2019

முஸ்லிம் உலகின் ஒற்றுமை ஊடாக பைத்துல் முகத்தஸ் மட்டுமல்ல, முழு பலஸ்தீனினதும் விடுதலை சாத்தியமானது...!


Quds Day - Palestine Liberation Day  

பைத்துல் முகத்தஸ் என்பது உலக முஸ்லிம்களின் தன்மானச் சின்னம், அதனை விடுவிப்பது உலக முஸ்லிம்கள் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

குத்ஸ் எனும் இந்த புனித பிரதேசத்தை சியோனிஸ்டுகள் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். பல தசாப்த காலமாக பைத்துல் முகத்தஸின் புனிதத்தை இந்த நாசகாரிகள் கெடுத்து வருகின்றனர். இந்தப் புனித பிரதேசத்தை விடுவிப்பதற்கு எல்லா முஸ்லிம் நாடுகளும் அரபு நாடுகளும் முயற்சித்து வந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆயினும் இன்றைய நிலை தலைகீழாக மாறியுள்ளது.

அரபுத் தலைவர்கள் எப்போது அமெரிக்க அடிமைகளானார்களோ, இந்தப் புனிதத் தலம் விடுவிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் படிப்பட்டியாக குறையத் துவங்கியது. "பலஸ்தீன் விடயமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சொல்வதைக் கேளுங்கள் அல்லது வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று சவூதி முடிக்குரிய இளவரசர் பின் சல்மான் பகிரங்கமாக கூறும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.

இன்று முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையற்ற தன்மையும் ஏகாதிபத்தியவாதிகள் ஏவல்களுக்கு அடிபணியும் இந்த மோசமான நிலைமையும், துரதிருஷ்டவசமாக, எதிரிகளுக்கு அவர்களது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வாய்ப்பை வழங்கியுள்ளது என்பது வெளிப்படை.

இந்த நாட்களில், "நூற்றாண்டின் உடன்படிக்கை" என்ற ஒன்று பற்றிய செய்திகளை நாங்கள் கேட்கிறோம். இஸ்ரேலியர்களுக்கு வேண்டிய விதத்தில் அவமானகரமான தீர்வொன்றை பாலஸ்தீனர்கள் மீதும் அரபியர்கள் மீதும் திணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்கிறார்.

அரேபிய நாடுகளின் சில தலைவர்கள் இந்த பாதையில் அவருடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது புதிதல்ல. சில நாடுகளின் இதுபோன்ற இரகசிய ஆதரவும் துரோகத்தனமும் கடந்த காலத்திலும் இருந்துள்ளது.

எனினும், பலஸ்தீனை விழுங்கி ஏப்பம் விடும் இவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது. துணிச்சல்மிக்க பாலஸ்தீனர்கள் அதற்கு ஒருபோது இடமளிக்க மாட்டார்கள். இவர்களது இந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று உணர்த்துவதற்காக இன்திபாதா என்ற எழுச்சியை பலஸ்தீன  இளைஞர்கள் மேற்கொண்டதை நாம் அறிவோம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசும், அதன் மீது எத்தனை அழுத்தங்கள் விடுக்கப்பட்ட போதிலும், ஒருபோதும் பலஸ்தீன் அபகரிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை.

இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் 1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து உடனடியாகவே இஸ்ரேலுடன் ஷாவின் அரசாங்கம் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்து,  அங்கிருந்த இஸ்ரேலிய தூதரகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, அவ்விடத்தை பலஸ்தீன் தூரககமாக மாற்றினார். அதுமட்டுமல்லாமல், பைத்துல் முகத்தஸை விடுவிக்கும் முக்கியத்துவத்தை உலக முஸ்லிம்களுக்கு உணர்த்தும் முகமாக, புனித ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை "சர்வதேச குத்ஸ் தினம்" என்றும் பிரகடனப்படுத்தினார். அவர் இவ்வாறு பிரகடனம் செய்து நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டது.

இந்த நாற்பது ஆண்டுகளில், முஸ்லிம்களின் முதல் கிப்லாவின் விடுதலைக்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் அதற்காக இஸ்லாமிய சமுதாயத்திற்கான வழிகாட்டுதல்களை ஆராய்ந்து வழங்குவதற்கும் இந்த குத்ஸ் தினம் வருடாவருடம் கௌரவிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இத்தினம் இஸ்லாமிய உணர்வு கொண்ட அனைத்து மக்களாலும் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 ஆண்டுகால  போராட்ட வரலாறு ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை கண்டிருந்தபோதும் தெற்கு லெபனானின் விடுதலை, காசாவின் விடுதலை போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் அடைந்துள்ளது என்பது மட்டுமல்லாமல் லெபனான் மீது சியோனிச ஆட்சி மேற்கொண்ட பல தாக்குதல்கள் ஹிஸ்புல்லாஹ் வீரர்களினால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டும் உள்ளது என்பதையும் மறத்தல் ஆகாது.

