Tuesday, July 30, 2019

இஸ்லாமிய எழுத்தணி கலை - தோற்றமும் வளர்ச்சியும்


Islamic calligraphy
இஸ்லாமிய எழுத்தணி கலை என்பது ஒரு பொதுவான இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலங்களில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கையெழுத்து நடைமுறையாகும்.
இதில் அரபு இஸ்லாமிய எழுத்தணி கலை, ஒட்டோமான் இஸ்லாமிய எழுத்தணி கலை, பாரசீக இஸ்லாமிய எழுத்தணி கலை மற்றும் சீன  கலை வடிவங்கள் அடங்கும்.
இது அரபு மொழியில் கத் இஸ்லாமி (خط إسلامي) என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் இஸ்லாமிய வரி வடிவமைப்பு என்பதாகும்.
இஸ்லாமிய எழுத்தணி கலையின் வளர்ச்சி குர்ஆனுடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளது; இஸ்லாமிய எழுத்தணி கலை குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான மற்றும் கிட்டத்தட்ட உலகளாவிய எழுத்தணி கலை வடிவமாகும்.
இருப்பினும், இஸ்லாமிய கையெழுத்து என்பது கண்டிப்பாக மதப் பாடங்கள், பொருள்கள் அல்லது இடங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை.
அனைத்து இஸ்லாமிய கலைகளையும் போலவே, இதுவும் பல்வேறு வகையான சூழல்களில் உருவாக்கப்பட்ட பலவிதமான படைப்புகளை உள்ளடக்கியது.
இஸ்லாமிய கலையில், கையெழுத்து பரவல் அதன் பாரம்பரியத்துடன் நேரடியாக தொடர்புடையது அல்ல; மாறாக, இது இஸ்லாத்தில் எழுதுதல் மற்றும் எழுதப்பட்ட உரை என்ற கருத்தின் மையத்தை பிரதிபலிக்கிறது.
உதாரணமாக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "இறைவன் படைத்த முதலாவது பொருள் எழுதுகோலாகும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது. (திர்மிதி, அபூ தாவூத், அஹ்மத்)
இஸ்லாமிய எழுத்தணி கலை இரண்டு முக்கிய வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது: ஒன்று குஃபி மற்றது  நாஸ்க் வடிவமைப்புகளாகும். ஒவ்வொன்றிலும் பல வேறுபாடுகள் உள்ளன, அத்துடன் பிராந்திய ரீதியாக குறிப்பிட்ட எழுதும் பாணிகளும் உள்ளன.
மத்திய கிழக்கில் காலனித்துவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் தொடங்கி நவீன கலைகளில் இஸ்லாமிய எழுத்தணி கலை இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் 'காலிகிராஃபிட்டி' எனும் சமீபத்திய பாணியும் அடங்குகிறது.
கருவிகள் மற்றும் ஊடகங்கள்
இஸ்லாமிய எழுத்தணி கலையின் பாரம்பரிய கருவி கலம் (பேனா), பொதுவாக உலர்ந்த நாணல் அல்லது மூங்கில் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பேனா. மை, பெரும்பாலும், வர்ணங்களில் தேர்வு செய்யப்படுவதால் அதன் அழுத்தம் பெரிதும் மாறுபடும், இது எழுத்து வடிவங்களில் மாறுபட்ட தன்மையை உருவாக்குகிறது. சில உலோக-முனை பேனாவைப் பயன்படுத்தியும் எழுதப்படுவதுண்டு.
காகிதங்கள் மட்டுமல்லாது ஓடுகள், பாத்திரங்கள், தரைவிரிப்புகள் மற்றும் கல் போன்ற பல வகையான அலங்கார ஊடகங்களுக்கு இஸ்லாமிய எழுத்தணி கலையை பயன்படுத்தலாம்.
கடதாசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பாப்பிரஸ் மற்றும் தோல்காகிதம் ஆகியவை எழுத்துக்கு பயன்படுத்தப்பட்டன. (பாபிரஸ் (Papyrus) எனபது பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் நதியின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்).
9 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து காகிதத்தின் வருகை, எழுத்தணி கலையில் புரட்சியை ஏற்படுத்தியது. அக்கால கட்டத்தில்  ஐரோப்பாவில் உள்ள மடாலயங்களில் சில பத்து நூல் தொகுதிகளை பொக்கிஷமாகக் பாதுகாத்திருந்தாலும், முஸ்லீம் உலகில் உள்ள நூலகங்களில் அதுபோன்ற ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.
