Saturday, April 27, 2019

எமது பிராந்தியத்தில் அமெரிக்காவினால் அதன் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது - இமாம் காமனெய்


US will never achieve its goal in our region - Imam Khamane'i

ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் அவர்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதி நடவடிக்கைகள் தொடர்பாக அடிக்கடி மக்கள் மத்தியில் உரையாடுவார். அவர்களின் அவ்வாறான உரைகளில் இருந்து அமெரிக்க முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பமொன்றை (ஏப்ரல் 8, 2019) கீழே தருகின்றோம்:

 மேற்காசிய நாடுகளில் (மத்திய கிழக்கில்) ஏழு டிரில்லியன் டாலர்களை, மில்லியன்களுமல்ல, பில்லியன்களுமல்ல, ட்ரில்லியன்கள்; நாம் ஏழு ட்ரில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளோம்; ஆம் ட்ரில்லியன்கள் செலவிட்டபோதும் எந்த நன்மையையும் அடையவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆம், எந்த நன்மையையும் அடையவில்லை என்று அவர் சொன்னது உண்மைதான். அவர்கள் எவ்வளவு செலவு செய்தபோதும் எவ்வளவு முயற்சித்தபோதும் எமது பிராந்தியத்தில் அவர்களால் நிச்சயமாக எதனையும் அடைந்துகொள்ள முடியாது என்பதை அமேரிக்கா இப்போதிருந்து நன்றாக புரிந்துகொள்ளட்டும்.

அவர் வாயாலேயே கூறிய இந்த விடயம் தோல்வியின் அறிகுறியில்லையா...? இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது. மருட்சியினால் உந்தப்பட்டு, எவ்வளவு முயற்சி செய்தும் கூட, பெரிய ஷெய்த்தானால் இப்பகுதியில் அதனது இலக்குகளை அடைய முடியவில்லை.

அவர்கள் நிறைய பணம் செலவழித்தும் பயனில்லை. அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

"நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்". (8/36)

அவர்கள் ஏராளமான பணத்தை செலவு செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு நன்மையைக் கூட அறுவடை செய்யவில்லை. சாத்தானிய சக்திகள் இப்பகுதியில் எவ்வளவு செலவழித்த போதும், விளைவு அதுவாகவே இருக்கும். எவ்வளவு செலவு செய்தபோதும், எவ்வளவு முயற்சித்தபோதும் எமது பிராந்தியத்தில் அவர்களால் நிச்சயமாக எதனையும் அடைந்துகொள்ள முடியாது என்பதை அமேரிக்கா இப்போதிருந்து நன்றாக புரிந்து கொள்ளட்டும்.

இரண்டு நாட்களுக்கு முன், ட்ரம்ப் பாரசீக வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு [சவுதி, பஹ்ரைன், எமிரேட்ஸ்] ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை எம்மாலும் அணுகி, படிக்க முடிந்தது. அந்த கடிதத்தில், சில பணிக்காக அவர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர்களுக்கு எழுதி இருந்தார். மேலும் அவர் "நான் உங்களுக்காக ஏழு டிரில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளேன்" என்றும் குறிப்பிட்டிருந்தார். பாவப்பட்ட மனிதனே, ஏழு ட்ரில்லியன் டொலர்களை உண்மையிலேயே செலவு செய்தீர்களா...? எதற்காக செலவு செய்தீர்கள்...? ஈராக்கையும் சிரியாவையும் உங்கள் வசப்படுத்திக்கொள்ள செலவு செய்திருக்கலாம், ஆனால் அதிலும் நீங்கள் தோல்வியே அடைந்தீர்கள். அவர்கள் எதையாவது செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கடிதத்தில் கூறுகிறார்: அவருடைய கடிதத்தில் இன்னும் பல "உத்தரவுகளும்" அடங்கி இருந்தன.  குறிப்பிட்ட அந்த கடிதத்தை அந்த நாடுகளின் அனைத்து அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அதுபோன்ற "உத்தரவுகளை" இஸ்லாமிய குடியரசிற்கும் முன்வைக்க அவர்கள் விரும்புகிறார்கள்; ஆனால் அவர்களால் அது  முடியாது; ஏனெனில் அவர்கள் பகைமையை வெளிப்படுத்தி, ஈரான் இஸ்லாமிய குடியரசை அகற்ற முயலுகிறார்கள். இந்த இஸ்லாமிய முறையை நீக்குவதற்குத்தான் அவர்களது இந்தப் போராட்டம்.

