Sunday, October 27, 2019

அணிசாரா நாடுகளினால் அமெரிக்க அராஜகத்தை எதிர்க்க முடியும் – ரூஹானி




சர்வதேச நாணய அமைப்பில் அமெரிக்கா அத்துமீறி ஆதிக்கம் செலுத்துவதாகவும், டாலரை தவறாகப் பயன்படுத்துவதாகவும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி வெள்ளிக்கிழமை விமர்சித்தார், அணிசேரா இயக்கம் வாஷிங்டனின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கும் அதன் பொருளாதாரத் தடைகளை பயனற்றதாக மாற்றுவதற்கும் சக்திபடைத்தது என்று கூறினார்.

அணிசாரா நாடுகள் அமைப்பின் 18வது உச்சிமாநாடு கடந்த வெள்ளியன்று (அக்டோபர் 25ம் திகதி) அஸர்பைஜான் தலைநகரான பாக்குவில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஹஸன் உரையாற்றுகையில்  "சர்வதேச நாணய அமைப்பில் அமெரிக்காவின் ஆதிக்கம் கடந்த பல தசாப்தங்களாக மிதமிஞ்சியதாக உள்ளது, குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் சுயாதீன நாடுகளுக்கு அரசியல் அழுத்தம் கொடுப்பதற்காக, டாலரை அது தவறாகப் பயன்படுத்துகிறது.

இந்நாடுகளில் பெரும்பாலானவை அணிசாரா நாடிகள் அமைப்பின்  உறுப்பு நாடுகளாகும். அவற்றின் மீது பல்வேறு தடைகளை அமல்படுத்தும் அமேரிக்கா அதேவேளை சர்வதேச நாணய அமைப்புகளுக்கான அணுகலையும் மட்டுப்படுத்துகின்றது," என்று தெரிவித்தார்.

அத்தகைய அமெரிக்க நடவடிக்கைகள் "சுயாதீன நாடுகளின் நியாயமான சுதந்திரம் மற்றும் உரிமைகளை" நேரடியாக மீறுவதாக அவர் மேலும் கூறினார், மேலும் அணிசாரா நாடுகள் "அமெரிக்கா பயன்படுத்தும் அத்தகைய கருவிகளின் தாக்கத்தை சமன்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்றும் வலியுறுத்தினார்.

பொருளாதார நிலைத்தன்மையின் தேவைகளுக்கு சர்வதேச அர்ப்பணிப்பு, இருதரப்பு மற்றும் பலதரப்பு நாணய ஒப்பந்தங்களின் அடிப்படையில் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல், வங்கி சேவைகளில் சுயாதீனமான மற்றும் மாற்று முயற்சிகளைப் பயன்படுத்துதல் மற்றும் குறியீட்டு நாணயங்களின் அதிக பயன்பாடு ஆகியவை அந்த முடிவை அடைவதற்கான வழிகளில் உள்ளன என்று ரூஹானி குறிப்பிட்டார்.

"நிச்சயமாக, இவை அனைத்தும் சர்வதேச நாணய சலவை எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதி விதிகளை நிலைநிறுத்துவதற்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும்" என்று ஈரானிய ஜனாதிபதி கூறினார், ஈரான் உட்பட பல அணிசாரா அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த முக்கியமான பிரச்சினையை தங்கள் நிகழ்ச்சி நிரலில் வைத்துள்ளன.

பல்வேறு பிராந்தியங்களில் இடம்பெற்றுவரும் தற்போதைய மோதல்கள் மற்றும் சுயாதீன நாடுகளின் தேசிய இறையாண்மையை வெவ்வேறு வடிவங்களில் மீறுவதை சுட்டிக்காட்டிய ரூஹானி, உலகம் "பன்முகத்தன்மையை நோக்கி விரைவாக நகர்கிறது" என்றார்.