பலஸ்தீன் விடுதலை போராட்ட வீரர்களை குழுக்களாக பிரித்து, உள்முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சவுதி போன்ற நாடுகளின் தீய முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. வெவ்வேறு பிரிவாக செயல்பட்டுவந்த அனைத்து குழுக்களும் ஒற்றுமையின் பலத்தை நன்றாகவே உணர்ந்துள்ளன. அனைத்து பலஸ்தீன மக்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது, இஸ்லாத்தின் எதிரிகள் எதிர்பாராத மிகப்பெரிய தோல்வியாகும். இந்தத் தோல்வி, இஸ்ரேல் சியோனிச ஆட்சியின் அச்சுறுத்தி காரியம் சாதிக்கும் போக்கை மாற்றியமைக்கச் செய்துள்ளது. இஸ்ரேல் அடிக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு அழுது புலம்பிக்கொண்டிருக்காமல், திருப்பியடிக்கும் வல்லமையை ஹிஸ்புல்லாஹ்வும் ஹமாஸும் பெற்றுள்ளது பாரிய முன்னேற்றமாகும். பலஸ்தீன் விடுதலை போராளிகளின் அர்ப்பணத்துடனான இந்த தீரமிக்க, அயராத போராட்டம் காரணமாக பல முஸ்லிம் நாடுகளின் எல்லைகள் மாற்றமடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது நிதர்சனமாகும்.

பலஸ்தீனை விடுவிக்கும் சக்தி உலக முஸ்லிம்களிடம் நிச்சயமாக உண்டு என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இஸ்லாமிய உலகின் ஒற்றுமையே அதற்கான ஒரே வழி. ஆனால் அதற்கான விருப்பம் அரபுலகத் தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பலஸ்தீன் விடுதலை போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹாமாஸ் இயக்கங்களை சவூதி அரேபியா பயங்கரவாத இயக்க பட்டியலில் இணைத்துள்ளது என்பது சவுதியின் அமெரிக்க இஸ்ரேலிய அடிமைத்தனத்தை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சியோனிஸ்ட்டுகளின் அகண்ட இஸ்ரேல் கனவுக்கு பெரும் தடையாக இருப்பது எமது விடுதலை போராட்ட வீரர்களாகும் என்பதை இந்த அரபிகளால் உணர முடியாமல் இருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.

இவ்விடயத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிலைப்பாடு முற்றிலும் வித்தியாசமானது. பைத்துல் முகத்தஸை அது முஸ்லிம் உலகின் தன்மானச் சின்னமாக கருதுகிறது. முஸ்லிம் உலகின் ஒற்றுமை ஊடாக பைத்துல் முகத்தஸ் மட்டுமல்ல, முழு பலஸ்தீனினதும் விடுதலை சாத்தியமானது என்று ஈரான் உறுதியாக நம்புகிறது.

"முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரை ஊற்றினாலே போதும் இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்" என்று இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் அன்றே கூறினார்கள்.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சி, இப்பிராந்தியத்தில் நீதி அடிப்படையிலான நிரந்தர சமாதானத்தைத் ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய நாட்டின் உரிமைகளை மீட்கும் முயற்சியில் நீண்டகால நடைமுறைவாத மூலோபாயத்தை அமைத்துத் தந்துள்ளது. அதுதான் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை யாகும்.

எம்மத்தியில் உள்ள வேறுபாடுகளை களைந்து செயல்படுவோமேயானால், எம் எதிரியை அழிப்பதற்கு அணுகுண்டு அவசியமில்லை; ஆளுக்கு ஒரு வாளி தண்ணீரே போதும்.

இவ்வாறு ஒன்றுபடுவோமாயின், இஸ்லாமிய உலகு எந்தவொரு கிழக்கத்திய அல்லது மேற்கத்திய அழுத்தத்துக்கும் அடிபணியாது, உண்மையிலேயே விடுவிக்கப்பட்ட வாழ்க்கையை நோக்கமாகக் கொண்ட பெரிய புரட்சிக்கு வழிவகுக்கும் என்பது இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் கொள்கை வழிகாட்டலாகும்.

இன்று, ஈரானிய இஸ்லாமிய குடியரசு, பலஸ்தீன் விடுதலை போராட்டத்தில், அதன் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமேனெய் அவர்களின் வழிகாட்டலில் முன்னணியில் உறுதியாக நிற்கிறது.

ஆகவே, எம்மத்தியில் உள்ள வேறுபாடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, உலக முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைய வேண்டியது இஸ்லாமிய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.