அரசியல் ரீதியாக, கலாசார ரீதியாக மற்றும் ராணுவ ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்வி கண்ட எமது எதிரிகள், இப்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். இறைவனின் அருளால், இதிலும் எதிரிகள் தோற்கடிக்கப்படுவர் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த போரில் வெற்றிபெற அவர்கள் சகல முயற்சியையும் செய்கிறார்கள்: அவர்கள் கபடத்தனமாக ஈரானிய மக்களுக்கு செய்தி அனுப்புகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, புத்தி சுயாதீனமற்ற ஒருவனைப்போல, ஈரானிய மக்களை விழித்து கூறுகின்றார்:  "உங்களது அரசு உங்களது பணத்தை சிரியாவிலும் ஈராக்கிலும் செலவு செய்கின்றது" என்று. அது பற்றிய அறிவு அவருக்கு கிடையாது.

இந்த தகுதியற்றவர்களின் எஜமான் [டோனால்ட் டிரம்ப்] தான் சொல்கிறார்: "நாங்கள் ஏழு டிரில்லியன் டாலர்களை அப்பிராந்தியத்தில் செலவழித்தோம் - அதாவது, சிரியாவிலும் ஈராக்கிலும் - எதையும் சாதிக்கவில்லை" என்று.

இஸ்லாமிய குடியரசு அதுபோல் எந்த விரயத்தையும் செய்யவில்லை. சிரிய  மற்றும் ஈராக் அரசாங்கங்கள் எங்கள் நண்பர்கள், அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் அந்த நாடுகளை அச்சுறுத்தின; அதனால் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்தோம். எதிர்காலத்திலும் நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்: எமது நட்பு நாடுகளாய் இருக்கும் எந்த அரசாங்கத்திற்கும் நாம் உதவுவோம். இது பணம் சம்பந்தப்பட்ட விடயமல்ல; நட்பு நாடுகளுக்கிடையில் இடம்பெறும் சாதாரண கொடுக்கல், வாங்கலாகும். (ட்ரம்ப்) அவரின் பேச்சின் ஊடாக ஈரானிய மக்களை இஸ்லாமிய குடியரசின் கொள்கைக்கு எதிராகவும் இஸ்லாமிய குடியரசு முறைமைக்கு எதிராகவும் திரும்பிவிடலாம் என்றும் கனவு காண்கின்றார். அது கனவாகவே இருக்கும்.


Tuesday, April 23, 2019

மாபெரும் பாரசீக கவிஞர் ஸஅதி ஷிராஸி


Abu-Muhammad Muslih al-Din bin Abdullah Shirazi, Saadi Shirazi 

அபு-முஹம்மது முஸ்லிஹ் அல்-தீன் பின் அப்துல்லா ஷிராஸி (ஸஅதி ஷிராஸி). மத்திய காலத்தில் இருந்த முக்கிய பாரசீக கவிஞர்களில் ஸஅதி ஷீராஸியும் ஒருவராவார். அவர் ஷிராஸ் நகரில் 1184 ஆம் ஆண்டில் பிறந்து, 1283 அல்லது 1291 ஆம் ஆண்டில், ஈரானில் உள்ள அதே நகரில் உயிர் நீத்தார். இவரின் பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் எங்கும் பதியப்பட்டுள்ளதாகத்  தெரியவில்லை.    ஆயினும் அவரது கவிதை ஒன்றில் தனது சிறு வயதில், திருவிழாவின் போது தனது தந்தையுடன் வெளியே செல்லும் நினைவுகளை அவர் விவரிக்கிறார். இதிலிருந்து ஸஅதி சிறுவனாய் இருக்கும் போதே தனது தந்தையை இழந்துள்ளார் என்று அறிய முடிகிறது.