சுயாதீன நாடுகளின் மீது அதன் சட்டவிரோத அரசியல் இலக்குகளை திணிப்பதற்காக இன்று அமெரிக்கா அடக்குமுறை பொருளாதார கருவிகளைப் பயன்படுத்துகிறது" என்று ஈரானிய ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிசேரா இயக்கம், "தற்போதைய உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடிப்பதில் மற்றும் கட்டமைப்பிற்குள் அதன் உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தின் சார்பாக முன்னோடியாக இருக்கும் சாத்தியத்தை கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

நியூயார்க்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 74 ஆவது கூட்டத்தொடரை ஒட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுடனான சந்திப்பில், பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் ஈரானிய தேசத்திற்கு எதிராக அமெரிக்கா செய்து வரும் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாப்பதையிட்டு  ரூஹானி கண்டித்து பேசினார்.  உலக  அமைப்பு அதனது மௌனத்தை களைத்து அதன் பொறுப்புகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான வாஷிங்டனின் கடுமையான பொருளாதார அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடைகளைப் பற்றி குறிப்பிடுகையில், ஜனாதிபதி "ஒரு ஆக்கிரமிப்பு கொள்கை கொண்ட  அரசாங்கம் முழு நாட்டிற்கும் எதிராக இந்த குற்றங்கள் அனைத்தையும் செய்து வருகிறது, அதே நேரத்தில் ஐ.நா அமைதி காக்கின்றது."

ஈரானிய ஜனாதிபதி தனது உரையில், புதிய உலகின் தேவைகளுக்கு ஏற்ப அதன் உறுப்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அணிசாரா அமைப்பு வகிக்கக்கூடிய திறமையான பங்கை சுட்டிக் காட்டினார்.

"சர்வதேச அரங்கில் இருமுனை அமைப்பு வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்கா அதன் இராணுவ, பொருளாதார மற்றும் ஊடக சக்தியை ஆகியவற்றைக்கொண்டு புதிய உலகளாவிய அமைப்பின் கோஷத்தின் கீழ் ஓர் ஒற்றை முறை மேலாதிக்க ஒழுங்கை உலகில் திணிக்க முயன்றது."

எவ்வாறாயினும், சர்வதேச அமைப்பில் ஒருதலைப்பட்சத்தைத் எதிர்த்து நிற்கும் தங்கள் விருப்பத்தை அணிசாரா நாடுகள் நிரூபித்துள்ளன, "ஏகாதிபத்தியத்தை திணிப்பதற்கான அமேரிக்கா வைத்துள்ள முக்கிய கருவிகள் உண்மையில் அதற்கு எதிராகவே திரும்பியுள்ளன."

அமேரிக்கா தனது ஆதிக்கத்தை திணிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் "விரிவான மற்றும் அழிவுகரமான போர்களை" நடத்தியது என்று ரூஹானி கூறினார்.

இந்த போர்கள் பிராந்திய நாடுகளுக்கு நூறாயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன, மேலும் பிராந்தியத்திலும் உலகிலும் குறுங்குழுவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் தீப்பிழம்பை எரியூட்டியுள்ளன.

"ஆயினும்கூட, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் குறிக்கோள்களை அடைந்து கொள்ளத் தவறியது மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தின் முறிவை ஏற்படுத்தியதோடு பிராந்திய சுதந்திர நாடுகள் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைத் தொடரும் தன்னம்பிக்கையை அதிகரித்தது," என்றும் ஈரானிய ஜனாதிபதி கூறினார்.

"அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் மீதான பொது நம்பிக்கை வெகுவாகக் குறைந்து இறுதியாக மக்களின் அரசியல் தோன்றுவதற்கு வழிவகுத்தது. அதன் கொள்கைகள் அமெரிக்க மேலாதிக்கம் மற்றும் ஒருதலைப்பட்சத்தின் முடிவின் தொடக்கத்தையே இது குறிக்கின்றது."

அணிசாரா அமைப்பின் உறுப்பு நடுகள் உலகில் ஒரு பெரிய மக்கள் தொகை, பரந்த நிலப்பரப்பு மற்றும் பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் வாக்கு பலம் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன என்று ரூஹானி வலியுறுத்தினார், மேலும் இந்த இயக்கம் எதிர்கால பல்துருவ உலகில் ஒரு புதிய சக்தியைக் காணலாம்.

"இது நடக்க வேண்டுமானால் பிராந்தியத்தினதும் உலகினதும் புதிய யதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இன்றைய உலகின் புதிய கருவிகள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களைப் போலவே ஈரான் இஸ்லாமிய குடியரசு அணிசாரா நாடுகளின் அமைப்புக்கு, அதன் வெற்றிக்கு மற்றும் அதன் விழுமிய இலக்குகளை அடைவதற்கு எல்லா முயற்சிகளிலும் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று ரூஹானி மீண்டும் வலியுறுத்தினார்.