பல நூற்றாண்டுகளாக, எழுதும் கலையானது இஸ்லாமிய கலையில் ஒரு மையச் சின்னச் செயல்பாட்டை நிறைவேற்றியுள்ளது. இஸ்லாமிய எழுத்தணி கலையின் கல்வி மரபு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆரம்பகால வரலாற்றின் பெரும்பகுதியான பாக்தாத்தில் தொடங்கியிருந்தாலும், அது இறுதியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் வரை பரவியது.
இவற்றுக்கு மற்றொரு ஆதாரமாக நாணயங்கள் இருந்தன. 692 இல் தொடங்கி, இஸ்லாமிய கலிபா பைசண்டைன் கிறிஸ்தவ உருவங்களை கொண்ட நாணயங்களை அரபு மொழியில் பொறிக்கப்பட்ட இஸ்லாமிய சொற்றொடர்களை கொண்டு மாற்றுவதன் மூலம் நாணயத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டார். இது குறிப்பாக தினார் அல்லது அதிக மதிப்புள்ள தங்க நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, நாணயங்களில் குர்ஆனின் சொற்கள் பொறிக்கப்பட்டன.
பத்தாம் நூற்றாண்டளவில், இஸ்லாத்தை ஏற்றிருந்த பாரசீகர்கள்,  பட்டுத்துணிகளில் குர்ஆன் வசனங்களை விரிவான வடிவில் நெசவு செய்யத் தொடங்கினர். அரபு உரைகளை உள்ளடக்கிய ஜவுளி மிகவும் விலைமதிப்பற்றதாக காணப்பட்டதால், சிலுவைப்போராளிகள் அவற்றை ஐரோப்பாவிற்கு மதிப்புமிக்க உடைமைகளாக கொண்டு சென்றனர். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடமேற்கு பிரான்சில் கெய்னுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜோஸ்-சுர்-மெரின் அபேயில் செயின்ட் ஜோஸ்ஸின் எலும்புகளை சுற்றிக் கட்டுவதற்காக சுவைர் டி செயிண்ட்-ஜோஸ்ப பாரசீக பட்டுத்துணி யையே யன்படுத்தினார்.
இஸ்லாமிய எழுத்தணி  மிகவும் மதிக்கத்தக்கது என்பதால், பெரும்பாலான படைப்புகள், மதச்சார்பற்ற அல்லது சமகால படைப்புகளைத் தவிர்த்து, நன்கு நிறுவப்பட்ட கையெழுத்து எழுத்தாளர்களால் அமைக்கப்பட்ட மாதிரிகளை பின்பற்றி வரையப்பட்டுள்ளன. இஸ்லாமிய பாரம்பரியத்தில், எழுத்தணி கலைஞர்கள் சான்றிதழ் பெறுவதற்காக, அவர்களின் மாதிரிகள் ஆசிரியரின் ஆய்வுக்கு  உட்படுத்தலுடன், மூன்று நிலைகளில் விரிவான பயிற்சி பெற வேண்டும்.
'கூஃபி' எழுத்து முறையானது அரபு எழுத்துக்களின் பழமையான வடிவமாகும். இது கோணங்களைக்கொண்ட கடுமையான பழைய நபதஈன் எழுத்து முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. தொன்மையான கூஃபி அட்சரங்கள், புள்ளிகள் அல்லது உச்சரிப்பு அடையாளங்கள் இல்லாமல் சுமார் 17 எழுத்துக்களைக் கொண்டிருந்தது. குர்ஆன் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை உச்சரிக்க வாசகர்களுக்கு உதவுமுகமாக 7 ஆம் நூற்றாண்டில் உச்சரிப்புக்கான அடையாளங்கள் சேர்க்கப்பட்டதனால், அரபு எழுத்துக்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தன.
கூஃபி எழுத்துருக்கள் 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈராக்கின் கூபாவில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது, அதில் இருந்தே அதன் பெயர் வந்தது. (சில அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள்). இந்த பாணி பின்னர் பல வகைகளாக வளர்ந்து, அதன் நேரான மற்றும் ஒழுங்கான எழுத்துக்கள் காரணமாக, கூஃபி எழுத்துரு அலங்காரம் கல் செதுக்குதலிலும் நாணயங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
இது 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை குர்ஆனை நகலெடுக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய எழுத்து முறையாக இருந்தது, மேலும் 12 ஆம் நூற்றாண்டில் நாஸ்க் பாணி நடைமுறைக்கு வந்ததும்  இதன்  பொதுவான பயன்பாடு வழக்கொழிந்தது. இருப்பினும், மேலதிக பாணிகளை வேறுபடுத்துவதற்கு இது ஒரு அலங்கார உறுப்பு என தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
கூஃபி எழுத்துரு பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் எழுத்துக்களின் கோண, நேரியல் வடிவங்கள் மட்டுமே பொதுவான அம்சமாகும். ஆரம்பகால கூஃபி எழுத்துரு தரப்படுத்தலின் குறைபாடு காரணமாக, பிராந்தியங்களுக்கிடையில் இது சதுர மற்றும் கடினமான வடிவங்களிலிருந்து பூக்கள் மற்றும் அலங்காரங்கள் வரை மிகவும் பரவலாக வேறுபடுகிறது.