ஈரான் மீதான மங்கோலிய படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த, ஸஅதி 30 ஆண்டுகாலமாக நாடுநாடாக சுற்றியலைந்தார். ஸஅதியின் தரமான எழுத்துக்களும் அவருடைய கவிதைகளில் பொதிந்திருந்த ஆழமான சமூக மற்றும் அறநெறி கருத்துக்களும் அவருக்கு ஒரு பெரும் அங்கீகாரத்தை வழங்கியது எனலாம்.

இவரின் கவிதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்லாமல் அவற்றில் சில அதனை  சொந்தம் கொண்டாடவும் செய்கின்றன.

ஸஅதி ஷிராசியின் "குலிஸ்தான்" (மலர் தோட்டம்) மற்றும் "புஸ்தான்"  (பழத்தோட்டம்) ஆகிய படைப்புகள் அவரது ஒழுக்க நெறிமுறை அடிப்படையினை வழங்கும் படைப்புகளில் இரண்டு சிகரங்கள் எனலாம்.

மொங்கோலியா படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த ஸஅதி இஸ்லாமிய உலகின் கற்றல் மையங்களை நாடிச் சென்றார். ஸஅதிதன்னிகரற்ற, அற்புதமான கவிதைகளையும் இலக்கியத்தையும் படைத்தார். ஷீராஸை விட்டு வெளியேறிய அவர் முதலில் பாக்தாத்தில், உமர் கய்யாமின் நண்பரான நிஸாம் அல்-முல்க் ஆட்சியாளரினால் அமைக்கப்பட்ட மகத்தான நிஸாமிய்யா, பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியல், சட்டம், ஆட்சி முறைமை, வரலாறு, அரபு இலக்கியம் மற்றும் இஸ்லாமிய இறையியல் ஆகியவற்றை கற்று தேறினார். புஸ்தான் மற்றும் குலிஸ்தான் நூல்களில் ஸஅதி  தனது பயண அனுபவங்களை சுவையாக விபரிக்கின்றார்.

மங்கோலிய படையெடுப்புக்குப் பிறகு ஏற்பட்ட கெடுதலான நிலைமைகள் காரணமாக அவர் முப்பது ஆண்டுகளாக பல நாடுகளுக்கும் விஜயம் செய்தார். அனட்டோலியா (துருக்கியின் ஒரு பகுதி)க்குச் சென்று அதானா துறைமுகம் சென்றதை பற்றியும் கொன்யாவில் சில பிரபுக்களை சந்தித்தது பற்றியும், சிரியாவில் (டமாஸ்கஸில்) அப்போது ஏற்பட்டிருந்த பஞ்சம் பற்றியும், எகிப்தின் இசை, சந்தை, அல்-அஸ்ஹரின் உயர் உலமாக்கள்  மற்றும் உயரதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பு பற்றியும், மற்றும் ஈராக் (பாஸ்ரா) மற்றும் டைக்ரிஸ் ஆற்றின் துறைமுகத்தை பார்வையிட்டது பற்றியும் அவரது எழுத்துக்களில் விவரிக்கிறார்.

ஹலபில், சிலுவை ஆக்கிரமிப்பாளர்களுடன் கடும் சமரில் ஈடுத்திருந்த சூஃபி குழு ஒன்றில் இணைந்து செயலாற்றுகின்றார். இதன் காரணமாக ஸஅதி கைது செய்யப்பட்டு, ஏழாண்டுகள் அடிமையாக நடத்தப்படுகின்றார். இதன் பிறகு மம்லுக் ஆட்சியாளர் முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்காக பணம் செலுத்தியதை தொடர்ந்து ஸஅதியும் விடுதலை ஆகிறார்.