Tuesday, October 22, 2019

இஸ்ரேல் அதன் அழிவுக்கான நாட்களைக் கணக்கிடட்டும்!





- எஸ். நவாப்ஸாதே

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பது ஒரு பிரபலமான பழமொழியாகும். எதற்கும் அஞ்சாது, எவருக்கும் அடிபணியாது, அச்சுறுத்தல்களைக் கண்டு கலங்காது தமது இலக்குகளை அடையும்வரை தொடர்ந்து பயணிக்கும் ஒரு குழுவினருக்கு இது பொருந்தும். அந்த இலக்கு கல்வியாக இருக்கலாம், விஞ்ஞான கண்டுபிடிப்புகளாக இருக்கலாம், வர்த்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு பெரும் அரசியல் கொள்கை மாற்றமாக இருக்கலாம்; அதனை அடையும்வரை அவர்களது வைராக்கியம் நீங்குவதில்லை.

உலக அளவில், ஈரானிய இஸ்லாமிய குடியரசு தேசத்தின் மட்டுமல்ல, பிராந்திய மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பினை உணர்ந்த நேர்மையான அமைப்பின் முன்மாதிரியாக விளங்குகிறது.  எந்தவொரு சவாலுக்கு முகம்கொடுக்கும் அதனது மனவுறுதி சதி, சுரண்டல், பொருளாதார பயங்கரவாதம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றப்பாதையில்  இட்டுச்செல்கிறது.


கடந்த நாற்பது ஆண்டுகளில், இஸ்லாமியப் புரட்சி வழங்கியுள்ள எஃகு போன்ற இந்த மனவுறுதி எல்லாம்வல்ல இறைவன் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு, தங்கள் தாயகங்களை ஆக்கிரமிப்பவர்கள்  வெல்லமுடியாதவர்கள் என்ற மாயையை துடைத்தெறிந்து, தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் அவர்கள் பிறப்புரிமைகளை மீட்டெடுப்பதற்கான உயிரோட்டமான போராட்டத்திற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்கிறது.


ஈரான் இஸ்லாமிய புரட்சியின் விளைவாக, இந்தியப் பெருங்கடலின் கரையிலிருந்து பாலஸ்தீன நிலம் உட்பட மத்திய தரைக்கடல் கடற்கரை வரை இப்பகுதியிலும் அதற்கு அப்பாலும் சுதந்திர இயக்கங்கள் தழைத்தோங்கி வருகின்றன. இஸ்லாமிய புரட்சின் தந்தை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழிகாட்டலை முன்னுதாரணமாகக் கொண்ட இவர்களது விடுதலைக்கான போராட்டம், சியோனிஸவாதிகளினது எகிப்தில் நைல் நதி முதல் ஈராக்கில் யூப்ரடீஸ் நதி வரை 'கிரேட்டர் இஸ்ரேலை' என்ற கனவை தகர்த்தெறிந்துள்ளது.


அக்டோபர் 5, சனிக்கிழமையன்று, அத்தகைய ஒரு பிரபலமான இயக்கம், ‘இஸ்லாமிய ஜிஹாத்’, காசாவில் நிறுவப்பட்ட 32 வது ஆண்டு நிறைவைக் குறித்தது ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சியோனிச அமைப்பின் சட்டவிரோத இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.


"சபிக்கப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், டொனால்ட் ட்ரம்பின் நூற்றாண்டின் சதி உட்பட எங்கள் எதிரிகளிடமிருந்து எழும் எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்", என்று காஸாவில் ஒன்றுதிரண்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.