Wednesday, May 22, 2019

ஈரான் ஒருபோதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது : ருஹானி


Iran will never submit to threats - Rouhani
"முதிர்ச்சியடையாத கற்பனையில் உழலும் அவர்கள்ஈரானின் மகத்துவத்தை உடைக்க முடியும் என்று நினைக்கின்றார்கள்இந்த சோதனையான நேரத்திலும்பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் ஒவ்வொரு நாளும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது," 

நாட்டின் வடமேற்கு மாகாணமான மேற்கு அஜர்பைஜானுக்கு  விஜயமொன்றை  21 மே, 2019 அன்று மேற்கொண்ட ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி  அங்கு குழுமியிருந்த மக்கள் முன் உரையாற்றுகையில்: "ஈரான் மீது அழுத்தங்கள் இருப்பினும், அச்சுறுத்தல்களுக்கும் அட்டூழியங்களுக்கும் ஈரானிய இஸ்லாமிய சமூகம் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை" என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.
மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில், எட்டு அபிவிருத்தித் திட்டங்களை ஈரானிய ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார், அவற்றில் இரண்டு அணைக்கட்டு திட்டங்களாகும்.
"முதிர்ச்சியடையாத கற்பனையில் உழலும் அவர்கள், ஈரானின் மகத்துவத்தை உடைக்க முடியும் என்று நினைக்கின்றார்கள், இந்த சோதனையான நேரத்திலும், பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் ஒவ்வொரு நாளும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது," என்றார்.
"மேலும் மகத்துவமிக்க ஈரான் இஸ்லாமிய குடியரசை தங்கள் அழுத்தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று கணக்கிடுபவர்களுக்கும்  இது வெள்ளை மாளிகைக்கும்  மிகவும் தீர்க்கமான பதிலிறுப்பாகும் ... " என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஈரான் மீது அச்சுறுத்தல் விடுப்பதும் பிறகு அதிலிருந்து விலகிக்கொள்வதும் அவர்களுக்கு வாடிக்கையாகி போய்விட்டது.
"ஈரானின் மக்கள் ஒரு (அமெரிக்க) தாக்குதலையிட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இரண்டு மணி நேரம் கழித்து, அவர்களின் உள்முரண்பாடு காரணமாகவும் பென்டகனின் அழுத்தத்தின் காரணமாகவும் "ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை வாஷிங்டன் ஆரம்பிக்கவில்லை" என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுகின்றார்" என்றும் அவரது உரையில் ரூஹானி சொன்னார்.
ஈரானுடனான போருக்கு செல்ல விரும்பவில்லை எனினும் தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியதாக செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.   
"ஈரானிய தேசத்தின் சக்தி இதுதான், சுய நம்பிக்கையுடைய எமது தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க இந்த எதிரிகளால் முடியாது" என்றும் ரூஹானி குறிப்பிட்டார்.
ஈரானுடனான பன்முக அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டுவிட்டு கடந்த ஆண்டு  அமெரிக்கா வெளியேறிய பின், அந்த உடன்படிக்கையின் கீழ் நீக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டுவந்தான் மூலம் அமேரிக்கா அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. அதே நேரம் ஈரானை அச்சுறுத்தும் நோக்கில், தனது பிராந்திய நலனுக்கு ஈரான் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்று கூறி, அமெரிக்கா அதனது யுத்தக் கப்பலையும் குண்டுவீச்சு விமானங்களையும் பாரசீக வளைகுடா பிரதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
"ஈரான் (எம்முடன்) போரிட நாடினால், அது ஈரானின் உத்தியோகபூர்வ முடிவாக இருக்கும்" என்று திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ட் அவரது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின், உடனடியாகவே தனது நிலையை மாற்றிக்கொண்டு  "பிராந்திய நலனுக்கு ஈரான் பாதிப்பினை ஏற்படுத்துமாயின்" என்று திருத்தி செய்தி வெளியிடுகின்றார். இதுவரை எதுவும் நடக்கவும் இல்லை, நடக்கும் என்ற அறிகுறியும் இல்லை, என்றும் ஜனாதிபதி ரூஹானி தெரிவித்தார்.

===========================

அமெரிக்கா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றது..!


அதேசமயம்ஈரானிய வெளியுறவு மந்திரி முகம்மது ஜவாத் ஸரீப் "இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் இராணுவ இருப்பை அதிகரிப்பதன் மூலம் மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடுகின்றது" என்று எச்சரித்தார்.

சி.என்.என் வலைப்பின்னலுடன் செவ்வாயன்று (மே 21, 2019) ஒரு பிரத்யேக நேர்காணலில் ஜவாத் ஸரீப்அமேரிக்கா மத்தியகிழக்கு பிரதேசத்துக்கு  'ஆபிரகாம் லிங்கன்விமானம் தாங்கி போர்கப்பலுடன் B-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் பேட்ரியட் ஏவுகணைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய படைப்பிரிவை அனுப்பியதையிட்டு அமெரிக்காவை குற்றம் சாட்டினார்.

"இந்த பாரிய இராணுவ பொருட்கள் அனைத்தையும் ஒரு சிறிய நீர்வழியாக கொண்டு செல்கையில் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இதுவிபத்துக்களில் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கும் பிரதேசமாகும். இதில் தீவிர கவனம் தேவை. ஓர் ஆபத்தான விளையாட்டை அமேரிக்கா விளையாடப் பார்க்கிறது" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஈரான் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்று கூறிய அவர் "எந்த அசம்பாவிதத்தையும் ஆரம்பிக்கும் நாடாக ஈரான் இருக்காதுஆயினும் எம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்பதை ஆணித்தரமாக கூறினார். "இந்த பதற்ற அதிகரிப்பு சகலரையும் மோசமாக பாதிக்கும்" என்றும் தெரிவித்தார்.