இதனைத் தொடர்ந்து ஜெருசலத்துக்கு விஜயம் செய்த ஸஅதி, அங்கிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். இதன்போது அவர் அரேபிய தீபகற்பத்தின் தெற்கே ஓமான் மற்றும் பிற நிலங்களுக்கும் விஜயம் செய்ததாக நம்பப்படுகிறது.

மங்கோலிய ஆக்கிரமிப்புகளின் காரணமாக அவர் தனிமையான இடங்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், அச்சம் கொண்டிருந்த வர்த்தக பரிவாரங்களுடனும் தொடர்புகள்  ஏற்பட்டன.
 
அகதி முகாம்களிலும் காலத்தை கடத்தி வந்த ஸஅதிக்கு இமாம்கள், பெரு செல்வந்தர்களாக இருந்தோர், ராணுவ அதிகாரிகள், அறிவுஜீவிகள் ஆகியோருடன் பொதுமக்களுடன் கலந்திருந்த கொள்ளையர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டன. எனினும், போரினால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுடனேயே ஸஅதி நெருக்கமாக இருந்தார். அஜர்பைஜானில் மங்கோலிய கொள்ளைக்கு பயப்படும் தேன் சேகரிப்பாளர்கள் பற்றியும் ஸஅதி குறிப்பிடுகிறார்.

இரவு நேரங்களில் அவர் தேநீர் விடுதிகளில் தங்கியிருக்கையில்  வியாபாரிகள், விவசாயிகள், மார்க்கப் பிரச்சாரகர்கள், வழிப்போக்கர்கள், திருடர்கள் மற்றும் சூஃபி பக்கீர்மார்கள்  ஆகியோருடன் கருத்துக்களை பரிமாறினார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் கற்றலிலும் மக்களுக்கு நல்லுபதேசம் செய்வதிலும் அறிவுரைகள் வழங்குவதிலும் கடும்  பிரயாசை எடுத்துக்கொண்டார். இவையனைத்தும் அவரது ஞானத்தை பிரதிபலித்தன.

ஸஅதியின்  படைப்புகள் அநேகமாக, மங்கோலிய படையெடுப்புகளின் கொந்தளிப்பான காலங்களில் இடப்பெயர்வு, வேதனை மற்றும் மோதல் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட சாதாரண ஈரானியர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளன.

அவர் இறுதியாக பெர்சியாவிற்குத் திரும்பி, இஸ்பஹானிலும் மற்ற நகரங்களிலும் தனது பிள்ளைப்பருவ நண்பர்களை சந்திக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவருக்கும் துக்ரால் எனும் அமீருக்கு இடையில் நட்பு ஏற்படுகிறது. அவருடன் இணைந்து சிந்து நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளும் ஸஅதி பாரசீக பெரும் சூஃபி ஞானியான ஷேய்க் உஸ்மான் மார்வந்தியின் சீடரான பீர் பித்தூர் என்பவரையும் சந்திக்கின்றார்.

ஐரோப்பிய இலக்கியத்தின் மீது ஸஅதியின் செல்வாக்கு கணிசமானது. ஸஅதியின் நூல்கள் பல மேற்கத்திய புராணக்கதைகள் மற்றும் உருவக கதைகளுக்கு ஆதாரமாக விளங்கின. மேற்குலக பண்டைய நூல்கள், குறிப்பாக ஜெர்மனிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் அவற்றில் ஸஅதியின் சிந்தனையின் அதிகரித்த செல்வாக்கினை கண்டனர்.

ஸஅதியின் குலிஸ்தான் (மலர் தோட்டம்) பண்டைய பாரசீக காவியங்களையும் சிறுகதைகளையும் குறுங்கவிதைகளையும் கொண்டுள்ளது. இவை, மக்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ள ஊக்கப்படுத்துதுவதோடு சக மனிதர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கும் முறையிலும் சிறப்பாக அமைந்துள்ளன.

புஸ்தான் (பழத்தோட்டம்) இசைநயத்துடனான பாரசீக கவிதைகளைக்  கொண்ட ஸஅதியின் படைப்புகளின் மற்றொரு மகத்தான தொகுப்பு ஆகும்.