இஸ்லாமிய ஜிகாத்தின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய பிரமாண்ட பேரணியில் அவ்வியக்க பொதுச்செயலாளர் ஸியாத் அன்-நகாலே உரையாற்றுகையில் "எப்போதும் ஒடுக்கப்பட்ட காஸா, இப்போது ஒரு யுத்த வலிமையின் சமன்பாடுகளில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தியாக மாறியுள்ளது; இது இந்த மக்களின் அசைக்கமுடியாத மனவுறுதியை பிரதிபலிக்கிறது", என்று குறிப்பிட்டார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயதுல்லா சையத் அலி கமேனியைச் சந்திக்க கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜியாத் அன்-நக்காலே, பாலஸ்தீனிய மக்கள் தங்களின் இறுதி வெற்றியில் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சமாதானம் எனும் போர்வையில் பிற்போக்குத்தனமான அரேபிய தலைவர்களுடன்  இணைந்து அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் எந்த சியோனிஸ சதியினையும் முறியடிப்போம் என்றும் சூளுரைத்தார். தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் உள்ள மாபெரும் மின்னணு கடிகாரம், வேகமாக நெருங்கி வரும் இஸ்ரேலின் முடிவை ஒவ்வொரு வழிப்போக்கர்களுக்கும் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது கொண்டு வரப்படும் சவுதி முன்முயற்சி அல்லது பஹ்ரைன் மாநாடு போன்ற ஏமாற்றும் சாத்தானிய  வடிவமைப்புகளை அவர் கண்டித்தார்: "இன்று சிலர் பாலஸ்தீனியர்களுக்கும் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும்,எதிரியுடன் நாம் நிம்மதியாக பேச முடியும்,  அமைதி சாத்தியமாகும் என்று வைத்திருக்கும் நம்பிக்கையே நாம் தற்போது எதிர்கொள்ளும் மிக மோசமான விஷயம் ஆகும்" என்றார்.

அமெரிக்க – பிரிட்டிஷ் - இஸ்ரேலிய ஆதரவுடைய சவூதி அரேபியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான அன்சருல்லாஹ் இயக்கம் மனவுறுதியுடன் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பதையும் இணைத்து அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்து வருகின்றனர்; அவர்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றனர்.

யெமன் மக்களின் தினசரி மேம்படுத்தும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சவூதி ஆட்சியின்னது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட  பேட்ரியட் பாதுகாப்பு பேட்டரிகளை துல்லியமாக துளைக்க முடியுமாக இருந்தால், இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன விடுதலை குழுக்கள் ஏன் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை பெற்று, சியோனிஸ்டுகளின் இரும்பு அரண்களை (iron domes) தகர்த்தெறிய முடியாது?

நிச்சயமாக, அவர்கள் அதைச் செய்வார்கள்; அதைப் பெறுவது அவர்களின் உரிமை. ஏனெனில் அது இஸ்லாத்தின் மீதான மன உறுதி, மற்றும் தன்னம்பிக்கை. ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டையும் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தேசத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தில், பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா அமெரிக்கா, பிரிட்டிஷ், மற்றும் பிரஞ்சு வழங்கிய நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் செலவில் கொள்வனவு செய்திருந்த அதிநவீன உயர்ந்த ரக போராயுதங்களை வைத்திருந்தாலும், அன்ஸாருல்லாஹ்க்கள் நொறுக்கி வருகின்றனர்.

எனவே பிரிட்டிஷாரினால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அதன் அழிவுக்கான நாட்களைக் கணக்கிடட்டும்; பாலஸ்தீனியர்களும் தங்கள் யேமன் மற்றும் லெபனான் இஸ்லாமிய சகோதரர்களும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அதேவேளை, இஸ்லாத்தின் முதலாவது கிப்லா பைத்துல் முகத்தஸ் உட்பட அவர்களின் முழு தாயகத்தையும் விடுவிப்பதில் உறுதியாக உள்ளனர்.




Friday, October 11, 2019

சவுதி அரேபியா உண்மையில் அமைதியை விரும்புகின்றதா?


Is Saudi Arabia really after peace?

சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் "ஈரானுடனான சகல பிணக்குகளையும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்த்துக்கொள்ளவே சவூதி விரும்புகிறது" என்று CBS செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த விருப்பத்திற்கு சாதகமாக ஈரானிய உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் பதிலளித்தனர். சவூதி அரேபியாவுடன் உரையாடலைத் தொடங்குவதற்கான யோசனையை தெஹ்ரான் வரவேற்பதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் லரிஜானி தெரிவித்தார்.

"அமைதி" என்பது உண்மையில் ஒரு அழகான சொல். இதன் பொருள் பதற்றம், தொல்லைகள், கொந்தளிப்பு, அதிர்ச்சி மற்றும் நவீன அரசியல் பிதற்றொலி, துரோகம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுபடுவதாகும்.

இது இஸ்லாத்தின் சாராம்சமாகும், இஸ்லாம் என்பது "அமைதிக்கு" ஒரு பொருளாகும், இந்த வார்த்தை புனித குர்ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது, அங்கு சர்வவல்லமையுள்ள இறைவன் சொர்க்கத்தில் நிலவும் நிரந்தர சமாதானத்தின் செய்திகளையும் அளிக்கிறார்.