Tuesday, May 14, 2019

மகோன்னத பாரசீக கவிஞர் பிர்தவ்ஸி


The Great Persian Poet Ferdowsi

ஹக்கிம் அபுல் காஸீம் பிர்தவ்ஸி டூஸி 935 ஆம் ஆண்டில், கொராஸானில் டூஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். அவர் தனது பருவ வயதில் பெரும் பகுதியை அவரது "ஷானாமே" (மன்னர்களின் காவியம்) எனும் மாபெரும் காவியத்தை வரைவதிலேயே செலவிட்டார்.

இந்த காவியம், 7ம் நூற்றாண்டில், பாரசீகம் அரபுகளால் வெற்றிகொள்ளப்பட்ட பின், அருகிவந்த பாரசீக கலாச்சார மரபுகளை புத்துயிரூட்டுவதற்கான தூண்டுதல்களை மேற்கொள்வதற்கு முன்னிலைவகித்த, கொராஸானின் ஸமானிய இளவரசர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். 

பிர்தவ்ஸியின் வாழ்நாளின் போது இந்த ஸமானிய வம்சம் துருக்கிய கஸ்னவி வம்சத்தினரால் வெற்றிகொள்ளப்பட்டதாகவும் புதிய ஆட்சியாளர்கள் பிர்தவ்ஸயின் ஆக்கத்தின்பால் அக்கறை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக பிர்தவ்ஸி புறக்கணிக்கப்பட்டு, வறுமையில் வாடி, 1020ல் உயிர் நீத்தார் என்று பல பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஆயினும் அவர் வடித்த காவியம் இன்றளவிலும் பெரும் புகழுடன் உயிர்வாழுகிறது.

பண்டைய பாரசீக ஆட்சியாளர்களின் புகழை ஓங்கச்செய்யும்  விதத்தில் இயற்றப்பட்ட பிர்தவ்ஸியின் ஷானாமே காவியம், புகழ்பெற்ற உலக காவியங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

அவரது கவிச்சொல்லும் பாங்கு, வாசகர்களில் பழங்கால காலத்தில் சஞ்சரிப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களை சம்பவங்களின் அங்கமாகவே மாற்றிவிடுகிறது. இந்த அற்புதமான காவியத்தை நிறைவுசெய்ய பிர்தவ்ஸி 30 ஆண்டுகளை செலவுசெய்தார். 

ஷானாமே ஈரான் இஸ்லாமிய குடியரசின் தேசிய காவியமாகும். காவியத்தின் படைப்பாளரான பிர்தவ்ஸி பாரசீக கவிஞர்களில் மகோன்னதமானவராக கருதப்படுகின்றார்.

ஷானாமே எனும் காவியம் கவி வரிகளில் புதைந்து கிடைக்கும் ஈரானின் புகழ்பெற்ற கடந்த கால வரலாறாகும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பாரசீகர்கள் பிர்தவ்ஸியின் மகத்துவமிக்க கவி வரிகளை பெருமையுடன் பாடியும் பாடக் கேட்டும் வருகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தாலும், இந்த காவியம் சராசரி ஈரானியர்களாலும் புரிந்துகொள்ளத்தக்கதாக, சிறு அரபு மொழி கலப்புடன், தூய பாரசீக மொழியில் உள்ளது அதன் விசேடமாக அம்சமாகும்.

சரித்திராசிரியர் நிஸாமியின் ஆய்வின் படி, "பிர்தவ்ஸி ஒரு நில சொந்தக்காரராய் இருந்து, அதிலிருந்து நிறைய வருமானம் பெற்று  ஒரு வசதியான வாழ்க்கையை ஓட்டிவந்தார். அவருக்கு ஒரே ஒரு மகள். திருமணப் பரிசாக மக்களுக்கு பெறுமதியான எதையாவது வழங்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிதையில் கைவைத்தார். அவரை அறியாமலே அதற்கு 30 ஆண்டுகள் கடந்து சென்றன" என்று குறிப்பிடுகின்றார்.

ஷானாமே காவியம் கிட்டத்தட்ட 60,000 ஈரடி கவிதைகளைக் கொண்டுள்ளது. கல்விக்கான பிரதான மொழியாக அரபு மொழி இருந்த அக்காலகட்டத்தில், பிர்தவ்ஸி பாரசீக மொழியை பயன்படுத்தி "இதன் மூலம் பாரசீக மொழி புத்துயிர் பெறுகிறது" என்று குறிப்பிடுகிறார்.