பொதுவான வகைகளில் சதுர கூஃபி, 'பன்னாய்' எனப்படும் ஒரு நுட்பமாகும். இந்த கையெழுத்து பாணி நவீன அலங்காரங்களிலும் பிரபலமானது.
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் போலியான கூஃபி கல்வெட்டுகள் அலங்காரங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. போலி-கூஃபி இணைக்கப்படுவதற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை. எனினும், 13 முதல் 14 ஆம் நூற்றாண்டின் மத்திய கிழக்கு முஸ்லிம் எழுத்தணி கலையினை மேற்கத்தியர்கள் தவறாக இயேசுவின் காலத்தில் பயன்படுத்திய எழுத்து முறைகளுடன் தொடர்புபடுத்த முயற்சித்ததாக தெரிகிறது, இதனால் ஆரம்பகால கிறிஸ்தவர்களை இந்தக் கலையுடன் இணைத்து பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாஸ்க்
நாஸ்க் எனும் வளைவுடனான எழுத்துரு பயன்பாடு கூஃபி எழுத்து வடிவத்துடன் இணைந்தது. வரலாற்று ரீதியாக இவ்வாறான எழுத்துரு பொதுவாக முறைசாரா நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாத்தின் எழுச்சியுடன், மாற்றங்களின் வேகத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய எழுத்தணி தேவைப்பட்டது, மேலும் 10 ஆம் நூற்றாண்டில் நாஸ்க் என்ற நன்கு வரையறுக்கப்பட்ட வளைவு எழுத்து முதலில் தோன்றியது. நாஸ்க் என்பதை "நகலெடுப்பது" என்று மொழிபெயர்க்கிறார், ஏனெனில் இது புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை படியெடுப்பதற்கான தரநிலையாக மாறியது. குர்ஆன் வசனங்கள், உத்தியோகபூர்வ ஆணைகள் மற்றும் தனியார் கடிதப் பரிமாற்றங்களில் என்று இந்த எழுத்துருவானது எங்கும் எல்லாவற்றிலும் பயன்படுத்தப்பட்டது. இதுவே நவீன அரபு அச்சின் அடிப்படையாக மாறியது
எழுத்தணி கலை தரநிலைப்படுத்தலில் இப்னு முக்லா  (886 - 940 கி.பி) முன்னோடியாக இருந்து, பின்னர் அபு ஹயான் அத்-தவ்ஹீதி  (1009 கி.பி. இறப்பு) அவர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்பது பொதுவான கருத்து. இது பிழையானது என்று தோன்றினாலும், நாஸ்க் பாணியின் கண்டுபிடிப்பாளராக இப்னு முக்லா, முஸ்லிம் எழுத்தணி கலை உலகில் மிகவும் மதிக்கப்படும் ஒருவராக இன்றளவிலும்  இருக்கின்றார். இப்னு முக்லாவின் கையெழுத்து பொதுவாகவே வட்டமானதாக, தெளிவாக எழுதப்பட்ட காரணத்தினால் பல அறிஞர்கள் அவரே  இந்த கலையை நிறுவினார் என்ற முடிவுக்கு வந்தனர். ஆயினும், உண்மையில், இப்னு முக்லாவின் மாணவரான இப்னுல் பவ்வாப் என்பவரே இதனை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இப்னு முக்லா எழுத்துக்களை வடிவமைப்பதற்கான முறையான விதிகளையும் விகிதாச்சாரங்களையும் நிறுவினார், அவை 'அலிஃப்பை X-உயரமாகப் பயன்படுத்துகின்றன.
நாஸ்கின் மாறுபட்ட வடிவங்கள் பின்வருமாறு:
1.      ஸுலுத் வடிவம் 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது, பின்னர் அஹ்மத் தயிப் ஷா அவர்களால் இன்னும் மெருகூட்டப்பட்டது. இந்த வடிவத்திலான எழுத்துக்கள் பரந்த இடைவெளியுடன் நீண்ட செங்குத்து கோடுகளைக் கொண்டுள்ளன. ஸுலுத் என்பது "மூன்றாவது" என்று பொருள்படும் பெயர், x-உயரத்தைக் குறிக்கிறது, இது 'அலிஃப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
2.      ரிக்கா என்பது நாஸ்க் மற்றும் ஸுலுத்திலிருந்து மருவிய ஒரு கையெழுத்து வடிவம், இது முதலில் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது குறுகிய கோடுகளை கொண்ட எளிய வடிவமாகும்.