ஆயினும்கூட, அந்த சொல்லின் முக்கியத்துவம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு மற்றும் சொல்லப்படாத நன்மைகள் எத்தனையோ இருந்த போதிலும், வன்முறை, போர்கள், இரத்தக்களரி மற்றும் இனப்படுகொலைகளால் சிதைந்திருக்கும் நவீன உலகில் அமைதி வெளிப்படையாக தெரிவதற்கு இல்லை.

முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களால் கூட தங்கள் பகுதிகளிலோ அல்லது அண்டை நாடுகளுடனான உறவுகளிலோ சமாதானத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

ஏன் இப்படி? இஸ்லாத்தின் முற்போக்கான போதனைகளில் உறுதியான நம்பிக்கை இல்லாததால், அவர்கள் சாத்தானின் சோதனையில் சிக்கி, பாவமான செயல்களில் ஈடுபடுவதோடு, நிச்சயமாக, சாத்தானிய சக்திகளுக்கு - குறிப்பாக அமெரிக்காவுக்கு - சேவகம் புரிவோராக ஆகியுள்ளார்.

இதனால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால் பரஸ்பர அவநம்பிக்கை, தேசத்துரோகம், மற்றவர்களின் நிலங்களை அபகரிக்கும் ஆசை, சக முஸ்லிம்களை ஒடுக்குதல் மற்றும் அவர்களின் தீய எஜமானர்களின் இசைக்கு நடனமாடுவது.

சிரியா மற்றும் ஈராக்கை மிகவும் கொடூரமான கொலைகார பயங்கரவாத சக்திகள் சிலவற்றின் மூலம் ஸ்திரமின்மைக்கு இட்டுச்சென்றதற்கு இதுவே காரணம்; பாக்தாத்தில் உள்ள சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைச் தீயை சர்வதேச ஊடகங்கள் மூலமும் சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலமும் கொழுந்துவிட்டு எரியச்செய்யப்பட்டுள்ளது, பாலஸ்தீன் சியோனிஸ்டுகளுக்கு விற்கப்படுதல், எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசாங்கம் தூக்கியெறியப்படுதல், லிபியாவில் உள்நாட்டுப் போர், ஆப்கானிஸ்தானில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்ட போர், சிறுபான்மை ஆட்சியால் பஹ்ரைன் மக்கள்  அடக்கி ஒடுக்கப்படுத்தல், வெளிநாடுகளில் வதியும் எமது உடன்பிறப்புகள் தொடர்பான அக்கறையின்மை, அவர்களது அவலநிலை பற்றிய அலட்சியம், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் பகுத்தறிவற்ற பகை, கடைசியாக யேமனுக்கு எதிரான சவுதி-ஐக்கிய அரபு எமிரேட் யுத்தம்; இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பை அழிப்பதோடு, நாட்டை பஞ்சம் மற்றும் தொற்று நோய்களில் மூழ்கடித்துள்ளது.

யேமனின் மக்கள் இயக்கமான 'அன்ஸாருல்லாஹ்'  சவூதி அரேபியாவிற்கு எதிரான அதன் பதிலடி நடவடிக்கையை - ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை - நிறுத்துவதாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இப்போது அன்ஸாருல்லாஹ் விடுத்த யுத்தநிறுத்த கோரிக்கையை  "சாதகமாக" கருதுவதாக சவூதி ஆளும் வர்க்கத்தினர் கூறுகிறார்கள்.

சவூதி பாதுகாப்பு பிரதி மந்திரி காலித் பின் சல்மான் தனது ட்விட்டர் செய்தியில் "யேமன் அறிவித்த யுத்தநிறுத்த கோரிக்கையை ரியாத் சாதகமாக பார்க்கிறது" என்று கூறிவிட்டு  பின்னர்  "யெமனிகள்  எங்களுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக நிற்க வேண்டும்," என்றும் கூறுகின்றார். இது "சவூதி அரேபியா ஈரானுடன் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள விரும்புகிறது" என்று கூறிய அவர்களது நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


சவூதி அரேபியா இவ்வாறான முரண்பாடான அறிக்கைகள் மூலம் அன்ஸாருல்லாஹ்வை ஏமாற்ற  முயற்சிக்கிறது என்பது வெளிப்படையானது.