கடைசியாக 1010 ஆண்டளவில் ஷானாமேவை நிறைவுசெய்து, அந்த நேரத்தில் குராஸானின் தலைவராக இருந்த, கஸ்னவி வம்சத்தின் புகழ்பெற்ற சுல்தான் மஹ்மூத் அவர்களிடம் ஒப்படைத்தார். இதற்காக அவர் சுல்தான் மஹ்மூதிடம் இருந்து பெரும் பரிசை எதிர்பார்த்தார். ஆட்சியாளர் வழங்கியதோ வெறும் 20000 டிர்ஹம் மட்டுமே. இது பிர்தவ்ஸிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. தனது அதிருப்தியை வெளிக்காட்ட கிடைத்த பணத்தை பொது குளியலறை நடத்துநருக்கும் வெளியே பானங்கள் விற்றுக்கொண்டு இருந்தவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இது ஆட்சியாளரின் காதை எட்டியிருக்கும், தாம் பழிவாங்கப்படலாம் என்று கருதிய பிர்தவ்ஸி, அங்கிருந்து வெளியேறி, சுல்தானின் கோபத்திற்குப் பயந்து, ஹெராட் நகரில் சுமார் 6 மாதகாலம் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பிறகு, மஸந்தரானுக்கு சென்று, ஸசானிய வம்சாவளியை சேர்ந்த செபாபாத் ஷஹ்ரியாரின் மாளிகையில் தஞ்சமடைந்தார்.

இங்கிருந்த காலத்தில் பிர்தவ்ஸி 100 நையாண்டி கவிதைகளை புனைந்து, அவற்றையும் ஷானாமேவின் தொடக்கத்தில் இணைத்து, ஷஹ்ரியார் அவர்களுக்கு அர்ப்பணித்தார். இதன்போது ஷஹ்ரியார் இந்த நையாண்டி கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் 1000 டிர்ஹம் வீதம் தாமே வாங்கிக்கொள்வதாகவும், அவற்றை ஷானாமே வில் இருந்து நீக்கிவிடவும் கோரியுள்ளார். மேலும் சுல்தான் மஹ்மூதுக்கு அர்ப்பணிக்கப்பட்டது அப்படியே இருக்கட்டு என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்என்று சரித்திராசிரியர் நிஸாமி குறிப்பிடுகின்றார்.

எனினும் இந்த நையாண்டி கவி வரிகள், அதன் இயல்தன்மை மாறாது, இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.


ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதியை பிர்தவ்ஸி தினமாகவும் தேசிய பாரசீக மொழி தினமாகவும் கொண்டாடி வருகிறது. இத்தினம் ஈரானியர்களுக்கு ஒரு முக்கிய கலாச்சார தினமாக கருதப்படுகிறது. 
பாரசீக மொழி கலைக்கழகம் மற்றும் ஈரான் தேசிய நூலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஸஅதி பவுண்டேஷன் நிறுவனம் மூன்றாவது முறையாக இவ்வருடமும் மாநாடொன்றை நடாத்துகிறது. இம்மாநாடு மே மாதம் 15ம் திகதி தெஹ்ரானில் இடம்பெறுகிறது.

Wednesday, May 8, 2019

ரமழான் வழங்கியுள்ள வாய்ப்பை தவறவிடாதீர்கள் - இமாம் காமனே


Ramadan a great opportunity - Imam Khamane'i

சிறப்பான ரமழான் மாதம் அதன் அனைத்து அருள்களையும் ஆன்மீக அழகினையும் சுமந்தவண்ணம் மீண்டும் ஒருமுறை எம்மை வந்தடைந்துள்ளது. ரமழான் மாதம் ஆரம்பிக்கு முன் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த முக்கியமான, உயர்ந்த மற்றும் அருமையான ஆன்மீக சூழலுக்குள் நுழைவதற்கு மக்களை தயார் படுத்துபவராக இருந்தார்கள். "அனைத்து அருள்களையும் சுமந்தவண்ணம் இறைவனின் மாதம் உங்களிடம் வந்துள்ளது".

சில அறிவிப்புகளின் படி, இந்த மாதத்தின் அருள்களை முஸ்லிம்கள் பூரணமாக அடைத்துக்கொள்ளும் பொருட்டு, ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷாபான் மாதத்திலேயே மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஷாபான் மாத இறுதி வெள்ளிக்கிழமை உரையில் ரமழானின் மாண்பு பற்றி விபரமாக எடுத்துரைப்பார்கள்.

ரமழான் மாதத்தை ஒரு வசனத்தில் விவரிப்பதாயின் அதனை வாய்ப்புகளின் மாதம் என்று குறிப்பிடலாம். இந்த மாதத்தில், உங்களுக்கும் எனக்கும் முன்னால் பல வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை சரியான வழியில் பயன்படுத்துவோமாயின், ஒரு பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த  வளமொன்று எமக்கு கிட்டும். இது தொடர்பாக இன்னும் கொஞ்சம்  விளக்க விரும்புகிறேன்.

இந்த மாதம் முழுவதும் நாம் இறைவனின் அருள் மழையில் திளைக்க  அழைக்கப் பட்டிருக்கிறோம்.

இந்த உன்னதமான மகிழ்ச்சி கொண்டாத்தில் அனைத்து மக்களுக்கும் கலந்துகொண்டு, பயனடைய வேண்டும் என்று கட்டாயமில்லை, அவ்வாறு கட்டாயப்படுத்தப்படவுமில்லை. இதில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.