3.      முஹக்காக் என்பது திறமையான எழுத்தணி கலைஞர்களால்  பயன்படுத்தப்படும் கம்பீரமான பாணி. இது மிக அழகான கையெழுத்துகளில் ஒன்றாக கருதப்பட்டது, அதே போல் எழுதுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும். முஹக்காக் பொதுவாக மன்னர் மம்லுக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டு முதல் "பிஸ்மில்லாஹ்" போன்ற குறுகிய சொற்றொடர்களுக்கு மட்டுமே ட்டுப்படுத்தப்பட்டது.

பிராந்திய வடிவங்கள்
இஸ்லாத்தின் பரவலுடன், அரபு எழுத்துக்கள் ஒரு பரந்த புவியியல் பகுதியில் நிறுவப்பட்டன, பல பகுதிகள் அவற்றின் தனித்துவமான வடிவங்களையும் வளர்த்துக் கொண்டன. 14 ஆம் நூற்றாண்டு முதல், துருக்கி, பாரசீகம் மற்றும் சீனா போன்ற பிரதேசங்களிலும் உருவாகத் தொடங்கின.
1. திவானி வடிவம் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் உஸ்மானிய துருக்கியர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரபு கையெழுத்துப் வடிவமாகும். இந்த வடிவம் ஹவ்ஸாம் ரூமி என்பவரால் உருவாக்கப்பட்டது, மேலும் முதலாவது சுலைமான் (1520–1566) இன் கீழ் திவானி வடிவம் அதன் பிரபலத்தின் உச்சத்தை அடைந்தது. [23] எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகள் பெரும்பாலும் குறுகலானவை, மேலும் கோடுகள் வலமிருந்து இடமாக மேலே செல்லும் அமைப்பை கொண்டது. ட்ஜாலி எனப்படும் பெரிய வேறுபாடுகள் புள்ளிகளின் அடர்த்தியான அலங்காரங்கள் மற்றும் இடையில் உள்ள இடைவெளி ஒலிக்குறியீட்டு அடையாளங்களால் நிரப்பப்படுகின்றன. இது ஒரு கச்சிதமான தோற்றத்தை அளிக்கிறது. திவானி அதன் கனமான வடிவமைப்பு காரணமாக எழுதவும் படிக்கவும் கடினமாக உள்ளதன் காரணமாக ரகசியத்தன்மையை உறுதிசெய்து மோசடி செய்வதைத் தடுப்பதற்காக நீதிமன்ற ஆவணங்களை எழுதுவதற்கான சிறந்த எழுத்துருவாக மாறியது.
2. நாஸ்டாலிக் என்பது மற்றுமொரு வடிவமாகும். இது முதலில் பாரசீக மொழி இலக்கிய படைப்புகளை எழுத வடிவமைக்கப்பட்டுள்ளது. நாஸ்டாலிக் என்பது நாஸ்க் வடிவின் பிற்கால வளர்ச்சியாகவும், ஈரானில் பயன்படுத்தப்பட்ட முந்தைய தாலிக் எழுத்துருவின் கலப்பாகவும் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு தெற்காசியாவில் மிக விரைவாக பிரபலமடைந்த ஒன்றாக உள்ளது.         
 
'லிக் என்ற பெயர் "தொங்குதல்" என்று பொருள்படும், மேலும் இந்த வடிவத்தில் உள்ள உரை வரிகள் சற்றே சாய்ந்ததாக இருப்பதை குறிக்கிறது. எழுத்துக்கள் குறுகிய செங்குத்து கோடுகளை கொண்டதாகவும் மற்றும் பரந்த கிடைமட்ட கோடுகளை கொண்டதாகவும் இருக்கும். இவற்றின் வடிவங்கள் ஆழமானவை, கொக்கி போன்றவை, மேலும் அதிக வேறுபாட்டைக் கொண்டவை. ஷிகாஸ்டே எனப்படும் ஒரு வேறுபட்ட முறையும் 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அற்புத எழுத்தணி கலையை கட்டட கலையுடன் இணைத்த பெருமை பாரசீகத்தையே சாரும்.
3. சீனி என்பது சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு வடிவமாகும். நாணல் எழுதுகோலுக்கு பதிலாக குதிரைவால் முடியினால் செய்யப்பட்ட தூரிகையைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட இந்த சீன கையெழுத்து வடிவம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பாரம்பரியத்தில் ஒரு பிரபலமான நவீன எழுத்தணி கலைஞர் ஹஜ்ஜி நூர்தீன் மி குவாங்ஜியாங் என்பது குறிப்பிடத்தக்கது.