யேமனின் சனாவை தளமாகக் கொண்ட சட்டபூர்வ அரசாங்கத்தின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது. சூடான் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவிக்கட்ட கூலிப்படைகளைக் கொண்டு சவுதி அரசு மேற்கொண்டுவரும் புதிய ஆக்கிரமிப்புகள் சவுதிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது இதுபோன்ற துரோக நகர்வுகள் மூலம் சவுதிகள் எந்த வகையான அமைதியை' நாடுகின்றனர்? யெமன் மீதான யுத்தத்தின் நான்கரை ஆண்டுகளில் யுத்த அச்சுறுத்தல்கள் மூலம் தங்கள் நோக்கங்களை அடையத் தவறிவிட்டதால்,  "சமாதானப் பேச்சுவார்த்தைகள்" என்று கூறிக்கொள்வதன் மூலம் மூலம் அவர்கள் அதை அடைய நினைக்கிறார்களா? இதுதான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்களது அறிவு இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றே கூறவேண்டும்.

அப்காயிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மரண அடியைக் கொடுத்தது அன்ஸாருல்லாஹ் அல்ல என்று கூறுகின்றனர்; எமது சக்தியை அவர்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எமக்கு இறைவனின் உதவி இருக்கின்றது.


அமெரிக்க ஆயுதங்கள் அவர்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். பரிதாபத்துக்குரிய அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. முட்டாள்தனமான எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டு அவர்கள் ஆக்கிரமிப்பை தொடர்வார்களேயானால் எமது பதில் தாக்குதல்கள் பரந்த அளவில் இடம்பெறும் என்றும் அழிவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அதனை எந்தவொரு பாதுகாப்பு முறையும் தடுக்க முடியாது என்றும் அன்ஸாருல்லாஹ் போராளிகள் கூறியுள்ளனர்.

அன்ஸாருல்லாஹ், இஸ்லாத்தின் கொள்கைகளில் உண்மையான விசுவாசிகளாவர். திணிக்கப்படும் சமாதானம் திணிக்கப்பட்ட போரை விட மோசமானது என்பதையும்  சவுதி அரச கும்பலின் துரோகத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள். யெமனில் நஜ்ரான், ஜீஸான் மற்றும் ஆசிர் பிரதேசங்களை சவூதி 1934ம் ஆண்டு பலவந்தமாக ஆக்கிரமித்து, அதனுடன் இணைத்து கொண்டதையும் அவர்கள் மறக்கவில்லை. அன்ஸாருல்லாஹ் யுத்தநிறுத்த கோரிக்கையை விடுத்தது பலவீனமான நிலையில் இருந்து அல்ல என்பதை சவூதி புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, பிராந்திய நாடுகள் தொடர்பாக சவூதி அரேபியா கொண்டுள்ள அதனது கொள்கையை மாற்றிக்கொண்டு, அமெரிக்காவின் மற்றும்  சியோனிஸ்டுகளின்  தீய திட்டங்களுக்கு முகவர்களாக செயல்படாமல், இஸ்லாமிய சகோரத்துவத்தை பேணுவார்களேயானால் இஸ்லாமிய உலகு நன்மையடைம் என்பது திண்ணம்.

Sunday, October 6, 2019

அதிசயங்கள் நிறைந்த அற்புத தீவு ‘கேஷ்ம்’ (Qeshm)