இறைவனின் இந்த அழைப்பிற்கு செவிசாய்க்காத சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களது கவனம் அனைத்தும் இவ்வுலகுக்கான பொருள் தேடுவதிலேயே இருக்கிறது. ரமழான் வருவதும் போவதும் அவர்களுக்குத் தெரிவதில்லை. மிகவும் முக்கியமான அழைப்பொன்றை ஏற்க அவர்களால் முடியவில்லை, அதில் பங்கேற்க அவர்களுக்கு நேரமில்லை, அழைப்பிதழைக் கூட அவர்கள் பார்ப்பதில்லை. இந்த அறியா மக்கள் இறை அருளை அவர்களாகவே இழக்கின்றனர்.

சிலர் இத்தகைய கொண்டாட்டமொன்று  இருப்பதை அறிவார்கள், ஆனால் அவர்கள் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்கள்தான் கருணைமிக்க அல்லாஹ்வின் அருளில் இருந்து தூரமாக்கப்பட்டவர்கள். இவர்கள் நோன்பு நோற்காது, புனித குர்ஆனை ஓதாது, ரமழான் மாதத்துக்குரிய விசேட தொழுகைகளை மற்றும் பிரார்த்தனைகளை செய்யாது, சாக்குபோக்கு கூறிக்கொண்டு, தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்து கொண்டவர்களாகும். முஸ்லிம்கள் - நம்மைப் போன்ற மக்கள் - இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள், எனினும் ஒரு சிலரைத் தவிர, அனைவரும் அதன் முழுப்பலனையும் அடைந்து கொள்வதில்லை.

ரமழான் மாதத்தில் பசி, தாகத்தினால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டிருப்பதே இந்த புனித கொண்டாட்டத்தின் மிகப் பெரிய சாதனையாகும். நோன்பிருப்பதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனால்  ஒருவனின் உள்ளத்தில் ஏற்படும் ஆன்மிகம் மற்றும் அறிவொளி இந்த மாதத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று கூறலாம். பல மக்கள் நோன்பிருப்பதன் மூலம் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து பயனடைகின்றனர். புனித ரமழான் மாதத்தில், கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு நோன்பிருப்பதுபோல் இந்த மக்கள் குர்ஆனிய போதனைகளையும்  சரியான முறையில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் புனித குர்ஆனைப் ஓதும்போது ஆழமான சிந்தனையில் ஈடுபடுகின்றார்கள். பகலில் நோன்பு நோற்ற நிலையிலும், இரவில், குறிப்பாக, நடு இரவில், புனித குர்ஆனை ஓதுகையில், அதனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். புனித குர்ஆனுடன் இவ்வாறு தொடர்பை அதிகரிக்கையில், இறைவனிடமிருந்து நேரடியாக கட்டளைகளை பெறுவது போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஞானமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இத்தகைய குர்ஆன் வாசிப்புகளில் இருந்து பெறும் அனுபவத்தை சாதாரண சூழ்நிலையில் பெற முடியாது. தவிர, அவர்கள் அல்லாஹ்வுடன் பேசும் உணர்வைப் பெறுகையில்,  அவனது கட்டளைகளை நேரடியாக பெறுவது போன்று உணர்கையில் அவனது உள்ளத்தை அல்லாஹ் விரிவடையச் செய்கின்றான்.

மேலும் அவர்கள் ரமழான் மாதத்தின் விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றனர். அபு-ஹம்ஸா அல்-துமலி துஆவையும் மேலும் அதுபோன்ற துஆக்களையும் ரமழான் மாதத்தின் இரவிலும் பகலிலும் அதிகாலையிலும் ஓதும்போது, இறைவனிடம் நேரடியாக வேண்டுவது போன்ற உணர்வைப் பெறுவீர்கள். இறைவனிடம் பிரார்த்திப்பது என்பது  உண்மையில் இறைவனை நெருங்கி வருதல் ஆகும். இவற்றின் மூலமும் இவர்கள் பயனடைகின்றனர். எனவே, இந்த புனித மாதத்தின் அனைத்து அருளையும் அவர்கள் பெறுகின்றனர்.

பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது. அதாவது, இந்த பிரார்த்தனைகள், துஆக்களை விட அது முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதத்தில் இந்த மக்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

அமீருல் முஃமினீன் அலீ இப்னு அபூதாலிப் (அலை) அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் "அமலில் சிறந்தது எது?" என்று வினவுகிறார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "பாவங்களில் இருந்து தவிர்ந்துகொள்ளுதல்" என்று கூறியதாக ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவங்களைத் தவிர்ப்பது இஸ்லாமிய கடமைகளை விட அதிக முக்கியத்துவமிக்கதாகும். இது ஒருவரின் இதயத்தையும் ஆன்மாவையும் கறைபடுத்துவதை விட்டும் தடுக்கிறது. இந்த மக்கள் பாவங்களையும் தவிர்ப்பார்கள். எனவே, புனித ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல் என்பது என்பதன் அர்த்தம் உணவை தவிர்த்தல், பரிசுத்த குர்ஆனைப் ஓதுதல், துஆ மற்றும் திக்ர் ஆகியவற்றில் ஈடுபடுவதோடு, பாவங்களை தவிர்த்தல் என்பதுவும் அதில் அடங்கும். இவையனைத்தும் ஒன்று சேரும் போதே ஒருவன் இஸ்லாம் விரும்பும் ரமழான் இலக்கை நெருங்குகின்றான்.

இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்போது, நம் இருதயம் பகை உணர்வை நீக்கி, தியாகம் செய்வதற்கான பக்குவத்தைப் பெற்றிருக்கும்.  ஆத்மா புத்துயிர் பெற்று ஏழைகளுக்கும் வசதி குறைந்தோருக்கும் உதவி செய்வதற்கு மனதை இலகுபடுத்தும். மற்றவர்களின் நன்மைக்காக எமது செல்வங்களில் சிலவற்றை தியாகம் செய்வதற்கு மனமிளகும். ரமழான் மாதத்தில் குற்றங்கள் குறைந்து, நல்ல செயல்கள் அதிகரிப்பதற்கான காரணமும் அதுதான். இந்த மாதத்தில், சமுதாயத்தில் இருக்கும் மக்கள், மற்ற காலங்களை விடவும், ஒருவரையொருவர் மிகவும் கருணை கண் கொண்டு பார்க்கிறார்கள். இறைவன் வழங்கியிருக்கும் இந்த ரமழான் அருளுக்கு நன்றி.

ரமழான் மாதத்தைக்கொண்டு பலர் பயனடைகிறார்கள்; ஆனால் பலர் ரமழானின் ஓர் அம்சத்திலிருந்து நன்மை பெற்றுக்கொள்ளும் அதேவேளை மற்றுமோர் அம்சத்தில் பாவத்தையும் தேடிக்கொள்கின்றனர். ஒரு முஸ்லிம் இந்த உன்னதமான மாதத்தில் இறைவனின் அருளை பெற முயற்சிக்க வேண்டும். ஒழுக்கக்கேடான செயல்களில் இருந்து மீளவேண்டும். சிறுபாவமோ அல்லது பெரும்பாவமோ அவற்றுக்கு இறைவனிடம் மனமுருகி மன்னிப்புக் கோரவேண்டும். நாம் எம்மையும் எமது மனங்களை அசுத்தங்களை விட்டும் தீய எண்ணங்களை விட்டும் தூய்மைப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமானது. மனம்திருந்தி, பாவமன்னிப்பு கேட்பதன் மூலம் இதனை சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.

துஆக்களில் சிறந்தது மனம்திருந்திய நிலையில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரலாகும் என்று பல ஹதிஸ்கள் பதியப்பட்டுள்ளன. முன், பின் பாவங்கள் அனைத்தை விட்டும் தூய்மைப்படுத்தப்பட்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாவமன்னிப்பு கோருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். நம்மைப் போன்ற மனிதர்கள் பாவம் செய்பவர்களாகவே  இருக்கின்றோம். மனிதரில் உள்ள மிருக உணர்வுகள் எம்மை பாவம் செய்யத் தூண்டுகின்றன. அவை வெளிப்படையான பாவங்கள்.

அநேகர் பாவமன்னிப்பு கோருவது, அவர்கள் பாவங்கள் செய்துவிட்டார்கள் என்பதால் அல்ல; ஒர் இஸ்லாமிய கடமையை செய்யத் தவறிவிட்டோம் என்பதற்காகவே பலர் பாவமன்னிப்பு கோருகின்றனர். மேலும் இஸ்லாமிய கடமைகளை தவறாது நிறைவேற்றும் பலரும் எம்மத்தியில் உள்ளனர்; அவர்களும் பாவமன்னிப்பை வேண்டுகின்றனர். மனிதரில் இயல்பாக உள்ள அலட்சியப் போக்கினால் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அவ்வாறு செய்கின்றனர். பெரும் ஞானிகள் கூட பாவமன்னிப்பை கோருகின்றனர், ஏனெனில் சர்வ வல்லமையுள்ள இறைவனின் மகத்துவத்திற்கு முன்பாக, அவர்களது ஞானம் அற்பமானது, இறைவனின் மகத்துவத்தை பூரணமாக அறிந்துகொள்ள முடியாது என்பதாலாகும்.

சில சமயங்களில் நாமே எமக்கு தவறிழைத்துக்கொள்கிறோம். நாம் பாவங்கள் செய்வதில் இருந்து நீங்கிக் கொள்ள  வேண்டும். பாவமன்னிப்பு கோருவதில் உள்ள பெரிய நன்மை என்னவென்றால் எமது கடமைகளில் நாம் அசிரத்தையாக இருப்பதிலிருந்து அது எம்மை காக்கிறது.