குலிஸ்தான் பாகம் 1ல் அரசர்களின் நடத்தைகள்தொடர்பான 10வது கதையில், மனிதர்களை ஓருடலின் அங்கங்களாக கருதும் படி மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றார்.  அதில் புரிந்துணர்வை மிகவும் அழகான முறையில் விபரிக்கின்றார். ஓருடலின் ஒரு பாகம் காயப்பட்டால், முழு உடலும் வேதனையை அனுபவிப்பது போல், ஒருவனுக்கு ஏற்படும் துன்பம் உலக மாந்தர் அனைவரையும் கவலையுறச் செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். அவரது மற்றும் சில வரிகளில் "ஐம்பது வருடங்கள் கடந்தும் ஏன் இன்னும் உறக்கம்...?" என்று தன்னை நோக்கியே  கேள்வி எழுப்புகிறார்.

புஸ்தான் மற்றும் குலிஸ்தான் ஆகிய இரண்டு படைப்புகளினதும் மையக்கரு, அன்பு கருணை ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன. புரிந்துணர்வு என்பது ஒரு மனிதனில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான பண்பு என்று ஸஅதி வலியுறுத்துகின்றார். அவர் மக்களை மன்னிக்கும் மனப்பான்மையுடன் சமாதான சகவாழ்வை நோக்கி  அழைக்கின்றார்; தீய மக்கள் கூட நேர்மையாகவும், நல்ல முறையிலும் நடத்தப்படுவார்களேயானால் அவர்களும் நல்லது செய்வதற்கு கற்றுக் கொள்வார்கள் என்று ஸஅதி கருதுகிறார்.

ஆதமின் மக்களே...!

நீங்கள் அனைவரும் ஓருடலின் பாகங்கள் 
படைத்தவனின் ஆத்மாவை சுமந்த  சாரங்கள்.

ஓரங்கம் பாதிக்கப்படின் வலியால்
ஏனைய அங்கம் வேதனையை உணரும்.

அடுத்தவரின் துயரங்களை நீங்கள் உணரவில்லை எனில்
உங்களை ஒரு மனிதன் என்றழைப்பதில் அர்த்தமில்லை.

இந்த கவிதையில், ஸஅதி  மனிதர்களை "பனீ ஆதம்" எனக் குறிப்பிடுகிறார். இந்த கவிதை சமாதானத்திற்கும் புரிந்துணர்வுக்குமான அவரது பிரகடனமாக அறியப்படுகிறது. கூடுதலாக, இது மனிதநேய பண்புக்கு அடிப்படை அடையாளமாக கருதப்படுகிறது. ஈரானிய மற்றும் உலக இலக்கியங்களில் இந்த கவிதை "பனீ ஆதம்" என்ற தலைப்பில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது.

அடுத்தவர்பற்றிய புரிந்துணர்வற்ற ஒருவரை, "பனீ ஆதம்"மின் ஒரு பகுதியாக கருதுவது பொருத்தமானது அல்ல என்று ஸஅதி  வலியுறுத்துகிறார். பனீ ஆதமின் ஓர் அங்கம் காயம் காயமடைந்தால் (அதாவது, உலகில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால்), மற்ற மற்ற பாகங்கள் அதன் வலியை உணர்ந்துகொள்ளும் (அதாவது, மற்றவர்கள் அதனை உணருவார்கள், காயமடைந்த ஒருவரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்) என்று ஸஅதி விவரிக்கிறார். இந்த அழகான மற்றும் சிறந்த கருத்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைக்கால ஈரானின் சமாதானத் தூதினை எளிமையாக விளக்கும் ஒன்றாகும்.

மனிதம் தழைக்க அத்தியாவசியமாக மனிதரில் இருக்க வேண்டிய இந்த மனிதாபிமான உணர்வின் பன்முகத்தன்மையை கலைத்துவ இரசனையுடன் வழங்கியதற்காக உலக மாந்தர்கள் அனைவரும் புகழ்பெற்ற ஈரானிய கவிஞரான "ஸஅதி" க்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.