"Qeshm" - Amazing Island of wonders
சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒரு சொர்க்கபுரியாகும். மத்தியகிழக்கு பிராந்தியத்தில் இயற்கை அழகு கொஞ்சும் ஒரே ஒரு நாடு ஈரான் என்றால் மிகையாகாது. பார்ப்பவர் கண்டு வியக்கும் அளவு இயற்கையின் அற்புதங்கள் அங்கு தாராளமாகவே காணலாம். இதிலொன்றுதான் கேஷ்ம் (Qeshm) தீவு.
ஈரானில் சுற்றுலா மேற்கொண்டவர்களுக்கு தெரியும் மிகவும் தனித்துவமான சுற்றுலா தலங்களில் ஒன்று கேஷ்ம் என்பது. பாரசீக வளைகுடாவில் ஈரானின் தெற்கில் அமைந்துள்ள இந்த தீவு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இந்த பிரபலத்திற்கு சில காரணங்கள் உள்ளன. கிஷ் தீவுடன் சேர்ந்து கேஷ்ம் ஒரு தடையற்ற வர்த்தக மண்டலமாகும். சுற்றுலாப் பயணிகள் கெஷ்மிற்குள் நுழையும்போது எந்த விசாவையும் பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை (அவர்கள் 14 நாட்கள் வரை விரும்பினால் தங்கலாம்). மேலும் இது வரியற்ற (Duty Free) பிரதேசம் என்பதால், ஈரானின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்களும் கெஷ்மில் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
கெஷ்மின் பிரபலத்திற்கு மற்றொரு காரணம் அதன் அழகிய இயல் தன்மை ஆகும். Qeshm என்பது பரிந்துரைக்கப்பட்ட யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் ஆகும், மேலும் இந்த தீவு யுனெஸ்கோவின் பாதுகாப்பில் உள்ள ஏராளமான இயற்கை மரபுரிமைத் தளங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் பெருநகர வாழ்வில் அலுத்துப்போய் இருந்தால், அல்லது நவீன காலத்தின் சலசலப்பான வாழ்க்கையிலிருந்து சற்று விலகியிருக்கும் அனுபவத்தை பெற விரும்பினால், Qeshm உங்களுக்கு சரியான இடமாகும்.
கேஷ்ம் தீவு இயற்கை ஈர்ப்புகள்
Qeshm இல் உள்ள இயற்கை ஈர்ப்புகள் புதியவை, களங்கப்படுத்தப் படாதவை மற்றும் இணையற்றவை.
ஹரா கடலோர சதுப்பு நில கண்டல் காடுகள்
ஹரா சதுப்புநில வனமானது கெஷ்மின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தடைசெய்யப்பட்ட உயிர்க்கோளமாகும். உலகின் பல நூறு பறவையினங்கள் குளிர் காலங்களில் ஹரா காட்டை நாடிவருகின்றன. குறிப்பிட்ட காலங்களில், நீங்கள் ஹரா காடுகளுக்கான உங்கள் பயணத்தின்போது ஹெரோன்கள், பெலிகன்கள், ஃபிளமிங்கோக்கள் மற்றும் எண்ணற்ற பிற அரிய பறவைகளைப் பார்க்கலாம்.
நீர்வழிகள் வழியாக வனத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். பல உல்லாச பிரயாணிகள் இவ்வாறு செல்கையில், படகில் இருந்து குதித்து நீர்வழிகளில் நீந்துவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு த்ரில் வேண்டுமென்றால், படகு ஓட்டுநரிடம் அதிக வேகத்தில் சவாரி செய்யச் சொல்லுங்கள்; அற்புதமான உணர்வை அனுபவியுங்கள்.
நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு
உங்கள் கேமராவைக் தயார்படுத்துங்கள், உங்கள் மூளையின் கலையுணரும் பகுதியை சுண்டிவிடுங்கள்; நட்சத்திரங்களின் பள்ளத்தாக்கு உங்களை துள்ளிக்குதிக்கச் செய்துவிடும்.
இங்கு காணப்படும் சீரற்ற கல் பள்ளத்தாக்கு கெஷ்மின் மிக அழகான, களங்கப்படுத்தப்படாத இயற்கை ஈர்ப்புகளில் ஒன்றாகும். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த பள்ளத்தாக்கின் அசாதாரண கல் வடிவங்கள் ஒர் ஒளிரும் இரவில் ஒரு நட்சத்திரம் தரையில் விழுந்தபோது உருவானது என்று கூறப்படுகிறது.
பகல் நேரத்தில் நடந்து உலா செல்லவும், அழகான புகைப்படங்களை எடுக்கவும் ஓர் அற்புதமான இடம் இந்த பள்ளத்தாக்கு. இது, துரதிர்ஷ்டவசமாக, பார்வையாளர்களுக்கு இரவு நேரங்களில் மூடப்பட்டுள்ளது. அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், ஏனென்றால் ஜின்களும் பேய்களும் இரவில் பள்ளத்தாக்கில் சுற்றித் திரிகின்றன என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்! ப்பூ!
நமக்தான் உப்பு குகை
நமக்தான் கெஷ்மின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நமக்தான் எனும் உப்பு குகை. இதுவே உலகின் மிக நீளமான உப்பு குகை ஆகும். குகையின் கும் இருட்டுக்குள் பார்க்க உங்களுக்கு ஒரு டார்ச் லைட் தேவைப்படும். கைவசம் ஒன்று இல்லையென்று கவலைப்பட வேண்டாம், அவை அவ்விடத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
உள்ளே பயணம் எளிதாக இருக்காது; நீங்கள் தரையில் தவழ்ந்து வர வேண்டியிருக்கும் அல்லது சங்கடமான நிலைகளில் நடக்க வேண்டியிருக்கும். ஒரு த்ரிலிங் அனுபவம். எவ்வாறாயினும், இவற்றை கடந்துவிட்டால், வண்ணஜாலம் புரியும் அமைப்புகளின் அழகு உங்களை நிச்சயமாக பிரமிக்கச் செய்யும். இந்த அற்புதமான அனுபவம் பயணத்தை முற்றிலும் பெறுமதியான ஒன்றாகவும் மனதில் நீடித்து நிலைக்கும் ஒன்றாகவும் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பயணத்தின் முழுமையான திருப்தியை பெறவேண்டுமென்றால், இந்த அதிசய குகையின் எந்த இடத்தையும் தவறவிடாது வழியை எளிதாக்க ஒரு தகுதிவாய்ந்த வழிகாட்டியின் துணையுடன் செல்வது சாலச் சிறந்தது.
சாஹ்கூ கனியன்
கெஷ்மின் ஏழு அதிசயங்களில்முதல் மற்றும் மிக முக்கியமானதாக சாஹ்கூ கனியன் (சாஹ்கூ பள்ளத்தாக்கு) என்று பலர் கருதுகின்றனர். சாஹ்கூ கனியன், அல்லது சாஹ்கூ பள்ளத்தாக்கு, சாஹு-யே ஷர்க்கி கிராமத்தில், கெஷ்மில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கனியன் சுமார் 100 மீட்டர் வரை தரையின் கீழ்நோக்கி செல்கிறது. இந்த கீழிறங்கும் பயணத்தில், சுவர்களில் மற்றும் துவாரங்களில் அற்புதமான வடிவங்களில் பரந்த அளவிலான வண்டல் பாறைகள் மற்றும் அவற்றின் அற்புதமான அரிப்பு வடிவங்களைக் காணலாம்.
நீங்கள் பாறைகள் மற்றும் வெளிப்புற வடிவங்களில் நடைபயணம் மேற்கொண்டால், சர்கூ கனியன் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