நாம் பாவமன்னிப்பு கோரும்போது, நாம் செய்த பாவங்கள், நாம் செய்த தவறுகள், எமது தவறான காம இச்சைகள், நாம் மீறிய ஒழுக்க விதிகள், நாம் எமக்கும் மற்றவர்களுக்கும் இழைத்த அநியாயங்கள் அனைத்தும் எம் நினைவுக்கு வரும். இது எம்மை பெருமையடையாதிருக்கச் செய்யும், எமது செயல்களிலும் நாம் கவனமாக இருக்க முயற்சிப்போம். இது எமக்கு கிடைக்கும் முதலாவது நன்மை.

இந்த பச்சாதாபம்,  உண்மையிலேயே நாம் தவறுகளையும் பாவங்களையும் விட்டும் விலகி, இறைவனிடம் மீள்வதற்கு தயாராகிவிட்டோம் என்ற அடிப்படையில் இருக்குமாயின், நிச்சயமாக அல்லாஹ் அந்த பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான். இது எமக்கு கிடைக்கும் இரண்டாவது நன்மை.

எவராவது என்னை மன்னித்து விடு, ‘இறைவா என்னை மன்னித்து விடு என்று எவ்வளவுதான் கோரினாலும், உளப்பூர்வமாக அதனை கேட்காவிட்டால் அது பெறுமதியற்றது. இதற்குப் பெயர் பாவமன்னிப்பு அல்ல. பாவமன்னிப்பு என்பது இறைவனிடம் இறைஞ்சி கேட்கும் ஒரு துஆ ஆகும். மகத்துமிக்க இறைவனின் கருணையை நாடி, உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும். "நான் இந்த பாவத்தைச் செய்துவிட்டேன், இறைவா, என்மீது கருணை காட்டு, எனது இந்த பாவத்தை மன்னித்துவிடு" என்று கேட்க வேண்டும். இவ்வாறு மனமுருகி கேட்கப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் நிராகரிப்பதில்லை. அல்லாஹ் எமக்காக கருணை எனும் வாசலை திறந்தே வைத்துள்ளான்.

செய்த பாவத்துக்காக மன்னிப்பை வழங்கக்கூடியவன் இறைவன் மட்டுமே. வேறு ஒருவருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது. செய்த பாவத்தைக் கூறி, இறைவனைத்தவிர வேறெவரிடமும் பாவமன்னிப்புக்கோரல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

"....... தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்." [குர்ஆன் 4: 64] என்ற வசனம் அதனை தெளிவுபடுத்துகிறது.
பாவம் செய்த சிலர் இறைவனிடம் மன்னிப்புக்கோரும் அதேவேளை, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் வந்து, தமக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டினால், ரசூலுல்லாஹ்வும் பரிந்துரை செய்தால் அல்லாஹ் அவர்களை மன்னிப்பான் என்பதை இந்த குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மன்னிப்புக்காக பரிந்துரை செய்ய மட்டுமே முடியும்; அவரால் பாவங்களை மன்னிக்க முடியாது. அல்லாஹ்வே மிக்க மன்னிப்பவனாக இருக்கின்றான். இதுவே உண்மையான பாவமன்னிப்பு கோரலாகும், அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து உள்ளது. இந்த புனித மாதத்தில் காலையிலும் மற்றும் இரவிலும் பாவமன்னிப்பு கோருவதற்கு மறந்துவிடாதீர்கள். உங்களது தொழுகைகளிலும் துஆக்களின் அர்த்தங்களிலும் கூடிய கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்டவசமாக, நமது சமுதாயம் ஒரு ஆன்மீக சமுதாயம்.  துஆ, திக்ர் மற்றும் பிரார்த்தனைகள் விரும்பிச் செய்வது எங்கள் மக்களிடையே பொதுவான ஒன்று. நமது இளைஞர்களின் தூய இதயங்கள், இறைவன் ஞாபகத்தை சுமந்திருப்பது பாராட்டப்படத்தக்க விடயம். இவை அனைத்துமே வாய்ப்புகளாகும்.

வந்துள்ள ரமழான் மாதம் இறையருளுக்கான வாய்ப்புகள் நிறைந்ததாகும். இந்த அருமையான மாதம் வழங்கியுள்ள மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தி, நாம் அனைவரும் நன்மையடைய முயற்சிக்க வேண்டும். உங்கள் இருதயங்களை அல்லாஹ்வுடன் நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். பாவமன்னிப்பு கோருவதன் மூலம் உங்கள் இருதயங்களையும் ஆத்துமாக்களையும் சுத்திகரியுங்கள். நீங்கள் விரும்பியதைப் பற்றி அல்லாஹ்விடம் பேசுங்கள். அல்லாஹ்வுடன் நாம் கொண்டுள்ள ஆன்மீகத் தொடர்பு, பெரிய சாதனைகளை கொண்டுவந்துள்ளது. ரமழான் மாதம் இந்த ஆன்மீக உறவை உறுதியாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்.

அல்லாஹ்வின் அருளால் நாம் இந்த ரமழான் மாதத்தில் சுய கற்றலில் கவனம் செலுத்துவோம். இந்த சுய கல்வி ஆண்டு முழுவதும் எங்களுக்கு உதவியாக இருக்கும்.