வரலாற்று ஈர்ப்புகள்
கெஷ்ம் முதன்மையாக அதன் இயற்கை அதிசயங்களுக்காக அறியப்பட்டிருந்தாலும், கெஷ்மில் இன்னும் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டை கீழே ஆராய்வோம்.
போர்த்துகீசிய கோட்டை The Portuguese Castle
கெஷ்மில் உள்ள போர்த்துகீசிய கோட்டை பாரசீக வளைகுடாவில் போர்த்துகீசிய காலனித்துவ ஆட்சியின் எச்சமாகும். இந்த சிவப்பு கல் கோட்டையின் அடர்த்தியான சுவர்கள் போர்த்துகீசிய வீரர்களை உள்ளூர் கலவரங்களிலிருந்து பாதுகாக்க 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த சிவப்பு கல் கோட்டை சமீபத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் பிரபலமான இடமாக மாறியுள்ளது. கோட்டையின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றது. பாரசீக வளைகுடா தீவுகளில் பரவியிருக்கும் சில போர்த்துகீசிய அரண்மனைகளில், மிகவும் பிரபலமாக உள்ளது கெஷ்மில் உள்ள அரண்மனையே.
நாதெரி கோட்டை Naderi Castle
லாஃப்ட் கிராமத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள நாதெரி கோட்டை, கெஷ்மில் பார்க்க வேண்டிய வற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த கோட்டை இஸ்லாத்திற்கு முந்தைய கால கோட்டைகளின் அஸ்திவாரங்களில் கட்டப்பட்டுள்ளன.
காலம் இந்த மாளிகையின் முகப்பில் சேதங்களை  ஏற்படுத்தியிருந்தாலும், அதில் எஞ்சியிருக்கும் அதன் நான்கு கோபுரங்களும் பண்டைய அரண்மனைகளின் அழகை நாடிவரும் கண்களுக்கு இன்னும் அவை கவர்ச்சியாகவே இருக்கின்றன.
அதிசயங்கள் நிறைந்த அற்புத தீவு ‘கேஷ்ம்’ (Qeshm)